Sunday, August 29, 2010

The mega scam that shakens India - இந்தியாவை உலுக்கும் மெகா ஊழல்! மு.செந்திலதிபன்

இந்தியாவை உலுக்கும் மெகா ஊழல்! மு.செந்திலதிபன்


விடுதலை பெற்ற இந்தியாவின் 60 ஆண்டுக் காலத்தில் நாடாளுமன்றத்தை -யும், நாட்டையும் உலுக்கிய ஊழல் விவகாரங்கள் ஏராளம். சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக அம்பலத்திற்கு வந்த மிகப்பெரிய ஊழல், 1948இல் காஷ்மீர் யுத்தம் நடைபெற்றபோது, இராணுவத்திற்கு பிரிட்டனில் இருந்து ஜீப் வாங்கப்பட்டதில் நடைபெற்ற ஊழல்தான். பிரிட்டனில் இந்தியத் தூதுவராகவும் பின்னர் மத்திய இராணுவ அமைச்சராகவும் பதவி வகித்த வி.கே.கிருஷ்ணமேனன் ‘ஜீப்’ ஊழலில் சம்பந்தப் பட்டவர் என்று குற்றம் சாட்டப்பட்டது.

1957இல் நேரு அமைச்சரவையில் நிதி அமைச்சராகப் பதவி வகித்தவர் டி.டி.கிருஷ்ணமாச்சாரி. இவர் ஹரிதாஸ் முந்த்ரா என்ற பெரிய வர்த்தகர், தனி நிறுவனங்களின் பங்குகளை ஆயுள் காப்பீட்டுக் கழகத்திடம் ( LIC ) விற்பனை செய்ததில் நடந்த ஊழலுக்குத் துணை போனார் என்று நாடாளும -ன்றத்தில் விவாதம் நடைபெற்று, பின்னர் டி.டி.கே. மீது விசாரணை நடத்தி- ட நீதிபதி எம்.சி.சாக்ளா கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை முடிவில் டி.டி.கே. அமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.

பஞ்சாப் முதல்வராக காங்கிரஸ் கட்சி சார்பில் பதவி வகித்த பிரதாப் சிங் கெய்ரோன் மீது ஊழல் புகார்கள் கூறப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் அவரை பதவி நீக்கம் செய்திடுமாறு எதிர்க்கட்சியினர் ஊழல் புகார்ப் பட்டியலை அளித்தனர். பிரதமர் நேரு நடவடிக்கை எடுக்கத் தயங்கியபோது உச்சநீதிமன்றத்தில் டாக்டர் பிரதாப் சிங் என்பவர் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் பஞ்சாப் மாநில அரசு மீது கண்டனம் தெரிவித்தது. அதன் பின்னர் கெய்ரோன் மீது விசாரணை நடத்திட 1963, ஜூலையில் நீதிபதி எஸ்.ஆர்.தாஸ் கமிஷன் அமைக்கப்பட்டது. அதன் அறிக்கையில் அவர் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டதால் கெய்ரோன் முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

இந்திரா காந்தி பிரதமர் பொறுப்பை வகித்த காலத்தில் 1980இல் மராட்டிய மாநில முதல்வராக அப்துல் ரகுமான் அந்துலே காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வராக பொறுப்பு வகித்தார். ஏ.ஆர். அந்துலே தொடங்கிய ‘இந்திராகாந்தி பிரதிபா பிரதிஷ்டான்’ உட்பட பல அறக்கட்டளைகளுக்கு நிதி கொடுத்தவர்களுக்கு மட்டும் சிமெண்ட் ஒதுக்கீடு செய்து ஊழல் புரிந்தார் என்று புகார் எழுந்தது. அந்துலேவுக்கு எதிராக மும்பை உயர்நீதிமன்றத்தில் திருமதி மிருணாள் கோரே, திருமதி கே.தேசாய், பி.பி.சாமந்த் ஆகியோர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.லென்டின், ‘அறக்கட்டளைக்கு நன்கொடை’ என்ற பெயரில் கட்டட நிறுவனங்களிடமிருந்து அந்துலே இலஞ்சம் பெற்றார் என்று, 1982ஆம் ஆண்டு ஜனவரி 12இல் தீர்ப்பளித்தார். இதனால், ஏ.ஆர்.அந்துலே முதல்வர் பதவியிலிருந்து வெளியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

