ஆர்.எஸ். நாராயணன்
First Published : 22 Nov 2010 01:13:47 AM IST
Last Updated :
மாகாத்மா காந்தியின் வாரிசு என்று கூறப்பட்ட மூதறிஞர் ராஜாஜியில் தொடங்கி, காமராஜ் பின்னர் பக்தவத்சலம் வரை மூன்று முதலமைச்சர்கள் ஆண்ட காலகட்டத்தில் தமிழ்நாட்டை நேசிக்க முடிந்தது.
தேசிய அளவில் மகாத்மா காந்தி, நேரு, படேல், ஆசாத் போன்ற தலைவர்களின் முகங்கள் பார்க்கப் பார்க்கப் பரவசமாயிருந்தன. ஏனெனில், எழுச்சியுறும் இந்தியாவுக்கு இவர்கள்தானே அடிக்கல் நாட்டினார்கள். ஊழல் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. தனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லையென்றாலும்கூட, அரியலூர் ரயில் விபத்துக்குத் தானே பொறுப்பேற்று அன்றைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி பதவியை ராஜிநாமா செய்தார். முந்திரா ஊழலுக்கும் தனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லையென்று உணர்ந்தும்கூட, அன்று காங்கிரஸ் ஆட்சியின் நிதியமைச்சராயிருந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி பதவியை ராஜிநாமா செய்தார். 2-ஜி அலைக்கற்றை ஊழலோடு ஒப்பிட்டால் முந்திரா ஊழல் ஒரு சுண்டைக்காய் ஊழல்தான்.
1950-60-களில் காங்கிரஸ் கட்சிமீது எனக்கு நிறையப் பற்றுண்டு. முக்கியமாக 1952 முதல் தேர்தல் நிகழ்ந்த காலகட்டத்தில் நான் பள்ளி மாணவன். திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் எம்.எல்.ஏ. பதவிக்கு காங்கிரஸ் சார்பில் டி.வி.எஸ். புதல்வி டாக்டர் சவுந்தரம் ராமச்சந்திரன் (காந்திகிராமத்தை உருவாக்கிய தன்னலமற்ற தியாகி, காந்தியவாதி) நின்றார். என்னால் முடிந்த பணி (எழுத்துவேலை) செய்தேன். அவர் வென்றதில் வியப்பில்லை. ஆனால், தலைமறைவாயிருந்த பி. ராமமூர்த்தி, மணலி கந்தசாமி பெற்ற வெற்றி வியப்பாயிருந்தது. கம்யூனிஸ்டு கட்சியினர் அனைவருமே வெற்றி பெற்றனர். ஜீவா, சுந்தரையா நாஜிரெட்டி என்று பலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். சொல்லச்சொல்ல அவை இனிக்கும் நினைவுகள்.
1952-க்குப் பின் அடுத்தடுத்துப் பல தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. அன்றெல்லாம் தேர்தல் பணி செய்தவர்கள் பணத்தை எதிர்பார்த்ததில்லை. ஓட்டுப்போடுபவர்களும் பணத்தை எதிர்பார்த்ததில்லை. கடா வெட்டுதல், பிரியாணி, தொண்டர்களுக்குத் துண்டுப்பணம், தலைக்கு | 500 என்று விலைபேசி கூலிப்படை திரட்டிக் கொடிகட்டி, ஆயிரக்கணக்கான ஊர்திகளில் ஆர்ப்பாட்டமாகவும், ஆடம்பரமாகவும் மாநாடு நிகழ்த்திக் கூட்டத்தைக் காண்பிப்பது அறவே இல்லை.
1962-ல் ஜவாஹர்லால் நேரு தலைமையில் புவனேஸ்வரத்தில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. அன்று ஒரிசாவின் முதல்வராயிருந்த பிஜு பட்நாயக் ஏற்பாடு செய்தார். கூலிப்படைக் கூட்டம் இல்லை. மக்களே தங்களின் ஆர்வத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தித் திரளாகக் கூடினார்கள்.
எந்தப் பயமும் இல்லாமல் திறந்த காரில் நின்றபடி நேரு பயணம் செய்தார். கார் நிறைய ரோஜாப்பூக்கள் இருக்கும். கூட்டத்தோடு கூட்டமாக சாலை ஓரத்தில் நின்றிருந்த மக்கள் தூவிய ரோஜாக்களில் ஒன்று என்மீது விழுந்தது. அப்படிப்பட்ட நினைவுகளைச் சொல்லச் சொல்ல இனிக்குதடா! இன்று நிகழும் போலி மாநாடுகள், கூலிப்படைக் கூட்டம், ஓட்டுக்கு 1,000 ரூபாய் நோட்டு, டாஸ்மாக் சரக்கு. இவற்றைக் காணும்போது உள்ளம் கசக்குதடா!
