Friday, March 2, 2012

இந்த வாரம் இந்து உலகம் (மார்ச் 2, 2012)

March 2, 2012

பல காரணங்களால் இந்து மதத்தை விட்டு வெளியே பிற மதங்களுக்கு மாறியவர்கள், திரும்ப தாய் மதம் திரும்ப முடியுமா? என்ற கேள்வி இனி எழாது. ஹிந்து மதத்தின் மேன்மை, அதன் பரந்த சுதந்திர வெளி இருட்சுவர் சூழ்ந்த மதங்களில் இருப்பவர்களுக்கு விடுதலையாக அமைவதை கண்கூடாக பார்த்து வருகிறோம். பல நாளிதழ்களிலும் அவ்வப்போது இது குறித்த செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. ஒரிசாவில் கிறிஸ்தவ மதத்துக்கு கட்டாய மதமாற்றம் செய்யப் பட்ட மலைவாழ் மக்கள் சுமார் மூவாயிரம் பேர், நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வந்து விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் டாக்டர். பிரவீன் தொகாடியா அவர்கள் தலைமையில் ஹிந்து மதத்துக்கு திரும்பினர். இந்நிகழ்ச்சியில் திரு. தொகாடியா அவர்கள் பேசும்போது “விஸ்வ ஹிந்து பரிஷத் மலைவாழ் மக்களுக்காக அரும்பாடு பட்டு வருகிறது. நாடெங்கும் பழங்குடி இன மக்கள் வாழும் பகுதிகளில் நாற்பதாயிரம் பள்ளிகள், ஆயிரம் மருத்துவ விடுதிகள் ஆகியவை விஸ்வ ஹிந்து பரிஷத்தின் ஆதரவில் நடைபெற்று வருகின்றன. மலைவாழ் மக்கள் படித்து முன்னேறி மேன்மை அடையவேண்டும் அதே சமயத்தில் அவர்கள் பண்பாட்டு கலாசார அம்சங்களை இழந்து விடக்கூடாது” என்று கூறினார்.

என்னென்னவோ அதிசயங்கள் நடக்கிறது, சென்ற மாதம் மகா சிவராத்திரியின் போது பாகிஸ்தானிலேயே சிவாலய பூஜைகள் விமரிசையாகக் கொண்டாடப் பட்டதாம். இதில் திரளான இந்துக்கள் கலந்து கொண்டு குளத்தில் நீராடி விளக்கு ஏற்றி வழிபாடு நடத்தினர். இந்த விழாவில் இந்தியாவில் இருந்து சென்ற பக்தர்களும் பங்கேற்றனர். சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் இருந்து பக்தர்கள் வந்து கலந்து கொண்டதாக அதிகாரிகள் கூறினர். நம்மூரில் சல்மான்கான் கூட மகாசிவராத்திரி விரதம் இருந்ததாகவும் தகவல். இதோடு இன்னொரு மகிழச் செய்யும் தகவல் பாகிஸ்தானில் 1500 வருடம் பழமை வாய்ந்த பஞ்சமுக ஹனுமான் ஆலயம் புனருத்தாரணம் செய்யப் படவிருக்கிறதாம்.

பகவத் கீதையை உருது மொழியில் மொழி பெயர்த்திருக்கிறார் ஒருவர். இவரும் ஒரு முஸ்லிமா என்கிறீர்களா? அது தான் இல்லை. வேங்கட அப்பளச் சாரி என்பவர், சுமார் எழுநூறு ‘உருது சுலோகங்களில்’ பகவத் கீதையை மொழிபெயர்த்துள்ளார். எண்பது வயதான இவர், ஒரே வருடத்தில் மொழி பெயர்த்து விட்டாராம். முகலாயர் காலத்தில் கீதை மொழிபெயர்க்கப் பட்டது. பின்னர் சமீபத்திலும் சிலர் முயற்சித்துள்ளனர். ஆனால் அவற்றை எல்லாம் விட என்னுடையது மிகச்சரியான மொழிபெயர்ப்பு என்கிறார். இந்த பகவத் கீதை மொழிபெயர்ப்பை உருது மொழியில் இருப்பதால் வலமிருந்து இடமாகத் தான் படிக்க முடியும்!

