Saturday, September 4, 2010

Jesus camp

மிஷனரியாக இருந்தது எனக்கு ஒளி காட்டியது

மூலம்: நவோமி ப்ரெட்டிமேன் (Naomi Prettyman)
தமிழில்: ஜடாயு

naomi_prettyman_ex_christian1

நான் மிசௌரி மாநிலத்தின் கான்சாஸ் சிடி நகரில் (யு.எஸ்) வசீகரம் மிகுந்த எனது கிறிஸ்தவப் பெற்றோர்களால் வளர்க்கப் பட்டேன். கிறிஸ்தவ இல்லங்களில் பிறக்கும் எல்லாக் குழந்தைகளையும் போன்றே ஐந்து வயதாகும்போது நானும் “ரட்சிக்கப்” பட்டேன். எனக்கும், என் கூடப் பிறந்த ஏழு சகோதர, சகோதரிகளுக்கும் எனது அம்மாவே வீட்டுப் பள்ளிக் கூடத்தில் கல்வி கற்றுத் தந்தார். எனது நண்பர்களாக இருந்த எங்கள் சர்ச்சைச் சேர்ந்த எல்லாக் குழந்தைகளும் இதே வகையில் தான் வளர்க்கப் பட்டார்கள்.

நாங்கள் கான்சாஸ் நகரில் இருந்த எந்த உட்பிரிவையும் சாராத (non-denominational) கிறிஸ்தவ சர்ச்சுக்குச் சென்றோம். அங்கு அதிதீவிர கிறிஸ்தவத்தைக் கடைப் பிடித்தோம். மக்கள் ஆடுவதும், ஆவேசத்துடன் கூச்சலிடுவதும், வலிப்பு வந்தவர்கள் போன்று நடப்பதுமாக, பிரார்த்தனை நேரங்கள் பெரும்பாலும் வெறியாட்டங்களாகவே இருந்தன. “ஜீசஸ் கேம்ப்” என்ற ஆவணப் படம் எங்களுக்கு அளிக்கப் பட்ட அந்த போதனைகளை அப்படியே நினைவுக்குக் கொண்டு வருகிறது. அப்போதே நாங்கள் “ஏசுவின் போர்வீரர்களாக” இருந்தோம். சர்ச் அதன் உறுப்பினர்களை மிஷன் குழுக்களாக பல இடங்களுக்கு அனுப்பியது, குறிப்பாக மெக்சிகோவுக்கு.

இதற்கெல்லாம் நான் உடன்பட்டேன். அந்தக் காலத்தில் எனது வாழ்க்கை லட்சியம் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்வது, கர்த்தருக்கு ஊழியம் செய்வது என்பதாக இருந்தது. ஒரு சராசரி பதின்மவயது ஜீசஸ் பைத்தியமாக (”Jesus Freak”) இருந்தேன்.

ஜீசஸ் கேம்ப் ஆவணப் படம் - முன்னோட்டம்

Jesus Camp is a 2006 documentary directed by Rachel Grady and Heidi Ewing about a pentecostal summer camp for children who spend their summers learning and practicing their “prophetic gifts” and being taught that they can “take back America for Christ.”

எனக்கு பதினான்கு வயது இருக்கும்போது, இந்தியாவில் புதுதில்லிக்கு மிஷன் குழுவாக செல்ல தகுந்த ஊழியர்களைத் தேடிக் கொண்டிருப்பதாக சர்ச்சில் அறிவித்தார்கள். நான் கண்டிப்பாகப் போயே ஆக வேண்டும் என்று எண்ணினேன். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. எனது உயிர் நண்பனும் அந்த மிஷன் குழுவில் செல்வதாக இருந்தான். நான் அவனை விட்டுப் பிரிந்திருக்க விரும்பவில்லை. அந்தக் கோடை விடுமுறை முழுவதும் பலவிதமாக வேலை செய்து பணம் திரட்டினேன் - புல்வெளி சீர்செய்வது, புத்தகம் விற்பது, குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது, நன்கொடை கேட்பது இப்படியெல்லாம்.

