Sunday, August 8, 2010

Unified Hindu force in Erode - a detailed analysis ஈரோட்டில் ஒன்றுபட்ட இந்து மக்கள் சக்தி: ஒரு விரிவான அலசல்

Dear readers,

This article has been originally published in tamilhindu.com - I have copied the whole content here in my blog just for the sake of keeping the message alive for years if either one might get corrupted under unforeseen circumstances.

This tamilhindu.com is one of the best site that I have ever visited so far. You will find many such articles in this site that will make you to understand how the ruling governments in both and state are trying to stay in power by cheapest means of appeasing the minority community.

Now please read on the article. Thanks to tamilhindu.com for their outstanding support in bringing this issue to light of the people of various walk.

[ஈரோட்டில் மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் பற்றி முன்பு வந்த அறிமுகம் வாசகர்களுக்கு நினைவிருக்கும். அதற்குப் பிறகு போராட்டம் சில வெற்றிகளைப் பெற்று முன் நகர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த இயக்கம், அதற்காக உழைப்பவர்கள், அதன் செயல்முறைகள் ஆகியவற்றை விரிவாக ஆவணப் படுத்தி சேக்கிழான் அவர்கள் இக்கட்டுரையில் எழுதியிருக்கின்றார்.

இதைப் படிக்கும் பிற பகுதி இந்துக்களும், தங்கள் பகுதியில் ஹிந்து விழிப்புணர்வு போராட்டங்களை வடிவமைக்க இக்கட்டுரை உதவக்கூடும் என்ற எண்ணத்துடன் இதனை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறோம் - ஆசிரியர் குழு]

தமிழகத்தின் பகுத்தறிவுப் புரட்சிக்கு வித்திட்ட ஊர் ஈரோடு என்று கழகக் கண்மணிகள் முழங்குவதுண்டு. அதே ஊரில் ஏற்பட்டுள்ள இந்து ஒற்றுமையின் வலிமையான காட்சியும், ஆன்மிக எழுச்சியும் கண்டு தமிழகமே வியப்பில் ஆழ்ந்துள்ளது. ஈரோடு நகரின் காவல் தெய்வமான பெரிய மாரியம்மன் அருளால், அவளது கோயிலை மையமாக வைத்து கிளர்ந்து எழுந்த போராட்டம், இந்துக்களின் உத்வேகத்திற்கு உரமூட்டியுள்ளது.

பெரிய மாரியம்மன் கோயில் நிலமீட்பு போராட்டம், இதுவரை அசையாமல் இருந்த அரசையும் அதிர வைத்துள்ளது. பக்தர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஒப்புக்கொண்டுள்ளது, பல ஆண்டுகளாக இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பக்தர்களுக்கு மகிழ்ச்சியை ஏறபடுத்தியுள்ளது. முதல் கட்டமாக, சர்ச்சைக்குரிய 80 அடி சாலை தொடர்பான குறிப்பிடத்தக்க அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது.

முன்கதைச் சுருக்கம்…

தமிழகத்தின் ஜவுளி நகரங்களில் முதன்மையானது ஈரோடு. முற்காலத்தில் கைத்தறிக்கு பேர்போன நகரமாக இருந்த ஈரோடு, தற்போதும் ஜவுளிச் சந்தைகளில் முதன்மையானதாக உள்ளது. இங்கு பழமையான பல கோயில்கள் இருந்தாலும், ஆண்டுதோறும் பங்குனி மாதம் விழாக் காணும் பெரிய மாரியம்மன் கோயில் தான் நகரின் மையக் கோயிலாக உள்ளது. இங்கு பொங்கல் வைத்து வழிபட ஈரோடு மட்டுமல்லாது சுற்றுப்புற பகுதி மக்களும் பல்லாயிரக் கணக்கில் திரள்வர்.


ஈரோடு அருள்மிகு பெரிய மாரியம்மன்

பல நூற்றாண்டுகள் கடந்த பெரிய மாரியம்மனின் முந்தைய பெயர் அருள்மிகு மந்தைவெளி மாரியம்மன். முற்காலத்தில் கால்நடைகள் மேய்ந்த பெருநிலத்தில் மக்களுக்கு காவலாக விளங்கியவள் என்பதால் இப்பெயர் பெற்ற அம்மன், கால ஓட்டத்தில் ‘பெரிய மாரியம்மன்’ என்று பெயர் பெற்றாள். 1,200 ஆண்டுகளுக்கு முன், கொங்குச் சோழர்களால் பெரிய மாரியம்மனுக்கு கோயில் கட்டப்பட்டதாக ஈரோடு மாநகராட்சி இணையதளத்தில் குறிப்பு காணப்படுகிறது.