இந்த மொழிபெயர்ப்பில் ஈடுபட்டிருந்த போது, பரமபதம், பராசக்தி போன்ற வார்த்தைகளுக்கு இணையான உருது வார்த்தைகள் கிடைப்பதில் சிக்கல் இருந்ததாம். மொழிபெயர்ப்பு என்பது சாதாரண விஷயம் அல்ல. அதுவும் கீதை போன்ற இலக்கியச்சுவையும், தத்துவ ஆழமும் கொண்ட நூலை எளிதாக மொழியாக்கம் செய்வது இன்னும் கடினம்.

பெரிய பெரிய பத்திரிகைகளில் வேலை பார்க்கும் ஆசாமிகள் கூட பிரபலங்களை பேட்டி எடுத்த விவரத்தை வெளியிடும்போது சொன்னது ஒன்று, வெளிவந்தது வேறு ஒன்று என்று செய்து விடுகிறார்கள். அதன் பிறகு அந்த பிரபலம் தான் அப்படி சொல்லவில்லை என்று படாத பாடு படவேண்டி இருக்கிறது. பொது மக்கள் முதலில் வந்த செய்தியை நம்புவதே வழக்கம். ஆகவே ஒன்று அந்த பிரபலம் சம்பந்தப் பட்ட பத்திரிக்கையை கோர்ட்டுக்கு இழுக்க வேண்டும் இல்லாவிட்டால் கண்டுகொள்ளாமல் அடுத்த வேலையைப் பார்க்க போக வேண்டியது தான். அந்த பத்திரிக்கையாளரோ சற்றும் கவலைப் படமாட்டார், தவறு நிகழ்ந்துவிட்டது என்று எடுத்துக் காட்டினாலும் வருத்தம் தெரிவிக்க மாட்டார். இன்றைக்கு பத்திரிகை தர்மம் அப்படி ஆகிவிட்டது. அச்சுப் பத்திரிக்கைகளிலேயே இப்படி என்றால் இணைய இதழ்களில் கேட்கவா வேண்டும்?

அண்மையில் மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் அவர்கள் பேசும் போது சுதந்திரம் வாங்கிய பின் இந்தியாவில் பிரிட்டிஷார் ஆண்டபோது இருந்ததை விட சுரண்டல் பலமடங்கு அதிகமாகி விட்டது என்று தெரிவித்திருந்தார். இந்த செய்தியை “பிரிட்டிஷ் ஆட்சி நீடித்திருந்தால் இந்தியா எங்கேயோ போயிருக்குமே – ஆர்.எஸ்.எஸ். ஆதங்கம்” என்று தலைப்பிட்டு வெப்துனியா.காம் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையில் மோகன் பாகவத் அவர்கள் சொன்னது “After Independence, the dominance of rich and powerful people in politics and rising inflation have worsened the country’s situation, which is worse than what it was during the British rule” என்று கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. செய்தி இப்படி இருக்க இதில் இந்தியா எங்கோ போயிருக்கும் என்பதை கண்டுபிடிக்க கொஞ்ச நஞ்சமல்ல எக்கசக்கம் திரிசமன் வேண்டும்.

