Friday, December 3, 2010

மக்களவையைக் கலைக்கவும் தயக்கம் கூடாது!

First Published : 04 Dec 2010 02:40:12 AM IST


2ஜி அலைக்கற்றை ஊழல் என்பது ஆயிரம் கரங்களுடன் ஆயிரம் திசைகளை நோக்கிச் செல்லும் அரிய கடல் பிராணியான ஆக்டோபஸ்போல பூதாகாரமாகி வருகிறது.

இதில் ஒரு பிரச்னையை எடுத்துக்கொண்டு சமாளித்து அதற்குத் தீர்வுகண்டால் அடுத்தது தலைதூக்குகிறது.

பிரச்னை முற்றமுற்ற அனைத்துத் தரப்பினரின் பிடிவாதமும் இறுகுகிறது. உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மத்தியப் புலனாய்வுக் கழகத்தை (சி.பி.ஐ.) கொண்டு விசாரிக்கலாம் என்று அரசுத் தரப்பில் கூறினால் பாரதிய ஜனதா கூட்டணி ஒருபுறமும் இடதுசாரிகள் கூட்டணி மற்றொருபுறமும் ஏற்க மறுக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டுக்குழு விசாரணைதான் வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கின்றன.

இப்போது இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தொடங்கிவிட்டது. இத்தோடு இணைந்து பல துணைப் பிரச்னைகள் தோன்றி வளர்ந்து வருகின்றன. மத்திய அரசின் ஊழல் தடுப்பு கண்காணிப்பு தலைமை ஆணையர் பி.ஜே. தாமஸ் அந்தப் பதவிக்கு நியமனம் பெற்ற விவகாரம், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டைத் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத்தருவதற்காக நீரா ராடியா என்ற அதிகாரத் தரகர் தில்லியின் உயர் வட்டாரங்களுடன் நடத்திய தொலைபேசி உரையாடல் என்று விரிவடைந்துகொண்டே போகிறது.

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு ஏற்பட்ட கோபம்தான் இன்று ஒவ்வொரு இந்தியனுக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதை அரசியல் தலைவர்கள் உணராவிட்டால் ஆபத்து.

தன்னுடைய ஆதரவாளர்களுக்காக அரசின் ஆதரவை எதிர்பார்த்துப் பேசிய அதிகாரத் தரகர் நீரா ராடியாவுடன் ஆ. ராசாவைத் தவிர மத்திய அரசில் இடம்பெற்றுள்ள மூத்த அமைச்சர்கள் யாரும் பேசியிருக்கவில்லை என்பதே இப்போதைக்கு ஆறுதலான செய்தி. இந்த விவகாரத்தில் சிக்கிய யாரும் தங்களுடைய பெயர் கெடாமல் மீளப்போவதில்லை.

இந்த விவகாரத்தில் ஒரு சிலருக்காக வாதாடும் ஊடகங்களின் முயற்சிகளுக்குத் தோல்விதான் ஏற்படும்.

ராடியா உரையாடல் டேப்புகளைத் தருமாறு உச்ச நீதிமன்றம் கேட்டு, அரசும் அவ்வாறே ஒப்படைத்துவிட்டது. உச்ச நீதிமன்றம் இதைக் கேட்டுவிட்டு என்ன முடிவுக்கு வருகிறது என்று காத்திருக்க வேண்டும், அவசரப்பட்டு எதையும் ஊகமாகக் கூறிவிடக்கூடாது.

மத்திய ஊழல் கண்காணிப்பு தலைமை ஆணையர் பதவியிலிருந்து இறங்கமாட்டேன் என்று பி.ஜே. தாமஸ் அடம்பிடிப்பதும், ஆ. ராசா எடுத்த முடிவுக்குக் காரணம் என்ன என்று சி.பி.ஐ. நடத்தும் விசாரணையும் இறுதியில் ஆறாதபுண்ணை ஏற்படுத்திவிடும். இவற்றையெல்லாம் மக்கள் பார்த்து மனத்தில் பதியவைத்துக் கொள்வார்கள். யாருடைய நிர்பந்தம் காரணமாகவோ எடுக்கும் முடிவுகள் அரசுக்கு நன்மையைத் தராது.

தொலைத்தகவல் தொடர்புத்துறைக்கு புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அமைச்சர் கபில் சிபல் எடுத்துள்ள நடவடிக்கைகள் புத்திசாலித்தனமானவை. தவறுகளைத் திருத்திக் கொள்ள அரசு தயாராக இருப்பதைப் பார்த்து எதிர்க்கட்சிகளும் இறங்கிவந்து, உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சி.பி.ஐ. இந்த விவகாரத்தை விசாரிக்கட்டும் என்று விட்டுவிட வேண்டும்.