பங்குனி விழாவில், பெரிய மாரியம்மன், கச்சேரி வீதி நடு மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் (பெரிய மாரியம்மன் கோயில் வகையறா) விசேஷ ஆராதனைகள் நடக்கும். அந்த சமயத்தில் கண்டிப்பாக மழை பொழியும் என்பது பக்தர்களின் நம்பிக்கை மட்டுமல்ல, உண்மையும் கூட.


ஈரோடு அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில்

வாரந்தோறும் செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும், அமாவாசை நாட்களிலும் இக்கோயிலில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் கூட்டம் அலைமோதும். ஆனால், வழிபட போதிய இடம் இல்லாததால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். கோயிலுக்கு சொந்தமான இடம் கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டதால்- அந்த அநியாயத்தை முந்தைய தலைமுறையினர் கண்டுகொள்ளாமல் விட்டதால்- வந்த வினை இது.

முற்காலத்தில், நாற்பது ஏக்கர் பரப்பில் நடுநாயகமாக இருந்த பிரமாண்டமான கோயில், தற்போது, ‘பிரப் ரோடு’ என்று அழைக்கப்படும் மாநில நெடுஞ்சாலையில், குறுகிய புறம்போக்கு நிலத்தில் அமைந்துள்ளது காலத்தின் கோலம் தான்.

பெரிய மாரியம்மன் கோயிலுக்குப் பின்புறம் 250 மீட்டர் தூரத்தில் அருள்மிகு பிடாரியம்மன் (பட்டத்தம்மன்) கோயில் இருந்தது. அந்தக் கோயிலும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கிறிஸ்தவர்களால அகற்றப்பட்டு, அந்த அம்மன் சிலை தற்போதைய பெரிய மாரியம்மன் கோயிலிலேயே வைக்கப்பட்டது.

விழாக் காலத்தில் 10 லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் வழிபட வரும் இக்கோயிலின் தற்போதைய நிலை வருத்தம் அளிப்பதாக உள்ளது. இதற்கு காரணம், ஆங்கிலேயர் ஆட்சியின் போது, கோவையில் ஆட்சியராக இருந்த கிறிஸ்தவ வெள்ளைய அதிகாரியின் துணையுடன், அம்மன் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டது தான்.

ஆக்கிரமித்த ஆதிக்கவாதிகள்:

1804 - ம் ஆண்டு வரை ஈரோடு வட்டத்தின் தலைநகரமாக பவானி இருந்தது. 1864 -ல் தான் இந்நிலை மாறியது. அப்போது ஈரோட்டில் அரசு அலுவலகங்கள் (கச்சேரி என்று அந்நாளில் அழைப்பர்), மந்தைவெளி மாரியம்மன் கோயில் இருந்த மந்தைவெளியை ஒட்டி அமைக்கப்பட்டன. அப்போது ஆங்கிலேய ஆட்சி நிலவியது. அவர்கள் வைத்தது தான் அந்நாளில் சட்டம். அந்நிலையில், அரசு அலுவலகங்களைச் சுற்றியுள்ள மந்தைவெளிப் பகுதியை, ஆங்கிலேய கிறிஸ்தவ அதிகாரிகளின் துணையுடன் கிறிஸ்தவ மிஷனரிகள் ஆக்கிரமித்தனர். ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் தேவாலயமும் மருத்துவமனையும் கிறிஸ்தவர்களால் கட்டப்பட்டன.


சி.எஸ்.ஐ. கிறிஸ்தவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட கோயில் நிலம்

அப்போது ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் இருந்தது. அதன் ஆட்சியராக அப்போது இருந்தவர் திரு. ஆர்.ஹெச்.ஷிப்லே. அவர்தான் கோயில் நிலத்தை லண்டன் மிஷனரியைச் சேர்ந்த ஆயர் திரு. பாப்ளி என்பவருக்கு தாரை வார்த்துக் கொடுத்தவர். மந்தைவெளி மாரியம்மன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் 12.66 ஏக்கர் நிலம், ஈரோட்டில் நிலைகொண்ட லண்டன் சொசைட்டிக்கு, வெறும் ரூ.12.11.0 அணாவுக்கு வருடாந்திர வாடகைக்கு கையளிக்கப்பட்டது (நாள்: 12.8.1905).

கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்ற பழமொழி அங்கு உண்மையானது. தவிர இதிலும் குழப்பம் உள்ளது. இதே நிலத்தை ரூ. 12 ,910 – க்கு விற்பனை செய்ததாகவும் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது (ஈரோடு சார்பதிவாளர் அலுவலக ஆவணம் எண்: 306 /1907; நாள்: 19.1.1906). இந்தப் பத்திரத்தின் உண்மைத்தன்மை (ஆவணங்களின் நாட்களைக் கவனியுங்கள்) கேள்விக்குறியாகவே உள்ளது.

இடிக்கப்பட்ட கோயில்களில் இருந்த அம்மன் சிலைகள், அதே நிலத்தின் வட பகுதியில், சர்வே எண்: 583-ல் பெருந்துறை சாலையில் புறம்போக்கு நிலத்தில் (தற்போதைய பிரப் ரோடு) வைக்கப்பட்டு வழிபாடுகள் தொடர்ந்தன. அதுவே இன்றைய அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில்.


அம்மன் கோயிலும் ‘பிரப்’ சாலையும் - ஒரு பருந்துப் பார்வை

இக்கோயிலுக்கு மகாகவி பாரதியார் 1921-ல் வந்து தரிசனம் செய்திருக்கிறார். 1931-ல் கோயிலுக்காக நடந்த போராட்டம் காவல்துறையால் நசுக்கப்பட்டது. அப்போது, கோயில் பூசாரி உள்பட நான்கு பக்தர்கள் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.

தென்னிந்திய திருச்சபை (சி.எஸ்.ஐ.) அமைப்பினர் இந்த இடத்தை தங்கள் பெயருக்கு 1965 -ல் பெயர்மாற்றம் செய்துகொண்டனர். (ஈரோடு சார்பதிவாளர் அலுவலக ஆவணம் எண்: 1175 / 1965 ; நாள்: 14.4.1965). அந்த இடத்தில் பள்ளி, கல்லூரிகளையும் நிறுவிக் கொண்டனர்.

இதில் குறிப்பிட வேண்டிய விஷயம், கிறிஸ்தவர்கள் இப்பகுதியில் அனுபோகம் செய்துவரும் நிலப்பகுதியின் பரப்பளவு 27.84 ஏக்கர். (அவர்களிடமுள்ள ஆவணங்களின் படியேகூட 12 .66 ஏக்கர் நிலம் மட்டுமே அவர்களுக்கு உரிமையானது! ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கிய பல கட்டடங்கள் இன்றும் சி.எஸ்.ஐ.கட்டுப்பாட்டிலேயே உள்ளன).

இவ்வாறாக அம்மன் கோயிலுக்கு உரிமையான நிலத்தை ஆங்கிலேய ஆட்சியின்போது ஆக்கிரமித்த கிறிஸ்தவர்கள், அப்பகுதியில் தங்களை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டார்கள். ஈரோட்டின் காவல் தெய்வமான அருள்மிகு பெரிய மாரியம்மனோ, குறுகிய இடத்தில், சிறிய கோயிலில்! ஆண்டுதோறும் விழாக் காலங்களில் அம்மன் பக்தர்கள் இங்கு வந்து வழிபட பல சிரமங்களைச் சந்திக்க வேண்டியுள்ளது.

பக்தர்களின் விழிப்புணர்வு:

தற்போது வணிகவரித்துறை உள்பட பல அரசு அலுவலகங்கள் உள்ள இடம், முந்தைய காலத்தில் அம்மன் கோயிலுக்கு உரியவையாக இருந்தவையே. கிட்டத்தட்ட 40 ஏக்கர் நிலம் கொண்ட அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில், தற்போது, அரசு புறம்போக்கு நிலத்தில், நெருக்கடியான இடத்தில் இருப்பது பக்தர்கள் மனதைப் புண்படுத்தியது. 1993-ல் கோயில் நிலத்தை மீட்க இந்து முன்னணி முயற்சி மேற்கொண்டது.


மாரியம்மன் கோயில் நிலம் மீட்க கையெழுத்து இயக்கம் துவக்கம். (26.12.2008)

இது தொடர்பான கோரிக்கை மனுக்களை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. இதை அடுத்து சென்னை உயர்நீதி மன்றத்தில் ரிட்மனு (20224/1998) தாக்கல் செய்யப்பட்டது. மேற்படி ரிட்மனுவை விசாரித்த நீதிமன்றம், உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஈரோடு மாவட்ட நிர்வாகத்திற்கு ஆணையிட்டது.