ராஜீவ்காந்தி பிரதமர் பதவியிலிருந்த போது 1986ஆம் ஆண்டு மார்ச்சு 24இல், சுவீடன் நாட்டின் போபர்ஸ் நிறுவனத்திடமிருந்து 155 மி.மீட்டர் பீரங்கிகளை வாங்கிட ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பின்னர் 1987ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி சுவீடன் வானொலி, மூலம் “இந்தியாவில் பீரங்கி விற்பனை செய்ய போடப்பட்ட ஒப்பந்தத்திற்காக போஃபர்ஸ் நிறுவனம் கமிஷன் வழங்கி உள்ளது” என்று பரபரப்பான செய்தி வெளியானது. ராஜீவ்காந்தி மீது போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழல் புகார் எழுந்து, நாடாளுமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஒட்டாவியோ குவாத்ரோச்சி மூலம் பீரங்கிபேர கமிஷன் தொகை ராஜீவ்காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்டதாக பத்திரிகைகள் ‘உளவு அறிந்து’ செய்தி வெளியிட்டன.

இந்திய மக்களை அதிரவைத்த பீரங்கி பேர ஊழலால் 1989இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராஜீவ்காந்தி பிரதமர் பதவியை இழக்க நேரிட்டது. பி.வி.நரசிம்மராவ் பிரதமர் பொறுப்புக்கு வந்த பின்னர் நடைபெற்ற ஊழல்கள், காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய ஊழல் அத்தியாயங்களைத் தொடர்ந்ததற்கு சான்றுகளாகத் திகழ்ந்தன. இலண்டன் ஊறுகாய் தொழிலில் பிரசித்த பெற்ற லக்குபாய் பதக், இந்தியாவில் காகிதக் கூழ் காண்ட்ராக்ட் பெறுவதற்காக நரசிம்மராவுக்கு இலஞ்சம் கொடுத்தார் என்று புகார் கூறப்பட்டது. ஊறுகாய் வியாபாரி தனக்கு காண்ட்ராக்ட் கிடைக்கவில்லை என்பதால் நரசிம்மராவ், மோசடி சாமியார் சந்திராசாமி, அவரது உதவியாளர் அகர்வால் ஆகியோர் மீது மோசடி வழக்கு தொடர்ந்தார்.

நரசிம்மராவ் காலத்தில் இன்னொரு பேர் பெற்ற ஊழல் ‘யூரியா’ ஊழல்; இந்திய அரசின் தேசிய உர நிறுவனம் ( NFL ), துருக்கியில் கார்சன் டானிஸ் மான்லிக் டுரிகாம் சமாயி டிகார்கட் லிமிடெட்(!) என்ற நிறுவனத்திடமிருந்து இரண்டு இலட்சம் டன் யூரியா வாங்கிட 1995, அக்டோபரில் ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்தம் போடப்பட்ட உடனேயே, தேசிய உர நிறுவனம் சம்பந்தப்பட்ட அமைச்சர் ஒப்புதலுடன், கார்சன் கம்பெனிக்கு உரத்துக்கான முழுத் தொகையைக் கொடுத்து விட்டது. ஆனால், ‘யூரியா’ மட்டும் இறக்குமதி ஆகவில்லை. கார்சன் கம்பெனியின் ஏஜெண்ட், ‘சாய்கிருஷ்ண இம்பெக்ஸ்’ நிறுவனத்தின் பெயரில் ஹைதராபாத் ‘ஏ என் இசர்ட் கிரிண்ட்லேஸ்’ வங்கியில் கணக்கு இருந்தது. அந்தக் கணக்கில் ‘துருக்கி’ நாட்டு கார்சன் கம்பெனி மூலம் கமிஷன் பணம் ஹவலா மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. அதாவது, ‘யூரியா’ இறக்குமதி செய்யாமலேயே இறக்குமதி ஆனதாகக் காட்டி, கமிஷன் தொகை கறக்கப்பட்டது. இந்த யூரியா ஊழலை விசாரித்த சிபிஐ, கார்சன் நிறுவனம் ஒரு ‘உப்புமா’ கம்பெனி என்றும் கண்டு பிடித்தது. இதில் ஆதாயம் அடைந்த பிரதமர் நரசிம்மராவ் உறவினர் பி.சஞ்சீவராவ், மத்திய அமைச்சராக இருந்த ராம் லக்கன் சிங் யாதவ் மகன் பிரகாஷ்சந்திர யாதவ், தேசிய உர நிறுவனத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் சி.கே.இராமகிருஷ்ணன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்தியாவையே உலுக்கிய இன்னொரு புகழ் பெற்ற ஊழல், ஹர்சத் மேத்தாவின் பங்கு பத்திர ஊழலும் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில்தான் நிகழ்ந்தது.

