Sunday, August 29, 2010

Every One should consider to whom he or she is going to vote in the coming TN assembly Election

தேர்தலில் தமிழனின் கடமை -1

L.K.Advani

தமிழர்கள் தமது தலையெழுத்தைத் தீர்மானிக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

நாடறிந்த நல்லவர்கள் கூடவே திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றப் பின்னணியில் உள்ளவர்களும் வந்து ஓட்டுக் கேட்கும் பொழுது யாருக்கு ஆதரவளிப்பது என்று வாக்களர் குழம்பிப் போவது இயற்கைதான். நாம் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று குழப்பமில்லாமல் சிந்திக்க உதவுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

இந்தத் தேர்தல் தேசத்தின் எதிர்காலத்தையே தீர்மானிக்கப் போகிறது என்ற அவசர உணர்வும் நமக்குத் தேவை. யாருக்கு நம் வாக்கை அளிப்பது என்பதை முடிவு செய்யும் முன்னால் இந்திய அளவில் இப்பொழுது நம்மைப் பாதிக்கும் பிரச்சினைகளை முதலில் பட்டியலிட்டுக் கொள்ளலாம்.

1. பயங்கரவாதம்
2. ஊழல், சுவிஸ் வங்கியில் இருக்கும் இந்தியக் கள்ளப் பணத்தைத் திருப்பிக் கொண்டு வருதல்
3. இந்து விரோத நடவடிக்கைகள்
4. பொருளாதாரப் பிரச்சினைகள்
5. சாலை, மின்சாரம், வேலைவாய்ப்பு, அடிப்படைக் கட்டமைப்பு

மேற்கண்ட பிரச்சினைகள் மட்டுமே நாம் இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பதை முடிவு செய்வதற்கு ஆதாரமாக இருக்க வேண்டும். இனி ஒவ்வொன்றையும் விவரமாக அலசுவோம்.

1. பயங்கரவாதம்

உலக அளவில் இஸ்லாமிய பயங்கரவாதமே இன்று மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவை எடுத்துக்கொண்டால், கடந்த ஐந்து ஆண்டுகளில், டெல்லி, மும்பை ரயில் வெடிப்பு, ஹைதராபாத், அக்ஷர்தாம், பெங்களூர், குஜராத், காசி, அஸ்ஸாம், மும்பை தாஜ்/ஒபராய் ஹோட்டல் (டிசம்பர் 26) தாக்குதல் என்று நாடெங்கிலும் பயங்கரவாதிகளின் தாக்குதலில் இந்தியர் உடல்கள் சிதறின. இவர்களைக் கடுமையாக ஒடுக்கவும், அடக்கவும் தேவையான சட்டங்களை இயற்றும் துணிவும் அரசியல் உறுதிப்பாடும் கொண்ட அரசே நமது முதல் தேவை. இது மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இதுவே இந்தத் தேர்தலில் தலையாய பிரச்சினையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் துர்ப்பாக்கியவசமாக இந்தப் பிரச்சினை முதன்மையாக யாராலுமே எடுத்துக் கொள்ளப் படவில்லை. தமிழ் நாட்டு மக்களும் கோவை குண்டு வெடிப்பை மறந்து விட்டார்கள். கடந்த 5 ஆண்டுகளாகக் காங்கிரஸ் அரசு பயங்கரவாதத்தில் ஒருதலைப் பட்சமாக, பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவே நடந்து கொண்டிருக்கிறது.

பொடா சட்டத்தை வாபஸ் வாங்கிப் பல பயங்கரவாதிகள் எளிதாக ஜாமீனில் வெளிவரவும் தப்பிக்கவும் காங்கிரஸ் அரசு உதவி செய்தது.

