Wednesday, December 1, 2010

கட்டுரை: இரண்டாம் தலைமுறை ஊழல்


தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா மீதான ஒரு லட்சம் கோடி இரண்டாம் தலைமுறை ‘ஸ்பெக்ட்ரம்’ ஊழல் குற்றச்சாட்டின் கதை

பரஞ்ஜோய் குஹா தாகுர்தா
தமிழில்: கே. முரளிதரன்

கசியும் மௌனம்

கடந்த சில மாதங்களாகப் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் - சுதந்திர இந்தியா சந்தித்த மிகப் பெரிய நிதி ஊழல் என வர்ணிக்கப்படும் - 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் தொடர்பான விவாதங்கள், சில வாரங்களுக்கு முன்னர் தில்லியிலுள்ள தொலைத்தொடர்புத் துறை அலுவலகம் மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் சோதனையிடப்பட்டதிலிருந்து, தீவிரமடைந்திருக்கின்றன. 2ஜி என அழைக்கப்படும் ‘இரண்டாம் தலை முறை’ அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து 2008 முதல் எழுப்பப்பட்டு வரும் சந்தேகங்களுக்கு மத்தியப் புலனாய்வுத் துறை மேற்கொண்ட இச்சோதனைகள் சட்டபூர்வமான ஆதாரங்களை அளித்திருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு வரையிலும்கூட இது பற்றிய விவாதங்களுக்கு நாட்டின் முக்கிய எதிர்க்கட்சிகளோ ஊடகங்களோ பெரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை. தினமணி, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தெகல்கா, காரவன், தி பயனீயர் போன்ற சில விதிவிலக்குகளைச் சுட்டிக்காட்டலாம் என்றாலும் நாட்டுக்குக் குறைந்தபட்சம் 50,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக் காரணமாக இருந்த ஒரு நடைமுறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளை மக்களின் கவனத்திற்குக் கொண்டுசெல்வதில் ஊடகங்களும் முக்கிய அரசியல் கட்சிகளும் காட்டிவருகிற தயக்கம், ஊழல் இந்தியாவில் விரிவும் ஆழமும் பெற்றுவருவதைச் சுட்டுகின்றது. அன்று ‘போபர்ஸ்’ தொடர்பான 64 கோடி ஊழலுக்கு இந்திய அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் ஆற்றிய எதிர்வினையோடு இன்றைய 50 ஆயிரம் கோடி ‘ஸ்பெக்ட்ரம்’ ஊழல் பெற்றிருக்கும் எதிர்வினைகள் ஒப்பிடப்பட வேண்டியவை.

தொலைத்தொடர்புத் துறை அமைச்சரான தமிழகத்தைச் சேர்ந்த ஆ. ராசாவுக்கு இந்த முறைகேடுகளில் முதன்மையான பங்கு இருப்பதாகச் சந்தேகம் எழுந்த போதிலும் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் அதை ஒரு தேர்தல் பிரச்சினையாகக் கவனப்படுத்துவதற்கு இங்குள்ள எதிர்க்கட்சிகள் தயக்கம்காட்டின. திமுகவின் அரசியல் எதிரியான ஜெயலலிதாகூட இந்த விஷயத்தில் கண்டும் காணாமல் இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்தது. நீலகிரி மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டாம்முறையாகத் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆ. ராசா மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டிருப்பது ஊழலில் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு உள்ள தொடர்பைக் குறித்து ஆழமான கேள்விகளை எழுப்பியிருக்கின்றன. ராசாவை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்வது தொடர்பாகவும் அவருக்குத் தொலைத் தொடர்புத் துறையை ஒதுக்குவது தொடர்பாகவும் தொடக்கத்தில் பிரதமர் தயங்கியதாகவும் திமுகவுக்கும் காங்கிரசுக்குமிடையே நடைபெற்ற திரை மறைவு ஒப்பந்தங்கள்தாம் அவரை மீண்டும் அத்துறையின் அமைச்சராக்கியதாகவும் தமிழ் ஊடகங்களில் உலவிவந்த அதிகாரபூர்வமற்ற செய்திகள் தெரிவித்தன.

சோதனை நடத்திய மத்தியப் புலனாய்வுத் துறை முதலில் நேர்மையான நடவடிக்கையைத் தொடங்கியிருப்பதாக நம்பப்பட்டது. ராசாவுக்கு நம்பகமான அதிகாரிகளான அசோக் சந்த்ரா (சமீப காலம்வரை சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்குப் பொறுப்பான வயர்லெஸ் செல்லின் தலைவராயிருந்தவர்) ஏ.கே. ஸ்ரீவத்சவா ஆகியோரது பெயர்களைக் குற்றப்பத்திரிகையில் சேர்த்திருந்த மத்தியப் புலனாய்வுத் துறை பிறகு அவர்களது பெயர்களை நீக்கியது. இப்போது அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட சில நிறுவனங்களின் கணக்கு வழக்குகளை விசாரித்து வருவதாக மத்தியப் புலனாய்வுத் துறை சப்பைக் கட்டுக் கட்டியிருக்கிறது.

இவ்வழக்கை நீர்த்துப்போகச் செய்வ தற்கான முயற்சிகள் தலைநகரில் வேகமாக நடந்துவருவதாகத் தகவல்கள் வந்துள்ளன. ஆ. ராசாவுக்கு திமுகவின் மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி பக்கபலமாக இருப்பதாக தெகல்காவில் (நவம்பர் 7, 2009) இது குறித்து எழுதியுள்ள செய்தியறிக்கை ஒன்றில் பத்திரிகையாளர் சந்தனு குகா ராய் குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்திப்பதற்காகத் தூதுக் குழு ஒன்றுடன் சென்றிருந்த கனிமொழி, ராசா சார்பாகப் பேசும்பொருட்டு சோனியாவுடன் தனிப்பட்ட ஒரு சந்திப்புக்கு நேரம் கோரியதாகவும் அது மறுக்கப்பட்டதால் குழுவிலிருந்து தம்மை விலக்கிக்கொண்டு கனிமொழியும் ராசாவும் உடனடியாக சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும் தி பயனீயரில் (அக்டோபர் 24, 2009) வந்துள்ள ஒரு குறிப்புத் தெரிவிக்கிறது. ராசா இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரை இழுக்கும்விதமாக அளித்துள்ள பேட்டிகள் காங்கிரஸ் தலைமையை எரிச்சலடையவைத்துள்ளதாக அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணை நேர்மையாக நடைபெறுவதற்கு வசதியாக ராசாவை அமைச்சரவையிலிருந்து விலக்கிவைக்க வேண்டும் என்னும் எதிர்க்கட்சிகளின் நியாயமான கோரிக்கைக்கு ‘நேர்மையாளர்’ மன்மோகன்சிங் செவிசாய்க்காதது ஏன் என்னும் கேள்வி முக்கியமானது. ராசா குற்றமற்றவர் என நற்சான்று வழங்கும்விதத்தில் பிரதமர் கருத்துச் சொல்வது ஏன் எனத் தெரியவில்லை.

துறவறத்தை முடித்துக்கொண்டு மீண்டும் அரசியலுக்குத் திரும்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா இந்த நிதி முறைகேடு தொடர்பாக எழுப்பிவரும் கேள்விகள் அவருக்கு கிடைக்கும் அரசியல் ஆதாயத்தோடு தொடர்புடையவை. இது போன்றதொரு சூழலில் அதிகப் பொறுப்பு வாய்ந்தவையும் நம்பிக்கையானவையும் ஊடகங்களே என்பதில் சந்தேகமில்லை. இந்த விஷயத்தில் தமிழ் ஊடகத் துறையினருக்குப் பல்வேறு நெருக்கடிகள் இருப்பதையும் மறுப்பதற்கில்லை.