அதையடுத்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் திரு.கருத்தையா பாண்டியன் விசாரணை நடத்தினார். 12.66 ஏக்கர் நிலத்துக்கு மட்டுமே தங்களிடம் ஆவணங்கள் இருப்பதாக சி.எஸ்.ஐ. நிர்வாகம் தெரிவித்தது. கோயில் நிலம் சம்பந்தப்பட்ட அனைத்து விபரங்களும் 1414/39 எண்ணுள்ள அரசு கோப்பில் உள்ளதாக இந்து அறநிலையத் துறை பதிவேடுகளில் காணப்படுவதாகவும், அந்த ஆவணம் தற்போது காணப்படவில்லை; அழிக்கப்பட்டிருக்கலாம் என்றும், ஆட்சியர் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

12.66 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்கள் மட்டுமே இருப்பதாக சி.எஸ்.ஐ. நிர்வாகமே கூறியபோதிலும், அதைவிட அதிகமாக 27.84 ஏக்கர் நிலம் எவ்வாறு அவர்களது பயன்பாட்டில் உள்ளது என்று அரசுத் தரப்பில் கேள்வி எழுப்பப்படவே இல்லை. அவர்கள் குறிப்பிட்ட ஆவணங்கள் சரியானவையா என்பதும் ஆராயப்படவில்லை. காணாமல் போன அறநிலையத் துறை ஆவணத்தைக் கண்டறியும் முயற்சியும் செய்யப் படவில்லை. சிறுபான்மையினர் மீதான அச்ச உணர்வு காரணமாக, சி.எஸ்.ஐ. நிர்வாகக் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்களை தனியார் நிலம் என்று ஆட்சியர் தவறான தகவலை நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.

இதிலிருந்து கிறிஸ்தவ ஆக்கிரமிப்பு சக்திகளுக்கு அரசு துணை போனது மக்களுக்கு தெளிவானது. இதையடுத்து, கோயில் நிலத்தில் இந்துக்களின் உரிமையை நிலைநாட்ட, பல போராட்டங்களை இந்து முன்னணி நடத்தியது. ஒவ்வோராண்டும், பங்குனி விழாவின்போது, ஆக்கிரமிப்பு இடத்தில் பொங்கலிட முயன்று இந்து முன்னணியினர் கைதாகி வந்தனர்.


தடையை மீறி இந்து முன்னணியினர் பொங்கல் வைக்க முயன்று போராட்டம்; கைது. (1.4.2009)

இந்து முன்னணியின் தொடர் போராட்டம் மக்களிடையே விழிப்புணர்வைப் பெருக்கிவந்த நேரத்தில், இந்தப் போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்ற புதிய சிந்தனை உதயமானது. எல்லாம் அந்த பெரிய மாரியம்மன் அருள் தான் போலும்!

இதை அடுத்து, 2009-ல் ‘ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோவில் நில மீட்பு இயக்கம்’ துவங்கப்பட்டது. ஈரோடு தொழிலதிபரும், மாவட்ட ஆர்.எஸ்.எஸ். தலைவருமான திரு ஈ.ஆர்.எம்.சந்திரசேகர் தலைமையில், ஈரோட்டின் முக்கிய பிரமுகர்கள் பலர் இணைந்த குழு கோயில் நில மீட்புக்காக அமைக்கப்பட்டது. அதையடுத்து, போராட்டம் பல கட்டங்களாக துடிப்புடன் மேற்கொள்ளப்பட்டது. இன்றும் போராட்டம் தொடர்கிறது.

தொடர் போராட்டங்கள்:

கோயில் நில மீட்பு இயக்கம் துவங்கிய பின், அனைத்துத் தரப்பினரையும் போராட்டத்தில் ஈடுபடச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அம்மன் பக்தர் என்ற முறையில், அனைத்து சமூகத்தினரையும் ஒருங்கிணைக்க அதிக கவனம் கொடுக்கப்பட்டது. அதற்கு பலனும் கிட்டியது.

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவை, செங்குந்தர் மகாஜன சங்கம், பசும்பொன் தேவர் மக்கள் இயக்கம், நாடார் இளைஞர் சங்கம், தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவர் சமூகநலச் சங்கம், செட்டியார் சங்கம், தமிழ்நாடு பிராமணர் சங்கம், உப்பிலிய நாயக்கர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சமூக இயக்கங்கள் கோயில் நில மீட்பு இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

அனைத்து வியாபாரிகள் சங்கம், ஜவுளி வியாபாரிகள் சங்கம், சுமை தூக்குவோர் சங்கம், ஆட்டோ ஓட்டுனர் சங்கங்கள், வாகன பழுது பார்ப்போர் சங்கம் உள்ளிட்ட பல தொழில் சார்ந்த இயக்கங்களும், மக்கள் சக்தி இயக்கம், கிராமப் பூசாரிகள் பேரவை, பாரதீய கிசான் சங்கம், வழக்கறிஞர்கள் சங்கம், அருள்நெறி திருக்கூட்டம், பல்வேறு கோயில் கமிட்டிகள் உள்பட 40 -க்கு மேற்பட்ட அமைப்புகள், அம்மன் கோயில் நிலத்தை மீட்க வேண்டும்; கோயிலைக் காக்க வேண்டும் என்ற நோக்கில் ஓரணியில் சேர்ந்தன.