சில செய்திகள் திரித்து வெளியிடப் படுகின்றன. சில செய்திகள் வெளியே வருவதே இல்லை. ஒரு குற்றம் நிகழும் பொது, அதில் ஈடுபட்டவர் எந்த மதத்தை சேர்ந்தவரோ அதற்கு தகுந்த மாதிரி செய்தி வெளிவருகிறது. சம்பந்தப் பட்டவர் “சிறுபான்மை” மதமாக இருந்தால் அந்த செய்தி அப்படியே அமுக்கப் படுகிறது. அப்படியும் சில செய்திகள் வெளியே வந்து விடுகின்றன. அப்படி நமக்கு கிடைத்த செய்தி தான் இத்தாலிய கடற்படை கொலைகாரர்களை காப்பாற்ற வாட்டிகன் இந்திய அரசில் உள்ள கிருத்துவர்களான அந்தோணியிடமும், தாமஸிடமும் பேச்சு வார்த்தை நடத்துவதாக வந்த செய்தி. கேரளா அரசாங்கம் இந்த விசாரணையில் முடிவு எதுவும் எடுத்து விடக் கூடாது என்று கிருத்துவர்கள் முயற்சி செய்வதாக செய்தி வெளியாகி உள்ளது. முக்கியமாக கத்தோலிக்க பாதிரியார் ஜார்ஜ் ஆலன்செர்ரி என்பவர் இந்திய மீனவர்கள் கொல்லப் பட்ட சம்பவத்தில் இத்தாலிய ராணுவத்துக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார். இதை கேரளா பா.ஜ.க. வன்மையாக கண்டனம் செய்துள்ளது. ஒரு வியாபாரக் கப்பலில் இத்தாலிய ராணுவ வீரர்களுக்கு என்ன வேலை? சோமாலியாவில் இருப்பது போல இங்கே எந்த கடற்கொள்ளையர்கள் இருக்கிறார்கள்? இவ்வாறு ராணுவம் வருவது இது தான் முதல்முறையா? என்பன போன்ற கேள்விகள் எழுகின்றன.

கேரளாவில் இந்துக்கள் அதிகமாக வாழ்கிற (அதிசயம்!) பிரவம் பகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. இப்போது எடுக்கப் பட்டுள்ள நடவடிக்கையில் கூட அந்த ராணுவ வீரர்கள் சிறைப்பட்டிருப்பது கூட அந்த இடைத்தேர்தல் வரை தானோ என்று தோன்றுகிறது. இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் இந்துக்கள் பெருமளவு வாழ்கிற பகுதியாக இருந்தாலும் நிறுத்தப் பட்டிருக்கிற காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் இருவருமே கிருத்துவர்கள்!

ஆபிரகாமிய மதங்கள் வேறொரு நாட்டில் மையம் கொண்டிருப்பதே, இங்கே அவை தேச விரோத நடவடிக்கைகளிலும், மதமாற்ற நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட காரணமாகிறது. அவற்றின் இதயம் வேறு எங்கோ துடிக்கிறது. இங்கே அதனால் தானோ என்னவோ இங்கே இதயமற்று நடந்து கொள்கிறார்கள். இவர்களை நம்பி அப்பாவிகள் பலியாகிறார்கள். சில பள்ளிக் கூடங்களில் பகிரங்கமாகவே மதமாற்றம் நடைபெறுகிறது. பள்ளிக்கு படிக்க வருகிற இளம் பிஞ்சு உள்ளங்களை கிருத்துவ மத போதனையில் மூழ்கடித்து அவர்களை அறியாமல் மதமாற்றம் செய்கிறார்கள். இப்படி திண்டுக்கல்லை அடுத்த நத்தம் முசுக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தலைமை ஆசிரியரும், வேறொரு ஆசிரியருமாக சேர்ந்து ‘மதமாற்ற வேலை’யில் ஈடுபட்டிருந்த போது, செல்போன் கேமராவில் படம்பிடித்து விட்ட அப்பகுதி மக்கள் மாவட்டக் கல்வி அலுவலரிடம் அதை ஆதாரமாகக் காட்டி புகார் செய்ய அந்த ஆசிரியர்கள் இருவரும் இடமாற்றம் செய்யப் பட்டனர்.

இதே போல சிலநாட்கள் முன்பு சென்னையை அடுத்த மீஞ்சூரில் உள்ள செயின்ட் மேரீஸ் என்ற தனியார் பள்ளியில் ‘நவீன ராமாயணம்’ என்ற பெயரில் இந்து கடவுளர்களை கேலி செய்தது பற்றி தமிழ் ஹிந்துவில் இந்த பகுதியில் செய்தி வெளியிட்டது நினைவிருக்கலாம். இன்னும் எத்தனை பள்ளிகளில் என்னென்ன நடக்கிறதோ என்ற கவலை எழுகிறது.

