சென்னையில் அண்மையில் ஒரு மாத காலத்துக்குள் இருவேறு வங்கிகளில் பகல் நேரத்திலேயே கொள்ளையர்கள் கைவரிசை காட்டினார்கள். துப்பாக்கி முனையில் நடந்த இக்கொள்ளைச் சம்பவங்கள் மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. இவற்றில் தொடர்புடையதாகக் கூறப்படும் வெளிமாநிலத்தைச் சார்ந்த ஐந்து கொள்ளையர்கள் வேளச்சேரி அருகே பிப். 23 அன்று சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த பிப். 20 ல் திருப்பூரில் காவல் நிலையம் எதிரில் உள்ள ஒரு பிரபல நகைக்கடையில் இரவில் புகுந்த திருடர்கள் சாவதானமாக 38 கிலோ நகையைத் திருடிச் சென்றிருக்கின்றனர். திருடர்கள் வெளிமாநிலத்தவர்களாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களைத் தேடி காவலர் தனிப்படைகள் அலைகின்றன.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் அதே திருப்பூரில் ஒரு பிரபல நகை அடகுக் கடையில் கொள்ளை நடந்தது; ஆயினும் காவல்துறையின் புலனாய்வால் குற்றவாளிகள் சிக்கினர்.வள்ளியூரில் ஒரு வங்கியில் கொள்ளை முயற்சி பிப். 23 ம் தேதி நடந்துள்ளது. இது போல மாநிலத்தின் பல இடங்களில் ஏடிஎம் இயந்திரங்களிலும் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. வீடு புகுந்து கொள்ளை அடிப்பது அதிகரித்து வருவதை மாலைமலர் பத்திரிகை படித்தாலே உணர முடிகிறது.
இது போன்ற நிகழ்வுகள் தற்போது ஆங்காங்கே தொடர்ந்து நடந்துவருவது கவலை அளிக்கிறது. குற்றம் நடந்த பின்னர் காவல்துறை திறமையாகச் செயலாற்றி வருவது திருப்தியே. எனினும், குற்றம் நடக்காமல் தடுப்பதில் தான் ஒரு அரசின் சிறப்பு இருக்க முடியும். அரசின் முக்கிய கடமைகளில் ஒன்று குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது. அதற்காகவே காவல்துறை இயங்குகிறது. குற்றம் நிகழாமல் தடுப்பதே இதன் முதன்மைப்பணி. குற்றம் நிகழும் தருணங்களில் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவதும் அரசின் கடமை. அப்போது தான் குற்றம் புரிய அஞ்சும் நிலை உறுதியாகும்.
எனவே தான், ஒவ்வொரு காவல் நிலையத்திலும் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு என்ற இரு பிரதானப் பிரிவுகள் செயல்படுகின்றன. சட்டம் ஒழுங்குப் பிரிவின் கடமை, சமுதாயத்தின் ஒழுங்கு குலையாமல் பாதுகாப்பதும், குற்றம் நிகழாமல் தடுப்பதுமே. குற்றவாளிகளை முடக்குவதும் குற்றங்களைப் புலனாய்வதும் குற்றப்பிரிவின் பணி. ஆக, இவ்விரு பிரிவுகளில் சட்டம் ஒழுங்கே முதன்மையானது என்பது விளங்கும்.
இதில் முதன்மைப் பணியில் கோட்டை விட்டுவிட்டு, கொள்ளையர்களை சுட்டுக் கொல்வதில் பயனில்லை. ஏனெனில் கொள்ளையில் இழந்த பொருளின் பெரும் பகுதி மீட்கப்பட வாய்ப்பில்லாமலே போகக் கூடும்; தவிர, கொள்ளையில் தொடர்புடைய பலர் தப்பிக்கவும் உதவக்கூடும். உண்மையில், குற்றவாளிகளைப் பிடிப்பதோ, கொல்வதோ, தும்பை விட்டு வாலைப் பிடிப்பது போலத் தான் கருதப்படும். ஆகவே, குற்றங்கள் நடக்காமல் தடுப்பதே அரசின் பிரதானக் கடமை. ஆனால், நமது அரசு என்ன செய்கிறது?
கடந்த ஆண்டு மே மாதம் ஜெயலலிதா தலைமையில் மூன்றாவது முறையாக அதிமுக அரசு அமைந்தபோது தமிழகமே நிம்மதிப் பெருமூச்சு விட்டது. திமுக அரசின் குடும்ப அரசியலும், அராஜகங்களும், கரைகாணாத ஊழல்களும் மக்களுக்கு ஏற்படுத்திய அதிருப்தியே அதிமுகவின் வெற்றிக்குக் காரணமானது. புதிய அரசால் தமிழகம் பொலிவு பெறும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்குமே இருந்தது.
ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத் தான் இருந்தது. ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை. அதிமுக அரசின் பல நடவடிக்கைகளும் பலத்த எதிர்ப்பையும் நீதிமன்ற வழக்குகளையும் சந்தித்தன. சமச்சீர் கல்வி, கிராம நலப் பணியாளர்கள் பதவி நீக்கம், பேருந்துக் கட்டண உயர்வு, அடிக்கடி அமைச்சர்கள் மாற்றம், அதிகாரிகள் இடமாற்றம், கடுமையான மின்வெட்டு,… என அரசின் சொதப்பல்கள் தொடர்ந்தன.
