முன்னதாக, சம்பளத்தை உயர்த்துவது தொடர்பாக மத்திய அமைச்சரவை கூட்டம் ஆலோசனை நடத்தியது. அப்போது, சில அமைச்சர்கள் சம்பள உயர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மக்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடும் என, எச்சரித்தனர். இதனால், சம்பள உயர்வு தொடர்பான விவகாரம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்த தகவல் தெரியவந்ததும், நம் மக்கள் பிரதிநிதிகள் லோக்சபாவை ஒரு வழியாக்கி விட்டனர். குறிப்பாக, மாட்டுத் தீவனம், சொத்து குவிப்பு போன்ற பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கிய ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கொந்தளித்து விட்டார். "சம்பள உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யார் என்று எனக்கு தெரியும். அவர்கள் சுவிஸ் வங்கிகளில் கோடிக் கணக்கில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள். ஆனால், என்னைப் போன்ற சாதாரண எம்.பி.,க்களுக்கு சம்பள உயர்வு அவசியம்' என, ஆவேசப்பட்டார்.
எம்.பி.,க்களின் கொந்தளிப்பை தாங்க முடியாத மத்திய அரசு, ஒரு வழியாக சம்பளத்தை உயர்த்த ஒப்புதல் அளித்து விட்டது. இதன்படி, எம்.பி.,க்களின் மாதச் சம்பளம் தற்போது வழங்கப்பட்டு வரும் 16 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தொகுதி மற்றும் அலுவலக அலவன்சுகள் மாதம் தலா 20 ஆயிரம் ரூபாயாக இருப்பதை, தலா 45 ஆயிரமாக உயர்த்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, உதவித் தொகை, வாடகை, டெலிபோன், போக்குவரத்து என, மற்ற பல சலுகைகளும் எம்.பி.,க்களுக்கு உள்ளன. இருந்தாலும் கூட, பல எம்.பி.,க்களுக்கு இன்னும் முழு அளவில் திருப்தி வரவில்லை.
வறுமைக் கோடு:
நம் நாட்டில் இன்னும் 40 கோடி பேருக்கு மேல் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்வதாக, உலக வங்கியின் புள்ளி விவரம் கூறுகிறது. இவர்களுக்கு ஒருவேளை உணவு கூட உத்தரவாதம் இல்லை. பாதுகாக்கப்பட்ட குடிநீர், சுகாதாரம் என, எந்த அடிப்படை வசதியும் இவர்களை எட்டிப் பார்ப்பது இல்லை. நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைக்கு, மக்கள் பிரதிநிதிகள் நேரடியாகச் சென்று பார்த்தால், சாதாரண மக்கள் தங்களுக்கு தேவையான குறைந்தபட்ச மருத்துவ வசதியை பெறுவதற்காக எவ்வளவு சிரமப்படுகின்றனர் என்று தெரிந்து கொள்ளலாம். கல்வியை அடிப்படை உரிமையாக்கி சட்டம் கொண்டு வந்து, பல மாதங்கள் கடந்து விட்டன. இன்னும் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. வேலை வாய்ப்பு உறுதி அளிப்பு திட்டம் என, கிராமப் புற பகுதிகளில் மத்திய அரசு ஒரு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கான கூலி, சம்பந்தப்பட்ட மக்களுக்கு முறையாக கொடுக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.
நக்சலைட் ஆதிக்கம்:
அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத பகுதிகளை, நக்சலைட்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்டனர். அங்கு வசிக்கும் மக்களை, மூளைச் சலவை செய்து மத்திய, மாநில அரசுகளுக்கு எதிரான வன்முறையில் அவர்களை ஈடுபடுத்துகின்றனர். காரணம், அந்த மக்களுக்கென எந்த ஒரு திட்டத்தையும் அரசு செய்து கொடுக்காதது தான். இதனால், கொலை, கொள்ளை, கடத்தல், ரயில் கவிழ்ப்பு போன்ற சதித் திட்டங்களை நக்சலைட்கள் அரங்கேற்றுகின்றனர்.
அதிருப்தியில் மக்கள்:
பெட்ரோல் விலை, அத்தியாவசியப் பொருட்கள் விலை ஆகியவை கடுமையாக அதிகரித்து வரும் சூழ்நிலையில், மக்களுக்கு சேவை செய்வதற்காக, மக்களால் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது, சாதாரண மக்களிடையே மட்டுமல்லாமல், பரவலாக அனைத்து தரப்பினரிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். தங்கள் சம்பள விவகாரத்தில் பிடிவாதமாக இருந்து சாதித்துக் காட்டிய மக்கள் பிரதிநிதிகள், தங்கள் தொகுதி மக்களுக்கான வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றுவதிலும் சாதித்துக் காட்ட வேண்டும் என்பதே, ஓட்டுப் போட்ட மக்களின் எதிர்பார்ப்பு.
Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=72476
No comments:
Post a Comment