Monday, February 27, 2012

ஜாதிகள் உள்ளதடி பாப்பா


ஆர்.ரங்கராஜ் பாண்டே

இறுதியாக, பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது.

"ஜாதி, மத பேதமற்ற சமுதாயம் உருவாக, தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த' இனமானத் தலைவர், தமிழக முதல்வர் கருணாநிதியின் உள்ளத்தில் ஒளிந்திருந்த விஷயம், தன்னையும் மீறி அவரை வெளிப்படுத்திவிட்டது.

கடந்த 21ம் தேதி, சென்னையில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. நடிகர் ஜெமினி கணேசனின் 90வது பிறந்த நாள் விழா. தமிழகத்தில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும், விழா நாயகராக முதல்வர் கருணாநிதி தான் இருப்பார் என்பது, கடந்த நாலரை ஆண்டு நாட்டு நடப்புகளை கவனித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த விழாவுக்கும் அவரே சிறப்பு அழைப்பாளர்.

தான் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி நடக்கும் இடம் அல்லது நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்டவரோடு தன்னை எப்படியாவது தொடர்புபடுத்திக் கொள்வது முதல்வரின் பாணி. "முதல்வர் என்பதற்காகத் தான் அழைத்தார்கள்' என்றாகிவிடக் கூடாதாம்.

பூந்தமல்லிக்குச் சென்றால், "என் திரைப்படங்களின் ஒன்றின் நாயகிக்கு பூவிருந்தவல்லி என்று தான் பெயர் வைத்தேன்' என்பார். தூத்துக்குடிக்குச் சென்றால், "இங்கு தான் முதன் முதலில் கொடியேற்றினேன்.' திருச்சிக்குச் சென்றால், "குளித்தலையில் தான் நான் முதல் முதலில் போட்டியிட்டேன்.'

"கோவையில் தான் கதை, வசனம் எழுதக் குடியிருந்தேன்; சைதாப்பேட்டை வேட்பாளரை வெற்றி பெற வைத்து தங்க மோதிரம் வாங்கினேன்' என, அந்தப் பட்டியல் சென்றுகொண்டே இருக்கும். டெல்டா மாவட்டங்களைப் பற்றி கேட்கவே வேண்டாம். "எனக்குத் தெரியாமல் அங்கு எந்தத் தெருவும் கிடையாது' என்பார். அப்படிப்பட்டவர், ஜெமினி கணேசனுக்கும் தனக்கும் எந்தத் தொடர்பையும் ஏற்படுத்திக்கொள்ளாவிட்டால் எப்படி?

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி என்றொரு புரட்சிப் பெண். பாடப் புத்தகத்தில் படித்திருப்பீர்கள். தமிழகத்தைச் சேர்ந்தவர். எம்.பி.பி.எஸ்., படித்த முதல் பெண். இந்தியாவிலேயே எம்.எல்.சி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணும் கூட. அவர், ஜெமினி கணேசனுக்கு அத்தை முறை. அவரை முதல்வர் எப்படி அறிமுகப்படுத்துகிறார் பாருங்கள் :

ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவர், குழந்தைக்காக, இரண்டாம் தாரமாக, "எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த' சந்திரம்மா என்ற பெண்ணை மணந்தார். சந்திரம்மா மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் முதல் குழந்தை தான் முத்துலட்சுமி ரெட்டி.

தலைவரின் தொடர்பைக் கவனித்தீர்களா? இதுவரை முத்துலட்சுமி ரெட்டியைப் பெருமைப்படுத்தியவர்கள் யாரும், அவருடைய ஜாதியைக் கேட்டறிந்ததில்லை. அதை எடுத்துச் சொன்னதும் இல்லை. முத்துலட்சுமி சேர்த்துக்கொண்ட பரிசுகளும், பட்டங்களும், சிறப்புகளும், அவருடைய உழைப்புக் கிடைத்தனவே அன்றி, அவருடைய ஜாதிப் பின்னணிக்கு கிடைத்தவை அல்ல. அந்த வகையில், முத்துலட்சுமி ரெட்டியை ஒரு ஜாதி வளையத்துக்குள் சுருக்கிய பெருமை, தலைவரைத் தான் சேரும்.

முதல்வருக்கு, தான் பிறந்த ஜாதி மீது பற்றும், பாசமும் இருப்பதால் தானே, "இசை வேளாளர் சமுதாயத்தில் பிறந்த' என்று கூட குறிப்பிடாமல், "எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த' என்ற அடைமொழியைக் கொடுக்கிறார். இவரை விட, தமிழகத்தையே சமத்துவபுரமாகக் காண விழையும் தலைவர், வேறு யாராக இருக்க முடியும்? அதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மேலும் சொல்கிறார்:

இதை இந்த விழாவில் ஏன் சொல்ல வேண்டுமென்றால், ஜெமினி கணேசனின் அத்தை முத்துலட்சுமி ரெட்டி. எனவே, எனக்கும் ஜெமினி கணேசனுக்கும் சொந்தம் இருக்கிறதா, இல்லையா? என்னை, வாலியோ அல்லது பாலச்சந்தரோ பிரித்துப் பார்த்து, "உனக்கு சொந்தம் இல்லை' என்று சொல்ல முடியாது அல்லவா?' என்கிறார். முத்துலட்சுமி ரெட்டியை மட்டுமின்றி, ஜெமினி, வாலி, பாலச்சந்தர் என மூன்று ஜாம்பவான்களையும் ஜாதி வளையத்துக்குள் அடக்குகிறார். மூவரும் ஒரே ஜாதி என அடையாளம் காட்டுகிறார்.

விழா தொடர்பான விஷயங்கள் தவிர, இதுவரை எங்குமே, எதுவுமே பேசியிராத பாலச்சந்தர் ஏன், "உனக்கு சொந்தமில்லை' என சொல்லப்போகிறார்? கலைஞரை வாழ்த்துவதைத் தவிர தொழில் வேறில்லை என வாழ்ந்துவரும் வாலி ஏன் கேட்கப்போகிறார்? இவர்களின் ஜாதியைச் சுட்டிக்காட்டுவதன்றி, முதல்வருக்கு வேறு எந்த நோக்கமும் இருக்கக்கூடும் என என்னால் யூகிக்க முடியவில்லை.

இந்த ஒரு நிகழ்ச்சி தான் என்றில்லை. "தாழ்த்தப்பட்டவர்களின் சம்பந்தி நான்; பரிதிமாற் கலைஞர் பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர்; தாழ்த்தப்பட்டவராக இருப்பதால் தான் "ஸ்பெக்ட்ரம்' ராஜா மீது புகார் சொல்லப்படுகிறது; பிற்படுத்தப்பட்டவனாக பிறந்தது தான் நான் செய்த பாவமா?' என, எவரை எடுத்தாலும், எதை எடுத்தாலும், ஜாதியைச் சொல்லி அடையாளம் காட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

"நீ யார்?' என்று நம்மை யாரேனும் கேட்டால், "நான் முதலியார்; ரெட்டியார்; நாயுடு; தேவர் என்றெல்லாம் சொல்லாமல், "நான் தமிழன்' என தலைநிமிர்ந்து சொல்லும் காலம் வரவேண்டும்' என அடிக்கடி சொல்லி வருகிறார், துணை முதல்வர் ஸ்டாலின்.

இதை முதல்வர் படித்ததில்லையோ?

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=132174&Print=1

No comments:

Post a Comment