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நான் சென்னையில் கல்லூரியில் படித்த காலகட்டத்தில் சில காங்கிரஸ் நண்பர்களை, எம்.எல்.ஏ.க்களைச் சந்திக்க எப்போதாவது அண்ணா சாலை அரசு எஸ்டேட்டில் உள்ள பழைய விடுதிக்குச் செல்வதுண்டு. இளைஞர்கள் பலர் வேலைவாய்ப்பு, அரசு ஊழியர்களுக்கு மாற்றல் உத்தரவு என்றெல்லாம் எம்.எல்.ஏ.க்களை அணுகுவது உண்டு. அந்தக் காலத்து எம்.எல்.ஏ.க்களுக்கு வசதியும் இல்லை. இவற்றைக் காரணமாக வைத்துப் பணம் பண்ணவும் தெரியாது. மனிதாபிமான அடிப்படையில் உதவுவார்கள். அருகதை உள்ளவர்களுக்கு எம்.எல்.ஏ. முயற்சியால் வேலை கிடைப்பதும் உண்டு. இன்று அப்படியா?
இன்று எந்த அரசாங்க வேலை என்றாலும் ஆளும் கட்சி அமைச்சர்களுக்குப் பணம் வழங்க வேண்டும். இதில் பெரிய "நெட் ஒர்க்' உள்ளது. நேரடியாக அமைச்சர்கள் சம்பந்தப்படாமல், ஏஜெண்டுகள் உண்டு. ஆசிரியர் வேலைக்கு | 10 லட்சம், எஸ்.ஐ. வேலைக்கு | 20 லட்சம், டிரைவர் வேலைக்கு | 5 லட்சம் என்றெல்லாம் விலை பேசப்படுகிறது. மாற்றல் உத்தரவுக்கும் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்ய வேண்டுமாம்.
பஞ்சாயத்துப் பள்ளியில் ஆயா வேலை, சமையல்காரி வேலை போன்ற கீழ்நிலை உத்தியோகங்களுக்கும் லட்சக்கணக்கில் பணம் தரவேண்டுமாம். பாவம் இந்த ஒரு லட்ச ரூபாயை 2 வட்டிக்குவிட்டால் மாதம் | 2,000 கிடைக்குமே! பலர் வட்டிக்கு வாங்கி அரசியல்வாதிகளுக்கு வழங்கி உத்தியோகம் வரும் என்று எதிர்பார்ப்பது உண்டு. எனக்குத் தெரிந்த ஒரு நண்பர் வி.ஏ.ஓ. வேலைக்கு யாரிடமோ | 2 லட்சம் கொடுத்தாராம். அவருக்கு உத்தியோகமும் கிடைக்கவில்லை. பணத்தையும் வசூல் செய்ய முடியவில்லை. இருப்பினும் இப்படிப் பணம் கொடுத்து வேலைக்குச் சென்றால், 2 ஆண்டு உழைப்பை - மாதச்சம்பளத்தை வட்டி/ அசல் கட்டிவிடலாமாம். கிம்பளத்தை வைத்து ஓட்டலாமாம்! ... இப்படியெல்லாம் மனிதமனம் தவறான வழியில் ஓடுகிறது.
ஊழல், லஞ்சம் இவற்றையெல்லாம் நியாயப்படுத்தும் போக்கு வளர்ந்துள்ளபோது, யாரைக் குற்றம் சொல்வது? புற்றுநோய் உடலில் மட்டுமல்ல; மனத்திலும் வளர்ந்துவிட்டதை நினைத்தால் கசப்பாயுள்ளது. லஞ்சமும், ஊழலும் இல்லாத துறை எது? புனிதமான பணி என்று கூறக்கூடிய கல்வி, மருத்துவம், நீதித்துறை, விளையாட்டுத்துறை, ராணுவம் போன்றவற்றிலும் புற்றுநோய் வளர்ந்துள்ளது. தேசபக்தி தவிடு பொடியாகிவிட்டது.
மெகா ஊழலில் ஜாதிகூட ஒரு சாக்கானது. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் பல்லாயிரம் கோடி மாட்டுத்தீவன ஊழலில் ஒரு கோகுலகிருஷ்ணனாய் வாழ்ந்த லாலு பிரசாத் யாதவ், உ.பி. முதல்வர்களின் சொத்துக்குவிப்பு வழக்குகளில் மாயாவதி தாழ்த்தப்பட்ட ஜாதி, பிற்படுத்தப்பட்ட ஜாதிக்குரிய மற்றொரு யாதவ் முலாயம் சிங்கின் மீதும் வழக்குகள் உண்டு. நம்ம ஊரு ராசாவைப் பற்றி நாம் எதுவும் புதிதாகச் சொல்லப் போவதில்லை. உ.பி. முதல்வரைப்போல் ஜாதியைச் சாக்கிட்டு சாதனை செய்வதில் தமிழ்நாடுதானே, சோஷலிஸ்டுகள் என்று கூறிக்கொள்ளும் யாதவ்களுக்கும், மாயாவதிகளுக்கும் வழிகாட்டி! ஒரு மினி ஊழலில் சிக்கிக்கொண்ட பா.ஜ.க. பங்காரு லட்சுமணன் தெகல்கா ஊழலில் | 5 லட்சம் பெற்ற விடியோ காட்சியை மறக்க முடியாது. அவரும் "நான் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவன் என்பதால் திட்டமிட்டுப் பழிவாங்கப்பட்டுள்ளேன்' என்றார். என்ன செய்வது? மாட்டிக்கொண்ட பிறகு இவர்கள் எல்லாம் பயன்படுத்தும் பிரம்மாஸ்திரம், ஜாதி.