ஊழல் விசாரணைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பிரச்னைகள் இருக்கின்றன. காமன்வெல்த் விளையாட்டுப்போட்டி ஏற்பாட்டு ஊழல், ஆதர்ஷ் அடுக்குமாடி கட்டடத்தில் முறைகேடாக ஒதுக்கீடு பெற்ற ஊழல், 2ஜி அலைக்கற்றையை முதலில் வந்தவருக்கே முதலில் ஒதுக்கீடு என்று வழங்கிய ஊழல், இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளுக்கு அணிகளைச் சேர்ப்பதில் நடந்த ஊழல் என்று எல்லாவற்றிலும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பல பிரச்னைகள் ஏற்பட்டுள்ளன.

மகாராஷ்டிரத்தின் லவாசா என்ற மலைப்பகுதியில் வீடுகட்டும் திட்டத்துக்கு முதலில் அனுமதி தந்துவிட்டு பிறகு சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டம் என்பதால் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி தர மறுத்ததிலும் இப்படி பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.

பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கும் அரசியல்வாதிகளால் பல பிரச்னைகள் இப்படித் தோன்றுகின்றன. நான் அடிக்கடி கூறுவதைப்போல அரசியலில் இருக்கும் சிலரின் பணச் செல்வாக்கைக் கட்டுப்படுத்தத் தவறினால் அது இத்தகைய பிரச்னைகளைத் தோற்றுவித்துக்கொண்டே இருக்கும். ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகளைக்கூட அவை முடக்கிவிடும்.

ஆ.ராசாவுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் விபரீதம் ஏற்படும் என்று தி.மு.க. எச்சரிக்கக்கூடும். அவர் தலித் என்று கூறக்கூடும். ஆனால் மத்திய அரசு அதற்கெல்லாம் மசிந்துவிடாது என்றே தோன்றுகிறது. இப்போதுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை திமுகவால் கவிழ்த்துவிட முடியுமா என்ன? அவர்கள் அப்படிச் செய்வார்கள் என்று நான் கருதவில்லை.

தமிழ்நாட்டில் ஆளும்கட்சியாக இருப்பதால் மக்களுடைய அதிருப்தியால் பாதிப்பு அடையும் இடத்தில் இருக்கிறது திமுக. அத்துடன் அந்தக் குடும்பத்துக்குள்ளேயே பூசல் இருக்கிறது. அதிமுக மிக வலுவான எதிர்க்கட்சியாக இருக்கிறது. பாமகவும் பிற கட்சிகளும் எந்தப் பக்கம் போகும் என்று யாராலும் சொல்ல முடியாது. காங்கிரஸ் கட்சியை திமுக ஒரேயடியாக மிரட்டினால், காங்கிரஸýக்குத் தோள் கொடுக்க கட்சிகளுக்குப் பஞ்சமே இல்லை.

மகாராஷ்டிரத்தில் லவாசா என்ற இடத்தில் வீடு கட்டும் திட்டங்களுக்கு முதலில் அனுமதி தந்துவிட்டு, தனியார் நிறுவனம் கோடிக்கணக்கான ரூபாய்களைச் செலவிட்ட பிறகு சுற்றுச்சூழல் அமைச்சகம் அதற்குத் தடை விதிப்பது சரியா என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும் மத்திய அமைச்சருமான சரத் பவார் கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி தொடர்பாக பி.சி.சி.ஐ. எடுத்துவரும் ஒழுங்கு நடவடிக்கைகள் தீவிரமாவதைப் பொருத்தே சரத் பவாரின் எதிர்ப்பும் இருக்கும் என்று கூறிவிடலாம்.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விஷயத்தில் பல விவகாரங்கள் புதைந்துகிடக்கின்றன. ஸ்வான் டெலிகாம் நிறுவனம் யாருக்காக உரிமம் பெற்றது என்ற கேள்வியால் அனைவருடைய கவனமும் இப்போது அதன் மீது திரும்பியிருக்கிறது.

இந்த ஊழல் விசாரணைகள் தொடர்பான உண்மைகள் மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.), வருமான வரித்துறை (ஐ.டி.), வருவாய்ப் புலனாய்வு அமல்பிரிவு இயக்ககம் (ஈ.டி.) ஆகியவற்றுக்குத் தெரியும்.

சுற்றுச்சூழல் கெடுகிறது என்ற காரணத்தைச் சொல்லி கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை முறையின்றிப் புறக்கணிக்கக்கூடாது என்று சரத் பவார் கூறியிருப்பது சரிதான். ஆனால் 2ஜி விவகாரத்தில், தொலைத் தொடர்புத் துறையைவிட சில தனியார் நிறுவனங்கள்தான் அளவுக்கு அதிகமாகப் பலன் அடைந்துள்ளன, நம் அனைவருக்கும் உரிமையான தேசிய செல்வம் சிலரின் கைகளுக்கு மட்டும் போயிருக்கிறது.

