Wednesday, February 9, 2011

கருணாநிதியும் பொய் மூட்டைகளும்

ஈரோடு ஆ.சரவணன்

லஞ்சம், ஊழலுக்கு நான் நெருப்பு என தலைப்பிட்டு 2010ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ந் தேதி முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை அனைத்து ஊடகங்களிலும் டிசம்பர் மாதம் 1ந் தேதி மிகப் பெரிய விளம்பரத்துடன் வெளியாகியுள்ளது. இது ஆண்டின் இறுதியில் மாநில முதல்வர் அடித்த மிகப் பெரிய காமெடி அறிக்கையாகும். அவர் வெளியிட்ட அறிக்கையில் தனது சொத்து பத்துக்களை விலாவாரியாக பட்டியிலிட்டு தான் தவறே செய்யாதவன், தனது உறவுக்காக கூட நான் தவறு செய்யவில்லை என ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழக முதல்வர் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் பல வழிகளில் விமர்சனத்திற்கு உட்பட்டுள்ளது.

karuna_commedy

உண்மையிலேயே தமிழக முதல்வர் ஊழலுக்கு நெருப்பானவரா என்பதை தெளிவுப் படுத்திக் கொள்ள வேண்டும். திமுக ஆட்சிக் காலத்தில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் குறுகிய காலக் கட்டத்தில் பொருளாதார ரீதியாக மிகப் பெரிய முன்னேற்றம் அடைந்தது பலரையும் வியப்புக்குள்ளாக்கியது. ஒரு கட்சியின் மாநில பொருளாளரே தலைமையின் மீது மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தியது திமுகவில் மட்டுமே நடந்தது. 6.11.1972ல் கட்சியிலிருந்து வெளியேறிய எம்.ஜி.ஆர் கருணாநிதியின் மீதும் மற்றும் சில அமைச்சர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரியிடம் மனு கொடுத்தார்கள். இந்த மனுவின் மீதுதான் 2.2.1976ந் தேதி முன்னாள் நீதிபதி சர்க்காரியா தலைமையில் ஒரு விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டது.

karunanidhi_c1

சர்க்காரியா கமிஷனால் வன்மையாக கண்டிக்கப்பட்டவர் தமிழக முதல்வர், கமிஷனில் விசாரணைக்குட்பட்ட விஷயங்களில் முக்கியமானது “ முதல் மந்திரியின் அதிகார துஷ்பிரயோகம் காரணமாக அவருடைய குடும்பத்தினர் வீடுகளையும் சொத்துக்களையும் வாங்கி வந்தார்கள்” என்பதாகும். இந்த குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இருப்பதாக கமிஷன் கருத்து தெரிவித்தது. “வீராணம் திட்டத்தைத் திருவாளர்கள் சத்திய நாராயணா பிரதர்சுக்கு ஒப்படைக்க எடுத்த முடிவு ஒரு பெரிய நிர்வாகத் தவறு என்பதைச் சந்தேகமில்லாமல் கூறலாம்” என சர்க்காரிய தெரிவித்தார். தனது பதவிக் காலத்தில் தவறு செய்யாதவர் என்றும் ஊழலுக்கு தான் நெருப்பு என்பதும் மக்களை ஏமாற்றுகிற செயல்தான். மேலும் இவர் மீது போட்ட வழக்குகளை இந்திரா காந்தி தள்ளுபடி செய்த போது, கமிஷனில் பணியாற்றிய சிபிஐ. ஆதிகாரி திரு லட்சுமி நாராயணன் 2001ம் ஆண்டு மே மாதம் 29ந் தேதி பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் “ கருணாநிதி மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை வாபஸ் பெற்ற இந்திரா காந்தி அரசின் செயல் நியாயமற்றது “ என்று கூறியதும் இவரின் நெருப்புக்கு சான்றாகும்.

