ஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி!
இந்த வருடம் மே மாதக் கடைசியில் நீங்கள் ஈரோடு நகரையே ஸ்தம்பிக்கச் செய்த மாபெரும் பந்த் பற்றிப் படித்திருக்கலாம்.- ஈரோட்டில் பந்த்: வீடு வீடாக பிட்நோட்டீஸ் (தினமலர், மே 23)
- கோயில் இடிப்பு கண்டித்து வீடுகளில் கறுப்புக் கொடி ஏற்றி பொதுமக்கள் போராட்டம் (தினகரன், மே 23)
- மேம்பாலத்தை எதிர்த்து ஈரோட்டில் இன்று பந்த் (தினமலர், மே 28)
மேம்பாலம் கட்டுவதற்காக ஸ்ரீபெரிய மாரியம்மன் கோயில் முன்மண்டபம் இடிக்கப் படலாம் என்று அரசு அறிவிப்பு வந்ததை எதிர்த்து, இந்தப் போராட்டம் வெடித்தது என்று கூறும் செய்திகள், இதன் பின்னணியில் உள்ள அனைத்து விஷயங்களையும் கூறவில்லை.
ஈரோடு நகரைச் சார்ந்த கனிவை சீனு அவர்கள் நமக்கு அளித்த முழுமையான செய்திகளை, அவரது வார்த்தைகளிலேயே இங்கே தருகிறோம். தொடர்புறுத்திய விஜயபாரதம் இதழுக்கு நன்றி.
அன்று மே 28ம் தேதி. பெரிய மாரியம்மன் கோயில் நிலமீட்பு இயக்கத்தின் சார்பில் கடையடைப்பு மற்றும் பொது வேலைநிறுத்தம் என்ற செய்தி கண்ணில் பட்டது.
’ஆளும் கட்சியே பந்த் நடத்தி எதையும் அசைக்க முடியவில்லை. இதுல இந்து இயக்கம் எல்லாம் பந்த் நடத்த வந்துட்டாங்கப்பா’ என்று எண்ணிக் கொண்டே செய்தித் தாளைப் புரட்டி முடித்து விட்டு டீக்கடையை நோக்கி நடந்தேன். டீக்கடையைப் பார்த்த எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது கடையின் கதவில்… இன்று பந்த் - கடை விடுமுறை என்ற ஸ்டிக்கர் ஒட்டப் பட்டிருந்தது. ஒருவேளை இந்தக் கடைக்காரர் இயக்கத்துக் காரராக அல்லது அம்மன் பக்தராக இருக்கலாம், அதனால் லீவு விட்டிருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு பைக்கில் ஏறி நகரத்துக்குள் சென்றேன். போகிறேன், போகிறேன், போய்க் கொண்டே இருக்கிறேன். சந்து, பொந்து, மூலை, முடுக்கு என எந்தப் பகுதியிலும் ஒரு சிறிய பெட்டிக் கடை கூட திறக்கப் படவில்லை. ஈரோட்டைச் சுற்றி 15 கிமீ. சுற்றளவுக்கு இதே நிலைதான் எனக் கேள்விப் பட்டேன். உள்ளுக்குள் சந்தோஷமாக இருந்தது.
என்னால் இதை நம்ப முடியவில்லை. பெரிய பெரிய அரசியல் கட்சிகளும், ஆட்சியாளர்களும் சாதிக்க முடியாததை ஒரு இந்து ஆன்மிக அமைப்பு சாதித்திருக்கிறது என்பதைக் கண்டு வியந்து போனேன். 120க்கும் மேற்பட்ட வர்த்தக சங்கங்களின் ஆதரவோடு, பஸ் ஸ்டாண்டு கடைகள், காய்கறி மார்க்கெட், மாநில அளவில் கிளை பரப்பியுள்ள பெரிய பெரிய நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த பந்திற்கு ஆதரவு என்றால், அந்த பந்த் நடத்தும் இயக்கம் பற்றித் தெரிந்து கொள்ள யாருக்குத் தான் ஆர்வம் உண்டாகாது?
ஒரு நண்பர் மூலமாக அந்த அமைப்பின் செயலாளர்களில் ஒருவரைச் சந்தித்தேன். கடந்த 1999ஆம் வருடம் மூன்று பேருடன் தொடங்கிய பயணம் இன்று மாபெரும் மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்று இயக்கம் தொடங்கப் பட்டதன் பின்னணியை அவர் விவரித்தார்.
