Tuesday, February 25, 2014

பணியாற்றும் பெண்களுக்கு தேவை எச்சரிக்கை !!!


சாஃப்ட்வேர் என்ஜினீயர் கொலை: வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது

சென்னை அருகே பெண் சாஃப்ட்வேர் என்ஜினீயர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பாக வட மாநில இளைஞர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் ஜோதி நகரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியத்தின் மகள் உமா மகேஸ்வரி, சென்னை அருகே சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இதற்காக மேடவாக்கத்தில் ஒரு வீட்டில் தனது தோழிகளுடன் உமா தங்கியிருந்தார். இந்நிலையில் கடந்த 13-ஆம் தேதி வேலைக்கு சென்ற உமா, வீட்டுக்குத் திரும்பி வரவில்லை.

இது குறித்து உமாவின் தந்தை பாலசுப்பிரமணியம் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப் புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, உமாவை தேடி வந்தனர்.

இந்நிலையில், சிறுசேரி சிப்காட் வளாகத்தில் உள்ள புதரில் இருந்து உமா மகேஸ்வரி அழுகிய நிலையில் சடலமாக கடந்த சனிக்கிழமை மீட்கப்பட்டார். போலீஸார் விசாரணையில் உமா மகேஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு அங்கு வீசப்பட்டிருப்பது தெரியவந்தது.

இச் சம்பவம், குறித்து கேளம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்தனர்.

இதற்கிடையே டி.ஜி.பி.ராமானுஜம், உமா மகேஸ்வரியின் கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் இந்த கொலை குறித்து சரியான தகவல் அளிப்பவருக்கு ரூ.2 லட்சம் வரை பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

கொலையாளிகள் கைது: சம்பவம் நடந்த இடம், உமா பணியாற்றிய இடம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் பல தடயங்கள் கிடைத்தன.

மேலும் ஆளில்லாத விமானம் மூலம் அந்த பகுதி முழுவதையும் போலீஸார் புகைப்படம் எடுத்து, அந்தப் பகுதியின் அமைப்பை தெரிந்துகொண்டனர். அதேபோல உமா, கடந்த ஓர் ஆண்டாக செல்போனில் யார், யாருடன் பேசியுள்ளார், யாருடன் அதிகம் பேசியுள்ளார் போன்ற தகவல்களைச் சேகரித்தனர்.

சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் தீவிர விசாரணையில் வட மாநிலத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய இருவரும்தான் உமாவை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் உமா வைத்திருந்த செல்போன், கிரடிட் கார்டு ஆகியவற்றையும் அவர்கள் எடுத்துச் சென்றது தெரிந்தது.

இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து உமாவின் செல்போன், கிரேடிட் கார்டு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இருவரும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் புதன்கிழமை மாலை விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

துப்பு துலக்க உதவிய செல்போன், கிரடிட் கார்டு: உமா மகேஸ்வரி கொலை செய்யப்பட்ட வழக்கில் கொலையாளிகளை துப்பு துலக்க செல்போன் உதவியாக இருந்துள்ளது. அதே சமயம் கொலையாளிகளைக் கைது செய்வதற்கு கிரேடிட் கார்டு பயன்பட்டுள்ளது.

கொலையாளிகள் உமாவிடம் இருந்து செல்போன் மற்றும் கிரெடிட் கார்டுகளை எடுத்துச் சென்றுள்ளனர். இதையடுத்து அந்த செல்போன், கிரடிட் கார்டு குறித்து போலீஸார் விசாரணை செய்தனர். இதில் கொலையாளிகள் அந்த செல்போனில் வேறு சிம்கார்டை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதை ஐ.எம்.இ. எண் மூலம் கண்டறிந்த போலீஸார், ஓரளவுக்கு கொலையாளிகளை நெருங்கினர்.

இதையடுத்து ஐ.எம்.இ. எண் கொடுத்த சிக்னல் அடிப்படையில் போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் அந்த வளாகத்தில் கட்டுமான வேலையில் ஈடுப்பட்டிருந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 4 பேர் கடந்த 13-ஆம் தேதி வேலைக்கு செல்லாமல் இருந்ததும், அவர்கள் தங்குமிடத்துக்கும் வராமல் இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அந்த 4 பேர் குறித்து அங்கு இருந்த பிற கட்டட தொழிலாளர்களிடம் போலீஸார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 4 பேரும், உமாவை கொலை செய்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அந்த கிரடிட் கார்டு மூலம் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்திருப்பதாக செவ்வாய்க்கிழமை காலை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் அடிப்படையில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல் ஆகிய இருவரையும் போலீஸார் கல்பாக்கம் அருகே கைது செய்தனர்.

போலீஸ் விசாரணையில் அவர் கூறியதாவது: நாங்கள் சிப்காட் வளாகத்தில் புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் வேலை செய்து வருகிறோம். சம்பவத்தன்று இரவு சிப்காட் வளாகம் வாயில் பகுதியில் நின்று கொண்டிருந்தோம். அப்போது அங்குள்ள ஏ.டி.எம். மையத்தில் உமா பணம் எடுத்துவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். இதைப் பார்த்த நாங்கள் 4 பேரும் அவரை அங்குள்ள புதருக்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, அவர் வைத்திருந்த செல்போன், கிரடிட் கார்டு ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டோம் என்று அவர்கள் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்துக்குப் பின்னர் தங்களுக்கு பயம் ஏற்பட்டதால் தலைமறைவாக இருந்ததாக கூறினர். இதில் நால்வரில் இருவர் ரயில் மூலம் மேற்கு வங்கத்துக்கு தப்பியோடியதாக போலீஸாரிடம் கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து தப்பியோடிய இருவரையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீஸார் மேற்கு வங்கத்துக்கு விரைந்துள்ளதாக கூறப்படுகிறது.

http://www.dinamani.com/edition_chennai/chennai/2014/02/26/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%80%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2/article2078224.ece







No comments:

Post a Comment