வஞ்சனையே! பெண்மையே! மன்மதனாம் பொய்த்தேவே
நெஞ்சகமே! தொல்விதியி னீதியே! பாழுலகே! - பாரதி
இனி இதன் தமிழகப் பரிமாணங்கள். கருணாநிதி குடும்பத்தினரின் சூதுவாதும் தமிழகத்தின் மீது கார்மேகம்போல இன்று படிந்து கிடக்கின்றன. இது அவர்களுக்குப் பணம் கொட்டும் மேகம். நமக்கு இது தமிழக அரசியலின் கோட்பாட்டுச் சாயங்களைக் கரைத்து நம் அரசியல், அதிகார வர்க்கத்தை அம்மணப்படுத்தும் யதார்த்தச் சொரிவாகக் கடவது.
இன்று ஆங்கில ஊடகங்கள் ராடியா விவகாரத்தின் பரிணாமங்களைப் பரவலாக விவாதிக்கின்றன. கறைபடிந்த ஊடகவியலாளர்களும் சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களும் அதிகாரிகளும் - ஏன் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள்கூட - பரிசீலனைக்கு உள்ளாகின்றனர். தமிழகத் தொலைக் காட்சிகளோ மயான மௌனத்துடன் கிடக்கின்றன. (ஜெயா டிவி மட்டும் அம்மாவின் குரலாக ஒலித்து வருகிறது.) இந்த மயான மௌனம் யதேச்சையானது அல்ல. மத்தியில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டு அதில் திமுக பங்கேற்ற சாபம் இது. மாறன் குடும்பம் திட்டமிட்ட போட்டியாளர்களை உரிமம் மறுத்தும் மிரட்டியும் ஒடுக்கியும் தயாரித்த மௌனம். இதன் விளைவாக சுதந்திரமாகச் செய்திகளைத் தரும் அரசியல் கட்சி சாராத தனியார் சேனல் ஒன்றுகூட இல்லாத இழி நிலை இன்று தமிழகத்தில் உள்ளது.
அச்சு ஊடகங்களில் இப்பிரச்சினைகளை விவாதிக்க இருக்கும் இடமும் மட்டானது. ஊடக நிறுவனத்தினர் சிலரை வழக்குகளில் சிக்கவைத்துத் திமுக மட்டுப்படுத்தியுள்ள வெளியில் எஞ்சியிருப்பவை தினமணியில் சில செய்திகள், கார்ட்டூன்கள், கட்டுரைகள், ஆனந்த விகடனில் திருமாவேலன் பக்கங்கள், கல்கியில் வெளிவரும் ஞாநியின் ‘ஓ பக்கங்கள்’, பிறகு ‘புலனாய்வு’ இதழ்களில் ஆந்தை, குருவி, சாமி யார் பேசும் படங்களற்ற கார்ட்டூன் பக்கங்கள். ஆங்கில ஊடகவியலாளர்கள் சிலர் விலை போனமை இந்திய அளவில் செய்தி. தமிழகத்தில் அது செய்தியே அல்ல. நாய் மனிதனைக் கடித்தால் செய்தியே அல்ல. மனிதன் நாயைக் கடித்தால் தானே செய்தி! எனவே நமக்குத் தமிழக ஊடகச் செயல்பாடுகள் பற்றிய விவாதங்கள், பரிசீலனைகள் எவையுமே அவசியம் அல்ல.
வடஇந்தியா பற்றிய திராவிட இயக்க உரையாடல்களின் அடி நாதங்களில் ஒன்று ‘பார்ப்பன - பனியா ஆதிக்கம்’. இதுவே இன்றைய யதார்த்தமும் என்பது தேசிய அரசியல் பற்றிய மேலோட்டமான பார்வையாலேயே அம்பலப்பட்டுவிடும். ராடியா உரையாடல்கள் அறியத்தரும் முக்கியச் செய்திகளில் ஒன்று எவ்வாறு பார்ப்பன - பனியா கூட்டு - ரத்தன் டாடா, அனில் அம்பானி, பர்கா தத், வீர் சங்வி, நீரா ராடியா, சங்கர் ஐயர், தருண் தாஸ் - தொலைத் தொடர்புத் துறை திமுகவுக்குக் கொடுக்கப்படவும் அதிலும் தலித்தான ஆ. ராசாவுக்குக் கிடைக்கவும் சகல முயற்சிகளையும் மேற்கொண்டது என்பது. கொள்ளை லாபம் பார்க்கும் வாய்ப் பின் முன்னர் இனமும் சாதியும் மறைந்த வேகம் கண்டு நாம் நம்பிக்கை கொள்ள வேண்டும்.