அனைத்து ஊடகங்களிலும் தமிழக முதல்வர் விடுத்த செய்தியில் “ என்னுடைய 87 வயதில் பல பொறுப்புகளில் இருந்தாலும் சென்னையில் உள்ள இந்த ஒரு வீட்டைத் தவிர வேறு பெரிய வீடுகளையோ, தோட்டங்களையோ, எஸ்டேட்களையோ விலைக்கு வாங்கியதும் இல்லை, அரசு நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டதும் இல்லை. குறைந்த விலைக்குப் பெற்றுக் கொண்டதும் இல்லை.” என தெரிவித்துள்ளார். ஆனால் 2009ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் தமிழக முதல்வர் தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட ஆவணங்களில் காணப்படும் சொத்துக்கள் எவ்வாறு வந்தது என்பதை தெரிவிக்க மறந்துவிட்டார். தமிழக முதல்வர் தனது பெயரில் சொத்துக்களை மட்டுமே தெரிவித்துவிட்டு, தனது மனைவி, துணைவி, மகன்கள் பெயரில் உள்ள சொத்துகளை தெரிவிக்கவில்லை என்பதும் மிகப் பெரிய நெருடலாகும்.

அஞ்சுகம் பதிப்பகத்தில் ரூ5000க்கு 50 சதவீத பங்குகள் உள்ள நிறுவனத்திற்கு உரிமை பட்ட நிலம் மற்றும் கட்டிடம் உள்ளது. இந்த நிறுவனத்தின் சொத்தில் இவருக்கு எவ்வித பங்கும் கிடையாதா? இந்த சொத்து இருக்கின்ற இடம் கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ளது, இன்று இதன் மதிப்பு பல கோடிகளை தாண்டும் என்பது பலருக்கும் தெரிந்த செய்தியாகும். இந்த நிறுவனத்தில் உள்ள மீதி பங்குகள் 50 சதவீதமும் தனது மனைவி மு.க.தயாளு அம்மாள் பேரில் உள்ளது என்பதையும் பார்த்தால் , தமிழக முதல்வருக்கு அஞ்சுகம் பதிப்பத்தின் சொத்து முழுமையும் அவருடையது இந்த சொத்தை ஏன் அறிக்கையில் தெரிவிக்கவில்லை. இதைப் போலவே தமிழ்க்கனி பதிப்பகம் எனும் பெயரில் உள்ள சொத்துக்கள் ராசாத்தி அம்மாளுக்கு உரிமைப்பட்டதையும் மறைத்துவிட்டார்.

தனது பெயரில் வங்கியில் உள்ள வைப்புத் தொகையை மட்டும் கணக்கு காட்டி விட்டு தயாளு அம்மாள் பெயரில் இந்தியன் வங்கி கோடம்பாக்கத்தில் ரூ12,50,00,000(பனிரெண்டு கோடியே ஐம்பது லட்சம்) வைப்பு தொகை இருப்பதும், திருமதி ராசாத்தி அம்மாள் பெயரில் இந்தியன் வங்கி இராசா அண்ணாமலைபுரம் கிளையில் உள்ள ரூ5,00,00,000 (ஐந்து கோடி) இருப்பதையும் தெரிவிக்கவில்லை. கோபாலபுரத்தில் உள்ள வீட்டின் தன்மையை மட்டும் அந்தக் காலத்தில் ரூ45,000க்கு வாங்கினேன் என கூறிய முதல்வர், ரூ3.02 கோடி மதிப்புள்ள திருமதி இராசாத்தி அம்மாளுக்கு சொந்தமான மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனி வீடு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.

brothers

தமிழக முதல்வர் தனது மகனும் மாநில துணை முதல்வருமான திரு.மு.க.ஸ்டாலின் சொத்துக்களை பற்றி மூச்சுக் கூட விடவில்லை. மு.க.ஸ்டாலின் கணக்குப்படி தனது மனைவியின் பெயரில் சொத்தை விற்றதில் வரவேண்டிய தொகை ரூ14,50,000 என குறிப்பிட்டுள்ளது. இவர் எந்த சொத்தை விற்றார் என்பது இமாலய ரகசியமாகும். வசதியுடன் வாழுகின்றவர் கள் எவரும் தங்களுடைய சொத்துக்களை விற்கமாட்டார்கள் என்பது நியதியாகும். திரு ஸ்டாலின் தற்போது வசிக்கும் சீதாபதி நகர் வேளச்சேரி உள்ள வீடு வாங்குவதற்கு எங்கிருந்து பணம் வந்தது என்பதை தெரிவிப்பார்களா அல்லது தேர்தல் ஆணையத்திடம் கொடுப்பட்ட மனுவில் தனது மகன் மீது உள்ள சொத்துக்களை ஏன் காட்டவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