கொங்கு நாட்டின் குலதெய்வமாக விளங்கி, அனைத்து மக்களாலும் போற்றப் படும் தெய்வம் ஸ்ரீ பெரிய மாரியம்மன். தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அம்மன் ஆலயங்களில் இதுவும் ஒன்று. கோயிலின் ஆண்டு வருமானம் சுமார் 45 லட்சம் ரூபாய் ஆகும். ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவின் கடைசி ஒரு வாரத்தில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் இங்கு குவிகிறார்கள். இவ்வளவு சிறப்புப் பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை தென் இந்திய கிறிஸ்தவ சபை (CSI) நிர்வாகம் ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறது. 1999ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும், ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் இந்து முன்னணி அமைப்பினர் பொங்கல் வைக்க முயற்சி செய்வார்கள். அவர்கள் போலீசாரல் கைது செய்யப் பட்டு பிறகு விடுவிக்கப் படுவார்கள். இந்தப் பொங்கல் வைக்கும் போராட்டம் முதலில் 3 பேருடன் துவங்கி, வருடத்திற்கு வருடம் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போனது. 2008ஆம் ஆண்டு இதற்கென ஊர்ப் பிரமுகர்கள் ஒன்றுகூடி ஒரு இயக்கத்தைத் துவக்க முடிவு செய்து “ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் நிலமீட்பு இயக்கம்” என்ற பெயரில் உள்ளூர்ப் பெரியவர்களையும், இந்து இயக்க பொறுப்பாளர்களையும் உள்ளடக்கிய ஒரு குழு உருவாக்கப் பட்டது.
இயக்கத்தினர் அறவழியில் ஆட்சியாளர்களுக்கு மனுகொடுத்தல், ஆர்ப்பாட்டம், ஊர்வலம், பேரணி, பொங்கல் வைக்க முயற்சி, உண்ணாவிரதம் போன்ற போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்தனர். இந்நிலையில் மேம்பாலம் கட்டும் பணிக்காக ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் முன்மண்டபம் இடிக்கப்படும் என்ற செய்தியைக் கேள்விப் பட்டு பொது மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுபான்மையினர் என்ற போர்வையில் அரசு எந்த அளவிற்கு கிறிஸ்தவர்களுக்கு சலுகை காட்டுகிறது என்பதை இந்தச் சம்பவத்தின் மூலம் ஈரோடு இந்து மக்கள் நன்றாகப் புரிந்து கொண்டனர். ”பெரும்பான்மை சமுதாயத்தினர் ஓட்டுப் போட்டு, அதனால் அதிகாரத்தில் அமர்ந்திருக்கும் மாநகரத்தில் உள்ள 45 கவுன்சிலர்கள் (முருகன் என்ற 40வது வார்டு கவுன்சிலரைத் தவிர), மாநகர மேயர், மாவட்ட ஆட்சியர், தொகுதி எம்.எல்.ஏ, எம்.பி உட்பட எவரும் எங்களுக்கு ஆதரவோ, கோரிக்கைகளுக்குப் பரிந்து பேசவோ, காதுகொடுத்துக் கேட்கவோ கூட மறுத்து விட்டனர்” என்று வேதனையுடனும், கோபத்துடனும் நிலமீட்பு இயக்கத்தைச் சேர்ந்த அந்த சகோதரர் தெரிவித்தார்.
இனி யாரை நம்பியும் பயனில்லை. கோயிலை அகற்ற நினைக்கும் இந்த அரசுக்கும், அதிகாரிகளுக்கும் பெரிய அளவில் எதிர்ப்பைக் காட்ட வேண்டும் என முடிவு செய்தது நிலமீட்பு இயக்கம். அதனால் வர்த்தக சங்கங்களின் ஆதரவை நாடி பந்த் நடத்த முடிவு செய்தது. நேர்மையான, உண்மையான, நியாயமான இந்தக் கோரிக்கைகளை அனைத்துத் தரப்பு பொதுமக்களும் ஏற்றுக் கொண்டு, இந்த பந்த் 100 சதவீதம் வெற்றியடைய ஒத்துழைப்பு நல்கியுள்ளனர்.
இந்த நிலமீட்பு இயக்கம் துவங்கப்பட்ட போது 15.11.2008 அன்று தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ. கோவை) மேலாளர் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மூலம் பத்திரிகைகளுக்கு ஒரு விளம்பரம் கொடுக்கப் பட்டது. அந்த விளம்பர நகலில் 12.66 ஏக்கர் சி.எஸ்.ஐ வசம் கிரையமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. 12.66 ஏக்கர் மட்டுமே கிரையம் பெற்றதாகக் கூறும் சி.எஸ்.ஐ. இன்று 27.84 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து ஏகபோகமாக அனுபவித்து வருகிறது.
