Monday, November 29, 2010 at 7:54 pm | 614 views
நீரா ராடியா… தேசத்தின் அதிகார மையத்தை ஆட்டிப் படைத்த தரகர்!
இந்திய அரசியலை அதிர வைத்துள்ள நீரா ராடியாவின் அரசியல் தொடர்புகள் ஒரு சராசரி இந்தியனுக்கு தலை சுற்றவைத்தாலும், அதிகார வர்க்கத்துக்கு இதில் ஆச்சர்யம் ஏதுமில்லை. காரணம் அவர்கள் அனைவரும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இதுபோல நிறைய நீராக்களைப் பார்த்திருக்கிறார்கள்… பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு பெரும் பரபரப்புக்குப் பிறகு இந்த நீராக்கள் விவகாரம் நீர்த்துப் போவது இந்திய மரபு. இந்த முறை என்ன ஆகப் போகிறதோ…
ஆனாலும் இந்த நீராவின் நதிமூலம், ரிஷிமூலத்தை கொஞ்சம் பார்த்துவிடுவோம்…
நீராவுக்குத் தெரியாத அல்லது நீராவைத் தெரியாத அரசியல் தலைவர்களோ, தொழிலதிபர்களோ அநேகமாக இல்லை என்பதுதான் உண்மை. அவரது நெட்வொர்க் அத்தனை பெரியது!
யார் நீரா..?
நீரா சர்மாவாக இருந்த இவர், பிரிட்டனின் ஜனக் ராடியாவை திருமணம் செய்த பிறகு நீரா ராடியாவானார். ஜனக்கை விவாகரத்து செய்த பிறகும் ராடியா என்ற பெயரை மட்டும் விவாகரத்து செய்யாமல் தொடர்ந்து வருகிறார் நீரா. மூன்று மகன்கள் இவர்களுக்கு. மூத்த மகன் கரண் ஏற்கெனவே ஒரு கடத்தல் சர்ச்சையில் சிக்கியவர். அதன் மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே நீரா மீடியா வெளிச்சத்துக்கு வந்துவிட்டார்.
நீராவின் தந்தை விமானத் துறையில் இருந்தவர். நீராவுக்கும் விமானத் துறை மீது அலாதி விருப்பம். அந்த விமான வர்த்தகத் தொடர்புகள் மூலம்தான் இவர் இந்திய கார்ப்பரேட் துறையிலேயே கால்பதித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் செட்டிலாவதற்கு முன்பு கென்யாவில் இருந்தார் நீரா. பின்னர் 70களில் லண்டன் சென்றார். அங்கு பள்ளிப் படிப்பையும், வார்விக் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பையும் முடித்தார்.
1995ம் ஆண்டு இந்தியா திரும்பினார். சஹாரா நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாகப் பணியாற்றினார். பின்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், கேஎல்எம், யுகே ஏர் ஆகிய நிறுவனங்களின் இந்தியப் பிரதிநிதியாக பணியாற்றினார்.
2000-மாவது ஆண்டு கிரவுன் ஏர் என்ற நிறுவனத்தைத் தொடங்கி அதன் நிர்வாக இயக்குநராக இருந்தார். அவருடன் சகோதரி கருணா மேனன் பார்ட்னராக சேர்ந்தார்.
டாடாவுடனான தொடர்புகள்…
2001ல் வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்பிறகுதான் நீராவுக்கு பெரும் நிறுவனங்களின் தொடர்புகள் எளிதில் கிடைத்தன. தொடர்ந்து நோயஸிஸ், விக்டம், நியூகான் கன்சல்டிங் ஆகியவற்றையும் தொடங்கினார். டாடா குழுமத்தின் 90 கணக்குகளை கையாளும் உரிமையைப் பெற்றார். 2008ல் இவரிடம் வந்து சேர்ந்தது முகேஷின் ரிலையன்ஸ் நிறுவனம்.