டெல்லி குண்டு வெடிப்பில் தன் உயிரை இழந்த இன்ஸ்பெக்டர் சர்மா மீது சந்தேகத்தைக் கிளப்பிய காங்கிரஸ் அரசு, அவரது தியாகத்தைக் கொச்சைப் படுத்தியது

டெல்லியில் குண்டு வைத்தவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் அரசின் கீழ் உள்ள பல்கலைக்கழகம் மூலமாக நிதியுதவியும், சட்ட உதவியையும் அளித்து தீவீரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டது காங்கிரஸ் அரசு

குண்டு வெடிப்புகளில் சம்பந்தப்பட்ட எவரையும் இதுவரை கண்டு பிடித்ததாகவோ தண்டனை கொடுத்ததாகவோ தகவல்இல்லை.

பாராளுமன்றத்தைத் தாக்கி பலரைக் கொன்ற அப்சல் குருவுக்கு சுப்ரீம் கோர்ட் மரண தண்டனையை உறுதி செய்துவிட்டது.அவனது கருணை மனுவை நிராகரித்து அவனுக்கு கடுமையான தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறிவிட்டது.பின்னும் முஸ்லீம் ஓட்டுக்களுக்காக அவனது தண்டனையை நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்து பயங்கரவாதிகளுக்குத் தெம்பூட்டுகிறது காங்கிரஸ் அரசு

கோவையில் குண்டு வைத்து 60 பேர்களை உடல் சிதறச் சின்னாபின்னமாக்கிக் கொன்ற மதானிக்குச் சிறையில் மசாஜ் உட்பட ராஜ உபச்சாரம் அளித்ததோடு, விடுதலை அடையும் வண்ணம் வழக்கை அலட்சியமாக நடத்தியது கருணாநிதியின் தி.மு.க. அரசு. மதானி விடுதலையான பின், மேல் கோர்ட்டில் அப்பீல் செய்ய மறுத்து வருகிறது பயங்கரவாதத்துடன் கைகோர்த்துள்ள தி.மு.க. அரசு.

இன்றைய தமிழக முதல்வருக்கு மருமகன் தயாநிதி மாறனுடன் ஏற்பட்ட பிணக்கில் மூன்று இளம் கணினிப் பொறியாளர்களைக் காவு வாங்கியது தி.மு.க.வின் அராஜகம்தான். ஆனால், இன்று மாமனும் மருமகனும் இணைந்துவிட்டனர். கொலை செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நீதி தருவார் இல்லை! எதிரிகளைக் கருணையற்று வெட்டிச் சாய்ப்பது திராவிட, கம்யூனிசக் கட்சிகளின் நெடுநாள் பாரம்பரியம்.

மும்பை தாக்குதலுக்காக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் கடத்தி வருகிறது மன்மோகன்சிங் தலைமையிலான நடுவண் அரசு

காங்கிரஸ், தி.மு.க. அரசுகளின் பயங்கரவாத ஆதரவு நிலைப்பாடுகளுக்கு இன்னும் எண்ணற்ற ஆதாரங்களைக் கொடுக்கலாம். பா.ஜ.க. அரசும்கூட பயங்கரவாதிகளை ஒடுக்கும் விஷயத்தில் தேவையான கடுமை காட்டாமல் நடந்து கொண்டது உண்மைதான். ஆனாலும் பா.ஜ.க. அரசு எந்த நேரத்திலும் பயங்கரவாதிகளை ஆதரித்ததில்லை. ஓட்டுக்காக அவர்களை விடுதலை செய்தது இல்லை. பொடா போன்ற கடுமையான சட்டங்களைக் கொணர்ந்ததும் பா.ஜ.க. அரசுதான். ஆகையினால் இரு பிரதான தேசியக் கட்சிகளையும் இந்த விஷயத்தில் ஒப்பிடும்பொழுது காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றால் மீண்டும் இந்துக்களின் உயிருக்கு உத்தரவாதம் இருக்காது. பயங்கரவாதிகள் மேலும் வலுப்பெறுவார்கள். நமக்கு நம் உயிர்மேல் ஆசை இருந்தால், காங்கிரஸ் தி.மு.க. அரசுகளை நாம் அகற்றுவது கடமையாகும். இந்தத் தேர்தலில் நாம் பயங்கரவாத ஆதரவுக் கட்சிகளை ஒழிக்க உறுதி பூணுவோமாக.

