Thursday, July 15, 2010

"AADI"

ஆடி பர்ச்சேஸுக்கு கிளம்புவோமா!

ஆடிமாதத்தில் ஆடிப்பெருக்கு போன்ற முக்கிய விழாக்கள் கொண்டாடப்படும்போது தங்கம்,வெள்ளி, நவரத்தினக்கற்கள், ஆடைகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை மக்கள் வாங்குவர். ஆடிப் பதினெட்டாம் பெருக்கும் பொருள் வாங்குவதற்கு ஏற்ற நாளாகும். இவ்வாண்டு ஆடி 11ம் தேதி (ஜூலை 27) வாஸ்துநாள் வருகிறது. அன்றைய தினம் கட்டுமானப் பணிகளுக்கான பூஜை செய்வது நல்லது. பூப்புனித நீராடல், காதுகுத்துதல் போன்ற மங்கல நிகழ்ச்சிகள் நடத்தவும் இம்மாதத்தில் தடையில்லை. தீபாவளி இன்னும் சில மாதங்களில் வருகிறது. அதற்குரிய புத்தாடைகளை ஆடிக்கழிவில் வாங்குவதால், பணம் மிச்சப்படும். மேலும், "டிவி', பிரிட்ஜ், "ஏசி', வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டுக்குத் தேவைப்படும் மின்சாதனப் பொருட்களுக்கும் ஆடித்தள்ளுபடி வழங்குவது வழக்கம். ஆடிமாதத்தில் சுபநிகழ்வுகள் நடப்பது குறைவு என்பதால் தங்கத்தின் விலையும் ஓரளவு குறைவதற்கு வாய்ப்பிருக்கும். இதைப் பயன்படுத்தி, சுபநிகழ்ச்சிகளுக்கு நகை வாங்கிக் கொள்ளலாம்.

விவசாயத்திற்கு ஏற்ற மாதமும் ஆடி:

"ஆடிப் பட்டம் தேடி விதை' என்பது பழமொழி. நவீன விவசாயத்தில் டிராக்டர் மற்றும் நவீன உழவுக்கருவிகளையும், உரம், பூச்சிமருந்து வகைகளையும் வாங்கி பயனடையலாம். வாகனம் வாங்க வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே அதிகரித் துள்ளது. ஆடிப்பெருக்கு, ஆடிவெள்ளிக் கிழமைகளில் வாகனம் வாங்கலாம். இது தெய்வ வழிபாட்டுக்குரிய மாதம். இம்மாதத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு வாகனங்கள் அதிகமாக புக் ஆகாது என்பதால், டிராவல்ஸ் நிறுவனங்களிடம் வாகனங்கள் எளிதாக வாடகைக்கு கிடைக்கும். இதைப் பயன்படுத்தி சுற்றுலாக்கள் சென்று வர ஏற்பாடு செய்து கொள்ளலாம். குறிப்பாக, அம்மன் ஸ்தலங்களுக்கு ஆன்மிக சுற்றுலா செல்ல ஏற்ற மாதம் இது.

காவிரி தாய்க்கு மரியாதை:

திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்ட மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் பண்டிகை ஆடிப்பெருக்கு. ஆடி18ம் நாளில் இவ்விழா நடத்தப்படும். காவிரியாற்றில் இம்மாதத்தில் தண்ணீர் பெருக்கெடுத்துஓடும். இந்நாளில் மக்கள் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், எலுமிச்சை, கல்கண்டு சாத வகைகளுடன், ஆற்றங்கரைக்குச் செல்வர். வளம் தரும் காவிரித்தாயை வழிபடும் விதமாக காதோலை, கருகமணி போன்ற மங்கலப்பொருட்கள் போன்றவற்றை அர்ப்பணிக்கும் விதமாக ஆற்றில் விடுவர். சிறு குழந்தைகள் ஆற்றுமணலில் சிறுவீடுகட்டியும், சிறுதேர் செய்து நீரில் மிதக்கவிட்டும் விளையாடுவார்கள். உண்ண உணவும், குடிக்க நீரும் தரும் காவிரித் தாய்க்கு நன்றி செலுத்தும் வகையில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.

ஆடிப்பெருக்கன்று நகை வாங்குங்கள்:

ஆடி பதினெட்டாம் பெருக்கினை மிக சுபநாளாகக்கருதுவர். இந்நாளில் துவங்கும் செயல்கள் நன்மை தரும் என்பது நம்பிக்கை. நகை மற்றும் பொருட்களை இந்நாளில் வாங்கினால் மேலும் பொருட்கள் வந்து சேரும். விவசாயிகள் இந்நாளில் ஆடிப்பட்டம் தேடிவிதை என்னும் பழமொழிக் கேற்ப வயலில் விதைப்பது வழக்கம். வீட்டுத் தோட்டத்தில் அவரை, பீர்க்கு, பூசணி விதைகள், பூஜைக்குரிய மலர்ச்செடிகளை இந்த நாளில் நடலாம்.

