சா. ஜெயப்பிரகாஷ்
First Published : 02 Dec 2010 03:04:42 AM IST
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தலில் 73 ஆயிரம் வாக்குகளைப் பெற்று முதலிடத்தை - அங்கீகாரத்தைப் பெற்றிருக்கும் தொ.மு.ச.வின் வெற்றியை முதல்வர் கருணாநிதி சிலாகித்துப் பேசியிருக்கிறார்.
போக்குவரத்துத் தொழிற்சங்கத் தேர்தல் வெற்றி, வரப்போகிற சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
எப்போதுமே ஒரு வெற்றியிலோ, தோல்வியிலோ, ஒரு கருத்திலோ இரு வகையான பார்வை இருக்கும். ஒன்று அந்த வெற்றியைச் சந்தித்த அல்லது அந்தக் கருத்தைத் தெரிவித்தவரின் பார்வை. மற்றொன்று பொதுவான அல்லது எதிர்த்தரப்பினருக்கான பார்வை.
இந்தத் தேர்தல் வெற்றியைப் பொறுத்தவரை, தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு முன்னோட்டம். ஆனால், பொதுமக்களுக்கோ அல்லது தி.மு.க. தவிர்த்த மற்ற கட்சியினருக்கோ? முன்னெச்சரிக்கையாகத்தான் தெரிகிறது.
தேர்தலில் பங்குபெற்ற மொத்த வாக்காளர்கள் 1.28 லட்சம் பேர். தி.மு.க. சார்பு தொழிற்சங்கமான "தொழிலாளர் முன்னேற்றச் சங்கம்' (தொ.மு.ச.) பெற்ற வாக்குகள் 73 ஆயிரம். இது 57.31 சதவீதம். மற்ற எல்லா சங்கங்களும் சேர்ந்து, ஜாதி, மத, தேசிய அரசியலை மறந்து "மெகா கூட்டணி' அமைத்திருந்தாலும் தி.மு.க.வைத் தோற்கடித்திருக்க முடியாது.
தொழிற்சங்கம் என்றாலே எல்லோர் கண்ணிலும் படும்படியான பணிகளை மேற்கொண்டு வரும் சிஐடியு என்ற பிரம்மாண்டம் பெற்ற வாக்குகள் வெறும் 19 ஆயிரம்தான். முடிவுகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருக்கிறது சிஐடியு.
நாட்டின் சுதந்திரத்துக்கு முன்னதாகவே தோன்றி, மூத்த சங்கம் (தாய்க் கழகம்!) என்ற பெயரைச் சூட்டிக் கொண்டுள்ள ஏஐடியுசி இந்தப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில். வெறும் 1,912 வாக்குகள் மட்டும்தான்.
தேர்தலுக்கு முன்னதாகவே விஜயகாந்தின் தேமுதிகவுடன் கூட்டணி சேர்ந்து - கருணாநிதியின் வரிகளில் முன்னோட்டம் பார்க்கலாம் என முயற்சித்த அதிமுகவின் "அண்ணா தொழிற்சங்கப் பேரவை' மூன்றாவது இடத்தில். பெற்ற வாக்குகள் 15,765. தேர்தல் நடந்தபோது ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோ ஒரு வாக்குச்சாவடியைப் பார்வையிட்டார்!
இப்படி ஒவ்வொரு போட்டியாளருக்கும் சில வரிகளைச் செலவிடலாம். ஆனால், ஓர் உண்மை - பொதுத் தேர்தல் விதிகளின்படி பார்த்தால் அபார வெற்றிபெற்ற தொ.மு.ச.வைத் தவிர அனைத்தும் "டெபாசிட்' இழந்த வேட்பாளர்கள்தான், இரண்டாமிடம் என்று சொல்லிக் கொள்ளும் சிஐடியு, மூன்றாமிடம் என்று சொல்லிக் கொள்ளும் ஏ.டி.பி. (அதிமுக) உள்பட.
அதிகார துஷ்பிரயோகம் நடந்திருக்கிறதா? நன்றாகவே நடந்திருக்கிறது என்கிறார்கள். புதிதாகப் பணியில் சேர்க்கப்பட்ட 40 ஆயிரம் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் அன்பாக மிரட்டப்பட்டார்கள் என்பது இந்தப் பிரிவில் முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டு.