ஏன் திமுகவை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள்? திமுக அளவு வலுவான சக்தியான மம்தாவின் திரணமூல் காங்கிரசை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை? மம்தா ஊழல்வாதி அல்ல. அவர் கட்சிக்கும் ஊழல் தொழில் அல்ல. பிற எந்தக் கட்சியுமே ஒரு குடும்பத்தின் சுய நலத்திற்காகத் தேசத்தையே விற்கத் துணிந்ததல்ல எனப் பார்ப்பன - பனியா கூட்டு கணக்கிட்டுள்ளது என்பதை அவர்களின் தேர்வு காட்டுகிறது. கோடிகளைக் கொள்ளையடிப்பதில் யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல எனினும் ஒரு தேசத்தின் மொத்த வருமானத்தின் கால்பகுதியைக் கொள்ளையடிக்க யார் தேர்ந்த கூட்டாளி என்பதே கேள்வி. கூட்டுக்கொள்ளைக்குத் திமுகவே சரியான பங்காளி என்பது அவர்களின் தேர்ந்த முடிவு. அதிலும் ஏன் ராசா? ஏன் தயாநிதி மாறன் கூடாது? தயாநிதி மாறன் தனக்கான செயல்பாடுகளும் திட்டங்களும் கணக்குகளும் கொண்டவர். ஆ. ராசா அரசியல் வலுவோ மக்கள் ஆதரவோ இல்லாதவர். சிறுபான்மைச் சாதியைச் சேர்ந்தவர். கருணாநிதி குடும்பத்திற்காற்றிய சேவகத்தின் மூலம் உயர்ந்தவர். கார்ப்பரேட் மோஸ்தருக்கும் ஆண்டிமுத்து ராசாவுக்கும் இடையில் உறவை இதப்படுத்தவும் கார்ப்பரேட்டுகள் அதிகாரத்தின் சதுரங்காட்டத்தில் வெல்ல எந்தையையும் தாயையும் சிறுமைப்படுத்தவும் அவர்தம் கண்ணை மறைத்துக் காரியத்தைச் சாதிக்கவும் இழி செயல்களுக்கு நாசூக்குகளால் மெருகேற்றவும் கனிமொழி கருணாநிதி இருக்கிறார்.
நீரா ராடியாவிடம் உரையாடும் கனிமொழி கருணாநிதி, தமிழக முதல்வர் பற்றி உருவாக்கும் சித்திரம் தில்லி அரசியலில் அவர் திக்குத் தெரியாத காட்டில் சிக்கியிருப்பவர் போன்றது. தன்னை இந்திய அரசியல் அரங்கில் நிகரற்ற சாணக்கியராகக் கருதிக்கொள்ளும் ஒருவரை இதைவிடச் சிறுமைப்படுத்த முடியாது. பிரதமர் நம் முதலமைச்சருடன் உரையாடினார் என நாளிதழ்களில் இனிப் படிக்கும்போது ‘பிரதமர் மெதுவாகப் பேசுவார். அப்பாவிற்குச் சரியாகக் காது கேட்காது’ என்ற கனிமொழி கருணாநிதியின் கூற்றை நினைத்துக்கொள்ளுங்கள். தாயைப் பற்றி ராடியாவிடம் ‘அவர் உளறிக்கொட்டிக் காரியத்தைக் கெடுத்து விடுவார்’ எனப் பாசத்துடன் சொல்கிறார். கனிமொழி கருணாநிதியின் பிடியில் இருப்பவர் ஆ. ராசா என்பது பார்ப்பன - பனியா கூட்டின் புரிதல். அமைச்சரான பின்னர் ஒரு கட்டத்தில் ஆ. ராசா கோர்ட்டின் தீர்ப்பை மீறி ரத்தன் டாடாவின் ஏவலுக்கு ஏற்பச் செயல்படத் தயங்குகிறார். டாடா ராடியாவிடம் முறையிட ராடியா கனிமொழி கருணாநிதியுடன் பேசிவிட்டு, டாடாவிடம் கூறுகிறார் “கனியிடம் பேசினேன். கனி விபரங்களை ஒரு குறிப்பாக எழுதித் தரச்சொன்னாள். ராசாவை மரியாதையாக நடக்கச் சொல்வதாக உறுதியளித்தாள்!” அமைச்சராவதற்குப் பேரன் தயாநிதிமாறன் தயாளு அம்மாளிடம் 600 கோடி கொடுத்தார் என ராடியா, ரத்தன் டாடாவிடம் தெரிவிக்கிறார். இதனடிப்படையில் அமைச்சர் பதவியைப் பேரனிடமே பேரம்பேசி விற்பவராகக் கருணாநிதி ஊடகங்களில் இன்று எள்ளிநகையாடப்படுகிறார். இந்தச் செய்தியை அல்லது அவதூறை ராடியாவிடம் யாரெல்லாம் கூறியிருக்க முடியும் என ஆதாரப்பூர்வமாக ஊகித்துப் பாருங்கள்.
