Saturday, August 7, 2010

அரசு கேபிள் நிறுவனத்தின் நிலை என்ன?: ஜெயலலிதா கேள்வி - What is the fate of State Owned cable corporation? Asks Jayalalitha


சென்னை, ஆக. 4:

தமிழக அரசு தொடங்கிய அரசு கேபிள் நிறுவனத்தின் இப்போதைய நிலை என்ன என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சி. உமாசங்கர் போலிச் சான்றிதழை கொடுத்து அரசுப் பணியில் சேர்ந்துவிட்டார் என்று கூறி, அவரை தி.மு.க. அரசு தாற்காலிக பணி நீக்கம் செய்திருக்கிறது. ஐ.ஏ.எஸ். பணியில் சேரும் அதிகாரிகளின் அனைத்து சான்றிதழ்களையும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்தான் சரிபார்க்கிறது. எனவே, உமாசங்கர் குறித்து தி.மு.க. அரசு கூறுவதில் உள்நோக்கம் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது.

மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு என்ற பெயரில் 2007-ல் தொடங்கப்பட்டதுதான் அரசு கேபிள் நிறுவனம். அதன் மேலாண்மை இயக்குநராக உமாசங்கர் நியமிக்கப்பட்டார். அதிநவீன மின்னணு சாதனங்களும், கேபிள்களும் வாங்குவதற்காக அரசு கேபிள் நிறுவனத்தில் ரூ. 400 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் செயல்பாடுகளை தடுத்திடும் வகையில் ஒரு தனியார் கேபிள் நிறுவனத்தினர் செயல்பட்டனர். அரசு நிறுவனத்தின் சொத்துகளை சேதப்படுத்திய அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உமாசங்கர் பரிந்துரை செய்திருக்கிறார்.

எனினும், அரசு கேபிள் நிறுவனத்துக்கு எதிராக செயல்பட்டவர்கள், பிற்காலத்தில் ஆட்சியாளர்களுடன் சமாதானமாகிவிட்டனர். இதனைத் தொடர்ந்து, ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பலிகடா ஆக்கப்பட்டு, அரசு கேபிள் நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டார். அரசு கேபிள் நிறுவனமும் செயலிழந்து விட்டது. கோடிக்கணக்கான ரூபாய் மக்கள் பணமும் விரயமாக்கப்பட்டு விட்டது.

இதற்கு முன்பு 2006-ம் ஆண்டு எல்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உமாசங்கர் நியமனம் செய்யப்பட்டார். அப்போது எல்நெட் என்ற கூட்டு நிறுவனத்தை எல்காட் தொடங்கியது. எல்நெட் நிறுவனம் ஈ.டி.எல். என்ற துணை நிறுவனத்தைத் தொடங்கியது.

ஈ.டி.எல். நிறுவனத்துக்கு ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்து உள்ளது. சென்னைக்கு அருகே பள்ளிக்கரணையில் 25 ஏக்கர் நிலம் வாங்கி, அதில் 17 லட்சம் சதுர அடியில் தகவல் தொழில்நுட்ப பூங்காவை ஈ.டி.எல். நிறுவனம் அமைத்துள்ளது. தமிழக அரசுக்கு சொந்தமான எல்காட் நிறுவனத்தின் துணை நிறுவனம் எனக் கூறிக் கொண்டு, தகவல் தொழில்நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலம் என்ற தகுதியையும் இந்த நிறுவனம் பெற்று விட்டது.

எனினும், இந்த நிறுவனம் பின்னர் தனியார் நிறுவனமாக ஆகிவிட்டது. எல்காட் நிறுவனத்தின் பதிவேடுகளிலிருந்து ஈ.டி.எல். நிறுவனமும், அதன் ரூ.700 கோடி மதிப்புள்ள சொத்தும் காணாமல் போனது குறித்து உமாசங்கர் கேள்வி எழுப்பினார். இதனால் உமாசங்கர் எல்காட் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

ஈ.டி.எல். நிறுவனமும், அதன் ரூ.700 கோடி சொத்தும் என்ன ஆனது? அரசு கேபிள் நிறுவனத்தின் இப்போதைய நிலை என்ன? அரசு கேபிள் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்ட ரூ.400 கோடி மற்றும் நிறுவனத்துக்காக வாங்கப்பட்ட அதிநவீன உபகரணங்கள் என்ன ஆனது, தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் பழிவாங்கப்படுவது ஏன்?

இதற்கெல்லாம் முதல்வர் கருணாநிதி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

Source: http://www.dinamani.com/edition/story.aspx?Title

No comments:

Post a Comment