"திருமங்கலம் பாணி' கடைபிடிக்கப்பட்டதா? நடந்திருக்கிறது என்கிறார்கள். ரூ. 1,000, பரிசுப் பொருள்களாக பாத்திரம், பண்டம், குவாட்டர், பிரியாணி... இடத்துக்கேற்ப வித்தியாசப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் இல்லை என்று தி.மு.க.வினரே மறுக்க முடியாத அளவுக்கு இருக்கிறது, அவர்கள் பெற்ற வாக்கு எண்ணிக்கை.
ஏனென்றால், பொதுத் தேர்தல்களில் தி.மு.க. பெற்ற வாக்குகள்தான் பதிவே ஆகின்றன. இத்தனை வாக்குகளைப் பெறும் அளவுக்கு அப்படியொன்றும் பிரமாதமாக இல்லை, போக்குவரத்துக் கழகங்களின் நிர்வாகம் என்கின்றன "டெபாசிட்' இழந்த சங்கங்கள். தொ.மு.ச.வினரே இந்தக் கருத்தை ஒப்புக்கொள்ளவும் செய்கின்றனர்.
இவையெல்லாவற்றையும் தாண்டி வாக்குப்பதிவு நடைபெற்ற நாளில் உற்சாகத்தில் மிதந்த தொழிலாளர்கள் (பாகுபாடின்றி எல்லா சங்கத்தினரும்) பேருந்தை நேரத்துக்கு இயக்கவில்லை என்பது நாடறிந்த விஷயம். பணிமனைகளில் நின்ற பேருந்துகளும், பேருந்து நிலையங்களில் காத்திருந்து அவதிப்பட்ட பயணிகளும் இதற்குச் சாட்சி.
எல்லாமும் சேர்த்தாலும், இன்னமும் யோசித்துப் பார்த்தாலும் இந்தத் தேர்தல் முடிவுகள் பலருக்கும் முன்னெச்சரிக்கைதான்.
வரலாறு, கொள்கை எல்லாம் வாய்கிழியப் பேசினாலும், ஓய்வறியாத களப்பணி இல்லாவிட்டால் "சங்குதான்' என்று பறைசாற்றியிருக்கிறது இந்தத் தேர்தல் முடிவு. இதுவரை உழைத்த உழைப்பு எல்லாமும் "கற்றது கைமண் அளவு' என்பதைப்போல மிக மிகக் குறைவுதான் என்பதைப் பறைசாற்றியிருக்கிறது இந்தத் தேர்தல் முடிவு.
எதைக் கொடுத்தும், பேசியும் நம்மை விலைபேசி விடுவார்கள் என்பது பொதுமக்களுக்குக் கொடுத்த முன்னெச்சரிக்கை. இன்னும் நமது ஜனநாயகம் அந்த அளவுக்குக் கெட்டுப் போய்விடவில்லை என்று கூறிவரும் அப்பாவி ஜனநாயகவாதிகளுக்கு இந்தத் தேர்தல் ஒரு முன்னெச்சரிக்கை.
ஏன், பிரம்மாண்ட வெற்றிபெற்றிருக்கும் தொ.மு.ச.வுக்கும் இதுவொரு முன்னெச்சரிக்கைதான். ஏனென்றால், ஏராளமான இலவசங்களைப் பொதுமக்களுக்கு வாரி வழங்கி, மாநிலத்தை ஆளும் இடத்தில் இருந்தும்கூட, மிகச்சாதாரணத் தேர்தலில் இந்தப் பிரம்மாண்ட வெற்றியைப் பெற சில கோடி ரூபாய்களைச் செலவிட வேண்டியிருக்கிறது.
பண பலம், அதிகார பலம் இவையெல்லாம் இருபுறமும் கூர்தீட்டப்பட்ட கத்தியைப் பிடித்துச் சண்டையிடுவதற்குச் சமம்தான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அது நம்மையும் காயப்படுத்தும்.
Source: www.dinamani.com
No comments:
Post a Comment