திமுக / ராசாவின் பிற்காலச் செயல்பாடுகள் பார்ப்பன - பனியா கூட்டின் கணக்கு மிகச் சரியானது என்பதை நிரூபிக்கின்றன. ஆ. ராசாவின் வீட்டையும் நட்பையும் உறவையும் சி.பி.ஐ. சோதனையிட்டது மானக்கேடு அல்ல என உரைக்கும் மானங்கெட்ட தலைமை வேறு எந்தக் கட்சிக்கு உண்டு?
திமுக தலைமை வரித்துக்கொண்ட இந்த நிலைப்பாட்டின் உட்கிடக்கை சிபிஐயின் இரண்டாம் கட்டச் சோதனைகளில் தெளிவுபட்டது. ஊடகங்கள் ஆ. ராசாவை, ‘ஸ்பெக்ட்ரம் ராஜா’ என அழைத்து அவரை மையப்படுத்தியே 2ஜி ஊழலை விவாதித்துவந்தன. சிபிஐ சோதனைகளுக்குப் பிறகு மையம் அவர் மட்டுமல்ல, கனிமொழி கருணாநிதியும் ராசாத்தி அம்மாளும் கூட மையங்கள்தாம் என்பது உறுதிப்பட்டுள்ளது. ஆ. ராசாவைத் தொலைதொடர்புத் துறை அமைச்சராக்குவதில் தளுக்கு ஆங்கிலம் முதல் தற்கொலை மிரட்டல்வரை பிரயோகித்துக் கனிமொழி கருணா நிதியும் ராசாத்தி அம்மாளும் உடன் நின்றதன் காரணி இப்போது வெளிப்பட்டுள்ளது. சிபிஐ சோதனை ஜெகத் கஸ்பரை எட்டி, இந்திய வரலாற்றிலேயே சிபிஐயால் ரெய்ட் செய்யப்பட்ட முதல் கிறிஸ்தவப் பாதிரியார் என்ற சிறப்பை அவருக்கு நல்கியதும் அதிர்ச்சியடைந்த கனிமொழி கருணாநிதி ‘எங்களுக்கு வேண்டியவர்களைக் குறிவைத்து சிபிஐரெய்ட் செய்வது நியாயமல்ல’ என்று அறிக்கைவிட்டார். 2ஜி ஊழலின் மையம் தாங்கள்தாம் என்ற உட்கிடைக்கை வாக்குமூலமாக இவ்வறிக்கையில் வெளிப்பட்டுள்ளது. சிபிஐயை அரசியல் மேலாண்மையின் கீழிருந்து அகற்றித் தனது மேல் பார்வையின் கீழ் உச்ச நீதிமன்றம் கொண்டுவந்து தீவிரமாக ஆராயும்படி உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் அதன் செயல்பாடுகள் மேலும் தீவிரமடையக் கூடும். முதல்வரின் கலக்கம் அவர் முகத்தில் படர்ந்திருக்கிறது. ஊழலுக்கு நீங்கள் நெருப்பா கருணாநிதி?