2008இல் ஸபெக்ட்ரம் தொடர்பான செய்திகளை வெளியிட்டமைக்காக ராசா ஜூனியர் விகடன் இதழ்மீது வழக்குத் தொடர்ந்தார். அவ்விதழில் தன்னைப் பற்றிய செய்திகள் வருவதற்குத் தடையாணை ஒன்றையும் பெற்ற அமைச்சர் ஸ்பெக்ட்ரம் தொடர்பாக எழுதும் பத்திரிகையாளர்களை மிரட்டி மௌனமாக்கும்விதமாக சம்மந்தப்பட்டவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதாக தி காரவன் (ஜூன், 2009) தெரிவிக்கிறது. வழக்கின் முடிவில் ஜூனியர் விகடனுக்கு விதக்கப்பட்ட தடை விலக்கிக்கொள்ளப்பட்டதாக விசாரணை நீதிமன்ற நீதிபதி சந்ரு அளித்த தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நீதிபதி சந்ருவின் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடையைப் பெற்றுள்ளார். மேல்முறையீட்டு மனுமீதான விசாரணை முடியும்வரை ஜூனியர் விகடனால் அமைச்சரைப் பற்றி எதுவும் எழுத முடியாது. 2006 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவிடமிருந்து ஜனநாயகத்தை மீட்பதே தன் முதல் கடமை எனத் திமுக தலைவர் முழங்கினார். அவரது கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ராசா அந்த முழக்கத்திற்கு என்ன பொருள் என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

கடந்த ஜூனில் தி காரவன் வெளியிட்டுள்ள இக்கட்டுரை இந்த நிதி மோசடி தொடர்பான சில உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதுடன் பிரதமரும் ராசாவும் திமுக தலைமையும் பதிலளிக்க வேண்டிய சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது. தமிழ் ஊடக அரங்கில் இந்த நிதி மோசடி தொடர்பாக நம்ப முடியாத மௌனம் கவிந்திருக்கும் நிலையில் ஒரு கடமையாகக் கருதி அதன் தமிழ் மொழிபெயர்ப்பைக் காலச்சுவடு வாசகர்களுக்குத் தருகிறோம்.

-பொறுப்பாசிரியர்

நாள்: ஜனவரி 10, 2008. நேரம்: பிற்பகல் 2:45. இடம்: சஞ்சார் பவன். புது தில்லியின் மத்தியில் இருக்கும் இந்தப் பிரம்மாண்டமான கட்டடத்தில்தான் தொலைத்தொடர்புத் துறை (டிஓடி) செயல்பட்டு வருகிறது.

திடீரென ஏகப்பட்ட குழப்பம். டிஓடியின் இணையதளத்தில் ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது. மதியம் 3:30 மணியிலிருந்து 4:30 மணிக்குள் மின் காந்த அலைக்கற்றை (electro-magnetic spectrum) உரிமங்களுக்கான ஆணைகள் (Letter of Intent) தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்படும் என்றது அந்த அறிவிப்பு. இதற்கான விண்ணப்பக் கட்டணத்தைக் (ஒவ்வொன்றும் பல ஆயிரம் கோடி ரூபாய்) கேட்புக் காசோலையாகத் தகுந்த ஆவணங்களுடன் இணைத்து அனுப்ப வேண்டுமென்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்தத் தொலைத்தொடர்புத் துறைக்கு அமைச்சராக இருப்பவர் தி.மு.கவைச் சேர்ந்த தலித்தான ஆண்டிமுத்து ராசா. ஒதுக்கீடு செய்யப்படவிருந்த இரண்டாம் தலைமுறை (2ஜி) அலைக்கற்றைகள் அரிதான, மிகவும் மதிப்புமிக்க தேசிய வளமாகும். மொபைல் நிறுவனங்களுக்கு இந்த அலைக்கற்றைகள் மிகவும் முக்கியமானவை. யார் விண்ணப்பக் கட்டணத்தை முதலில் கொடுக்கிறார்களோ, (வினாடி வித்தியாசம்கூட முக்கியம்) அவர்களுக்கே இந்த 2ஜி அலைக்கற்றைகள் உரிமம் வழங்கப்படும் என்று ராசா அறிவித்தார். முதலில் வருபவருக்கே முன்னுரிமை (FCFS) என்ற இந்த முறையில் வேகம், செல்வாக்கு, முன்கூட்டியே விவரங்களைத் தெரிந்துவைத்திருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கிடைக்கும். பண பலமோ தொழில்நுட்பத் திறனோ அனுபவமோ முக்கியமல்ல.

அவ்வளவுதான், சஞ்சார் பவனைப் பெரும் குழப்பமும் கூச்சலும் சூழ்ந்தன. பகட்டான அர்மானி சூட் அணிந்துவந்த சிஇஓக்களை அவர்களது தொழில் போட்டியாளர்கள் ஏற்பாடு செய்திருந்த குண்டர்கள் தூக்கிவீசினார்கள். இந்தத் தள்ளு முள்ளுவைச் சரிசெய்ய முயன்ற சில ஜூனியர் டிஓடி ஊழியர்களுக்கும் அடிவிழுந்தது. போலீஸ் வழக்கம் போலக் கடைசியாக வந்தது. இந்தச் சண்டைகளெல்லாம் டிவி கேமராக்களில் படம் பிடிக்கப்பட்டு, அன்று மாலை ஒளிபரப்பாயின.

பொருளாதாரத் தாராளமயமாக்கலும் கட்டுப்பாடுகளை நீக்கியதும் எந்த அளவுக்குப் பலனளித்தன என்பதற்கு உதாரணம் காட்டச்சொன்னால், இந்தியாவின் தொலைதூரக் கிராமங்களில் வசிப்பவர்களுக்கும் தொலைத் தொடர்பு வசதியைத் தருவதில் இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றியைத்தான் சுட்டிக்காட்டுவது வழக்கம். 12 ஆண்டுகளுக்கு முன்புகூடத் தொலைபேசிக் கட்டணங்கள் உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம். இன்று, உலகில் மிக மலிவான தொலைபேசிக் கட்டணங்கள் இருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1947இல் 10,000 பேருக்கு 2 பேரிடம் மட்டும் தொலைபேசி இருந்தது. 1993இல் இந்திய அரசு தொலைத்தொடர்புத் துறையில் தன் ஆதிக்கத்தை விலக்கிக்கொண்டு தனியாரையும் அனுமதித்தது. 1997இல் 100 பேரில் 2 பேர் தொலை பேசி வைத்திருந்தனர். 2007இல் 10 பேருக்கு 2 பேர் தொலைபேசி வைத்திருந்தனர். இன்று, 2009இன் மத்தியில் கிட்டத்தட்ட 40 சதவீதம் பேர் தொலைபேசி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இந்த வெற்றிக் கதையில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்வதில் டிஓடி பின்பற்றும் பூடகமான, வெளிப்படைத்தன்மையில்லாத முறை சரியானதல்ல. இதில் இருக்கும் குழப்பங்களைத் தொழில்நுட்பம் சார்ந்த வார்த்தை விளையாட்டுகளில் மூடிமறைத்துவிடுகிறார்கள். விதிமுறைகள் வளைக்கப்படுகின்றன. கட்டுப்பாட்டுப் பரிந்துரைகள் தேவைக்கேற்றபடி பொருள்கொள்ளப்படுகின்றன. இதெல்லாம் போக, லாபிகளுக்கு இடையில் சட்டப் போராட்டங்கள், மூத்த அதிகாரிகளுக்கு இடையில் மறைமுகமான வார்த்தைப் பரிமாற்றங்கள், தேசத்திற்குப் பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தும் வகையில் அலைக்கற்றைக்கு மிகக் குறைவாக விலை நிர்ணயம் செய்வது, லாபம் அடைந்தவர்களை விமர்சிப்பவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் எனப் பல முறைகேடுகள் இதைச் சுற்றி நிலவுகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு அமைச்சரவை அமைக்கப்பட்டபோது, தகுதியின் அடிப்படையில் துறைகள் ஒதுக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது. தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆ. ராசா அமைச் சரவையிலிருந்து நீக்கப்படலாம் என்று செய்திகள் வெளிவந்ததும், மத்திய அரசை வெளியிலிருந்து ஆதரிக்கப் போவதாகத் தி.மு.க அறிவித்தது.