ஹிந்துக்களின் கடவுள்களை “சாத்தான்கள்” என்று அழைத்து அவமதித்து, சட்ட விரோதமான மதமாற்றத்தில் ஈடுபட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை எற்படுத்துவது ஆபிரகாமிய மத அமைப்புகளின் வழக்கம். இதற்குத் தப்பாமல், புகழ்பெற்ற மயிலை கபாலீஸ்வரர் கோவில் குளத்துக்கு அருகில் உள்ள விளக்குக் கம்பத்தில், ஹிந்துக் கடவுள்களை அவமானப்படுத்தும் வாசகத்தை எழுதி ஒரு மிகப்பெரிய பானரை “தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்” இயக்கத்தினர் கட்டித் தொங்க விட்டுள்ளனர். தமிழ்நாடு தௌஹீத் ஜமாத்தின் இந்த செயல் வன்மையாகக் கண்டிக்கத் தக்கது. இம்மாதிரியான சட்டம் ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும் விதத்தில் செயல்படும் இயக்கங்களை தமிழ்நாடு காவல் துறையினர் கண்காணித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூசாரி முரசு இதழில் செய்தி வெளியாகி உள்ளது.

கூடங்குளம் கிறித்தவ எதிர்ப்புக் குழுவுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவது குறித்து இந்த எதிர்ப்புப் போராட்டம் ஆரம்பித்த நாளிலிருந்தே கூறி வருகிறோம். இப்போது கையும் களவுமாக ஓர் “உளவாளி” பிடிபட்டிருக்கிறார். இன்னும் பத்துப் பதினைந்து அரசு சாரா அமைப்புகளை புலன்விசாரணை செய்யுமாறு இந்திய அரசு சி.பி.ஐயிடம் கோரியிருக்கிறது. எதற்கும் வாயைத் திறக்காத நமது பிரதமர் மன்மோகன் சிங் கூட இந்த விஷயத்தில் அமெரிக்க என்.ஜி.ஓக்கள் பின்னணியில் செயல்படுவதாக கூறியிருக்கிறார்.

வஹாபிகளின் எண்ணைப் பணமும், எண்ணற்ற வெளிநாட்டு கிறித்தவ மிசனரிகளிடம் இருந்து ‘நன்கொடைகளும்’ தீவிரவாதத்திற்கும், கட்டாய மதமாற்றத்துக்குமாக கணக்கின்றி திணிக்கப் படுவது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. கடந்த பதினேழு ஆண்டுகளில் மட்டும் இந்திய என்.ஜி.ஓக்கள் எனப்படும் தனியார் சமூக சேவை அமைப்புகளுக்கு 97,000 கோடி ரூபாய் பணம் வெளிநாடுகளில் இருந்து வந்துள்ளது. இதில் நன்கொடை தரும் வெளிநாட்டு அமைப்புகள் என்ற பட்டியலிலும் சரி, இந்தியாவில் அவற்றைப் பெரும் அமைப்புகள் என்ற பட்டியலிலும் சரி, முதலாவதாக நிற்பவை கிறிஸ்தவ மிஷனரி, மதமாற்ற நிறுவனங்கள். இதில் ஆச்சரியம் எதுவுமில்லை, பல காலமாக இந்துத்துவ தரப்புகள் சொல்லி வரும் விஷயம் தான் இது. இப்போது தான் போலி மதச்சார்பின்மை சேற்றில் ஊறிய இந்திய அரசியல் கட்சிகளுக்கும், பொதுஜனத்தீற்கும் எருமை மாட்டின் மீது மழை பெய்தது போல இது உறைக்க ஆரம்பித்துள்ளது. கூடங்குளம் எதிர்ப்பு கோஷ்டிக்கு உண்மையில் நாம் இதற்காக நன்றி சொல்ல வேண்டும்.

http://www.tamilhindu.com/2012/03/news-this-week-mar-2-2012/

No comments:

Post a Comment