3
“தொலைதொடர்புத் துறை அமைச்சராக ஆ. ராசா இருப்பதே நல்லது. அவர் கீழ்ப்படிந்து நடப்பார். நான் உறுதியளிக்கிறேன். அவர் கீழ்ப்படிந்து நடப்பார்.”
(It is better to have A. Raja in the Telecom Ministry. He will behave himself. Trust me, he will behave himself.)
- நீரா ராடியா
(இந்தியத் தொழில் துறைக் கட்டமைப்பின் (CII) தலைவர் தருண் தாஸிடம்)
சோனியா காந்தியும் மன்மோகன்சிங்கும் ராடியா விவகாரத்தை எதிர்கொள்ளும் விதம் ஒரு ஜன நாயக நாட்டிற்குப் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்துவது. வரலாறு காணாத ஊழல், அமைச்சரவையின் உருவாக்கத்தில் பெருமுதலாளிகளின் தலையீடு ஆகியன அம்பலப்பட்டிருக்கும் நிலையில் இவர்கள் எதைப் பற்றிப் பேசுகிறார்கள் என்பது முக்கியம். சோனியாவின் எதிர்வினை மன்மோகன் சிங் அப்பழுக்கற்றவர் என்பதுதான். எல்லா ஊடகங்களும் மன்மோகன் சிங்கிற்குக் ‘கைச்சுத்தம்’ சான்றிதழ் வழங்காமல் ஊழல் பற்றிப் பேசுவதே இல்லை. பிரதமர் கோடிகளைக் கொள்ளை அடித்துக் கடல் கடந்து அனுப்பாதவராக இருக்கலாம். ஆனால் அவர் ஆ. ராசாவையும் ஊழல்வாதிகள் பலரையும் அமைச்சரவையில் ஏற்றுக்கொண்டார் என்பது உண்மை. அவர்கள் நாட்டின் மொத்த வருமானத்தில் கால்பகுதியை அடித்து மாற்றியபோது பிரதமர் அறிதுயிலிலிருந்தார். பின்னர் அவருடைய அரசு உச்ச நீதிமன்றம் கண்டிக்கும் வரை ஊழலை விசாரிக்க சிபிஐயை அனுமதிக்கவில்லை. இதில் கூட்டணி தர்மத்தைவிட ‘கார்ப்பரேட்’ தர்மத்தை அவர் கடைபிடித்துள்ளமை ராடியா ஒலிப்பதிவுகளில் தெளிவுபெறுகிறது. பதவிக்காக இவ்வாறு மதிப்பீடுகளைத் துறந்து செயல்படுவதும் ஊழல்தான். ஊழல் என்பது பணத்திற்காகச் சமரசப்படுவது மட்டுமல்ல; பதவிக்காகச் சோரம்போவதும் ஊழல் தான். இவ்வகையில் பிரதமர் ‘கைச்சுத்தம்’ என்ற சோனியாவின் பிரச்சாரம் அபத்தமானது; ஊழல் பற்றிய கொச்சையான புரிதலின் அடிப்படையிலானது.
சில ராடியா ஒலிப்பதிவுகள் பல மாதங்களுக்கு முன்னரே வெளி வந்தன. இப்போது தொடர்ந்து வெளிவருகின்றன. இதைப் பற்றி மன்மோகன் சிங் தொடர்ந்து மௌனம் சாதித்தார். பின்னர் அவர் பேச முடிவுசெய்தபோது அவர் வெளிப்படுத்திய கவலை அவர் பெரு முதலாளிகளின் கைப்பாவை, இந்தியர்களின் பிரதமராகச் செயல்படும் தகுதி கொண்டவர் அல்ல என்பதை உறுதிப்படுத்தியது. ராடியா பதிவுகள் எழுப்பும் ஆட்சியாளர்களில் அறம் இன்மை சார்ந்த எந்தக் கேள்வியையும் அவர் எதிர்கொள்ளவில்லை. இதில் அம்பலப்பட்டு நிற்கும் பெருமுதலாளிகளின் மனக் கவலை நீங்க அவர் பேசினார். டாடா, அம்பானி போன்றோரின் அந்தரங்க உரிமை பாதிக்கப்பட்டுவிட்டதாம்!