2. ஊழல் ஒழிப்பு, ஸ்விஸ் வங்கியில் இருக்கும் இந்தியக் கள்ளப் பணத்தைத் திருப்பிக் கொண்டு வருதல்

இந்தியாவை உலகின் பணக்கார நாடாக ஆக்கும் சக்தி இந்திய வாக்காளர்களிடம் இருக்கிறது. மந்திரம் மாயம் எதுவும் இல்லை. முறைகேடாகச் சம்பாதித்த கோடானு கோடி பணத்தை நமது அரசியல்வாதிகளும், வியாபாரிகளும், நடிகர்களும் உலகத்தின் வரி கொடுக்காமல் ஏமாற்றும் கிரிமினல்கள் தங்கள் சொத்தைப் பதுக்கி வைக்கும் சொர்க்க புரிகளான சில நாடுகளில் பதுக்கி வைத்திருக்கிறார்கள். அப்படிப் பதுக்கப்பட்டுதில் மிக அதிகமான பணம் இந்திய அரசியல்வாதிகளால்தான் பதுக்கி வைக்கப் பட்டிருக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த ஒரு மத்திய மந்திரி யாருக்கும் சொல்லாமல் இத்தகைய நாடுகளுக்குப் பல முறை ரகசியப் பயணம் மேற்கொண்டிருக்கிறார். எதற்காகப் போனார் என்பதை இன்றுவரை தனக்கு ஓட்டுப் போட்ட மக்களிடமோ தான் இருக்கும் மந்திரிசபையிடமோ அல்லது அரசிடமோ சொல்ல மறுத்து வருகிறார் என்று தகவல் வெளி வந்திருக்கிறது. இவரைப் போல இந்தியாவில் இருந்து நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகள் பல லட்சம் கோடி ரூபாய்களை இந்த வங்கிகளில் தொடர்ந்து பதுக்கி வந்திருக்கிறார்கள் என்று சந்தேகம் உள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் இப்படி கள்ளத்தனமாக பதுக்கிய பணத்தின் மதிப்பு மட்டும் இப்பொழுது கிட்டத்தட்ட 2 டிரில்லியன் டாலர்கள் இந்தியக் கணக்கில் மட்டுமே இருப்பதாக ஒரு கணக்குக் கூறுகிறது. சுவிஸ் நாட்டு மந்திரியும், தூதுவரும் கூட இந்தியாவில் இருந்துதான் மிக அதிகமான பணம் பதுக்கி வைக்கப் பட்டுள்ளது, இந்தியா முறையாகக் கேட்குமானால் நாங்கள் விபரங்களைத் தருவோம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால் குவாட்ராச்சி போஃபார்ஸ் பணத்தை எடுத்துக்கொண்டு ஓடிப்போக அனுமதித்த காங்கிரஸ் அரசு அல்லவா இந்தியாவை ஆளுகிறது. காங்கிரஸ்காரர்களிடம் எப்படி இதை எதிர்பார்க்க முடியும்?