இந்தியாவின் ‘ஊழல் புராணத்தை’ கிளறினால் அது நீண்டு கொண்டே போகும்.

அறுபது ஆண்டுகால ஊழல்களை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவுக்கு, கருணாநிதி குடும்பம் தற்போது நடத்தி உள்ள ஊழல் நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

பண்டித நேரு காலத்தில் இராணுவ அமைச்சர் வி.கே. கிருஷ்ணமேனன் மீது சுமத்தப்பட்ட ‘ஜீப்’ ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை சில இலட்சங்கள்தான்.

முந்த்ரா ஊழலில் சிக்கிய டி.டி.கிருஷ்ணமாச்சாரி, மீது குற்றம் சாட்டப்பட்ட -போது தொகை ஒன்றரை கோடி ரூபாய்.

மராட்டியத்தில் ஏ.ஆர்.அந்துலே சம்பந்தப்பட்ட சிமெண்ட் ஊழலின் தொகை ரூ.26.6 இலட்சம் ஆகும்.

ராஜீவ்காந்தியின் போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் கமிஷனாக கைமாறிய தொகை ரூ.64 கோடி என்று கூறப்பட்டது.

நரசிம்மராவ் காலத்தில் நடந்த யூரியா இறக்குமதி ஊழலில் சம்பந்தப்பட்ட தொகை ரூ. 133 கோடி.

ஹர்சத் மேத்தாவின் பங்கு பத்திர ஊழல் மோசடியில் சம்பந்தப்பட்ட தொகை ரூ.5,500 கோடி; அது போலவே இன்னொரு, பங்கு வர்த்தக மோசடியில் ஈடுபட்ட ‘கேத்தன் பரேக்’ சம்பந்தப்பட்ட தொகை ரூ.6,400 கோடி ஆகும்.

இவை எல்லாவற்றையும் விட கருணாநிதி குடும்பம், இந்தியாவை ஆட்சி செய்யும் அதிகாரம் கிடைக்கப் பெற்றவுடன் நடத்தி உள்ள ஊழலின் மதிப்பு ரூபாய் அறுபது ஆயிரம் (ரூ. 60,000 கோடி) கோடி. இந்திய அரசாங்கத்திற்கு அறுபது ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருக்கின்ற மத்திய தகவல் தொடர்புத் துறையில் - தி.மு.க.வைச் சார்ந்த ஆ.ராசா காபினேட் அமைச்சர் பொறுப்பை வகிக்கின்றார்.

மத்திய அமைச்சரவையில் தகவல் தொடர்புத் துறையைக் கேட்டுப் (மிரட்டி!) பெற்ற தி.மு.க. தலைவர் கருணாநிதியின் குடும்பம் இந்த மெகா ஊழலில் துணிகரமாக ஈடுபட்டுள்ளது. மத்திய மந்திரி ஆ.ராசாவை கைப் பிடிக்குள் வைத்துக் கொண்டு, கோபாலபுரம் கொள்ளைக் கும்பல் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சுருட்டி உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடைபெற்ற ஊழல்களிலேயே இந்த ‘மெகா’ ஊழல் எப்படி திட்டம் போட்டு கச்சிதமாக, திருடப்பட்டுள்ளது என்ற விபரங்களைப் பார்ப்போம்.

