First Published : 30 Nov 2010 04:49:21 AM IST
நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க மட்டும் முடியாது என்று சொல்வது ஏன் என்று யாருக்குமே புரியவில்லை.
இத்தனை நாளும் நாடாளுமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன என்கிற சிறு எண்ணம் கூட இல்லாமல், ஆளும் காங்கிரஸ் கட்சி இப்படியாகத் தொடர்ந்து மறுப்புத் தெரிவித்து வருவதன் காரணம் என்ன? அல்லது யாருடைய நட்பை இழக்க விருப்பமின்றி இவ்வாறு பிடிவாதமாக இருந்துவருகிறது என்பதும் பல ஊகங்களுக்கு வழி வகுக்கிறது.
பொதுக் கணக்குக் குழு இந்த விவகாரத்தை உள்நோக்கிப் பார்ப்பதற்கும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரிப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன. பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக பா.ஜ.க.வின் தலைவர்களில் ஒருவரான ஜோஷி இருந்தாலும்கூட, இந்தக் குழுவின் அதிகார வரம்புகள் ஒரு கட்டுக்குள் இருப்பவை.
தலைமைக் கணக்குத் தணிக்கைக் குழு முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை இந்தக் குழு முழுமையாகப் படித்துப் பார்த்து ஆமாம் என்று சொல்ல முடியுமே தவிர, அதற்குமேலாக அந்தக் குழுவுக்கு அதிகாரம் இல்லை. ஆனால் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு பிரதமர் உள்பட இதில் தொடர்புடைய அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விசாரணைக்கு அழைக்கவும், இந்தத் தவறு எந்த இடத்தில் தொடங்கியது என்று வேரிலிருந்து விசாரணையை நடத்தவும்கூட முடியும். மேலும், அரசின் கொள்கை முடிவுகளில் உள்ள கோளாறுகளைச் சுட்டிக் காட்டி, அவற்றை மாற்றும்படி பரிந்துரைக்கும் அதிகாரமும் நாடாளுமன்றக் கூட்டுக்குழுவுக்கு உள்ளது.
இன்னும் சொல்லப்போனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிலவிய தொலைத்தொடர்புக் கொள்கை என்ன? அப்போதைய அமைச்சர் மகாஜன் காலத்திலிருந்து, தொலைபேசி தனியார்மயமாவதில் ஏற்பட்ட குளறுபடிகள் என்ன என்று ஆழமாகவும், விரிவாகவும் விசாரணை நடத்த இடமுண்டு.
இருப்பினும்கூட, இந்த விசாரணையை விரிவாக நடத்தினால் அதில் காங்கிரஸ் ஆட்சியின் இரு காலகட்டத்திலும் நடந்த அனைத்தையும் பேச வேண்டியிருக்கும், வேறுசில பூதங்களும் கிளம்பக்கூடும் என்று காங்கிரஸ் அஞ்சுவதாலேயே இத்தகைய விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது என்று சந்தேகிக்க இடம் ஏற்படுகிறது.
தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கை மிகத் தெளிவாக இந்த முறைகேடுகள் நடந்திருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது. உச்ச நீதிமன்றமோ, இதுவரை விசாரணை நடத்தாமல் காலம்கடத்திவரும் மத்திய குற்றப்புலனாய்வுப் பிரிவைக் கண்டித்திருக்கிறது. இவ்வளவையும் நாட்டு மக்கள் அனைவரும், ஏன் உலகமே பார்த்துக்கொண்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் பார்க்க மறுக்கிறது. பூனை கண்ணை மூடினால் பூலோகம் இருண்டா போகும்?
தெஹல்கா ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு அமைக்க பாஜக மறுத்ததை காங்கிரஸ் கட்சி சுட்டிக் காட்டுகிறது. முந்திரா ஊழலில் நாடாளுமன்றம் முடக்கப்படாமல் வெறுமனே டி.டி. கிருஷ்ணமாச்சாரி ராஜிநாமாவோடு முடிந்து போனதற்கு அவர் பிராமணர் என்று ஜாதிச் சாயத்தை கையில் எடுத்திருக்கிறார் திமுக தலைவர் மு. கருணாநிதி. காங்கிரஸ், திமுக இருவருடைய வாதங்களும், தவறை நியாயப்படுத்தவே பார்க்கின்றன. தவறை உணர்ந்துகொண்டதாகவே தெரியவில்லை. மக்கள் இதை எத்தகைய கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதைக்கூட கருதியதாகத் தெரியவில்லை. இல்லையென்றால், இத்தகைய வாதங்களை காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளும் முன்வைக்காது.
நடைபெற்றிருக்கும் முறைகேடு உலக வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட ஊழல். ரூ.1.76 லட்சம் கோடி இந்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், சாதகமான பேரங்களை நடத்திய பெண்மணி நீரா ராடியா ரூ. 60 கோடியைச் சேவைக் கட்டணமாகப் பெற்றுள்ளார் என்பதைப் பார்க்கும்போது, இந்தச் சேவைக் கட்டணம் ஒரு மாட்டுத் தரகர் அல்லது வீட்டுத் தரகர் போல இருதரப்பிலும் 2.5 சதவீத கமிஷன் என்றே வைத்துக் கொண்டாலும்கூட, ரூ.1,200 கோடிக்கான ஊழல் நிச்சயம் என்பதை, இந்தக் கமிஷன் தொகை அம்பலப்படுத்திவிட்டது.
இந்த ரூ. 1,200 கோடியும் ஒரேயடியாகக் கொடுக்க, தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மூடர்கள் அல்லர். அவர்கள் இதனைப் படிப்படியாக, ஒவ்வொரு கட்டத்தில் எந்த விதமாக, எந்தெந்த நாட்டில் டெபாசிட் செய்வது என்று காலக் கிரமத்தில் பட்டியலிட்டுத்தான் இந்த ஊழலில் ஈடுபட்டு இருப்பார்கள்.
இப்போது இந்திய அரசின் நியாயமான கடமை, இந்த முறைகேடு நடந்துள்ள முறையை விரிவாக ஆராய்வதன் மூலம்தான், ஊழலின் அளவும் பட்டுவாடா புள்ளிவிவரமும் தெரியவரும். மேலும், இதில் தொடர்புடைய நிறுவனங்களின் உரிமங்களை ரத்துசெய்ய இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் பரிந்துரைத்துள்ளது. (அதாவது அமைச்சர் பதவியிலிருந்து ராசா பதவி விலகிய அடுத்த நாளே இந்தப் பரிந்துரையை வீரத்துடன், தைரியத்துடன் செய்திருக்கிறார்கள்) அந்தப் பரிந்துரையும் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இவை எல்லாவற்றையும் முழுமையாக விசாரித்து, அனைத்துப் புள்ளிவிவரங்களையும் அம்பலப்படுத்துவது மட்டுமே, காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக்குச் சேர்க்கும் பெருமையாக இருக்கும். இல்லையெனில், உலக வரலாற்றின் மிகப்பெரும் ஊழலை, கூட்டணி எண்ணிக்கையைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவும், ஏதோ ஓர் அதிகார மையத்தைக் காப்பாற்றவும் போய், தன் சொந்தப் பெருமைகளை இழந்த கட்சியாக காங்கிரஸ் தாழ்ந்து போகும்!
No comments:
Post a Comment