ராசா ஏற்கனவே கறை படிந்த வரலாற்றைக் கொண்டவர்தான். மே 2004இலிருந்து மூன்று ஆண்டுகள் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக ராசா இருந்தார். போன வருடம் பல்வேறு நாளிதழ்களிலும் பத்திரிகைகளிலும் வெளியான கட்டுரைகளின்படி பார்த்தால், ராசா வனத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் அவரது உறவினர்களும் அவருக்கு நெருக்கமானவர்களும் பல ரியல் எஸ்டேட் நிறுவனங்களை வாங்கினார்கள். இப்படி நிறுவனங்களை வாங்கியவர்களில் ராசாவின் மனைவி எம். ஏ. பரமேஸ்வரி, அவரது மைத்துனர்கள், இவர்களது கூட்டாளிகள் ஆகியோர் அடக்கம். இவர்களில் சிலர் சென்னையிலும் கோயம்புத்தூரிலும் இருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் இயக்குனர்களானார்கள். இக்கட்டுரைகளுக்கு இதுவரை எந்த மறுப்பும் வரவில்லை என்பது கவனிக்கத்தக்கது. மே 2007இல் தயாநிதி மாறனுக்குப் பதிலாகத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆ. ராசா பதவியேற்றவுடன் ‘டிஎல்எஃப்’, ‘யுனிடெக்’, ‘பர்ஸ்வ்நாத்’ போன்ற, தொலைத் தொடர்புத் தொழிலுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத, அத்துறையில் திறனற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தொலைத் தொடர்புத் தொழிலில் காலடி எடுத்துவைத்தன. இவர்களுக்கு உரிமங்களும் வழங்கப்பட்டன.

இந்த 2ஜி அலைக்கற்றைகளைக் குறைந்த விலைக்கு விற்றதால், நாட்டுக்கு ரூ. 50,000 கோடிக்குக் குறையாமல் வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இது மிகக் குறைந்த மதிப்பீடு. சுதந்திர இந்தியாவின் வரலாற்றிலேயே மிகப் பெரிய ஊழல் இதுதான். நிபுணர்களின் மதிப்பீட்டின்படி இதில் சம்பந்தப்பட்டிருக்கும் பணம் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு இருக்கக் கூடும். 2007-2008இல் இந்தியாவின் தேசிய வருமானத்தில் நான்கில் ஒரு பங்கு இது. 2007-2008இல் மத்திய சுகாதார பட்ஜெட்டைவிட இது அதிகம். 2008-2009 இந்திய பட்ஜெட் பற்றாக்குறையில் நான்கில் மூன்று பகுதி இந்தத் தொகை.

தொலைத்தொடர்புத் துறையின் வர்த்தகச் செயலரான டி.எஸ்.மாத்தூர், டெலிகாம்-நிதி கமிஷனின் உறுப்பினரான மஞ்சு மாதவன், ‘இந்தியத் தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணைய’த்தின் (ட்ராய்) தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா உள்ளிட்ட தொலைத்தொடர்புத் துறை நிபுணர்கள் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்வதற்குப் பொது ஏல முறையே மிக வெளிப்படையானது; சட்டரீதியானது; சர்ச்சையில்லாதது என்று தெளிவாக ஆலோசனை வழங்கியும் அந்த ஆலோசனைகளை ஆ. ராசா ஏன் ஏற்கவில்லை என்பது தான் இப்போது முக்கியமான கேள்வி. முதலில் வருபவருக்கு முன்னுரிமை என்ற தவறான முறையில் ஆ. ராசா மிக உறுதியாக இருந்ததன் பின்னணியில் சக்திவாய்ந்த பிஸினஸ் லாபி ஏதேனும் இருக்கிறதா?

டி.எஸ். மாத்தூர் 2007 டிசம்பர் 31ஆம் தேதி ஓய்வுபெற்றார். 2008 ஜனவரி 1ஆம் தேதி சித்தார்த்த பெஹுரா தொலைத்தொடர்புத் துறைச் செயலராக நியமிக்கப்பட்டார். முன்பு ஆ. ராசா அமைச்சராக இருந்த சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை செயலராக இருந்தவர்தான் இந்த பெஹுரா. 2008 ஜனவரி 10ஆம் தேதி டிஓடி சர்ச்சைக்குரிய வகையில் உரிமங்களை வழங்கியது.

டிஓடியின் வினோத அறிவிப்பு, அதைத் தொடர்ந்த குழப்பங்கள் ஆகியவை முடிந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு, அதாவது 2007 டிசம்பர் 12ஆம் தேதி புது தில்லியின் விஞ்யான் பவனில் நடந்த ‘இந்திய டெலிகாம் கான்ஃபரன்’சில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “அலைக்கற்றைகள் மிக அரிதாகக் கிடைக்கும் வளம் என்பதால் அதை மிகக் கவனமாக, முழுமையாகப் பயன்படுத்த வேண்டும். கொள்கை வகுக்கும் அமைப்பானது நியாயமானதாக, வெளிப்படையானதாக, பாரபட்ச மற்றதாக, அரசுக்குக் கிடைக்கக்கூடிய வருவாயை முழுமையாகப் பெற்றுத் தருவதாக இருக்க வேண்டும்” என்றார். “முடிவில் பார்த்தால், சரியாக விலையை நிர்ணயம் செய்தல், நியாயமான ஒதுக்கீட்டு விதிகள், போட்டியிட்டு தேர்வுபெறுவதற்கான சூழலை உருவாக்குதல் ஆகியவைதாம் முக்கியமான விஷயங்கள்” என்றார் மன்மோகன் சிங்.

இந்த மாநாட்டை ஒட்டிப் பத்திரிகையாளர்களிடம் பேசிய அமைச்சர் ராசா, 2ஜி அலைக்கற்றைகளை ‘ஜிஎஸ்எம்’ ஆபரேட்டர்களுக்கு ஒதுக்கீடு செய்யும் பேச்சே கிடையாது என்றார். ஜிஎஸ்எம் தொழில்நுட்பம் என்பது சிடிஎம்ஏ தொழில்நுட்பத்திற்கு மாற்றாக, பரவலாக வழக்கத்தில் இருக்கும் மொபைல் தொழில் நுட்பம். ஏற்கனவே இருக்கும் நிறுவனங்களுக்கும் புதிதாக வரும் நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான வாய்ப்பு இருக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. “சட்டச் சிக்கல்களின் காரணமாக 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கு ஏல முறையைப் பின்பற்ற முடியாது” என்றார் ராசா.