நவீன விஞ்ஞான தொழில்நுட்பப் புரட்சியால், வளர்ச்சி பெற்றுள்ள தொலைத் தொடர்புத் துறை மூலம் உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது. தொலைத்தொடர்பு தொழில் நுட்பம் வளர்ச்சி பெறுவதற்கு முன்பு தொலைபேசிகள், கட்டுப்பாட்டு அறையிலிருந்து நுகர்வோர் இடம் வரை கேபிள்கள் போடப்பட்டு, அதன் மூலம் இயக்கப்பட்டன. பிறகு கம்பி இல்லாத் தந்தி போல, கேபிள்கள் இல்லாமலே ( Wireless Telephony ) தொலைபேசி சேவை நடைமுறைக்கு வந்தது.

தற்போது தகவல் தொழில்நுட்பப் புரட்சி யுகத்தில் அலைபேசிகள் ( Mobile Phones ) வந்துவிட்டன. தகவல்கள், மின்காந்த அலைகளாக மாற்றப்பட்டு ( Electromagnetic Waves ) அவை கடத்திகள் ( Transmitter ) மூலம் அனுப்பப்படுகின்றன. மின்காந்த அலைகளை உள்வாங்கிக் கொள்ளும் கருவிகளை ( Receiver ) பயன்படுத்தி அலைபேசிகளுக்கு ( Cell Phones ) தகவல்கள் போய்ச் சேருகின்றன. இவ்வாறு தகவல் தொடர்புகளுக்குப் பயன்படும் மின்காந்த அலைகளின் தொகுப்புகளுக்கு அலைக் கற்றைகள் ( Spectrum ) என்று பெயர்.

செயற்கைக் கோள் உதவியுடன் தகவல் தொடர்புக்கு பயன்படும் இந்த “அலைக்கற்றைகள்’ (ஸ்பெக்ட்ரம்) இந்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ், மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சகத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது.

செல்போன் சேவைக்காக ‘ஸ்பெக்ட்ரம்’ தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டுக்காக அந்நிறுவனங்கள் அரசுக்கு உரிமம் கட்டணம் ( License Fee ) செலுத்த வேண்டும். இவ்வாறு ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு செய்ததில்தான் ‘பெரும் ஊழல்’ நடைபெற்று இருக்கின்றது.

இரண்டாவது தலைமுறை அலைவரிசையை ( 2G Second Generation Wireless Telephony ) தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில்தான் இந்திய அரசுக்கு ரூ. 60 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

மத்தியத் தொலைத் தொடர்புத் துறை, ‘2G ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு செய்வதற்கு பொது ஏல முறையைக் கடைப்பிடிக்காமல், முதலில் வருபவருக்கு முன் உரிமை என்ற ‘விசித்திரமான’ அடிப்படையில் வர்த்தகம் செய்துள்ளது.

மத்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக, கருணாநிதியால் நியமிக்கப்பட்ட (அய்யோ பாவம்! பிரதமர் மன்மோகன்சிங்! அரசியல் சட்டம் பிரதமருக்குத்தான் தன் அமைச்சரவையில் யாருக்கு என்ன துறை? என்று தீர்மானிக்கும் உரிமையைத் தந்திருக்கின்றது. கூட்டணி வியாபாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு கருணாநிதி குடும்பம், பிரதமரின் உரிமையையே தட்டிப் பறித்துவிட்டது) ஆ.ராசா, 2G அலைவரிசைகளை இரண்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்தார்.

