சென்னை, செப். 3-
நெரிசலில் திணறும் சென்னை மாநகர சாலைகளில் விபத்துக்கள் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனங்களை ஓட்டிச் செல்வதே இதற்கு முக்கிய காரணமாகும். சென்னையில் நடக்கும் பெரும்பாலான விபத்து களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களே உயிர் இழக்கிறார்கள். ஹெல்மெட் அணியாமல், வேகமாக சென்று மோதி கீழே விழுவது, முன்னால் செல்லும் வாகனங்களை மின்னல் வேகத்தில் கடப்பது போன்ற காரணங்களால் இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்க முடிவதில்லை.
தலைக்கவசம் நம் உயிர் கவசம் என்பதை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களில் பெரும்பாலானோர் இதனை கண்டு கொள்வதில்லை. சிலர் ஹெல்மெட்டை மோட்டார் சைக்கிளில் தொங்கவிட்டப்படி பயணம் செய்கிறார்கள்.
கடந்த 8 மாதத்தில் சென்னையில் 158 பேர் மோட்டார் சைக்கிள் விபத்தில் பலியாகியுள்ளனர். இவர் களில் 154 பேர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் உயிர் இழந்துள்ளனர். ஹெல்மெட் அணியாமல் சென்றவர்களை ஆரம்பத்தில் போலீசார் வேட்டையாடி பிடித்து அபராதம் விதித்தனர். நாளடைவில் இந்த வேகம் குறைந்தது.
இது தொடர்பாக கூடுதல் கமிஷனர் ரவி கூறியதாவது:-
ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் ஹெல் மெட் அணிவதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு பிரசா ரங்களை தீவிரமாக செய்து வருகிறோம். துண்டு பிரசுரங்கள் வழங்கு வதுடன் விழிப்புணர்வு பாடங்களையும் நடத்தி வருகிறோம்.
ஹெல்மெட்டின் அவசியத்தை உணர்த்தும் குறும்படம் ஒன்றையும், தயாரித்துள்ளோம். அதில் ஹெல்மெட் அணியாமல் செல்லும் ஒருவர் விபத்தில் சிக்கி தலையில் அடிபட்டு உயிரை இழக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. இதை பார்த்ததும் மேட்டார் சைக்கிளில் ஹெல்மெட்டை தொங்க விட்டு செல்லும் வாலிபர் அதனை தலையில் மாட்டிச் செல்வார்.
ஹெல்மெட் அணிந்தால் உங்கள் உயிருக்கு பாதுகாப்பு. உங்களின் பாதுகாப்பு உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு. எனவே ஹெல்மெட் அணிய மறக்காதீர்கள் என்று நான் பேசுவது போல குறும்படம் முடிகிறது.
இவ்வாறு கூடுதல் கமிஷனர் ரவி தெரிவித்தார்.
சென்னையில் தற்போது 35 லட்சம் வாகனங்கள் உள்ளன. இதில் 27 லட்சம் மோட்டார் சைக்கிள்கள் அடங்கும். தினமும் 900 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Source: http://www.maalaimalar.com/2010/09/03171759/chennai-8-month-helmed-not-us.html.
No comments:
Post a Comment