மதுரையில் ஆட்சிப் புரியும் தனது மகன் மு.க.அழகிரியின் சொத்துக்கள் எவ்வளவு அவைகள் எவ்வாறு வந்தன என்பதற்கு பட்டி மன்றம் வைக்க தமிழக முதல்வர் தயாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாகும். முதலில் மு.க.அழகரி மற்றும் மனைவி மகன் மீது வங்கியில் உள்ள வைப்புத்தொகையை பார்த்தால் மிகவும் மலைத்துவிடுவீர்கள். இந்தியன் வங்கி டிவிஎஸ் நகரில் முக.அழகரி தனது பெயரில் உள்ள வைப்பு தொகை ரூ1,75,00,000 இந்த தொகையுடன் மேலும் ரூ50 லட்சம் இணைத்துள்ளார். தனது மனைவியின் பெயரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ10 லட்சமும், இந்தியன் வங்கி டி.வி.எஸ் நகர் கிளையில் ரூ43,43,095 உள்ளது, தனது மகன் பெயரில் இந்தியன் வங்கி டி.வி.எஸ் நகர் கிளையில் வைப்பு நிதியாக உள்ளது ரூ1,19,01,330 ஆகும். ஆகவே இவர்கள் மூவர் பெயரிலும் உள்ள வைப்புத் தொகை எவ்வாறு வந்தது என்பதை தமிழக முதல்வர் தெரிவித்திருந்தால் ஊழலுக்கு நெருப்பானவர் என்பதை புரிந்து கொள்ளலாம்.

dmk-cartoon_t

மதுரையில் ஆட்சி புரிபவர் வாங்கியுள்ள நிலங்கள் இன்னும் அதிகஅளவில் உள்ளது என்பதையும் மறந்துவிடக் கூடாது. உறவினருக்கு சொத்து சேர்க்க உதவில்லை என்று கூறும் தமிழக முதல்வர் சன் டிவி நெட்ஓர்க் என நிறுவனம் எவ்வாறு துவக்கப்பட்டு வளர்ந்தது. முரசொலி மாறன் தொடாந்த எல்லா கால கட்டத்திலும் 1967 தொடங்கி தொடாந்து மாநிலங்களவை, மக்களவை உறுப்பினராகவும் மத்தியில் அமைச்சராகவும் பதவி வகித்த காரணத்தால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த நிறுவனம் வளர்ந்தது என்றால் அது மிகையாகாது. அதாவது வி.பி.சிங் ஆட்சியில் மத்திய நகர்புற மேம்பாட்டுத் துறை மந்திரியாக இருந்த போது தொழில் அதிபர்கள் பலருக்கு பற்பல காரியங்களை நிறைவேற்றித் தந்து நெருக்கமாக உறவு கொண்டதின் காரணமாக, புருனே சுல்தான் ரஷிய சேட்டிலைட் காரிஜான்டரின் டிரான்ஸ்பாண்டர் ஒன்றை பரிசாகத் தந்திருந்தார், மேற்படி பரிசை பயன்படுத்துவது தெரியாமல் இருந்த டாட்டியாவிடம், தனது நெருக்கத்தின் காரணமாக முரசொலி மாறன் பெற்று சன் டிவி தொடங்கப்பட்டது. 2000ஆவது ஆண்டில் திமுக ஆட்சியிலிருக்கும் போது சுமங்கலி கேபிள் விஷன் துவக்கப்பட்டது. ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஏற்கனவே இருந்து ஹாத்வே என்கின்ற வட இந்திய நிறுவனம் 60 சதவீதம் தன்வசம் வைத்திருந்ததை தட்டி பறித்த கதையும் உண்டு.

தற்போது இந்த நிறுவனத்தில் தமிழக முதல்வரின் பங்கு 20 சதவீதமாகும். ஆனால் சன் டிவியில் எனது பங்குக்காக ரூ100 கோடி கொடுக்கப்பட்டது என்று கூறிய தமிழக முதல்வர் சன் டிவியில் தனது பங்குக்காக கொடுக்கப்பட்ட முதலீடு எவ்வளவு என்பதை குறிப்பிடவில்லை. தற்போது அதாவது இவருக்கு சன் டிவி பங்குகளை கொடுத்த போது நிறுவனத்தில் மொத்த மதிப்பு சுமார் ரூ16,000 கோடியாக இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகவே 20 சதவீத பங்குக்கு கிடைத்த தொகை ரூ 100 கோடி மட்டும்தானா என்பதை தமிழக முதல்வர் விளக்கமளிக்க வேண்டும்.

நன்றி — http://www.tamilhindu.com

No comments:

Post a Comment