ஜெயலலிதா முதல்வரானவுடன், ‘மாநிலத்தில் நிலவும் கொள்ளைச் சம்பவங்கள் கட்டுக்குள் வருமா?’ என்று செய்தியாளர்கள் ஒரு பேட்டியில் கேட்டனர். அதற்கு பதில் அளித்த முதல்வர் ஜெயலலிதா, ‘திமுக ஆட்சியின்போது தமிழகத்தில் உலாவிய கொள்ளையர்கள் (யாரையோ சொல்லி இருக்கிறார். அவர்கள் யார்?) ஆந்திராவுக்குத் தப்பிவிட்டார்கள்’ என்றார்! ஆனால், இப்போது மாதந்தோறும் மாநிலத்தின் ஏதாவதொரு பகுதியில் கொள்ளைகள், கொலைகள் நிகழ்வது வாடிக்கையாகிவிட்டது. இதற்கு மின்வெட்டைக் காரணமாக மக்கள் கூறுவது அதிர்ச்சி அளிக்கும் தகவல்.
ஆனால் அரசோ, இவை எதைப் பற்றியும் கவலைப்படாமல், திமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நிலப்பறிப்பு வழக்குகள் தொடுப்பதிலேயே குறியாக இருந்து வருகிறது. முந்தைய ஆட்சியில் திமுகவினர் நடத்திய அராஜகங்களில், அப்பாவிகளிடம் மிரட்டி நிலங்களைப் பறித்தது மாபெரும் குற்றம்; அதில் சந்தேகமில்லை. ஆனால், முன்னாள் அமைச்சர்கள் மீதான பல வழக்குகள் இட்டுக் கட்டப்பட்டவையாக இருப்பதைக் காணும்போது, இந்த நிலப்பறிப்பு வழக்குகளே வீணாகிவிடுமோ என்ற கவலையும் எழுகிறது.
ஆட்சிக்கு வந்து பத்து மாதங்கள் முடிவடையும் நிலையில், இன்னும் முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகளைப் பதிவு செய்து கொண்டிருப்பது, அவர்கள் மீது அனுதாபத்தையே உருவாக்கும்; அரசின் செயல்பாடு பழிவாங்கும் போக்காக கருதப்பட்டுவிடும் என்பதை ஜெயலலிதா உணர வேண்டும். அவருக்கே 1996 ல் இதே போன்ற நிலையை திமுகவினர் ஏற்படுத்தியதை மறந்திருக்க மாட்டார்.
ஜெயலலிதாவை முடக்க கருணாநிதி நடத்திய சட்ட விளையாட்டுகளால் தான், அவர் மீது மக்களுக்கு மீண்டும் பரிவுணர்ச்சி வந்தது. அதே போன்ற சூழலை திமுகவின் முன்னாள் அமைச்சர்களுக்கு அதிமுக அரசு ஏற்படுத்திவிடக் கூடாது. தவிர, செத்த பாம்பை அடிப்பதில் எந்த வீரமும் இல்லை.
அடுத்து, தனது முன்னாள் உயிர்த்தோழி சசிகலாவைத் துரத்திய பிறகு, அவருடன் தொடர்புள்ளவர்கள் திட்டமிட்டு வேட்டையாடப்படுகிறார்கள். ராவணன், திவாகரன், நடராஜன், என ஜெயலலிதாவின் முன்னாள் நண்பர்கள் பலரும் இப்போது சிறைக்குள் இருக்கிறார்கள். இதற்காகவும் நமது காவல்துறை மெனக்கெடுகிறது; பல வழக்குகள் தூசு தட்டப்படுகின்றன; பல புதிய புகார்கள் பதிவாகின்றன. இதனால், கட்சிக்குள்ளும் நம்பகமற்ற சூழ்நிலை உருவாகி வருகிறது.
சசிகலா கும்பலுடன் தொடர்பு கொண்டவர் என்று உளவுத்துறையால் சுட்டிக் காட்டப்படும் அதிகாரிகளும், அமைச்சர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், கட்சி நிர்வாகிகளும் அதிகார மையங்களிலிருந்து உடனடியாக அகற்றப்படுகிறார்கள். இந்த இசை நாற்காலி விளையாட்டுக்கு உதவுவதற்கே காவல்துறையின் உளவுப் பிரிவுக்கு நேரம் சரியாக இருக்கிறது.
இவ்வாறாக, அதிமுக அரசின் கவனம் முழுவதும் எங்கு செலுத்தப்பட வேண்டுமோ அங்கு செலுத்தப்படாமல், தேவையற்ற பகுதிகளில் விரயமாகிறது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க வேண்டிய காவலர்கள், முன்னாள் அமைச்சர்களின் பழைய சரித்திரத்தை புரட்டிக் கொண்டிருக்கிறார்கள். அரசை விழிப்புணர்வுடன் காக்க வேண்டிய உளவுத்துறையோ சில்லறை விஷயங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பொருளாதாரச் சீரழிவின் எதிரொலியாக கொள்ளையர்கள் தமிழகத்தில் வேட்டை நடத்தி வருகின்றனர். அதைத் தடுக்கும் ஆற்றலின்றி கையைப் பிசைகிறது காவல்துறை. அதன் சக்தி ஒருமுகப்படாமல் விழலுக்கு இறைக்கப்படுவதே காரணம் என்பதை இனியேனும் நமது முதல்வர் உணர வேண்டும்.
காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் அதன் முக்கியத்துவத்தை அறியாதவர் அல்ல. துணிச்சலான பெண்மணி, தேசநலனில் விட்டுக் கொடுக்காதவர், காவல்துறை சுயமாக இயங்கச் செய்பவர்,.. என்றெல்லாம் அவரைப் பற்றிக் கூறப்பட்டதுண்டு. அந்தக் கருத்துக்கள் பொய்யாகாமல் காக்க வேண்டிய பொறுப்பும் முதல்வருக்கே உண்டு.
http://www.tamilhindu.com/2012/02/tn-law-and-order-and-crimes/
No comments:
Post a Comment