ஆடியில் செல்ல வேண்டிய கோயில்கள்:

ஆடி மாதத்தில் நீங்கள் சென்று வரவேண்டிய அம்மன் கோயில்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

ஆடி வெள்ளி:

ஆடி வெள்ளிக் கிழமைகளில் காஞ்சிபுரம் காமாட்சியம்மன், மாங்காடு காமாட்சி, திருவேற்காடு கருமாரி, மயிலாப்பூர் முண்டகக் கண்ணி, பாரீஸ் காளிகாம்பாள், திருச்சி திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி, சமயபுரம் மாரியம்மன், மதுரை தெப்பக்குளம் மாரியம்மன், தேனி வீரபாண்டி கவுமாரியம்மன், திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், விருதுநகர் மாவட்டத்திலுள்ள இருக்கன்குடி மாரியம்மன், சங்கரன்கோவில் கோமதியம்மன், பொள்ளாச்சி மாசாணியம்மன் கோயில்களுக்கு சென்று வரலாம்.

ஆடி செவ்வாய்:

ஆடி செவ்வாயில் நாகர்கோவில் அருகிலுள்ள அவ்வையார் கோயில், சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் கோயில், முப்பந்தல் இசக்கியம்மன் கோயில், திருவாரூர் மாவட்டம் இடும்பாவனம் அருகிலுள்ள துளசியார்பட்டி கோயில்களிலுள்ள அவ்வையாரை தரிசித்து வரலாம். ஆடி சனிக்கிழமைகளில் தேனி அருகே குச்சனூரில் உள்ள பிரபலமான சனீஸ்வரர் கோயிலில் விழா நடக்கும்.

ஆடி கிருத்திகை:

முருகப்பெருமானுக்குரிய ஆடிக்கிருத்திகை ஆகஸ்ட் 4ல் கொண்டாடப்படுகிறது. திருத்தணி, திருப்பரங் குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, சோலைமலை, சென்னை கந்தகோட்டம், வடபழநி உள்ளிட்ட அனைத்து முருகன் தலங்களிலும் சுவாமிக்கு விசேஷ அபிஷேகம், பூஜை நடக்கும்.

ஆடி அமாவாசை:

ஆகஸ்ட்9ல், ஆடி அமாவாசை தினமாகும். அன்று ராமேஸ்வரம், கன்னியாகுமரி, வேதாரண்யம் திருமறைநாதர் கோயில், கோடியக்கரை சிவாலயம், தேனி அருகிலுள்ள சுருளி தீர்த்தம், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், நெல்லை மாவட்டம் பாபநாசம் பாபநாசநாதர் கோயில், காரையார் சொரிமுத்தையனார் கோயில் களுக்கு சென்று வருவது நன்மை தரும்.

ஆடிப்பூரம்:

ஆகஸ்ட்12 ல் ஆடிப்பூர திருநாள் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அன்று தேரோட்டம் காண வேண்டும்.மதுரை மீனாட்சியம்மன் உள்ளிட்ட கோயில்களில் அம்பாளுக்கு ருது வைபவம் அன்று எளிய முறையில் நடத்தப்படும். இந்த நாளில் அம்மனையும் வழிபட்டு வரலாம். ஆடிப்பூரத்தன்று ஆண்டாள் பாடிய "வாரணமாயிரம்' பாராயணம் செய்தால் விரைவில் திருமணபாக்கியமும், நன்மக்கட்பேறும் உண்டாகும். பெரிய கோயில்களில் இவ்விழா முளைக்கொட்டு உற்ஸவமாக கொண்டாடப்படும்.

கருட பஞ்சமி:

ஆகஸ்ட்14ல் நிகழும் கருட பஞ்சமியன்று, காஞ்சிபுரம் முத்தீஸ்வரர் கோயில், விழுப்புரம் திருநாவலூர் நாவலேஸ்வரர், கும்பகோணம் அருகில் குடவாசலில் உள்ள கோணே ஸ்வரர், ஸ்ரீரங்கநாதர் கோயிலிலுள்ள அமுதகலச கருடாழ்வார்ஆகியோரைத் தரிசித்து வரலாம்.

ஆடிப்பெருக்கு:

ஆக.3ல் நிகழும் ஆடிப் பெருக்கு நன்னாளில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் காவிரிக்கரைக்கு எழுந்தருளி, காவிரிக்கு சீர் தரும் வைபவத்தை தரிசிக்கலாம். திருச்சி மலைக் கோட்டை தாயுமானசுவாமி, மைசூரு அருகிலுள்ள ஸ்ரீரங்கப் பட்டினம் மற்றும் ரங்கநாதர் கோயில்களுக்கு சென்று வரலாம். மற்றும் உங்கள் குலதெய்வ கோயில்களுக்கு சென்று வருவது வாழ்க்கையைச் செழிப்பாக்கும்.

ஆடித்தபசு:

ஜூலை25ல் நடக்கும் ஆடித்தபசு நாளில், திருநெல்வேலி மாவட்டம் சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கோடரங்குளம் சங்கரநாராயணர் கோயில்களுக்குச் சென்று வரலாம்.

Source: http://www.dinamalar.com/ - 16.7.2010

No comments:

Post a Comment