Tuesday, February 8, 2011

மாயைகளைக் குலைக்கும் மகாமாயை


கண்ணன்

எங்கிருந்து வருகுவதோ - ஒலி
யாவர் செய்குவதோ?
- பாரதி

இந்திய ஜனநாயகத்தை நிர்ணயிக்கும் ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம் என்று எண்ண வலுவான காரணிகள் உள்ளன. இந்திய ஜனநாயகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் இத்தகையதொரு சூழல், நெருக்கடிநிலைக்குப் பின்னர் உருவாகவில்லை. ஒரு பக்கம் ஊழல் மேல் ஊழலாக அம்பலப்பட்டு நிற்கும் இந்திய ஆளும்வர்க்கம். கடுமையான குரலில் பேசும் உச்ச நீதிமன்றம். தோண்டித் துருவும் ஊடகங்கள். பெரும் சண்டித்தனத்திற்குப் பிறகு இயங்கத் தொடங்கியிருக்கும் புலனாய்வுத் துறைகள்.

நெருக்கடிநிலைக்கும் இன்றைய நெருக்கடிக்கும் சில முக்கிய வேறுபாடுகள் உண்டு. அன்று மக்களுக்கு ஜெயபிரகாஷ் நாராயண் ஒரு விடி வெள்ளியாக அரசியல் வானில் தெரிந்தார். இன்று இந்திய அரசியலில் கறைபடிந்த குள்ளர்களே நிரம்பியுள்ளனர். ‘கையெடுத்துக் கும்பிட’ப் பொற்சுடரான ஆளுமைகளே இல்லை. அன்று தனியார் நிறுவனங்கள் பெரும் சக்தியாக இல்லை. இன்று இந்திய அரசியலையே நிர்ணையிக்கும் அதிகாரமாக அவை உள்ளன. அன்று ஊடகவியலாளர்கள் பலர் நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடும் நம்பிக்கை நட்சத்திரங்களாக இருந்தனர். இன்று ஊழலின் சடையில் பேன்களைப் போலப் பல ஊடக நாயகர்களும் நாயகிகளும் காட்சியளிக்கின்றனர்.

இக்காவியத்தின் நாயகி நீரா ராடியாவின் மீது மத்திய அரசு சந்தேகம்கொண்டு தேச விரோத நடவடிக்கைகளுக்காகவும் வருமான வரி ஏய்ப்புக்காகவும் அவரைக் கண்காணித்தது. வருமான வரித் துறையால் அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களின் கசிவுகள் இந்தியப் பெருமுதலாளிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் பற்றிய புதிய புரிதலை இந்தியர்களிடம் ஏற்படுத்தியுள்ளன. அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊடகவியலாளர்கள் என அதிகாரவர்க்கத்தினர் சதியாடிய அரங்கை - அதிகாரம், பணம், பெண்மை இன்னும் பல வசீகரங்கள் புழங்கிய அரங்கை - உற்றுநோக்கச் சிறிது வெளிச்சத்தை இந்த உரையாடல்கள் பரவவிட்டுள்ளன. ஆ. ராசா மட்டுமல்ல இன்னும் பலர் அமைச்சர்களானதன் பின்னணியில் பெரு முதலாளிகளே உள்ளனர் என்பதும் இந்த அமைச்சர்கள் எந்த எந்தத் தொழிலதிபர்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர் என்பதும் ராடியா பதிவுகளில் அம்பலப்படுகிறது.

இந்த உரையாடல்களை ஒரு இலக்கியப் பிரதியைப் போல வாசிக்க வேண்டும். உரையாடல்களின் சொற்களைவிட உபபிரதிகளே முக்கியமானவை. ராடியாவின் பல தொலைபேசி எண்களிலிருந்து 2007இலும் 2009இலும் பதிவுசெய்யப்பட்ட பல நூறு மணி நேரப் பதிவு அரசிடமும் இன்று உச்ச நீதிமன்றத்தின் வசமும் உள்ளது. இதில் எடிட் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான உரையாடல்கள் இணையத்தில் கிடைக்கின்றன. நாளொரு ஊழலும் பொழுதொரு அம்பலமுமாகப் புதிய புதிய பதிவுகள் வெளிவந்த வண்ணமுள்ளன. கரிசனம் உள்ள அனைவரும் அவற்றை அவசியம் கேட்க வேண்டும். பரிசீலிக்க வேண்டும். (http://www.medianama.com/2010/11/223-2g-spectrum-scam-what-to-read-where/) ஏனெனில் சொற்களைவிடத் தொனி முக்கியம். பல ஊகங்களுக்கும் முடிவுகளுக்கும் இடம்தரும் பின்நவீனத்துவ விளையாட்டாகவும் உங்கள் பரிசீலனையை நீங்கள் அமைத்துக்கொள்ளலாம். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் டாடாவின் முகவரான ராடியாவால் அரசியல்வாதிகளை, கார்ப்பரேட் தலைவர்களை, ஊடகவியலாளர்களை, அதிகாரிகளை எப்படித் தன் வழிக்குக் கொண்டுவர முடிகிறது என்பது முதல் கேள்வி. இந்தக் கேள்விக்கான விடையைக் கிடைக்கப்பெறும் ஆதாரங்களிலிருந்தும் ஆதாரப்பூர்வமான ஊகங்களிலிருந்தும் அவரவர் உருவாக்கிக்கொள்ள வேண்டும். பல விடைகள் தோன்றலாம். ஆனால் அவற்றின் மீது படுபாதகர்களின் சாயைகள் விழுந்துகிடப்பது உறுதி.