மெகா ஊழல்களில் சம்பந்தப்படும் மற்றவர்களின் ஜாதி தெரியவில்லை. ஆதர்ஷ் ஊழல் செய்த மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவாண், காமன்வெல்த் விளையாட்டு மைதானக் கட்டுமான ஊழலில் சுரேஷ் கல்மாடி, இவர்கள் மேல் ஜாதி என்பதால் பதவி பறிபோனதா? ஊழலுக்கு ஜாதி, மதம் என்ற பேதங்கள் இல்லையே!
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் - தேசிய ஊரக வேலை காப்புறுதித்திட்டம் எல்லாம் என்.ஆர்.இ.ஜி.எஸ். என்ற பெயரில் பல்லாயிரங்கோடி புரள்கிறது. ஏழைகளின் நலவாழ்வுக்குரிய பணம். கண்ணுக்குத் தெரிந்த ஒரு கணக்கின்படி அரசே புலனாய்வு செய்து ஒப்புக்கொண்ட ஊழல், 40 சதம். அதாவது | 40,000 கோடி. இதைப்போலவே, வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்பவர்களின் வாங்கும் சக்தியை அனுசரித்து ரேஷன் அரிசி, கோதுமை வழங்கப்படுகிறது. உரியவர்களுக்குப் போகாமல் வெளி அங்காடிக்கு விலை பேசப்படுவதில் யாருக்கு என்ன பங்கோ, தமிழ்நாட்டிலிருந்து கேரளத்துக்குக் கடத்தப்படுகிறது. வடமாநிலங்களிலிருந்து பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் போன்ற இதர நாடுகளுக்கும் ரேஷன் கோதுமை - அரிசி கடத்தப்படுவது உண்டாம். இப்படியும் செய்திகள். வறுமையைப் பற்றிக் கதை எழுதியே சில எழுத்தாளர்கள் பணக்காரர்களாகலாம். ஏழைத் தொழிலாளியாக நடித்து நடிகர்கள் பணம் சம்பாதிக்கலாம். இவை ஏற்கக்கூடியவை. ஆனால், ஏழைகளின் உணவைத் திருடுவது சரியா? இதைச் சொல்லச் சொல்லக் கசக்குதடா.
அன்றைய ஊழலில் கோட்டா, லைசென்ஸ் இன்றைய ஊழலில் சிகரமாயுள்ளது, ரியல் எஸ்டேட் மாஃபியா. அரசுக்குச் சொந்தமான நத்தம், புறம்போக்கு, ஏரி, குளம் குட்டை போன்றவை கைப்பற்றப்பட்டு கல்லூன்றப்படுகிறது. அமைச்சர்களின் பினாமிகளே நில மாஃபியாக்களாகிவிட்டனர்.
கோடி ரூபாய் மதிப்புள்ள பட்டா நிலங்களைக் கைப்பற்றும்போது மாஃபியாக்கள் வழங்குவது சில லட்சங்கள் மட்டுமே. ஒப்புக்கொள்ளாவிட்டால் பட்டாதாரர்களுக்குப் பட்டாக்கத்தி காண்பிக்கப்படலாம். நான் தமிழ்நாட்டை மட்டும் சொல்லவில்லை. அகில இந்திய நிலையும் இதுவே.
வாஷிங்டன் போஸ்ட் ஜூலை, 2008 தகவலின்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 540 எம்.பி.க்களில் 130 எம்.பி.க்கள் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. மக்களின் பிரதிநிதிகளில் பலர் ஈடுபட்டு வரும் கிரிமினல் குற்றங்களில் கற்பழிப்பு, கடத்தல், பெண் விற்பனை, போலி ஆவணம், குடிஉரிமை மீறல், கொலை என்ற பட்டியல் நீளமாயுள்ளது.
மாநிலங்களில் உள்ள சட்டசபை உறுப்பினர்கள் மட்டும் யோக்கியமா என்ன? எம்.பி.க்களில் கால்வாசி கிரிமினல்கள் என்றால் எம்.எல்.ஏ.க்களில் முக்கால்வாசி அப்படியே என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2006-ல் வெளியிடப்பட்ட ஸ்விஸ் வங்கி அறிக்கைப்படி அங்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ள இந்தியக் கருப்புப்பணம் 1,456 பில்லியன் யு.எஸ். டாலர். யாரெல்லாம் கருப்புப்பணம் டெபாசிட் செய்துள்ளனரென்றால் ஊழல் அமைச்சர்கள், ஊழல் அதிகாரிகள், மெகா தொழிலதிபர்கள், கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் - கோலிவுட் நடிகர்கள் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இவற்றையெல்லாம் சொல்லச் சொல்ல உள்ளமெல்லாம் கசக்குதடா!
source: www.dinamani.com
No comments:
Post a Comment