இப்படித் தான் பதினான்கே வயதான நான் இந்தியா போகும் விமானத்தில் ஏறி உட்கார்ந்தேன். எங்களது மிஷன் குழுத்தலைவர் பணி என்ன என்பதைத் தெளிவாகவே விளக்கியிருந்தார் - அந்தப் பகுதி முழுவதும் மக்களை வலைவீசித் தேட வேண்டும், ஜப வீடுகளை உருவாக்க வேண்டும் (”scout the land” and plant “house churches”). அங்கு நாங்கள் ஆச்சரியகரமான இந்தியக் குடிகளை சந்தித்தோம். அவர்களைப் போலவே உடையணிந்து கொண்டோம். அவர்களுடன் புது தில்லி அருகில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்தோம். பிரசினை என்னவென்றால், அவர்கள் அனைவரும் இந்துமதம் அல்லது புத்த மதத்தைக் கடைப் பிடிப்பவர்களாக இருந்தார்கள். அவர்களது “தீய, சாத்தானிய” வழிகள் அகன்று, ஏசு அவர்களது மண்ணிற்கு வந்து அவர்களுக்கு ஒளி காட்ட வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தித்தோம். நானும் பணியில் முழுமையாகவே ஈடுபட்டிருந்தேன். “தீய, சாத்தானிய” வழிபாட்டாளர்கள் மனம் திருந்த கூவிக் கூவிப் பிரார்த்தனை செய்தேன்.

hindu_religion_is_culture

நாங்கள் இந்தியாவில் இருந்தபோது தீபாவளி என்ற பண்டிகை வந்தது. அதைப் பற்றிய நேரடி அனுபவத்தைப் பெற எங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தது. அந்த மக்கள் தங்களது மதம் மீது கொண்டிருந்த பெரும் நம்பிக்கையையும், சிரத்தையையும் நாங்கள் பார்த்தோம். அவர்கள் மதம் எப்படி அவர்களது கலாசாரத்தின் அழகிய அங்கமாக இருக்கிறது என்பதையும் உணர்ந்தோம்.

நான் யு.எஸ் திரும்பியதும், எனது 5 வயது தங்கை மிகவும் நோய்வாய்ப் பட்டாள். எங்கள் பெற்றோர்கள் ”கர்த்தரே பெரிய மருத்துவர்” என்ற நம்பிக்கை கொண்டிருந்ததனால் எனது தங்கை 2004ம் வருடம் ஜனவரி 9ம் நாள் இறந்து போனாள் (”Victory Halbert” என்று கூகிள் செய்தால் அவளைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம்). எங்கள் பெற்றோர்கள் விசாரணைக்கு அழைத்துச் செல்லப் பட்டார்கள். நானும், என் உடன்பிறந்தவர்களும் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்பப் பட்டோம். மூன்று வருடங்கள் ஆதரவற்றோர் இல்லங்களுக்கும் சீர்திருத்த இல்லங்களுக்கும் அலைக்கழிக்கப் பட்டு, கடைசியாக எங்கள் அப்பாவிடம் கொண்டு சேர்க்கப் பட்டோம். அப்போது விவாகரத்தாகியிருந்தது, அம்மா பிரிந்து சென்று விட்டிருந்தாள். அப்பா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆட்பட்டார். நிறையக் குடிக்க ஆரம்பித்தார். என் இஷ்டப் படி என்ன வேண்டுமானாலும் செய்ய அனுமதித்தார்.

நான் ஒருவிதமாக வளர்க்கப் பட்ட வீட்டுச் சூழலிலிருந்து, மதச்சார்பற்ற சுதந்திர உலகத்துக்குள் தள்ளப் பட்டது எனக்குப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. முதலில் அம்மாவிடம் வீட்டுப் பள்ளிக் கூடத்தில் பாடம். பிறகு, மிசௌரி மாநிலத்திலேயே மிகவும் மோசமான அரசுப் பள்ளிகள் இருக்கும் பகுதியில் அரசுப் பள்ளிக்குப் போகவேண்டி வற்புறுத்தப் பட்டேன்.

நான் அறியவந்த எல்லாவற்றுக்கும் எதிராக புரட்சி செய்தேன். அடிக்கடி பள்ளிக்குச் செல்வதை தவறவிட்டேன், அதனால் பள்ளியிலிருந்து நிற்கவேண்டியதாயிற்று. புதிய பெரிய கிளாஸ் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றினேன். கடைசியாக பதினேழு வயதில், பள்ளிப் பருவத்தில் சினேகமான தோழனுடன் சேர்ந்து வாழத் தொடங்கினேன். உடனேயே, நான் கர்ப்பமானேன். என்னை இழுத்துப் பிடித்து வைத்திருந்த எல்லாவற்றையும் உதறி, என் வாழ்க்கை இட்டுச் செல்லும் பாதையில் செல்லத் தொடங்கினேன். நானும் என் தோழனும் சேர்ந்து ஒரு அபார்ட்மெண்ட் வாங்கினோம். சேர்ந்து வாழ நிச்சயித்தோம். 2008ல் எங்களுக்கு இன்னொரு குழந்தை பிறந்தது. இறுதியாக திருமணம் செய்து கொண்டோம். அப்போது வயது எனக்கு 19, அவனுக்கு 21. பிறகு புது வீடு கட்டிச் சென்றோம். நான் வீட்டிலிருந்தே குழந்தைகள் காப்பகம் நடத்தினேன். அவன் கல்லூரியில் படித்த பட்டதாரி என்பதால் நல்ல வேலை கிடைத்தது. நாங்கள் பொருளாதார ரீதியாக முற்றிலும் பாதுகாப்பு அடைந்து விட்டோம்.