“சேவை வழங்குபவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தக் கூடாது என்ற முடிவுக்கு வந்த பிறகு, உண்மையிலேயே திறந்த சந்தையை உருவாக்க வேண்டுமெனில், இந்தத் துறையில் புதிதாக நுழைய நினைக்கும் நிறுவனத்திற்கு வெளிப்படையான வழிமுறைகளை வைத்திருக்க வேண்டுமென ஆணையம் நினைக்கிறது. எளிமையாக உரிமம் வழங்கும் முறையும் வெளிப்படையான, திறமையான அலைக்கற்றை நிர்வாக முறையும்தான் இப்போதைய தேவை. இல்லாவிட்டால் திறந்த சந்தை என்பது வெறும் கட்டுக்கதையாகத் தான் இருக்கும்” என்று 2007 ஆகஸ்ட் 28ஆம் தேதி குறிப்பிட்டது ட்ராய்.

இந்தியா டெலிகாம் கான்ஃபரன்ஸ் முடிந்து ஒரு மாதத்திற்குப் பிறகு டிஓடி செயலர் சித்தார்த்த பெஹுரா நிதித்துறைச் செயலருக்கு அதிகாரபூர்வமாக அனுப்பிய கடிதத்தில் 2ஜி அலைக்கற்றைகளை ஏலம்விடுவதில் சட்டப் பிரச்சினை ஏதும் கிடையாது; வெறும் நடைமுறைச் சிக்கல்கள் மட்டுமே இருக்கின்றன என்று குறிப்பிட்டார். ஆனால் அதற்குள் ஏகப்பட்ட சேதாரம் ஏற்பட்டுவிட்டது. விதிமுறைகள் அலைக்கற்றையை ஏலம்விடுவதை ஏற்கவில்லை எனக் குறிப்பிட்டார் பெஹுரா. ஏற்கனவே உரிமம் வைத்திருப்பவர்களை ஏலத்தில் கலந்துகொள்ள அனுமதிக்க முடியாது என்று விதி இருந்தால்கூட, தாமதமாக உரிமம் பெற்றவர்களுக்கென ஏலம் நடத்தக் கூடாது என அந்த விதியை அர்த்தப்படுத்த முடியாது என்கிறார்கள் நிபுணர்கள்.

இதற்குப் பிறகு ட்ராய்க்கும் டிஓடிக்கும் இடையில் வார்த்தை யுத்தம் தொடங்கியது. 2008 ஜனவரி 14ஆம் தேதி ட்ராயின் தலைவர் நிரிபேந்திர மிஸ்ரா (முன்னாள் தொலைத்தொடர்புத் துறைச் செயலர்) பெஹுராவுக்கு ஒரு கடிதம் எழுதினார். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் விதிமுறைகள் பற்றி நீதிமன்றத்திற்குத் தவறான தகவல்களைக் கொடுத்ததாகவும் ட்ராயின் பரிந்துரைகளைத் தவறான பொருள் வரும்படி மேற்கோள் காட்டியதாகவும் அக்கடிதத்தில் குற்றம் சாட்டினார். இதில் மேலும் வெளிப்படையாக இருக்க வேண்டுமென்றார் அவர். இதற்குப் பதிலளித்த பெஹுரா, “நீதிமன்றத்தில் இருக்கும் விவகாரத்தைப் பற்றி இந்தக் கட்டத்தில் கட்டுப்பாட்டாளரோ அரசோ கடிதம் எழுதுவது விரும்பத்தக்கதல்ல” என்று குறிப்பிட்டார். “டிஓடி இம்மாதிரி கடிதம் எழுத ட்ராய் சட்டத்தில் எந்த விதிமுறையும் கிடையாது. டிஓடி செயலருக்கு... தவறான ஆலோசனை வழங்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. கணக்குத் தீர்ப்பதில் இவருக்கு இருக்கும் உற்சாகம் அவருடைய சட்ட அறிவை மழுங்கச் செய்திருக்கிறது” என்று காட்டமாகப் பதிலெழுதினார் ட்ராய் தலைவர்.

தொடக்கத்தில் ஜிஎஸ்எம் சேவை வழங்கும் நிறுவனங்கள் சிடிஎம்ஏ சேவையில் நுழைய முடியாது என்ற விதி இருந்தது. 2007 அக்டோபர் 19ஆம் தேதி வெளியிட்ட ஒரு பத்திரிகை அறிவிப்பின் மூலம் இதை டிஓடி மாற்றியமைத்தது. இதற்காகவே ரூ. 1651 கோடிக்கான டிமாண்ட் டிராஃப்டுடன் தயாராகக் காத்திருந்தது ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ். ஏற்கனவே சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தில் சேவையை வழங்கிவந்த ரிலையன்ஸிற்கு அதே நாளில் ஜிஎஸ்எம் உரிமம் வழங்கப்பட்டது. டிஓடியிடம் 575 விண்ணப்பங்களைக் கொடுத்துவிட்டுக் காத்திருந்த 46 கார்ப்பரேட் குழுமங்களைத் தாண்டி ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு இந்த உரிமம் கிடைத்தது. இந்த 46 நிறுவனங்களில் 2 ரிலையன்ஸின் துணை நிறுவனங்கள் என்று சொல்லப்படுகிறது. இந்நிறுவனங்கள் எதற்கும் உரிமம் வழங்கப்படுவதற்கான அனுமதிக் கடிதம் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் பைசெல், ஐடியா போன்ற நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகவும் ஸ்பைஸ் போன்ற நிறுவனங்கள் ஒன்றரை ஆண்டுகளாகவும் காத்திருக்கின்றன. அந்த வரிசையில் தொலைத்தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத பல ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், சில்லறை விற்பனை நிறுவனங்கள் ஆகியவையும் இருந்தன. ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்திற்கு அடுத்ததாக லாபமடைந்த நிறுவனம் டாடா டெலிகாம். இவை அளித்த உரிமத் தொகையைப் போலப் பல மடங்கு கூடுதலாக உரிமத் தொகை அளிக்க முன்வந்த பல நிறுவனங்களை டிஓடி சட்டை செய்யவேயில்லை.

நுழைவுக் கட்டணமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் செலுத்திய தொகையானது அந்நிறுவனம் திரட்டிய ரூ. 1651 கோடியைவிட மூன்று மடங்கு அதிகம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. உரிமத் தொகையாக டிஓடி வசூலித்த பணமானது ஆறு வருடங்களுக்கு முன்பு நடந்த ஏலத்தின் அடிப்படையில் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது என நிதி அமைச்சகத்தின் 2008 பிப்ரவரி 8ஆம் தேதியிட்ட குறிப்பு சொல்கிறது. அந்த நேரத்தில் மொபைல் சந்தையின் அளவு மிகவும் சிறியது. இந்தக் குறிப்பு குறித்து தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (ஏப்ரல் 21, 2008) உள்படப் பல்வேறு நாளிதழ்களில் எழுதப்பட்ட கட்டுரைகளில் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. அலைக்கற்றைகளின் விலையானது, திருத்தப்பட்ட மொத்த வருவாய் வளர்ச்சியின் (Adjusted Gross Revenue)படி பார்த்தால் வசூலிக்கப்பட்ட தொகையைவிட 3.5 மடங்கு அதிகமாக இருக்குமென நிதியமைச்சகம் அந்தக் குறிப்பில் தெளிவுபடுத்தியிருக்கிறது.