இன்று இந்த நாட்டில் தனது தொலைபேசி பதிவுசெய்யப்படுகிறதோ என்ற அச்சம் இல்லாத அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரி கையாளர்கள் இன்னும் பொதுவாழ்வில் செயல்படுபவர்கள் எவரும் இல்லை. இவை பெரும்பாலும் சட்ட விரோதமாகச் செய்யப்படுபவை. இது பற்றிய செய்திகளும் பதிவு செய்யப்படும் எண்களின் பட்டியலும் கண்டனங்களும் ஏற்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இவை எதுவும் நம் பிரதமரைத் தொட்டுச் சலனப்படுத்தவில்லை. ஆனால் டாடா, அம்பானியின் அந்தரங்கம் வெளிப்பட்டதும் அவர்தம் கவலையைப் போக்கப் பொங்கி எழுகிறார் பிரதமர்! உடனே ராடியா ஒலிப்பதிவுகள் எப்படி வெளியாயின என்பதை அறியக் காபினெட் செயலாளரை விசாரிக்க உத்தரவிடுகிறார். ராடியா பதிவுகள்வழி வெளிப்பட்டிருக்கும் ஊழலின் ஊற்றுக்கண்களைப் பரிசீலிக்க அவரிடம் எந்தச் செயல்திட்டமும் இல்லை. என்ன வெட்கக்கேடு இது!
4
“கருணாநிதிக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது . . . அவரிடம் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுகிறாள் மகள் கனி, ஒரு மனைவியும் மிரட்டுகிறாள்” (He has one daughter Kani who will commit suicide and one wife saying I will do this . . .)
- நீரா ராடியா
(தருண் தாஸிடம்)
தமிழ் ஊடகங்கள்வழி உருவாகும் கனிமொழி கருணாநிதியின் பிம்பம் தனிக்கதை. கையூட்டு, உளவுத் துறை இதழியல், அதிகார நெருக்கம் தரும் போதை ஆகியன நம் ஊடகவியலாளர்களை வசப்படுத்தும் முறைகள். நம் ஊடகங்களில் கனிமொழி கருணாநிதியைக் குறிப்பிடும்போது ‘எளிமை’ என்ற சொல் இடம்பெறாமல் இருக்கவே இருக்காது - பேட்டி காணப்படும் அவர்தம் வீடு மாடக் கோபுரமாகவே இருந்தாலும். எளிமை பற்றிய தமிழக ஊடக அன்பர்களின் புரிதல் சிறுபிள்ளைத்தனமானது. பகட்டான ஆடை அணியாமல், பெரியார் குறிப்பிடும் ‘நகை ஸ்டாண்டு’ போலக் காட்சி தராமல், அலங்காரங்களில் திளைக்காமல் இருந்தால் அது ‘எளிமை’. சிபிஐ ரெய்டுகள் தொடங்கும்வரை கனிமொழி கருணாநிதிமீது ஒரு ஈ கூட அமர்ந்து விடாமல் ஊடக அன்பர்கள் அவரைக் காப்பாற்றிய கரிசனம் கண்கலங்கச் செய்வது. இந்த வாரம் அவர்மீது ஒரு ஈ அமர்ந்துவிட்டது என ஒரு வரி இடைப்பிறவரலாக வந்து விட்டால் அடுத்து வரும் இதழ்களைக் கவனமாகப் படிப்பேன். அது ஈ அல்ல வண்ணத்துப் பூச்சிதான், கனிக்கு அழகு சேர்க்கவே அது வந்தமர்ந்தது என்ற விளக்கம் இருப்பது உறுதி.