என் கணவர் பாப்டிஸ்ட் (Baptist) சூழலில் வளர்ந்தவர். என்னைப் போலவே அவரும் தன்னை கிறிஸ்தவன் என்று பெருமையாக அழைத்துக் கொண்டிருந்தார். ஆனால் உண்மையில் நாங்கள் இருவருமே எங்கள் நம்பிக்கைகளுடன் போராடிக் கொண்டிருந்தோம். நாங்கள் இள வயதினர். கிறிஸ்தவ மதத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியாததால், அதைப் பற்றிப் பேசுவதை முற்றாகவே தவிர்த்தோம்.

எனது இந்திய மிஷன் பயணம் பற்றிய குற்ற உணர்வுடன் நான் போராடிக் கொண்டிருந்தேன். நான் உண்மையில் அங்கு போய் என்ன செய்தேன்? ”தேவனின் நற்செய்தியைப் பரப்பிக் கொண்டிருந்தேன்!” அந்த இந்தியர்கள் தங்கள் மதத்தின் மீது எவ்வளவு பற்றுக் கொண்டிருந்தார்கள் என்பதை எண்ணிப் பார்த்தேன். அவர்களது கலாசாரத்திற்குள் எனது விசுவாச வெறியுடன் நான் அத்துமீறி நுழைந்திருக்கிறேன் என்பது எனக்குப் புரிந்தது. சொல்லப் போனால் அதன்மீது உண்மையில் எனக்கே நம்பிக்கை இருந்ததில்லை.

கிறிஸ்தவ மதத்தைப் பற்றிய ஏராளமான கேள்விகளை எனக்குள் எழுப்பிக் கொண்டேன். இதை அலங்கோலமாகாமல் எப்படி என் பாப்டிஸ்ட் கணவருடன் பேசப் போகிறேன் என்று கவலைப் பட்டுக் கொண்டிருந்தேன். நல்லவேளை அவருக்கும் பைபிளைப் பற்றி கிறிஸ்தவத்தைப் பற்றி அதே போன்று கேள்விகள் இருந்தன என்று தெரியவந்தது. எனக்கு ஆசுவாசமாக இருந்தது. ஆனாலும், இதைப் பற்றி என்ன செய்வது என்று எங்கள் இருவருக்குமே தெரியவில்லை.

அது 2009ம் ஆண்டு கோடை காலம். என் அப்பா, தீவிரமாக கிறிஸ்தவத்தை உதறித் தள்ளி விட்டிருந்தார். மத மௌடிகம் பற்றி இடைவிடாத பேச்சுக்களிலும், சதிவலைகள் பற்றிய சலிக்காத உரையாடல்களிலும் ஊறி அதன் எல்லைக்கே சென்று விட்டிருந்தார். ”ஓய்வான உழைப்பாளர் தினம்” (Laid Back Labor Day) என்ற கொண்டாட்டத்திற்காக கான்சஸின் மெக்லவுத் (Mclouth) பிரதேசத்திற்கு கூட்டாகச் சேர்ந்து போக எங்களை அழைத்தார். நாங்கள் தயங்கினோம், ஏனென்றால் அந்த இடம் பாகன்கள் அதாவது இயற்கை வழிபாட்டாளர்கள் கூடும் மைதானம் (Pagan campground). கிறிஸ்தவர்களான எங்களுக்கு, பாகன்கள் சாத்தானிய வழிபாட்டாளர்கள், சூனியக் காரர்கள் என்று ஆதிமுதலே கற்றுக் கொடுக்கப் பட்டிருந்தது.

இருந்தாலும் அங்கு போனோம். அது எங்கள் வாழ்க்கையை மாற்றிவிட்டது. இப்போது நாங்களே எங்களை ”பாகன்கள்” என்று அழைத்துக் கொள்கிறோம். எதையும் நாங்கள் கடைப்பிடிப்பதில்லை. ஆனால் மந்திர வித்தைகளையும், மறைஞானத்தையும் திறந்த மனதுடன் அணுகுகிறோம். இயற்கை மீது அன்பு கொண்டவர்களாக இருக்கிறோம்.