2 டிரில்லியன் டாலர்கள் என்றால் எத்தனை சைபர் போட வேண்டும் என்று யாருக்காவது தெரியுமா? 1 டிரில்லியன் என்பது ஆயிரம் பில்லியன், ஒரு பில்லியன் என்பது ஆயிரம் மில்லியன் ஒரு மில்லியன் என்பது பத்து லட்சம் டாலர்கள். ஆக ஒரு டிரில்லியன் என்பது ஆயிரம் ஆயிரம் மில்லியன் டாலர்கள். ஒரு மில்லியன் டாலர் என்பது இந்திய பணத்தில் 5 கோடி ரூபாய். அப்படியானால் ஒரு டிரில்லியன் என்பது இந்தியப் பணத்தில் ரூ 5,00,00,00,00,00,000 ரெண்டு டிரில்லியன் என்பது 10,00,00,00,00,000 ரூபாய். இவ்வளவு பணம் இல்லையென்றாலும் கூட இதில் கால் வாசி பணம் இருந்தாலே இந்தியா இன்னும் பல வருடங்களுக்கு வரியே விதிக்காமல் பட்ஜெட் போடலாம். அமெரிக்கா மாதிரி சாலைகள், பாலங்கள் கட்டலாம்., நதிகளை இணைக்கலாம். இந்தியா நிஜமாகவே ஜொலிக்கும் சொர்க்க புரியாக மாறி விடும். மற்றும் ஒரு கணக்கின் படி இந்தியாவின் பணமாக 25 லட்சம் கோடி ரூபாய்கள் ஸ்விஸ் மற்றும் பிற கள்ள வங்கிகளில் இருப்பதாகச் சொல்லப் படுகிறது. இப்படி எந்த வகையினில் பார்த்தாலும் இந்திய அரசியல்வாதிகளினாலும், கள்ள வியாபாரிகளினாலும் சட்டத்தை ஏமாற்றி வரி கட்டாமல் உலகத்தின் பிற மூலைகளில் கள்ளத்தனமாக ஒதுக்கி வைக்கப் பட்டிருக்கும் சொத்துக்களை இந்தியா திருப்பிப் பெற்றாலே இந்தியா சொர்க்கபுரியாக மாறிவிடும்.

அப்படி சுவிஸ் வங்கிகளில் எந்தெந்த இந்தியர்கள் பணம் போட்டு வைத்திருக்கிறார்கள் என்ற பட்டியல் ஒன்று ஜெர்மானிய அரசாங்கத்தின் கையில் உள்ளது. இந்திய அரசாங்கம் கேட்டால் நாங்கள் அதைத் தரத் தயார் என்று ஜெர்மானிய அமைச்சர் சொல்லிவிட்டார். பாராளுமன்றத்தில் அத்வானி கரடியாகக் கத்திய பின்னரும் யோக்கியவான் பிரதமரும் நிதி மந்திரியும் வாயைத் திறக்க மறுத்து விட்டார்கள். அன்னை சோனியா சொல்லாமல் இவர்கள்தான் சாப்பிடக் கூட வாயைத் திறக்க மாட்டார்களே! இந்த பொதுத் தேர்தலில் அதை ஒரு முக்கியமான விவாதப் பிரச்சினையாக அத்வானியும் பா.ஜ. கட்சியும் மாற்றி விட்டார்கள். இருந்தாலும் இதன் முக்கியத்துவத்தை மக்கள் இன்னும் முழுமையாக உணரவில்லை.

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் முதல் நூறு நாட்களுக்குள்ளாகவே சுவிஸ் மற்றும் பிற நாட்டு வங்கிகளில் இந்திய அரசை ஏமாற்றிச் சேர்த்து வைக்கப் பட்டிருக்கும் பல லட்சம் கோடி ரூபாய்களை மீட்டுக் கொண்டு வருவோம் என்று அத்வானி தேர்தல் அறிக்கையாகவும், உறுதி மொழியாகவும் அளித்துள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி இந்த விஷயத்தை எழுப்பியதற்காகவே அத்வானி மீது கடும் கோபத்தில் உள்ளது. அவர்கள் இதுகுறித்து பேசக் கூட மறுத்து வருகிறார்கள். நமது டிவி சேனல்களும் பத்திரிகைகளும் காங்கிரஸ்/இடதுசாரி ஜால்ரா என்பது தெரிந்ததுதான்.