கனிமொழி கருணாநிதியைப் பற்றிய மற்றொரு பிம்பம் அதிகாரத்திற்கு ஆசைப்படாத அவரது பற்றற்ற நிலை பற்றியது. ராசாத்தி அம்மாளின் அற்புதமான பேட்டி ஆனந்த விகடனில் (17.02.2010) வெளிவந்தது. ‘கனிமொழி ஒரு துறவி’ என்பது அதன் தலைப்பு. இலக்கிய நயத்தோடு எழுதப்பட்ட பேட்டி. அதைப் படித்தால் இதை எழுதியது ராசாத்தி அம்மாளா என்னும் வியப்பு ஏற்படவே செய்யும். (பேட்டி பேசி ஒலிப்பதிவு செய்யப்படுவதல்லவா என அப்பாவித்தனமாகக் கேட்காதீர்கள் நண்பர்களே) அதிகாரத்திற்கு ஆசைப்படாமல் தன்னை உருக்கிக்கொண்டு மக்களுக்காகக் கனிமொழி கருணாநிதி பணியாற்றுவதாக ஒரு தாய்க்கே உரிய பெருமிதத்தோடு சொல்லியிருந்தார் ராசாத்தி அம்மாள். (இந்தப் பேட்டியையும் அதனுடன் வெளிவந்த முழுப் பக்கப் புகைப்படத்தையும் ‘கட்டுடைத்து’ ஒரு கட்டுரையே எழுதலாம்) தமிழக ஊடகங்கள்வழி உருவாகும் பிம்பமும் இதுவே. இந்தப் பின்னணியில் ராடியா டேப்புகளில், தமிழக ஊடகங்கள் கவனப்படுத்தத் தவறிய (பெட்டிச் செய்தியாக வெளியிடப்பட்டிருக்கும்) இந்த உரையாடல் மிக முக்கியமானது.
5
நான் உங்களுக்குப் பண்டு - சாசனஞ்செய்து
நலமாய்த் தந்ததுண்டு
தோன்றலே நீ சொல்லுஞ் சொற்படிச் செய்கிறேன்
பான்மையாக நித்தம் பக்தியாய் உய்கிறேன் - கோபால கிருஷ்ண பாரதியார்
(நந்தன் சரித்திரம்)
திமுகவின் செயல்பாடுகள் ஊடாகவும் ராடியா உரையாடல்கள் வழியும் உருவாகும் ஆ. ராசாவின் தலித் அடையாளம் விரிவான விவாதத்திற்கு உரியது. திமுக தலைவர் கருணாநிதி ‘தலித்’ என்ற சொல்லை அழுத்தமாகப் பயன்படுத்தத் தொடங்கியிருப்பது ஆ. ராசாவை முன்னிட்டுத்தான். இதற்கு முந்தைய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் தயாநிதி மாறன் வெளியேற்றப்பட்டு ஆ. ராசா அமைச்சராக்கப்பட்டபோது இப் பயன்பாடு தொடங்கியது. இந்த ‘தலித்’ சீட்டைக் கருணாநிதிக்கு ‘இலக்கிய’ வட்டத்திலிருந்து தாக்கம் பெற்ற கனிமொழி கருணாநிதி எடுத்துக்கொடுத்திருக்கும் சாத்தியப்பாடு உண்டு.
ஆதவனின் காகித மலர்கள் (1977) நாவலில் அமைச்சர் ஒருவர் தனக்கு உவப்பற்ற வளர்ச்சித் திட்டத்தைக் காலிசெய்யும் பொறுப்பைத் தன் துறை உயர் அதிகாரியிடம் கொடுப்பார். அதிகாரி உரிய காரணிகளைத் தேடிக்கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கும் அவர் மகன் ஒரு உரையாடலில் அங்கு உருவாகிவரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிப் பகிர்ந்துகொள்வார். சுற்றுச்சூழல் பாதிப்பைக் காரணம்காட்டித் திட்டத்தைக் காலிசெய்வார் அதிகாரி. புதிய விழிப்புணர்வுகளைத் தமது சுயலாபத்திற்காக அதிகார வர்க்கம் எப்படிச் சுரண்டும் என்பதை ஆதவன் 30 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிப்படுத்தியது தீர்க்கதரிசனம் தான்.
‘இரண்டாம் தலைமுறை ஊழல்’ அம்பலப்படத் தொடங்கிய பின்னர், 2009இல் ஏற்பட்ட புதிய அமைச்சரவையின் உருவாக்கத்தில் தயாநிதி மாறனை ஒதுக்கிவிட்டு மீண்டும் ஆ. ராசாவையே தொலை தொடர்புத் துறை அமைச்சராக்கத் தலித் அடையாளம் தீவிரமாகப் பயன்படுத்தப்படுகிறது. இம்முறை ராசாவுக்காக வாதாடிய நீரா ராடியாவிடம் இந்தத் துருப்புச் சீட்டை யார் எடுத்துக்கொடுத்திருப்பார்கள் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்.