கர்த்தரால் நிராகரிக்கப் படுவது பற்றியும், நரகத்தில் உழல்வது பற்றியும் இப்போது எனக்குப் பயம் இல்லை. உலகத்தில் ஒருவர் சொல்வதும் முழு உண்மை இல்லை என்று இப்போது எனக்குப் புரிகிறது. அப்படி இருக்க ஒரே ஒரு மதம் மட்டும் எப்படி சரியானதாக இருக்க முடியும்? மதம் என்பது உண்மையில் கலாசாரம் சம்பந்த பட்ட விஷயம் என்று நான் நினைக்கிறேன், குறிப்பாக, எனது இந்தியப் பயணத்தின் காரணமாக. கடவுளை வேறு பெயரில் வழிபடுவதாலோ, ஏசு என்பவரை அவர்கள் இதயங்களில் ஏற்றுக் கொள்ளாததாலோ இந்தியர்கள் தீயவர்கள் அல்ல; சாத்தான்கள் அல்ல. இப்போது அதை நான் அறிவேன். நான் சுதந்திரமடைந்து விட்டேன்.

இந்த வாழ்க்கைக் கதையைச் சொன்னதன் நோக்கம் என்ன என்று என்னால் சரியாகக் கூற முடியவில்லை. இது ஒரு வாக்குமூலம் அல்ல. நான் யார், எப்படிப் பட்டவளாகியிருக்கிறேன் என்பதை உறுதியுடன் சொல்ல விரும்பினேன் என்றே நினைக்கிறேன். நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை அறிவேன். முன்னாள் கிறிஸ்தவர்களாக எங்களது பழைய நினைவுகளை, எண்ணங்களை, புரிதலுடன் பகிர்ந்து கொள்ளக் கூடிய கணவர் கிடைத்தார் என்பது என் அதிர்ஷ்டம். இந்த இடத்தில் “நீ நரகத்திற்குப் போவாய்” என்று சொல்லப் படாமல், என்னுடைய வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ள முடிகிறது என்பதிலும் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன் (மற்ற இடங்களில் அப்படி நிறையப் பேர் இன்னமும் சொல்லத் தான் செய்கிறார்கள். நான் தான் நம்புவதில்லை).

நான் நம்பிக்கைகளுக்காக அச்சுறுத்தப் படவில்லை. ஆனால் அந்த ஒரு காரணத்தினாலேயே தான் கீழ்ப்படிந்தேன் - அச்சம். கர்த்தரால் நிராகரிக்கப் பட்டு நரகத்தில் உழலாமல், சுவர்க்கத்திற்குப் போக வேண்டும் என்ற அச்சத்தால், முற்றாக பைபிளில் கூறியபடி வாழ்க்கையை வாழ முயற்சி செய்தேன். எனக்கு பைபிளைப் பற்றிச் சொல்வதற்கு நிறையவே உள்ளது, ஆனால் இப்போது வேண்டாம்.

ஒரு விஷயத்தை ஒத்துக் கொள்கிறேன் - இப்போதும் நான் அச்ச உணர்வுடன் போராட வேண்டியுள்ளது, கிறிஸ்தவத்தின் காரணமாக. சில சமயம் நினைக்கிறேன் - ஒருவேளை நான் எண்ணுவது தவறோ? உண்மையிலேயே நரகம் இருந்து, நான் அங்கு தான் போகப் போகிறேனோ? என்று. உடனே என்னை ஒரு உலுக்கு உலுக்கிக் கொள்கிறேன். தங்கள் பார்வையில் ”சரியான உலகத்தை” உருவாக்க கிறிஸ்தவர்கள் கண்டுபிடித்த சமாசாரம் தான் நரகம் என்று நினைவு படுத்திக் கொள்கிறேன்.

(இந்தக் கட்டுரை Exchristian.net என்ற இணையதளத்தில் வெளிவந்தது. இந்தக் கட்டுரை ஆசிரியர் போன்று கிறிஸ்தவ மதத்தால் தங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட கடும் மன உளைச்சல்கள், குற்ற உணர்வுகளிலிருந்து மீண்டு புதிய வாழ்க்கையைத் துவக்கியவர்கள் மற்றும் அதில் முயல்பவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் இணையதளம் அது).

Source: http://www.tamilhindu.com/2010/06/being-missionary-showed-me-light/

No comments:

Post a Comment