ஆக்கிரமிப்பு வரலாறு:
1804ஆம் ஆண்டுக்கு முன் பவானி நகரம் தான் ஈரோடு தாலுகாவின் தலைநகரமாக இருந்தது. 1864ஆம் ஆண்டில் தான் ஈரோடு நகரில் மந்தைவெளி பகுதியில் தற்சமயம் ஆர்.டி.ஓ அலுவலகம் அமைந்துள்ள இடத்தை ஒட்டி அரசு அலுவலகங்கள் தோற்றுவிக்கப் பட்டன. அவ்வாறு ஏற்படுத்தப் பட்ட அலுவலகங்களைச் சுற்றியுள்ள 40 ஏக்கர் நிலம் முழுவதும் அன்றைய அன்னிய ஆங்கிலேய கிறிஸ்தவ அதிகாரிகளின் துணை கொண்டு கிறிஸ்தவ மிஷநரிகளால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டது.
இதில் 3.5 விஸ்தீர்ணம் எஸ்.எஃப் 412பி, 584 (தற்சமயம் பிளாக் எண் 3, டி.எஸ்.எண் 3,4) மற்றும் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கான யாத்ரீகர்கள் விடுதி, கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டு சி.எஸ்.ஐ. மருத்துவமனையாகவும், சி.எஸ்.ஐ. வணிக வளாகமாகவும் உள்ளது.
1905ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 12ஆம் தேதி ஆங்கிலேய அரசிடமிருந்து 12.66 ஏக்கர் நிலம், ஈரோடு லண்டன் மிஷன் சொஸைட்டிக்கு ரூ.12-11-0 அணாவுக்கு வருடாந்திர வாடகைக்கு பத்திரம் தயார் செய்யப் பட்டுள்ளது. சுதந்திரத்திற்கு முன் பேனா மூலம் கையில் எழுதும் முறையே வழக்கத்தில் இருந்தது, இதை வைத்து, அதில் இரண்டாம் பக்கத்தில் நடுப்பகுதியில் 12.910 ரூபாய்க்கு விற்கப்பட்டது போல் எழுதப் பட்டுள்ளதாக கிறிஸ்தவர்கள் திரித்து இந்த விஷயத்தை பிரசாரம் செய்கின்றனர்.
சி.எஸ்.ஐ. நிர்வாகத்தினர் எவ்வித ஆவணங்களும் இன்றி கோயில் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து சுதந்திரமாக அனுபவித்து வர, மண்ணின் மக்கள் நீதிக்காக, உரிமையை மீட்க எத்தனை ஆண்டுகள் தான் போராடுவது? எதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா? அந்த எல்லையை நெருங்கிவிட்டது நிலமீட்பு இயக்கம். விரைவில் அரசாங்கம் நிலத்தை மீட்டுக் கொடுக்காவிட்டால், மக்களே எடுத்துக் கொள்வார்கள், அதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
மாரியம்மனுக்காக மக்கள் நடத்தும் இந்தப் போராட்டம் சற்று வித்தியாசமானாலும், வீரியம் மிக்கது என்பது புரிந்தது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்ற பழமொழி நினைவிற்கு வந்தது. ஊர்கூடி தேர் இழுத்தால் நகராதா என்ன? ஊர் கூடிவிட்டது, தேரைப் பிடித்தாகிவிட்டது. தேர் இனி நிலைசேராமல் நடுவழியில் நிற்காது.
அம்மன் கோவில் நிலத்தை மீட்கவும் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்கவும் அனைத்து வேறுபாடுகளையும் மறந்து திரண்டெழுந்து போராடும் ஈரோடு இந்து சகோதர, சகோதரிகளை எண்ணி நமக்குப் பெருமிதம் ஏற்படுகிறது.
அன்னை மகாசக்தி அவர்கள் தோள்களுக்கு வலிமையளிக்கட்டும். அவர்களது போராட்டம் வெல்லட்டும். தமிழகத்தின் பல பகுதிகளில் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள கோயில் நிலங்களை மீட்க, இப்போராட்டம் ஒரு ஆதர்சமாக அமையட்டும்.
http://www.tamilhindu.com/2010/07/erode-hindus-fight-to-save-amman-temple/
No comments:
Post a Comment