2005ம் ஆண்டு மேஜிக் ஏர் என்ற விமான நிறுவனத்தைத் தொடங்கி முயற்சித்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. இதற்குக் காரணம், இந்திய குடியுரிமை இவரிடம் இல்லை. எனவே இதே போன்றதொரு மலிவு கட்டண விமான நிறுவனத்தை டாடாவுக்காக தொடங்க முயன்றார். ஒரு ரூபாய் கட்டணத்தில் பறக்கும் விமான சர்வீஸ் என்ற அட்டகாசமான விளம்பரத்துடன் தயாரான அந்தத் திட்டத்துக்கு இந்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. இதற்குத்தான் ரூ 15 கோடி லஞ்சம் கேட்டார் ஒரு மத்திய அமைச்சர் என்று சமீபத்தில் ரத்தன் டாடா கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
பாஜக ஆட்சிக் காலத்தில் நீராவின் செல்வாக்கு
2003-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வாஜ்பாயுடன் நெருங்கும் வாய்ப்பு நீராவுக்குக் கிடைத்தது. கர்நாடக மாநிலம் பெஜாவார் மடாதிபதியுடன் அவருக்கு ஏற்கனவே அறிமுகம் இருந்ததால் அதை வைத்து வாஜ்பாயியின் மருமகன் ரஞ்சன் பட்டச்சார்யாவுடன் நெருங்கினார் நீரா.
அதேபோல பாஜகவைச் சேர்ந்த ஆனந்தகுமாரும் நீராவின் நெருங்கிய நண்பர். அப்போது ஆனந்த் குமார் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தார். அந்த சமயத்தில்தான் ஆனந்த்குமாருடன் நீரா நட்பை ஏற்படுத்திக் கொண்டார். நேரடியாக ஆனந்த்குமாரை போய்ப் பார்க்கும் அளவுக்கு அவருடன் நட்பு கொண்டிருந்தார் நீரா. உண்மையில் ஆனந்த்குமார் மூலமாகத்தான் பெஜாவர் மடாதிபதியின் நட்பு கிடைத்தது நீராவுக்கு.
இந்த சமயத்தில்தான் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் ஒரு விமான நிறுவனத்தை தொடங்க கடுமையாக முயன்றார் ரத்தன் டாடா. அது தோல்வியிலேயே முடிந்தது. இதற்கு காரணம் ஒரு தனி நபர்தான் என்று சமீபத்தில் ரத்தன் குற்றம் சாட்டியிருந்தார். அது வேறு யாரும் அல்ல ஜெட் ஏர்வேஸின் நரேஷ் கோயல்தான். டாடா-சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் திட்டத்துக்கு அனுமதி கிடைக்காமல் நரேஷ் கோயல் தடுத்ததாக அப்போதே பலத்த குற்றச்சாட்டு இருந்தது. நரேஷ் கோயலின் வேலையால் நீராவும் பாதிக்கப்பட்டார்.
அதன் பின்னர்தான் டாடாவுடன் நெருங்கினார் நீரா. டாடா குழும மக்கள் தொடர்புப் பணிகள் நீராவிடம் சென்றன. நுஸ்லி வாடியாவின் சிபாரிசின் பேரிலேயே டாடாவிடம் நீரா இணைந்ததாக கூறப்படுகிறது. தனது குழுமத்தின் 90 கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொள்ளும் பணியை நீராவின் வைஷ்ணவி கம்யூனிகேஷனிடம் ஒப்படைத்தார் டாடா.
டாடாவுக்கு நீரா செய்த உதவி…
2001ல் டாடா குழுமம் பெரும் நிதிச் சிக்கலை சந்தித்தது. அதை சரி செய்து கொடுத்தவர் நீரா என்கிறார்கள். இதனால் டாடாவிடம் அவருக்கு பெரும் பெயர் கிடைத்தது. இந்த சமயத்தில்தான் பாஜக ஆட்சிக்கு வரும் வாய்ப்புகள் கூடி வந்தன. இதையடுத்து அரசியல்வாதிகளுடன் தனது தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொண்டார் நீரா. இந்த சமயத்தில் டைம்ஸ் ஆப் இந்தியாவுக்கும், டாடா குழுமத்திற்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் நீரா தலையிட்டார். டாடா குழுமத்தை யாராவது புறக்கணித்தால் அது டாடாவைப் பாதிக்காது, மாறாக, புறக்கணிப்பவர்களுக்கே அது பாதகமாக முடியும் என மீடியா நிறுவனங்களை எச்சரித்தார்.
ராசாவுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது…?