ஒன்று, ஸ்வான் ( Swan Telecom ) மற்றொரு நிறுவனம் யூனிடெக் ( Unitech ) இந்த இரு நிறுவனங் களுக்கும் ‘2G அலைவரிசைகள்’ முதலில் வந்தவர்களுக்கு முன் உரிமை என்ற அடிப்படையில், 2001ஆம் ஆண்டு நிர்ணயம் செய்யப்பட்ட விலையில் உரிமம் கட்டணம் பெற்றுக் கொண்டு ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஸ்வான் நிறுவனம் ‘2G ஸ்பெக்ட்ரம்’ உரிமத்தை ரூ.1,537 கோடிக்கு வாங்கியது. அதேபோல யூனிடெக் நிறுவனம் ரூ. 1,651 கோடிக்கு வாங்கி உள்ளது. ஸ்வான் நிறுவனம் நாடெங்கும் 13 பகுதிகளுக்கும் யூனிடெக் நிறுவனம் 23 பகுதிகளுக்கும் ‘செல்போன் சேவை’ வழங்குவதற்கான உரிமங்களைப் பெற்றன.

2G அலைவரிசை கட்டணமாக ரூ.1,537 கோடி அரசுக்கு செலுத்திய ஸ்வான் நிறுவனம், ஒரே ஒரு பைசா கூட செலவழித்து, மக்களுக்கு செல்போன் சேவையைத் தொடங்கவில்லை. மாறாக ஸ்வான், தனது 45% பங்குகளை, ஐக்கிய அரபு நாடுகளைச் சேர்ந்த ( UAE ) எடிசலாட் ( Etisalat ) என்ற நிறுவனத்திற்கு ரூ. 4,500 கோடிக்கு விற்பனை செய்து விட்டது.

இதுபோன்றே யூனிடெக் நிறுவனமும் ஒரு பைசா கூட செலவழிக்காமல், தனது 60% பங்குகளை நார்வே நாட்டைச் சேர்ந்த டெலிநார் ( Telenor ) என்ற நிறுவனத்துக்கு ரூ.6,120 கோடிக்கு விற்றுவிட்டது.

மத்தியத் தொலைத்தொடர்புத் துறையிடம் இருந்து ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு உரிமம் பெற்ற ஸ்வான் நிறுவனம், அரசுக்கு செலுத்தியது வெறும் ரூ 1,537 கோடி; ஸ்வான் தனது பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் ரூ 2,963 கோடி லாபம் அடைந்து இருக்கின்றது.

யூனிடெக் நிறுவனம் செலுத்திய உரிமம் கட்டணம் ரூ 1,651 கோடி; தனது பங்குகளை வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்ததன் மூலம் யூனிடெக் பெற்றுள்ள லாபம் ரூ 4,469 கோடி;

ஸ்வான், யூனிடெக் ஆகிய இரண்டு நிறுவனங்களுமே தொலைத் தொடர்புத்துறை சேவையில் அனுபவம் இல்லாதவை. இரண்டுமே ‘உப்புமா’ கம்பெனிகள்; ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு உள்ள கம்பெனிகள்; இவை எவ்வாறு அலைவரிசை உரிமம் பெற்றன? எந்த அனுபவத்தைக் கொண்டு தொலைத்தொடர்புத்துறை இந்த நிறுவனங்களுக்கு ‘அலைவரிசை’ ஒதுக்கீடு செய்தது? ஒரே ஒரு பைசாகூட செலவிடாமல், இரண்டு ‘உப்புமா’ கம்பெனிகளும் தொலைத் தொடர்புத் துறையைப் பயன்படுத்திக் கொண்டு ‘அலைவரிசை’ ஒதுக்கீட்டைப் பெற்றுள்ளன.

வெறும் ‘லெட்டர் பேடை’ மட்டும் வைத்துக்கொண்டு, உரிமம் பெற்றுக் கொண்டு, அதை மாற்றிக் கொடுத்துவிட்டு உட்கார்ந்த இடத்திலேயே ‘தாள் பரிமாற்றத்தின்’ மூலம் ஸ்வான் ரூ 2,963 கோடியும், யூனிடெக் ரூ 4,469 கோடியும் கொள்ளை அடித்து இருக்கின்றன.