இவ்வுரையாடல்களிலிருந்து எழும் மற்றொரு துலக்கமான சித்திரம் - இந்திய ஜனநாயகத்தின் நான்கு தூண்களும் (நாடாளுமன்றம், அதிகாரவர்க்கம், நீதித் துறை, ஊடகத் துறை) எப்படி கார்ப்பரேட் அதிகாரத்திற்கு விலைபோகின்றன என்பது. இன்று இந்த யதார்த்தத்தை இப்பதிவுகள் ஆதாரப்பூர்வமாக நம் முகத்தில் அறைந்துள்ளன. ராடியா பதிவுகளில் ஆறில் ஒரு பங்குகூட இன்னும் வெளிவரவில்லை. இவை முழுமையாக வெளியானால் இந்தியாவின் அதிகாரப் பண்பாடு பற்றிய புதிய வெளிச்சம் நமக்கு நிச்சயம் கிடைக்கும். ஆனால் இதைப் பெருமுதலாளிகள் விரும்பாதது இயல்பு. ஆனால் நமது உச்ச நீதிமன்றமும் இவை பொதுமக்கள் பார்வைக்கு வருவதை விரும்பவில்லை என்றே தோன்றுகிறது. அம்பலப்படும் நிறுவனங்களின் வரிசையில் நீதித் துறையும் இடம் பெறும் என்பது காரணமாக இருக்கலாம். தொலைபேசி உரையாடல்களை அரசு பதிவுசெய்வதைப் பிரதமர் நியாயப்படுத்துகின்றார். ஆனால் அவை மக்கள் பார்வைக்கு வருவதை அவர் விரும்பவில்லை. ஆனால் இப்பதிவுகளின் அடிப்படையில் மன்மோகன் சிங்கின் அரசாங்கம் எந்த நடவடிக்கையும் அவை வெளியாகும்வரை எடுக்கவில்லை என்பது அதன் ‘நேர்மையை’த் தெளிவுபடுத்திவிடுகிறது. அரசின் உட்கிடக்கையை மக்கள் அறிவதை அரசாங்கம் தடைசெய்யவே விரும்பும். நமது ஊடகங்களில் பலவும் இவற்றைத் திட்டமிட்டு மறைக்கின்றன. ‘கச்சையான தகவல்’ என்ற அபத்தக் கருத்தைக் காரணம் காட்டி தாங்கள் அம்பலப்படும் ஒலிப்பதிவுகளை ஒலிபரப்ப மறுக்கின்றனர். ராடியா ஒலிப்பதிவுகள் ளிutறீஷீஷீளீ மற்றும் ளிஜீமீஸீ இதழ்களில் வெளியானதும் அவற்றைச் செய்தியாக்கவும் ஆராயவும் கிட்டத்தட்ட எல்லா நிறுவனமயப்பட்ட ஊடகங்களும் தயங்கின. ஊடகவியலாளர்கள் அம்பலப்பட்டு நிற்கும் செய்தியைப் பரப்ப ஊடகங்கள் விரும்பவில்லை. இந்நிலையில் இணையம் ஒரு மாற்று ஊடகமாகச் செயல்பட்டு நிறுவனமயப்பட்ட ஊடகங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி ராடியா பதிவுகளை எதிர்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது.

அரசியல்வாதிகளைப் பற்றி இந்திய மக்களுக்கு இருக்கும் பொதுக்கருத்து மிகக் கேவலமானது. எனவே ராடியா ஒலிப்பதிவுகளில் அவர்களின் பொதுப் பிம்பத்திற்குப் பாதிப்பு இல்லை, தனிப்பட்ட அரசியல்வாதிகள் பலரின் முகத் திரைகள் கிழிந்துள்ளன என்ற போதிலும். முக்கியமாக அம்பலப்பட்ட விஷயம் கார்ப்பரேட்டுகள் தமது பெரும் பணத்தால் எவ்வாறு ஊடகங்களைக் கட்டுப்படுத்துகின்றன என்பதுதான். இதுவும் அறியப்படாத விஷயம் அல்ல. ஆனால் இப்போதுதான் இதை ஆதாரப்பூர்வமாக நிறுவ அவசியமான சான்றுகள் கிடைத்துள்ளன. இந்திய ஆங்கிலத் தொலைக்காட்சியின் நாயகியான பர்கா தத், கார்ப்பரேட்டுகளுக்கும் காங்கிரசுக்கும் இடையில் தரகராகச் செயல்பட்டு, ஆ. ராசாவைத் தொலைதொடர்புத் துறை அமைச்சராக அறிவிக்கக் காங்கிரஸை நிர்ப்பந்தித்து, காரியம் சாதித்தமையை ராடியா ஒரு உரையாடலில் குறிப்பிடுகிறார். புகழ்பெற்ற பத்திரிகையாளர் வீர் சங்வி தனது வாராந்திரப் பத்திகளை ராடியாவின் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார் என்பது உறுதிப்பட்டுள்ளது. தில்லியின் பற்பல முக்கிய பத்திரிகையாளர்களுடன் ராடியா நெருக்கமாக உரையாடுகிறார். அவர்கள்வழி காரியத்தைச் சாதிக்கிறார். பத்திரிகையாளர்கள் பலர் ராடியாவிடம் விலைபோனமை மீடியா பற்றிய பிம்பத்தை வாசகர்களின் பார்வையில் சிதறடித்துவிட்டது. ஊடக அரங்குகளின் அந்தரங்கங்கள் அம்பலப்பட்டமையே ராடியா விவகாரத்தின் மிக முக்கியமான பின்விளைவு.

http://www.kalachuvadu.com/issue-133/page12.asp


No comments:

Post a Comment