2004ல் பாஜக ஆட்சியிலிருந்து தூக்கப்பட்ட பின்னர் ராடியா புதிய நண்பர்களைத் தேடத் தொடங்கினார். அதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது. ஆ.ராசாவுடன் அவர் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். அதேபோல ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு நெருக்கமான மேலும் சிலருடனும் அவர் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். ரத்தன் டாடாமூலமாகத்தான் நீராவின் தொடர்பு ராசாவுக்குக் கிடைத்ததாக கூறப்படுகிறது.
2007ம் ஆண்டு ராசாவை வெகுவாகப் பாராட்டி முதல்வர் கருணாநிதிக்கு ரத்தன் ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதன் பின்னரே ராசாவுடன் நீரா தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது.
சிங்கூர் போராட்டத்தின்போது முகேஷ் அம்பானி டாடா குழுமத்திற்கு பகிரங்க ஆதரவு அளித்தார். இதற்குப் பின்னணியில் நீரா இருந்ததாக கூறப்படுகிறது. நீராவின் முயற்சிகளைத் தொடர்ந்தே, டாடாவுக்கு ஆதரவாக முகேஷ் வாய் திறந்தார் என்று கூறப்படுகிறது.
இதன் மூலம் ரிலையன்ஸ் நிறுவனத்துடனும் அவருக்கு நெருக்கமான தொடர்புகள் ஏற்பட்டது. அதன் மக்கள் தொடர்புப் பணிகளையும் நீரா கவனிக்க ஆரம்பித்தார். அதே சமயம், அனில் அம்பானியின் வில்லியாக மாறிப் போனார். டாடா குழுமமும், ரிலையன்ஸும் இணைந்து வருடத்திற்கு ரூ. 30 கோடி கட்டணத்தை நீராவுக்குத் தருவதாகக் கூறப்படுகிறது.
கடைசியில் என்னதான் நடக்கப் போகிறது…?
இப்படி இந்தியாவின் பெரும் பெரும் புள்ளிகளுடன் வெகு சரளமான நட்பையும், தொடர்புகளையும் ஏற்படுத்தி வைத்திருந்த நீரா முன்பு இன்று ஏகப்பட்ட கேள்விகள் வரிசை கட்டி காத்துள்ளன.
ஆனால் இதில் நீராவை மட்டும் சேர்த்துப் பார்க்க முடியாது. மிகப் பெரிய புள்ளிகள் எல்லாம் இதில் தொடர்பு கொண்டுள்ளனர். நீரா ஒரு கருவி மட்டுமே. ஆனால் அவரை முன்னிறுத்தியது, அவரை பயன்படுத்திக் கொண்டது யார் என்பதையும் சேர்த்துப் பார்த்தால்தான் இதன் விஸ்வரூபம் தெரிய வரும் என்கிறார் இந்த விவகாரத்தைக் கவனிக்கும் அதிகாரி ஒருவர்.
மேலும் ஆடியோ டேப்புகளை கோர்ட்டில் ஆதாரமாக சமர்ப்பிக்க முடியாது. அதேசமயம், நீரா மிகப் பெரிய சிக்கலில் உள்ளார் என்பது மட்டும் உண்மை என்றும் அவர் கூறுகிறார்.
ரத்தன் டாடாவுடன் அவர் பேசிய பேச்சில், நமக்கு நேரம் சரியில்லை என்று நினைக்கிறேன். சவாலான தருணங்கள் வந்து கொண்டுள்ளன என்று படு கூலாக கூறியுள்ளார் நீரா.
உண்மையில் இப்போது நீராவுக்குத்தான் நேரம் சரியில்லை. காரணம் அவர் பல்வேறு முக்கியப் புள்ளிகளுடன் பேசிய தொலைபேசி அழைப்புகளின் 5800 பதிவுகளை (கிட்டத்தட்ட 500 மணி நேரம்) அமலாக்கப் பிரிவு தோண்டி துருவிக் கொண்டிருக்கிறது அமலாக்கத் துறையும் சிபிஐயும்.
ஆனால் இந்த விசாரணைகள் எந்த அளவுக்கு உண்மைகளைக் வெளிக் கொணரும் அல்லது அமுக்கு மறைக்கப் பார்க்கும் என்பது பிரதமருக்கும் அவரை ஆட்டுவிப்போருக்குமே வெளிச்சம்!
No comments:
Post a Comment