2008ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் யுனிஃபைடு ஆக்ஸஸ் சர்வீஸ் உரிமங்களை விற்றதன் மூலம் அரசுக்கு ரூ. 8,987 கோடி கிடைத்திருக்கிறது. 9 கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 120 உரிமங்கள் இப்படி வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் அரசுக்கு இந்த உரிமங்களை விற்றதன் மூலம் ரூ. 31,453 கோடி கிடைத்திருக்க வேண்டுமெனக் கணக்கிட்டிருக்கிறது நிதியமைச்சகம்.

2ஜி உரிமங்கள் ஒதுக்கப்பட்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு, உரிமங்களை வைத்திருந்த மூன்று இந்திய நிறுவனங்களின் பிரமோட்டர்கள், இவற்றில் இருந்த தங்கள் பங்குகளின் பெரும்பகுதியை விற்க முடிவுசெய்தனர். ஸ்வான் டெலிகாம் தனது 45 சதவீதப் பங்குகளை ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனமான எடிசலாதுக்கு ரூ. 41,000 கோடிக்கு விற்றது. யுனிடெக் வயர்லெஸ் தனது 60 சதவீதப் பங்குகளை நார்வேயின் டெலிநோர் என்ற நிறுவனத்திற்கு ரூ. 6,200 கோடிக்கு விற்றது. டாடா டெலிசர்வீசஸ் தனது 26 சதவீதப் பங்குகளை ஜப்பானைச் சேர்ந்த என்டிடி டோகோமோ நிறுவனத்திற்கு ரூ. 13,230 கோடிக்கு விற்றது. இவற்றில் ஸ்வான், யுனிடெக் வயர்லெஸ் நிறுவனங்களிடம் அலைக்கற்றையுடன் வந்த உரிமத்தைத் தவிர, சொல்லிக்கொள்ளும் படி சொத்து ஏதும் கிடையாது. சாதாரணக் கணக்குப்படி பார்த்தாலே டிஓடி விற்ற ஒவ்வொரு தொலை பேசி உரிமத்தின் மதிப்பும் 6-7 மடங்கு அதிகம் அல்லது ரூ. 10,000 கோடிக்கு அதிகம் என்பது தெரிய வரும். நிதியமைச்சகமே வருவாய் இழப்பைக் குறைத்துத்தான் மதிப்பிட்டிருக்கிறது. இந்த இழப்பு ரூ. 50,000 கோடிக்குக் குறையாமல் இருக்கும்.

இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்த்து இடதுசாரிகள் மத்திய அரசுக்கு அளித்துவந்த ஆதரவை வாபஸ் பெற்று, சமாஜ்வாதிக் கட்சி (எஸ்பி) மத்திய அரசுக்கு ஆதரவு அளிப்பதற்கு முன், அதாவது ஜூன் 2008இல், எஸ்பியின் பொதுச் செயலர் அமர் சிங் பல கடிதங்களைப் பிரதமருக்கு எழுதினார். அவை மீடியாவுக்கு கசியவிடப்பட்டன. பார்தி, வோடஃபோன், ஐடியா போன்ற ஏற்கனவே உள்ள நிறுவனங்களுக்குக் கூடுதல் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததன் மூலம் அரசுக்கு ரூ. 30,000 கோடி வருமான இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்ற ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸின் நிலைப்பாட்டை ஆதரித்து இந்தக் கடிதங்கள் எழுதப்பட்டிருந்தன. பார்தி, வோடஃபோன் உள்ளிட்ட பழைய ஜிஎஸ்எம் ஆபரேட்டர்கள் ரூ. 20,000 மதிப்புள்ள அலைக்கற்றையைப் பதுக்கிவைத்திருப்பதாக ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸின் தலைவர் அனில் அம்பானி மீடியாவிடம் வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். இந்தத் தொகையையும் முன்பே குறிப்பிட்ட ரூ. 50,000 கோடியையும் 2008 ஜனவரிக்குப் பிறகு பங்குகளின் விலை வீழ்ச்சியையும் கணக்கில் கொண்டு பார்த்தால், அரசுக்கு ஏற்பட்டிருக்கும் வருமான இழப்பு ரூ. 1 லட்சம் கோடியைத் தொடும்.

2009இல் பொதுத்தேர்தல்கள் நெருங்கியதும் அஇஅதிமுக, இடது சாரிக் கட்சிகள் உள்ளிட்ட அரசியல் எதிரிகளிடமிருந்தும் மீடியாவின் ஒரு பகுதியினரிடமிருந்தும் ஆ. ராசாவுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்தன. சிபிஎம் 2008 நவம்பரில் வெளியிட்ட ஒரு பத்திரிகைச் செய்தியில், இந்த அலைக்கற்றை ஒதுக்கீடு ஒரு மாபெரும் ஊழல் என்றும் இவ்வளவு பெரிய அளவுக்கு எப்படி ஊழல் நடந்திருக்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு விசாரணையை நடத்த வேண்டும் எனவும் கோரியது. ஆ. ராசா சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் தன் குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் எப்படி உதவினார், டிஓடியின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் பிஎஸ்என்எல்லின் வயர்லஸ் பிராட்பேண்ட் (வைமாக்ஸ்) காண்ட்ராக்டை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு வழங்கும்படி சொன்னார் என்பவை குறித்து இதே காலகட்டத்தில் தி பயனியர் நாளிதழ் கட்டுரைகளை வெளியிட்டது.

இதையடுத்துத் தன் நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வேலைகளில் ஆ. ராசா இறங்கினார். தனக்கு நெருக்கமான பத்திரிகையாளர்களுக்குக் கொடுத்த பேட்டிகளில் (உதாரணமாக, 2008 நவம்பர் 1இல் தி ஹிந்துவின் ஆர். கே. ராதாகிருஷ்ணனுக்கு அளித்த பேட்டி) தனது முடிவுகளுக்குப் பிரதமரும் நிதியமைச்சரும் ஒப்புதல் அளித்ததாகக் குறிப்பிட்டார். தான் “குற்றவாளி” என்று நிரூபிக்கப்பட்டால் பதவி விலகத் தயார் என்றும் அறிவித்தார். ஆ. ராசாவின் தலைவரும் தி.மு.கவின் தலைவருமான மு. கருணாநிதி “ஒரு எளிமையான தலித்தின் வளர்ச்சியைச் சில குறிப்பிட்ட அரசியல் கட்சித் தலைவர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று ஆ. ராசாவுக்கு ஆதரவாகக் களம் இறங்கினார்.

பாரதீய ஜனதாக் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியிலிருந்த காலகட்டத்தில் வகுக்கப்பட்ட 1999ஆம் ஆண்டின் தேசிய டெலிகாம் கொள்கைகளையும் ட்ராயின் பரிந்துரைகளையும் தான் பின்பற்றியிருப்பதாகவும் ராசா குறிப்பிட்டார். ஆனால் உண்மையில் எந்த ஒரு அதிகாரபூர்வமான கொள்கை அறிக்கையிலும் - தேசிய டெலிகாம் கொள்கை அறிக்கை 99 அல்லது ட்ராய் வெளியிட்ட ஆலோசனை அறிக்கைகள் - முதலில் வருபவருக்கு முன்னுரிமை முறை (திசிதிஷி) பின்பற்றப்பட வேண்டுமென்று குறிப்பிடப்படவில்லை.

