Saturday, August 7, 2010

மனச்சோர்வால் வாடும் அரும்புகள் - Buds suffering by depression

இணையத்தில் மேய்ந்து கொண்டிருக்கையில் ஒரு சிறிய கதை கண்ணில் பட்டது. ஒரு சிறுவன், "அப்பா, கொஞ்ச நேரம் என்னுடன் விளையாட வாருங்கள்" என்று தன் தந்தையிடன் கேட்கிறான். தந்தை சொல்கிறார்" எனக்கு உன்னுடன் விளையாட எல்லாம் நேரம் ஒதுக்க முடியாது. என் ஒவ்வொரு நிமிடமும் மதிப்புடையது". சிறுவன் விடவில்லை. "அப்பா! நீங்கள் ஒரு மணி நேரத்திற்கு எவ்வளவு சம்பாதிப்பீர்கள்?". 'உன் தாய் கூட இப்ப்டிக் கேட்டதில்லை. உனக்கு எதற்கு இந்த விவரம்?" என்றார் தந்தை. "தயவு செய்து சொல்லுங்கள்" என்று நச்சரிக்கிறான் மகன். "ஒரு மணி நேரத்தில் நான் இருபது டாலர் சம்பாதிப்பேன்", கர்வத்துடன் சொல்லிவிட்டு தந்தை தன் வேலையில் மூழ்கிவிடுகிறார்.

சில நாட்கள் ஆகின்றன. மகன் மீண்டும் ஒரு நாள் தந்தையிடம் வருகிறான். " அப்பா! இன்று என்னுடன் விளையாட வருவீர்களா?". "நான் அன்றே சொல்லவில்லையா? என் ஒவ்வொரு நிமிடமும் விலை மதிப்புடையது." பதில் வந்தது தந்தையிடம் இருந்து. மகன் என்ன செய்தான் தெரியுமா? தனது உண்டியலைத் திறந்து 20 டாலர்களை எடுத்துத் தந்தையிடம் கொடுத்தான். "அப்பா, உங்களுடன் விளையாட வேண்டும் என்ற ஆசையால், நீங்கள் எனக்கு தினம் செலவுக்குக் கொடுக்கும் பணத்தைச் சேமித்து வருகிறேன். உங்கள் ஒரு மணி நேரத்தை எனக்கு விலைக்குத் தாருங்கள். போதும்" என்றான். தந்தையின் கண்கள் திறந்தன. மகனின் பதில் அவரை அதிர்ச்சியடையச் செய்தது மட்டுமல்ல, அவரை ஒரு பணம் சம்பாதிக்கும் இயந்திரம் என்ற நிலையில் இருந்து ஒரு பாசமான தந்தை ஆக்கியது.

சிந்திக்க வைக்கும் கதை இது. இந்தக் கதை பல வீடுகளில் இன்று உண்மையாகும் நிலை ஏற்பட்டுள்ளது.. ஒவ்வொருவரும் குழந்தை வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் அக்குழந்தை பிறந்தபின் அவர்களை மனித உயிராகக் கருதாமல் நம் விளையாட்டுப்பொம்மையாக நினைக்கிறோம். பணம் கொடுப்பதுடன் பலர் தமது கடமை முடிந்ததாகக் கருதுகிறார்கள். அதனால் இன்றைய குழந்தைகள் இளம் வயதிலேயே மனச்சோர்வுக்கு ஆளாவதை நாம் அறிவது கூட இல்லை. பலநேரங்களில் குழந்தைகளை நாம் குழந்தைகளாக நடத்துவதில்லை.

நாம் எல்லோருமே குழந்தைப்பருவமே மிகவும் இனிய பருவம் என்று கருதுகிறோம். ஓரளவிற்கு அது உண்மையும் கூட. குழந்தைகள் பெரியவர்களைப் போல் பணம், செல்வாக்கு, புகழ் இவற்றுக்காக ஏங்குவதில்லை. யார்மீதாவது கோபம் வந்தால் வந்த வேகத்திலேயே அதை மறந்து மீண்டும் சிரித்துப் பழகும் இயல்பு குழந்தைகளுக்கு உண்டு. குழந்தைகள் தமது வலியைக்கூட மறந்து விளையாடக்கூடியவர்கள். வாழ்வில் பொறுப்புகளும் கவலைகளும் இல்லாமல் பட்டாம்பூச்சி போல் பறந்து திரியும் பருவம் குழந்தைப்பருவமெனப்து நம் நம்பிக்கை. ஆனால் இது முழுவதும் உண்மையில்லை.நாம் சிறு குழந்தையாக இருந்தபொழுது நாம் ஒவ்வொரு தேர்வின் பொழுதும் எவ்வளவு கவலைப் பட்டோம்? நம் நண்பர்களுடன் ஏற்படும் சிறு சண்டைகள் நம்மை எவ்வளவு பாதித்தது? புதிய வகுப்புகளுக்குச் செல்கையில், தந்தை தாயின் வேலை மாற்றம் காரணமாகப் புது ஊர்களுக்குச் சென்று புதுப்பள்ளிகளில் சேர்கையில் நம் மனம் எவ்வளவு படபடப்புக்கு உள்ளாயிற்று? ஒரு குறிப்பிட்ட கோபக்கார ஆசிரியர் அல்லது விஷமத்தனமான சக மாணவனால் நாம் எத்தனை முறை அழுதிருக்கிறோம்? பிறரால் கேலி செய்யப்பட்டால் நாம் எத்தனை மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம்? ஆனால், நாம் நம் குழந்தைகளைப் புரிந்து கொள்வதில்லை. நம் குழந்தைகள் இத்தகைய கஷ்டங்களை அனுபவிக்கையில், நாம் அவர்களுக்குக் கவலையே இருக்காது, அவர்கள் மனச்சோர்வடைய நேரவே நேராது என்று நாமாகவே எப்படி முடிவு செய்கிறோம்?