பர்மிட், லைசென்ஸ், கோட்டா ராஜ்ய காலம் போய்விட்டது. தொழிலில் ஈடுபட அனைவருக்கும் சம வாய்ப்பு தரப்படும் காலம் இது. இதில் ஒரு சில நிறுவனங்களுக்கு மட்டும் சலுகை காட்டும் போக்கை ஏற்கவே முடியாது. லவாசாவில் வீட்டுவசதி திட்டம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தானது என்றால், இத்தனை மாதங்களாக அது உருவாக ஏன் அனுமதித்தார்கள்? மும்பையில் ஆதர்ஷ் அடுக்குமாடி வீட்டைக் கட்ட முழுக்க அனுமதித்துவிட்டு பிறகு அதை விதிமுறைகளை மீறி கட்டியிருக்கிறார்கள் என்று பின்னர் கண்டுபிடித்ததைப் போல இப்போதும் செய்திருக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய்கள் இதில் செலவிடப்பட்டிருப்பதால்தான் பிரச்னைகள் அதிகமாகின்றன.

நல்லவேளை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாட்டில் எந்த அரசியல் கட்சியும் ஈடுபடவில்லை. காங்கிரஸ் கட்சி சற்று விலகியே நின்றுவிட்டது. இந்த ஊழலை விசாரிப்பதில் சி.பி.ஐ., ஐ.டி., இ.டி. ஆகிய துறைகள் படிப்படியாகச் செல்கின்றன. இந்த ஊழலிலும் பல மர்மங்கள் புதைந்துகிடக்கின்றன.

இந்த ஊழலில் நேரடியாக ஈடுபட்டதாக சுரேஷ் கல்மாடியின் உதவியாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் இறுதியில் எல்லோருடைய விரல்களும் அமைப்புக்குழுவின் அமைப்பாளரை (சுரேஷ் கல்மாடி) நோக்கித்தான் நீளும்.

ஆனால் நகர்ப்புற வளர்ச்சித்துறை (ஜெய்பால் ரெட்டி), தில்லி முதல்வர் (ஷீலா தீட்சித்), தில்லி துணை நிலை ஆளுநர் (தேஜீந்தர் கன்னா),விளையாட்டுத்துறை அமைச்சர் (எம்.எஸ். கில்) ஆகியோர் மீது பழியைப் போட நினைத்தால் எதிர்மறைப் பலன்களையே தரும். இவர்கள் அனைவரும் நேர்மையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தனித்தனியாகச் செய்த சில ஏற்பாடுகளில்தான் ஊழல்கள் பெருமளவு நடந்துள்ளன. வி.கே. ஷுங்லு கமிட்டி இதை ஆராய்ந்து உண்மைகளை வெளியே கொண்டுவரும்.இந்த மகாப்பெரிய ஊழல்களைத்தவிர, அன்றாடம் சிறியதும் பெரியதுமாக ஊழல், லஞ்சம் என்று செய்திகள் வருகின்றன. அசாம், ராஜஸ்தானிலிருந்துகூட ஊழல் புகார்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.

இவை மேலும் தீவிரம் அடையத் தொடங்கும். இவையெல்லாம் பொதுமக்களைப் பொருத்தவரை நல்லதுதான். செய்தி ஊடகங்களைச் சேர்ந்த சிலரும் தங்களுடைய வரம்பு எது என்று தெரியாமல் ஆட்சியாளர்களுக்கு நெருக்கமாக இருந்து சில காரியங்களைச் சாதிக்க முயன்றதால் அவர்களுடைய புகழுக்கும் களங்கம் ஏற்பட்டிருக்கிறது.

காலம்காலமாகச் சேர்த்துவந்த நல்ல பெயர் ஒரு சில நிமிஷங்களில் கறைபட்டுப்போகும் என்பதை பத்திரிகைத்துறை நண்பர்கள் மனத்தில் வைக்க வேண்டும்.

கூட்டணி அரசியல் என்பது எத்தனை கொந்தளிப்பான பயணம் என்பதை நேரில் பார்க்கிறோம். மேலிடத்தில் இருப்பவர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை நான் உணர்கிறேன். இந்த நிலையிலிருந்து மீளவிடாமல் யாரேனும் கோரிக்கைகளையும் நிபந்தனைகளையும் பின்னி நிர்பந்தத்தை ஏற்படுத்துவார்களேயானால் மக்களை நம்பி நான் இடைத் தேர்தலையே தேர்வு செய்வேன். மறைப்பதற்கு நம்மிடம் எதுவும் இல்லை என்ற நிலைமை இருந்தால் தேர்தலில் மக்களுடைய அமோக ஆதரவு நிச்சயம்.

அரசியல்வாதிகளைவிட மக்கள் ஒரு அடி முன்னேயே சென்றுகொண்டிருக்கிறார்கள். துணிச்சல் மிகுந்தவர்களுக்கே வெற்றி என்ற நியதி அரசியலுக்கும் பொருந்தும். எனவே மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டும் என்ற உண்மையான சிந்தனை உள்ளவர்கள் இத்தகைய சூழலைச் சரியாகக் கணித்து, தேவைப்பட்டால் மக்களவையைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்தும் துணிச்சலான முடிவைக்கூட எடுக்க வேண்டும்.

www.dinamani.com

No comments:

Post a Comment