திசிதிஷி முறையைப் பின்பற்றுவதிலும்கூட டிஓடி வினோதமாக நடந்துகொண்டிருக்கிறது. விண்ணப்பங்களை அளிப்பதற்கான கடைசித் தேதியை அறிவித்தபோது, வெறும் 72 மணிநேர அவகாசமே இருந்தது. இதற்கிடையில் விண்ணப்பங்களை அளிப்பதற்கெனப் புதிய தேதியைத் திடீரென அறிவித்தது. முடிவில் மிகவும் குழப்பமான சூழலில் உரிமங்களை வழங்கியது.

2007 செப்டம்பர் 25 வரை வரும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிக்கப்படும் என்று ஆ. ராசா அறிவிப்பதற்கு முன்பே அக்டோபர் 1 வரை யுஏஎஸ் உரிமங்களுக்காக விண்ணப்பிக்கலாம் என டிஓடி அறிவித்திருந்தது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 1 வரையிலான காலகட்டத்தில் விண்ணப்பித்திருந்த 19 நிறுவனங்கள் விலக்கிவைக்கப்பட்டது ஏன் என்பதற்கான விளக்கம் இதுவரை தரப்படவில்லை.

ட்ராய் ஒருபோதும் திசிதிஷி முறையைப் பரிந்துரைக்கவில்லை என்றும் ட்ராயின் சில பரிந்துரைகளை மட்டும் தேர்வுசெய்து செயல்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார் ட்ராயின் தலைவரான நிரிபேந்திர மிஸ்ரா. இதற்குப் பின்னால் நடந்த விவகாரங்களுக்கெல்லாம் களமமைத்துக்கொடுத்தது ட்ராயின் தலைவர்தான் என டிஓடி குற்றம் சாட்டியது.

உரிமம் பெற்ற நிறுவனங்கள் கண்டிப்பாகத் தங்கள் பங்குகளை விற்காமல் வைத்திருக்க வேண்டிய காலகட்டம் குறித்த விதிமுறைகள் இல்லாதது, உரிமம் பெற்ற நிறுவனங்களின் பங்குகளில் மாற்றம் ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய நடை முறைகள் குறித்த விதிகள், நிபந்தனைகள் ஏதும் கிடையாது என்பது அடுத்த குற்றச்சாட்டு. இம்மாதிரி நிபந்தனைகள் ஏதும் இல்லாததால், உரிமம் கிடைத்த 8-9 மாதங்களில் உரிமங்களைப் பெற்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரும் லாபத்தைப் பெற்றன. சூழலில் போட்டியைக் கொண்டுவருகிறேன் என்ற பெயரிலும் என்பதற்காகவும் பெரிய நிறுவனங்கள் ஒன்றாகக் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஏலம் எடுப்பதை உடைக்கும் நோக்கத்தில் செய்கிறோம் என்ற பெயரிலும் செய்யப்பட்டன. சில நிறுவனங்கள் இந்தத் துறையில் செலுத்தி வரும் ஆதிக்கத்திற்கு எதிராகத் தான் செயலாற்றுவதால், அந்நிறுவனங்கள் தனக்கு எதிராகச் செயல்படுவதாகப் பேட்டிகளில் குற்றம்சாட்டினார் ஆ. ராசா.

டிஓடிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மிகக் கடுமையாக இருப்பதால் மத்தியக் கண்காணிப்பு கமிஷன் (CMC) தற்போது இது குறித்து விசாரித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சித்தார்த்த பெஹுராவிற்கு சிவிசியின் கூடுதல் செயலர் வினீத் கே. குப்தா மார்ச் 28, 2008இல் கடிதம் எழுதினார். இந்தக் கடிதத்தில் பல விரிவான கேள்விகள் அடங்கியுள்ளன.

மேலே சொன்ன விவரங்களையெல்லாம் குறிப்பிட்டு நான் த நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் An unedifying spectrum என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரைக்குப் பதிலெழுதிய ராசாவின் தனிச் செயலர் ஆர். கே. சொந்தாலியா இக்கட்டுரையின் உண்மைத் தன்மையைப் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் இது குப்பைத் தொட்டிக்குப் போக வேண்டியது என்றும் குறிப்பிட்டார். இருந்தும், நான் கட்டுரையில் குறிப்பிட்ட ஒரு தகவலையும் மறுக்கவில்லை.

“2ஜி சேவை 1994ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டுவிட்டது. ஆரம்பகட்ட 2ஜி அலைக்கற்றையை வைத்துத்தான் ஏர்டெல், ஏர்செல், வோடபோன், எஸ்ஸார், ஐடியா, ஸ்பைஸ், எம்டிஎன்எல், பிஎஸ்என்எல் ஆகிய நிறுவனங்கள் சேவை வழங்கி வருகின்றன. ட்ராயின் பரிந்துரைகளின் பேரில் அமைச்சகம் வகுத்த விதிகளின் அடிப்படையில் கூடுதல் அலைக்கற்றை அவற்றிற்கு ஒதுக்கப்பட்டன” என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருந்தார் சொந்தாலியா.

“ஆ. ராசா தொலைத்தொடர்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்றபோது, தொலைத்தொடர்புத் துறையில் ஆரோக்கியமான போட்டி நிலவுவதற்காகவும் 21 வட்டங்களில் 120 உரிமங்களை வழங்குவதன் மூலம் கட்டணங்களைக் குறைக்கும் நோக்கத்துடனும் கிராமப்புறங்களில் தொலைபேசிகளின் அடர்த்தியை அதிகரிக்கும் நோக்கத்துடனும் மேலும் சில ஆபரேட்டர்களுக்கு அனுமதி வழங்கினார். ஏற்கனவே இருந்த விதிகள், நடைமுறைகளின் அடிப்படையிலேயே இந்த நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன” என்றும் குறிப்பிட்டார் சொந்தாலியா.

மேலும் “தற்போது உரிமம் பெற்றிருக்கும் ஆபரேட்டர்களுக்கு 1994இலிருந்து ஒதுக்கீடு முறையில் 2ஜி அலைக்கற்றை உரிமங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்போது அலைக்கற்றையைப் புதிய ஆபரேட்டர்களுக்கு அல்லது உரிமதாரர்களுக்கு ஏலம்விட்டால் அது பாரபட்சமான, சட்டரீதியாக ஒப்புக்கொள்ள முடியாத நடவடிக்கையாகக் கருதப்படும். தவிர ட்ராயும் 2ஜி அலைக்கற்றைகளை ஏலம்விடக்கூடாதெனப் பரிந்துரைத்திருக்கிறது” என்றார்.

“தொலைத்தொடர்புத் துறையில் ஆரோக்கியமான போட்டி நிலவ” உரிமங்களைச் சரியான முறையில் ஆ. ராசா வழங்கவில்லை. பதிலாக, ஏலம்விடும் முறையையே அவர் எதிர்த்தார். 1994இல் உரிமங்கள் சாதாரணமாக வழங்கப்பட்டன என்ற சொந்தாலியாவின் கூற்றும் தவறு. 1995இலும் 2001இலும் 2ஜி அலைவரிசைக்கான ஏலங்கள் இந்தியாவில் நடந்தன. இதில் பல வெளிநாட்டு நிறுவனங்களும் பங்கேற்றன. அலைக்கற்றையைப் புதிய ஆபரேட்டர்களுக்கு அல்லது உரிமதாரர்களுக்கு ஏலம்விடுவதென்பது “பாரபட்சமானது, சட்டத்தின் முன் சரியில்லாதது” என்பது சொந்தாலியாவின் வாதம். இது சட்டத்தை ராசா பொருள்படுத்திக்கொள்வதன் அடிப்படையிலான வாதம். அதனால், இக்கருத்து விவாதத்திற்குரியது.

அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் “சட்டப் பின்புலம் கொண்ட மாண்புமிகு அமைச்சரால் பிரதமருடனும் இந்தியாவின் சொலிஸிட்டர் ஜெனரலுடனும் விரிவாக விவா திக்கப்பட்டது. அதன்படி கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள், விதிகளின் அடிப்படையில் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்யும் முறையையே வேறு வழியில்லாமல் அரசு பின்பற்ற வேண்டியதாயிற்று. இதை நாடாளுமன்ற விவாதங்களின்போது மாண்புமிகு அமைச்சர் விரிவாகத் திரும்பத் திரும்பச் சொல்லியிருக்கிறார்” என்கிறார் சொந்தாலியா.

“பிரதமர் குறிப்பிட்டது என்னவென்றால் விலைமதிப்பற்ற அலைக்கற்றைகளை முழுமையாகவும் முறை யாகவும் ஆபரேட்டர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன்படி வாடிக்கையாளர் அடிப்படையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்யும் முறை இறுக்கமாக்கப்பட்டது. அதனால்தான் அதே மாநாட்டில் (2007 டிசம்பர் 12ஆம் தேதி நடந்த மாநாடு) பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் (ஆ. ராசா) அலைக்கற்றையை ஏலம்விடுவதற்கும் வாடிக்கையாளர்களின் அடிப்படையில் அலைக் கற்றையை முழுமையாகப் பயன்படுத்துவதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று குறிப்பிட்டார். ஆகையால், பிரதமரின் கருத்திலிருந்து விலகிச் செல்வது என்ற கேள்வியே எழவில்லை. இந்நிலையில் அப்படிக் குறிப்பிடுவது, மோசமான இட்டுக்கட்டிச் சொல்லப்படும் கதையாகும்” என்கிறார் சொந்தாலியா.

பிரதமருடனும் சொலிசிட்டர் ஜெனரலுடனும் கலந்தாலோசித்தாலும் அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்ய திசிதிஷி முறையைப் பரிந்துரைப்பது என்பது ஆ. ராசாவின் தனிப்பட்ட முடிவுதான். இது குறித்து டிஓடிக்குப் பிரதமர் அலுவலகத்திலிருந்து பல கேள்விகள் வந்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் அலுவலகத்திலிருக்கும் சில அதிகாரிகளுக்கு இந்த முறை பிடிக்கவில்லை என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது. தவிர, நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்துவிட்டதனாலேயே, கேள்விக்குரிய முடிவை எடுத்ததற்கான பொறுப்பிலிருந்து அமைச்சர் தப்பித்துவிட முடியாது.

“அலைக்கற்றையை ஏலம்விடுவதில் சட்டப் பிரச்சினைகளைவிட நடைமுறைப் பிரச்சினைகளே இருப்பதாக நிதி அமைச்சகம் அனுப்பியதாகச் சொல்லப்படும் குறிப்பு என்பது ஆசிரியரின் கற்பனையே தவிர வேறல்ல” என்கிறார் சொந்தாலியா. “தொலைத்தொடர்புத் துறை அளித்த 120 உரிமங்களுக்கான ஏலத் தொகை ரூ. 31,453 கோடி என்ற முடிவுக்கு வருவதற்கான தகவல்களை (தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் வெளிவந்த கட்டுரையின்) ஆசிரியர் எங்கேயிருந்து பெற்றார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் நாட்டிற்கு வருமான இழப்பு என்ற வாதமே அடிப்படையில்லாதது” என்றும் சொந்தாலியா குறிப்பிடுகிறார்.

அரசுக்கு அதிக வருமானத்தைப் பெறும் வகையில் “திருத்தப்பட்ட மொத்த வருவாயின் அடிப்படையில் அலைக்கற்றைகளுக்கான விலையை இறுக்கமான தன்மையில், அவற்றிற்கு ஒரேதடவையில் கட்டணம் விதிக்கும் முறையை முன்வைத்த” முதலாம் அமைச்சர் ஆ. ராசாதான் என்றும் “அவருக்கு முன்பிருந்த யாரும் அப்படிக் கனவுகூடக் காணாத விஷயம் இது” என்றும் சொல்கிறார் சொந்தாலியா.

3ஜி அலைக்கற்றைகளை ஏற்கனவே உரிமம் பெற்றவர்கள், ஆபரேட்டர்களுக்குத்தான் அளிக்க வேண்டுமென ட்ராய் பரிந்துரைத்திருந்தாலும் உலகளாவிய வகையில் ஏலம்விடப்படும் என ராசா சொன்னதாகச் சொல்கிறார் சொந்தாலியா. இதன் மூலம் அரசுக்கு அதிக வருமானம் கிடைப்பதாகவும் அமைச்சரும் அவரது அமைச்சகமும் வெளிப்படையாகச் செயல்படுவதை இது சுட்டிக்காட்டுவதாகவும் சொல்கிறார் சொந்தாலியா.

2ஜி அலைக்கற்றைகளை ஏலம் விடுவதில் சட்டரீதியான பிரச்சினைகள் இருக்கின்றனவா நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றனவா என்ற விவகாரத்தில் அப்போதைய நிதித் துறைச் செயலர் டி. சுப்பாராவுக்கு 2008 பிப்ரவரி 8ஆம் தேதி டிஓடியின் “அப்ரோச் பேப்பர்” ஒன்றை அனுப்பினார் பெஹுரா. இதன் பிரதிகள் பிரதமரின் முதன்மைச் செயலருக்கும் கேபினட் செயலருக்கும் அனுப்பப்பட்டன. இந்த ஆவணத்தின் இரண்டாம் பத்தியில் “4.4 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஏலம்விடுவது சட்டரீதியாகச் சாத்தியமாக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் சரியாக இருக்காது” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இரட்டைத் தொழில்நுட்பங்களை (ஜிஎஸ்எம், சிடிஎம்ஏ) பயன்படுத்த ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸிற்கு அனுமதி வழங்கும் விவகாரம் ராசாவுக்கு முன்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் காலத்திலேயே ட்ராய்க்குப் பரிந்துரைக்கப்பட்டுவிட்டதாகச் சொந்தாலியா சொல்கிறார். 2007 மே மாதம் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ராசா பதவியேற்றார். 2007 ஆகஸ்டில் இரட்டைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸை ட்ராய் அனுமதித்தது. டெலிகாம் கமிஷன் இது குறித்து ஆராய்ந்தது; அமைச்சர் இதை ஏற்றுக்கொண்டார். ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸும் டாடா டெலி சர்வீசஸும் பயன்படுத்தும் இரட்டைத் தொழில்நுட்பம் குறித்த முடிவுகளில் “எதையும் முன்வைப்பதிலோ ஏற்பதிலோ அமைச்சருக்கு எந்தப் பங்கும் இல்லை” என்கிறார் சொந்தாலியா. டாடாவும் ரிலையன்ஸும்தான் திசிதிஷி முறையில் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்ட முதல் இரண்டு நிறுவனங்கள். யார் இதைப் பரிந்துரைத்தது என்பது ஒருபுறமிருக்கட்டும். ஆனால் இம் முடிவை ஏற்றுச் செயல்படுத்தியதில் தனக்கிருக்கும் பங்கை ராசா மறுக்க முடியாது.