இத்தனை நாள் ஏன் அத்வானி இந்தப் பணத்தைக் கொண்டு வருவது பற்றி பேசவில்லை என்று நீங்கள் கேட்க்கலாம். இத்தனை நாட்களாக சுவிஸ் வங்கிகளை எந்த மேற்கு நாடும் கண்டு கொள்ளவில்லை. உலகில் தீவீரவாதமும் கடுமையான பொருளாதாரத் தேக்கமும் ஏற்பட்ட பின்னால் பல நாடுகளும் குறிப்பாக அமெரிக்க, பிரான்ஸ், ஜெர்மன் போன்ற வல்லரசுகள் இது போன்று கள்ளப்பணத்தைத் தங்கள் நாட்டிற்குத் திருப்பி தர வேண்டும்; இல்லாவிட்டால் சுவிஸ் அரசாங்கம் தண்டிக்கப்படும், தனிமைப் படுத்தப் படும்; உலக நாடுகளின் வெறுப்புக்கு உள்ளாகும் என்று அறிவித்து விட்டார்கள். அதனால் வேறு வழியின்றி சுவிஸ் அரசு பிற நாடுகளின் சட்டத்தை ஏமாற்றிச் சேமித்து வைத்திருக்கும் சேமிப்பைப் பற்றி அறிவிப்பதாக ஒத்துக்கொண்டுள்ளது.

இது சமீபத்தில் லண்டனில் நடந்த ஜி20 நாடுகளின் கூட்டத்தில் முக்கிய பிரச்சினையாகப் பேசப்பட்டது. ஆனால் இந்தியாவின் தரப்பில் சென்றிருந்த மன்மோகன் இந்த பிரச்சினையில் இந்தியாவின் நிலை பற்றியும் இந்தியாவின் ஆதரவு பற்றியும் பேச மறுத்து அர்த்தமுள்ள அமைதி காத்திருக்கிறார். ஆகவே இவ்வளவு நாட்களாக சுவிஸ் வங்கிகளுக்கு இருந்த சாதகமான சூழ்நிலை மாறியுள்ளது. இந்தக் கள்ளப் பணம் மூலமாகவே உலகின் பல்வேறு பயங்கரவாதச் செயல்கள் நடத்தப் படுகின்றன ஆகவே கள்ளக் கணக்கு முறை ஒழிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்காவும் பிற நாடுகளும் வற்புறுத்தி வருகின்றன.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இந்திய அரசியல் வாதிகளின் கள்ளப் பணத்தையும் திருப்பிப் பெற வேண்டும் என்கிறார் அத்வானி. பா.ஜ.க. இதைத் தங்கள் தேர்தல் வாக்குறுதியாகவே அளித்துள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியும் அரசும் இந்தப் பிரச்சினை பற்றி பேசவே பிடிவாதமாக மறுத்து வருகிறார்கள். ஆக இதில் கள்ளர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல ஸ்காட்லண்ட் யார்டு தேவையில்லை.

இந்தியாவை ஒரு வளமிக்க நாடாக்கும் வாய்ப்பு இப்பொழுது வந்துள்ளது. மக்கள் நினைத்தால் அதை சாதிக்கலாம். பா ஜ க வின் வாக்குறுதியை நம்பி அத்வானியின் உறுதிமொழியை நம்பி அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுத்தால் இந்த பல லட்சம் கோடி கள்ளப் பணத்தில் ஒரு சிறிய சதவிகிதத்தையாவது அத்வானியும் அவரது அரசும் மீட்டுக் கொண்டு வரும். வந்தால் இந்தியா நிஜமாகவே ஒளிரும். சுபிட்சம் திரும்பும். நம் குழந்தைகளுக்கு நல்ல கல்வி கிட்டும். அடிப்படைச் சுகாதாரம் நமக்குக் கிட்டும். பிற வளர்ந்த நாடுகளைப் போலவே இந்தியாவும் சகல அடிப்படைக் கட்டுமான வசதிகள் நிறைந்த நாடாக மாறும். அதை மாற்ற ஸ்விஸ் வங்கிகளில் இந்தியக் கிரிமினல்கள் சேர்த்து வைத்துள்ள கள்ளப் பணத்தை மீட்டு வருவோம் என்று ஒரு கட்சி உறுதிமொழி கொடுக்கும் பொழுது அவர்களை ஆதரிப்பதான் புத்திசாலியான எந்த வாக்காளரும் செய்யக்கூடிய விஷயமாக இருக்கும்.