இன்றைய பரபரப்பான, வேகமான உலகமானது நம் குழந்தைகளின் சுதந்திரத்தை அவர்களிடம் இருந்து பறித்து அவர்கள் மீது சுமைகளை ஏற்றிவிட்டது. உண்மையில் சொல்லப்போனால் ஏறத்தாழ 15, 20 வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட, இன்று குழந்தைகளுக்கு படிப்புச்சுமை கூடியுள்ளது. தாய் தந்தை இருவரும் வேலைக்குச் செல்வதாலும், கூட்டுக்குடும்பங்கள் குறைந்துவிட்டதாலும் குழந்தைகளுக்குக் கிட்டும் அரவணைப்பு குறைந்துவிட்டது. அது மட்டுமல்ல, இன்று பலர் ஒரு குழந்தை போதும் என்று நினைக்கின்றனர் (குறிப்பாக இந்தியாவில்). பணப்புழக்கம் அதிகம் இருப்பதாலும், ஒரே குழந்தை என்ற சலுகையாலும் குழந்தைகளைப் பொத்திப் பொத்தி வளர்க்கின்றனர். அத்தகைய குழந்தைகள் வெளியுலகில் ஒரு சிறு பிரச்னை நேர்ந்தாலும் உடைந்து விடுகின்றனர்.

பெற்றோர் பல நேரம் வீட்டில் இருப்பதில்லை. வீட்டில் இருக்கும் சமயங்களிலும், கணிணி, தொலைக்காட்சி போன்றவை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. பிள்ளைகளுடன் நாம் மனம் விட்டுப் பேசவோ, அவர்கள் எதிர்நோக்கும் சங்கடங்களை உணர்ந்து கொள்ளவோ முயலுவதில்லை என்பது கசப்பான உண்மை. இதனால் பாதை மாறும் குழந்தைகள் பல சமயங்களில் போதைக்கு அடிமையாகி விடுகின்றனர். பல்வேறு காரணங்களால் இன்றைய குழந்தைகளில் பலர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகிறார்கள். சிலர் திருட்டுப்பழக்கம், தவறான நடத்தை, குறைந்த பட்சம் அதிகக் கோபம், அழுகை, படிப்பில் கவனமின்மை, முதலியவை ஏற்பாடுகின்றன. பெற்றோர் என்ன கூறினாலும் எதிர்த்துப் பேசுவது, பள்ளி அல்லது கல்லூரியில் சக மாணவர்களுடன் சண்டை போடுவது அல்லது தனது அறையில் முடங்கிக்கொள்வது, யாருடனும் பேச மறுப்பது, என்று பல விதமான வகைகளில் தம்மை வெளிப்படுத்துகின்றனர்.

பத்தில் ஒரு குழந்தை மனச் சோர்விற்கு ஆளாகின்றது. அதில் பெரும்பாலும் பலருக்கு அதில் இருந்து மீள்வதற்கான உதவிகள் கிடைப்பதில்லை என்கிறது ஒரு ஆய்வு. குறிப்பாக ஒன்பது முதல் பதினைந்து வயது வரையான குழந்தைகள்தான் மனச்சோர்வினால் மிகவும் பாதிக்கப் படுகின்றனர். மனச்சோர்விற்கு ஆளாவதில் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமெல்லாம் இல்லை. அரவணைப்பு, அன்பு, பாசம், நட்பு இவைதான் இந்த நோய்க்கு மருந்தாக இயலும்.

மனச்சோர்வு எந்தெந்தக் காரணங்களால் குழந்தைகளுக்கு உண்டாகின்றது? இதற்கான அறிகுறிகள் என்னென்ன? மனச்சோர்வு வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? மனச்சோர்வு அடைந்துள்ள பிள்ளைகளை அதில் இருந்து மீட்க என்ன வழிவகைகள் உள்ளன என்பன குறித்து இப்பகுதியில் தொடர்ந்து காணலாம்.

http://www.eelanation.com/health/44-ula-nalam/280-child-depression.html

No comments:

Post a Comment