இந்திய அரசுக்கு சொற்பத் தொகையினை உரிமம் கட்டணமாகச் செலுத்திவிட்டு,

கோடான கோடி ரூபாய் பகல் கொள்ளை அடிக்கும் துணிகர செயலில் இந்த நிறுவனங்கள் ஈடுபட முடிந்தது எனில் ஸ்வான், யூனிடெக் நிறுவனங்களை நடத்துவது யார்?

இந்த ‘உப்புமா’ கம்பெனிகளின் பங்குதாரர்கள் யார்?

பொது ஏல முறையில் ‘ஸ்பெக்ட்ரம்’ ஒதுக்கீடு செய்யாமல் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று வேண்டியவர்களுக்கு ஒதுக்கீடு செய்தது ஏன்?

2008 ஆம் ஆண்டு சந்தைவிலையைக் கணக்கில் கொள்ளாமல், 2001 ஆம் ஆண்டு விலையில் சொற்பத் தொகைக்கு 2G அலைவரிசை வர்த்தகம் செய்தது ஏன்?

உரிமம் பெற்ற நிறுவனங்கள், தொலைத் தொடர்புத் தொழிலில் ஈடுபடாத நிறுவனங்கள் என்று தெரிந்தே ‘அலைக்கற்றை’ ஒதுக்கீடு செய்தது ஏன்?

இவ்வாறு உரிமம் பெற்ற நிறுவனங்கள் செல்போன் சேவையைத் தொடங்காமலேயே, வெறும் தாள் மூலம், பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்து, கொள்ளை அடித்துள்ளதை மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா கண்டு கொள்ளாதது ஏன்?

ஏன்? ஏன்? ஏன்?

விசுவரூபம் எடுக்கும் வினாக்கணைகளுக்கு மத்திய அமைச்சர் ராசா என்ன பதில் அளிக்கிறார்?

முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், டிராய் ( Telecom Regulatory Authority of India -TRAI ) பரிந்துரையின் பேரில்தான், அலைவரிசை ஒதுக்கீடு நடைபெற்றதாக அமைச்சர் ராசா கூறி உள்ளார்.

ஆனால், இதனை ‘டிராய்’ தலைவர் என்.மிஸ்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் டைம்ஸ் ஆப் இந்தியா இதழுக்கு (15.11.2008) அளித்துள்ள பேட்டியில் தெரிவித்து உள்ள கருத்துகள் பின்வருமாறு;

“2007 இல் ‘டிராய்’ செய்த பரிந்துரையில் இன்றைய இந்தியாவின் சுறுசுறுப்பான செயலாக்கம் மற்றும் தொலைத்தொடர்புத் துறையில் இதுவரை இல்லாத வளர்ச்சியைக் கருத்தில் கொள்ளும் போது 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட நுழைவுக் கட்டணம் உரிமம் பெறுவதற்கு சரியானதாக இருக்காது. சந்தை நிலவரத்திற்கு ஏற்ப இந்தக் கட்டணம் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறப்பட்டு உள்ளது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்று சொல்லப்படவில்லை.

தொலைத் தொடர்பு அமைச்சகத்திற்கு 2007, அக்டோபர் 19 மற்றும் 2008, ஜனவரி 14 ஆகிய நாட்களில் இரு கடிதங்கள் எழுதி உள்ளேன். அமைச்சரவை எடுக்கும் முடிவு மற்றும் நடவடிக்கை களை இந்தப் பரிந்துரையில் இடம்பெறாதவற்றுடன் தொடர்பு படுத்துவது நியாயம் அல்ல. அது தவறாக வழிநடத்துவதாகும். டிராய் அமைப்பின் ஒட்டு மொத்த பரிந்துரை மீறப்படும்போது அதிகாரபூர்வமான முறையில் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் தொலைத் தொடர்புத் துறைக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். அப்படி இருந்தும் டிராய் அமைப்பை கலந்து ஆலோசிக் காமல் அதனுடைய பரிந்துரைகளுக்கு புறம்பாக தொலைத்தொடர்புத்துறை பல தடவை செயல்பட்டு உள்ளது. நிறுவனங்கள் இணைப்பு மற்றும் பங்கு- கள் கையகப்படுத்தும் நடைமுறையிலும் விதிமுறைகள் பின்பற்றப்பட -வில்லை;