நம் வீட்டில் நகைகளும் சொத்துக்களும் களவு போனால் நாம் என்ன செய்வோம்? போலீஸில் புகார் கொடுப்போம். களவு போன நம் சொத்தைத் திரும்பப் பெரும்வரை கடுமையாகப் போராடுவோம். நம் தேசத்தின் சொத்தைத் திரும்பப் பெற நாம் என்ன செய்யப் போகிறோம்? அந்த அக்கறை நமக்குக் கிடையாதா? அங்கிருப்பது நமது சொத்து.

“நாங்கள் தொட அனுமதிக்க மாட்டோம், இந்தியர்களைப் பிச்சைக்காரர்களாகவே இன்னும் பல நூற்றாண்டுகளுக்கு வைத்திருப்போம் என்று சொல்லும் காங்கிரஸ் கட்சிக்கு நாம் ஓட்டுப் போடப் போகிறோமா? தீர்மானம் செய்யுங்கள். இந்தியாவில் இன்னும் ஒரு பொற்காலத்தை ஏற்படுத்தக் கூடிய அரிய வாய்ப்பு வந்திருக்கிறது.

வேறு எந்த நாட்டிலும் இந்த சுவிஸ் வங்கிப் பிரச்சினை மட்டுமே பூதாகரமான தேர்தல் பிரச்சினை ஆகியிருந்திருக்கும். துரதிருஷ்ட வசமாக இந்தியாவில் இதுபற்றிய போதுமான புரிதல் தோன்றவில்லை. இந்த பிரச்சினை விவாதிக்கப் படவேயில்லை. மீடியாக்களும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க மறுக்கின்றன. அரசியல்வாதிகளில் அத்வானியைத் தவிர வேறு யாரும் இந்தப் பிரச்னையை முன்னெடுத்துச் செல்லவில்லை. இது ஒரு முக்கியமான நம் வாழ்வாதாரப் பிரச்சினை. நம் எதிர்காலத்தைத் முடிவு செய்யக் கூடிய ஒரு முக்கியமான விஷயம் இது. இது பற்றி இதற்கு முன் பேச முயன்ற ஆடிட்டர் குருமூர்த்தி பொய் வழக்குப் போட்டு கைது செய்யப் பட்டார். [இதுபற்றி இந்திய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் பொருளாதாரப் பேராசிரியர் ஆர்.வைத்தியநாதன் அவர்களின் பேட்டி]

வழக்கமான கள்ளப் பூனைகளை தேசச் சொத்தென்னும் பாலுக்குக் காவலாக வைக்கப் போகிறீர்களா? தேசபக்தியோடு முடிவெடுத்து, நல்லது நடக்கத் துணை போகப் போகிறீர்களா? பொறுப்போடு நடக்க வேண்டும் என்பதற்காகத்தானே வயது வந்தோருக்கு வாக்கு என்று வைத்திருக்கிறார்கள். வெறும் ஐநூறு ஆயிரத்துக்கு ஆசைப்பட்டு, தேசத்தைக் கைகழுவி விடாதீர்கள்.

இந்தியாவை ஒளிமயமான எதிர்காலத்துக்குக் கொண்டு செல்லப் போகிறோமா, அல்லது மீண்டும் இருண்ட காலத்திற்குத் தள்ளப் போகிறோமா என்பதை முடிவு செய்வது உங்கள் கைகளில் மட்டுமே உள்ளது.

Source: http://www.tamilhindu.com/2009/05/duty-of-true-tamils-1/


No comments:

Post a Comment