இந்த விவகாரம் குறித்துப் பலர் பிரதமருக்குக் கடிதங்கள் எழுதினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான குருதாஸ் தாஸ்குப்தா 2008 பிப்ரவரி 6ஆம் தேதி ஒரு கடிதத்தைப் பிரதமருக்கு அனுப்பினார். பாரபட்சமற்ற முறையில், முழுமையான விசாரணை நடக்க வேண்டும் என அரசுக்கு வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு இதுவரை பதிலேதும் இல்லை. ‘சிவிசி’, ‘கண்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் ஆஃப் இந்தியா’வின் அறிக்கைகள் வெளியாகும்போது, தனது தவறான முடிவுகளுக்கு ராசா பதில் சொல்லியாக வேண்டியிருக்கும்.

அவருக்கு மேலும் சிக்கல் ஏற்படுத்தும் வகையில் இது குறித்து நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்பட்டிருக்கின்றன. 2009 மே 29ஆம் தேதி ஆ. ராசா இரண்டாம் முறையாகப் பதவியேற்றார். அவர் பதவியேற்று 24 மணிநேரத்திற்குள் நீதியரசர்கள் முகுல் முட்கல், வால்மீகி ஜே மேத்தா ஆகியோரை உள்ளடக்கிய தில்லி உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச் ஒன்று டிஓடிக்கு எதிராகக் கடுமையான கருத்தை வெளியிட்டது. “அலைக்கற்றைகள் சினிமா டிக்கெட்களைப் போல விற்கப்பட்டிருப்பது குறித்து நாங்கள் பெரும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்திருக்கிறோம். பொதுமக்களின் பணமும் மதிப்புமிக்க வளங்களும் இந்த வகையில் வீணடிக்கப்பட்டிருப்பது வினோதமாக இருக்கிறது. இது அதிரவைக்கும் விவகாரம். இந்த ஒட்டுமொத்த நடவடிக்கை குறித்தும் நாங்கள் எங்கள் அதிருப்தியை வெளிப்படுத்துகிறோம். இந்த விசாரணையை ஜூலை 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கிறோம்” என்று குறிப்பிட்டனர் நீதிபதிகள். அலைக்கற்றைகள் மிகவும் வெளிப்படையான முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டன என்று டிஓடியின் வழக்கறிஞர் விகாஸ் சிங் வாதிட்டார். ஆனால் அந்த வாதத்தில் தில்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் சமாதானமடையவில்லை என்பது வெளிப் படையாகத் தெரிந்தது.

டிஓடி “எந்த முறையையும் பின்பற்றாமல், தேவையில்லாத அவசரத்துடன்”உரிமங்கள் வழங்கியதாக 2008இல் அரவிந்த் குப்தா என்பவர் தாக்கல் செய்த மனுவுக்குத்தான் நீதிபதிகள் இப்படிப் பதிலளித்தனர். “ஒரு டெலிகாம் உரிமம் பெறுபவருக்குத் தேவையான வெளிப்படையான வழிமுறைகள், நிபந்தனைகள், கட்டுப்பாடுகள், தகுதிகள் ஆகியவற்றைப் பொதுமக்களின் மதிப்பீட்டிற்கோ பதிலுக்கோ ஆய்வுக்கோ முன்வைக்காமல் பல்வேறு உரிமைதாரர்களுக்கு அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன” என்று அரவிந்த் குப்தா குறிப்பிட்டார். அரசு வேண்டுமென்றே போட்டி ஏல முறையைப் பின்பற்றவில்லையென்றும் டிஓடியில் இருக்கும் செல்வாக்கான சிலருடன் இருக்கும் தொடர்புகளின் காரணமாகச் சில ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் ஒரே இரவில் டெலிகாம் தொழிலதிபர்களாக உருவெடுத்தனர் என்றும் குற்றம்சாட்டினார் அவர்.

சிவிசியும் தன் பிடியை இறுக்குவதாகத் தெரிகிறது. இந்தியாவின் தலைமைக் கண்காணிப்புக் கமிஷனரான ப்ரத்யுஷ் சின்ஹா தி பயோனியர் இதழுக்கு 2009 ஏப்ரல் 25ஆம் தேதி ஒரு பேட்டியளித்தார். “2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் பெரும் விதிமீறல்களும் பூடகமான நடை முறைகளும் நடந்திருப்பதாகக் கண்டறிந்திருக்கிறோம். அடிப்படையான விதிமீறல்கள்; முதலில் வருபவருக்கு முன்னுரிமை அடிப்படையில் உரிமங்கள் வழங்கப்பட்டன; 2001இல் நிர்ணயித்த விலையில் 2008இல் உரிமங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன; ஸ்வான், யுனிடெக் போன்ற நிறுவனங்கள் உரிமங்களைப் பெற்றவுடனேயே தங்கள் பங்குகளை மிக அதிக விலைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்றன” என்று அந்தப் பேட்டியில் பிரத்யுஷ் சின்ஹா குறிப்பிட்டார்.

“தாங்கள் ட்ராயின் விதிமுறைகளையே பின்பற்றியிருப்பதாகத் தொலைத்தொடர்புத் துறை சொல்கிறது. இது தவறு. தனக்குச் சாதகமாக இருக்கும் விதிகளை மட்டும் தேடிப்பிடித்து இத்துறை பின்பற்றியிருக்கிறது. நாங்கள் கண்டறிந்தவற்றைத் தொலைத் தொடர்புத் துறைக்கு அனுப்பி, விளக்கம் கேட்டிருக்கிறோம். இதற்கெல்லாம் யார் பொறுப்பு என்ற விவரத்தையும் கேட்டிருக்கிறோம். 2ஜி அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்த விவகாரத்தில் அவர்களுடைய விளக்கமும் நியாயப்படுத்துதலும் எங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை” என்றும் சின்ஹா குறிப்பிட்டார். யூக வணிகத்திற்கு இடங்கொடுக்காத வகையில் “கண்டிப்பாகத் தொழிலில் இருந்தாக வேண்டிய காலம்” பற்றிய நிபந்தனை விதிக்காததற்காகவும் உடனடியாகப் பங்குகளை விற்க முடியாத வகையில் விதிகளை உரிம ஒப்பந்தத்தில் சேர்க்காததற்காகவும் டிஓடிமீது சின்ஹா குற்றம்சாட்டுகிறார்.

“இதற்குப் பொறுப்பானவர்களைக்” கண்டுபிடிக்கும் பணியில் தங்கள் அமைப்பு இருப்பதாக அவர் சொல்கிறார். சீக்கிரமே, ஆ. ராசா நிறையக் கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டும்.

ஜூன் 16-30 தேதியிட்ட The Caravan இதழில் வெளிவந்த The Kingly Fiddle கட்டுரையின் தமிழாக்கம் இது. இக்கட்டுரையின் ஆசிரியரான பரஞ்சோய் குஹா தாகுர்தா பத்திரிகையின் கன்சல்டிங் எடிட்டர். கடந்த 30 ஆண்டு காலமாக பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் செயல்பட்டு வரும் இவர் தனித்தியங்கும் பத்திரிகையாளர்; கல்வியாளர்.

http://www.kalachuvadu.com/issue-120/page24.asp


No comments:

Post a Comment