மேலும் இந்த அலைவரிசை ஒதுக்கீடு பெற்ற நிறுவனங்கள் கட்டமைப்புப் பணிகளைத் தொடங்க வேண்டும் என்ற விதிமுறைகள் பின்பற்றப்படவில்- லை. இப்படித்தான் ஸ்வான், யூனிடெக் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்று உள்ளன”

தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவர் மிஸ்ரா தெரிவித்துள்ள தகவல்கள் மூலம் மத்திய அமைச்சர் ஆ.ராசா அளித்துள்ள முரண்பாடான பதில்கள் அம்பலம் ஆகி உள்ளன.

‘டிராய்’ தலைவர் மிஸ்ரா தக்க பதிலடி கொடுத்தவுடன், இப்பொழுது அமைச் -சர் கூறுகிறார், “பிரதமர் அனுமதியுடன்தான் ‘அலைவரிசை’ ஒதுக்கீடு செய்யப் பட்டது” என்று. இவ்வளவு பெரிய மோசடிக்கு மெகா ஊழலுக்கு பிரதமர் அனுமதி அளித்துள்ளார் என்று, அமைச்சர் ராசா மன்மோகன் சிங்கை துணைக்கு அழைத்து உள்ளார்.

ஆனால், இதுவரை பிரதமர் இந்தப் பிரச்சனை குறித்து வாய்திறக்காதது ஏன்?

சம்பந்தப்பட்ட பிரதமர் இதுகுறித்து விளக்கம் அளிக்கவில்லை. ஆனால், தொலைத் தொடர்புத் துறையை, கேட்டுப் பெற்ற கருணாநிதி தனக்கே உரிய வஞ்சகமான முறையில் ராசாவுக்கு வக்காலத்து வாங்குகிறார்.

மத்திய தொலைத் தொடர்புத்துறை கேபினட் அமைச்சராக ஒரு தாழ்த்தப்பட் -டவர் பதவியில் இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் ராசா மீது குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன என்று, கருணாநிதி திசை திருப்புகிறார்.

அனைத்து எதிர்க்கட்சிகளுமே ராசா மீது இந்தக் குற்றச் சாட்டுகளைக் கூறி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி இரு கடிதங்களைப் பிரதமருக்கு எழுதி உள்ளார். அதில், “ஸ்வான், யூனிடெக் நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதைப் போன்று பல்வேறு கம்பெனிகளும் சொற்ப தொகையை அரசுக்கு செலுத்தி விட்டு உரிமம் பெற்று இருப்பதால், இந்திய அரசுக்கு ரூ 60,000 (அறுபது ஆயிரம்) கோடி நட்டம் ஏற்பட்டு உள்ளதாக” சுட்டிக் காட்டி இருக்கின்றார்.

இந்த ஊழல் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஸ்வான், யூனிடெக் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவையும் கோரி உள்ளன. இதேகருத்தை கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்களும், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா அவர்களும் வலியுறுத்தி உள்ளனர்.

கருணாநிதி குடும்பத்தின் சுரண்டல் தமிழக எல்லைகளைக் கடந்து இந்தியா முழுவதும் வியாபித்து இருப்பதற்கு தொலை தொடர்புத்துறை ‘மெகா ஊழல்’ பானை சோற்றுக்கு ஒரு சோறே பதம் என்பது போலத்தான். இன்னும் தி.மு.க. மந்திரிகளின் இலாகா வாரியாக தோண்டினால் தோண்டத் தோண்ட ‘ஊழல் கேணி’ ஊற்று எடுத்துக் கொண்டே இருக்கும் என்பது உறுதி.

இந்த அக்கிரமங்களுக்கு எல்லாம் கருணாநிதி குடும்பம் கூண்டில் நிற்க வேண்டிய காலம் விரைந்து வந்து கொண்டு இருக்கிறது.

Source: http://mdmk.org.in/article/apr09/spectrum

No comments:

Post a Comment