பின்னர் ஊழல் தெளிவாக அம்பலப்பட்டு ஆ. ராசாவை ஊடகங்கள் குறிவைத்துத் தாக்கத் தொடங்கியதும் கருணாநிதியும் கனிமொழி கருணாநிதியும் அவர்தம் பதவியைக் காப்பாற்ற, விசாரணையைத் தடைசெய்ய, ஊழலை மூடிமறைக்க அவருடைய தலித் அடையாளத்தைக் கூச்சநாச்சமின்றிச் சுரண்டினார்கள். இன்று ஆளும் கூட்டணியில் எவரை விடவும் நெஞ்சுறுதியுடன் ஊடகங்களையும் விசாரணையும் உள்கட்சி சதிகளையும் எதிர்கொள்பவர் ஆ. ராசாதான். கருணாநிதியின் கைத்தடியாகச் செயல்படும் ‘கௌரவம்’ அவருக்கு இப்போது மறுக்கப்பட்டுவிட்டது. உடன் வலம்வந்த கனிமொழி கருணாநிதியை சிபிஐயும் ஊடகங்களும் ஆ. ராசாவைச் சூழும் எந்தத் தருணத்திலும் காணக்கிடைப்பதில்லை. ஆனால் ஆ. ராசா இன்னும் அசரவில்லை.
இத்தகைய ஊக்கம்கொண்ட ஆ. ராசாவைக் கனிமொழி கருணாநிதி, நீரா ராடியா, ரத்தன் டாடா எல்லோரும் கையாளும் விதத்தில் தலித் பற்றிய அவர்கள் பார்வை உள்ளிடையாக வெளிப்படுகிறது. மாறனுக்கு நிகராக அதிகாரப் போட்டியில் ஈடுகொடுக்க முடியாதவராக, விசுவாசம் அற்றவராக அவரைப் பார்க்கிறார் டாடா. அமைச்சரான பின்னர் அவர் நடைமுறைகள் மேம்பட அவருக்குப் பாடம் எடுக்கிறார் ராடியா. தனக்கும் கனிமொழி கருணாநிதிக்கும் அடிபணிந்து நடப்பார் ஆ. ராசா என்று அனைவருக்கும் உறுதியளிக்கிறார் ராடியா. டாடாவுக்குத் தேவைப்படும்போது கனிமொழி கருணாநிதி ஆ. ராசாவுக்கு எச்சரிக்கைவிட ராடியாவிடம் உறுதியளிக்கிறார். கனிமொழி கருணாநிதியும் ராசாத்தியம்மாளும் ஆ. ராசாவையும் பாதுகாத்துக் கரையேற்ற வேண்டிய பொறுப்பையும் வரித்துக் கொண்டுள்ளனர். ஆ. ராசாவைப் பற்றி டாடாவும் ராடியாவும் (பின்புலத்தில் கனிமொழி கருணாநிதியும்) தமக்குள் கிண்டலடிக்கின்றனர். போதிய விசுவாசமற்ற ஆனால் வழிக்குக் கொண்டுவந்துவிடக்கூடியவராக, அடிபணிந்து நடக்கக்கூடியவராக, தம்மால் காப்பாற்றப்படவும் மெருகேற்றப்படவும் வேண்டியவராக அவரைப் பார்க்கின்றனர். அவரோடு விளையாடவும் எச்சரிக்கை விடவும் செய்கின்றனர். தம்மை ஆ. ராசாவின் ‘மேய்ப்பன’£கக் கருதிக்கொள்கின்றனர். இந்த அணுகுமுறையில் அவரது சாதிய அடையாளம் இவர்களின் பிரக்ஞையில் நீக்கமற நிறைந்திருப்பது வெளிப்படுகிறது. ‘தலித்’ என்ற அடையாள அரசியலை இவர்கள் சுரண்டினாலும் இவர்களின் செயல்பாடுகள் வழியும் உரையாடல் வழியும் உருவாகிவரும் ஆ.ராசாவின் பிம்பம் அம்பேத்கர் உருவாக்கிய தலித்தாக அல்ல புதிய ஆண்டைகளிடம் இரக்கத்தைக் கோரும் புதிய நந்தனாகவே உருவாகி வருகிறது. அக்னிகுண்டத்தில் பிரவேசிக்க வைப்பார்களா?
No comments:
Post a Comment