ஆக்கிரமிப்பில் உள்ள அம்மன் கோயில் நிலங்களை மீட்க கையெழுத்து இயக்கம் துவக்கப்பட்டது (26.12.2008 ). தொடர்ந்து இரண்டு மாதங்கள் நடந்த இந்த இயக்கத்தில், 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்களிடம் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன. இதன் மூலம், மக்களிடையே கோயில் நிலம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஆண்டு பங்குனிப் பெருவிழாவின்போது (1.4.2009), இந்து முன்னணி அமைப்பு, தடையை மீறி ஆக்கிரமிப்பு இடத்தில் பொங்கல் வைத்து வழிபடப்போவதாக அறிவித்தது. இதில் 500 -க்கு மேற்பட்டோர் பங்கேற்று, ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோயிலில் துவங்கி, ஊர்வலமாக வந்து கோயில் அருகே கைதாகினர். ஒவ்வோர் ஆண்டும் பத்து பேர் மட்டுமே இவ்வாறு கைதான நிலையில், இந்த ஆண்டு மக்களின் விழிப்புணர்வு அதிகரித்தது போராட்டத்தில் வெளிப்பட்டது.


மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்க நடந்த பேரணி (9.9.2009)

அடுத்து, ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் பேரணியாகச் சென்று மனு கொடுக்க தீர்மானிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி 9.9.2009 அன்று நடந்தது. பெரிய மாரியம்மன் கோயில் முன்பிருந்து துவங்கிய பேரணியில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. இறுதியில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடம் கோயில் நில மீட்பு குழுவினரால் மனு கொடுக்கப்பட்டது. ஆனால், மனு கண்டுகொள்ளப்படவில்லை.


மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்க நடந்த பேரணி (9.9.2009) பெண்கள் பங்கேற்பு

இதையடுத்து, பக்தர்களின் கோரிக்கையை வலியுறுத்தி, ஈரோடு தொலைபேசி நிலையம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டம் (22.1.2010) நடத்தப்பட்டது. இதில் 400-க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். கோயிலை ஒட்டியுள்ள பல பகுதிகளின் குடியிருப்போர் நலச் சங்கங்களும் இப்போராட்டத்தில் இணைந்தன.

இந்த ஆண்டு பங்குனிப் பெருவிழாவில், கோயில் நில மீட்பு இயக்கமே, தடையை மீறி பொங்கலிடப் போவதாக அறிவித்தது. அனைத்து இந்து இயக்கங்கள் இதற்கு ஆதரவு தெரிவித்தன. 31.3.2010 அன்று கோட்டை ஈஸ்வரன் கோயிலில் துவங்கிய மாபெரும் பேரணியில் 2000-க்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். கோயிலுக்கு சொந்தமான, சி.எஸ்.ஐ. ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தில் பொங்கலிட அவர்கள் முயன்றனர். காவல்துறை தடுத்து, 700-க்கு மேற்பட்டோரை கைது செய்தது.

கொந்தளித்த மக்கள்:

இந்த சமயத்தில், ஈரோடு நகரில் காந்திஜி சாலையும் பிரப் சாலையும் இணையும் இடத்தில் (பன்னீர்செல்வம் பூங்கா) சாலை மேம்பாலம் கட்டும் பணி அறிவிக்கப்பட்டது. இந்த மேம்பாலம் மாரியம்மன் கோயில் முன்புறம் சென்று அருகிலுள்ள சிவரஞ்சனி ஓட்டல் வரை அமையும் என்பதும், மேம்பாலப் பணிக்காக அம்மன் கோயிலின் முன்பகுதி இடிக்கப்படும் என்பதும் தெரிய வந்தன. இதனால் பக்தர்களின் கோபம் அதிகரித்தது. கோயில் இடத்தை மீட்கப் போராடி வரும் நிலையில், தற்போது இருக்கும் கோயிலுக்கே ஆபத்து என்றால் பக்தர்கள் வேடிக்கை பார்ப்பார்களா?


ஈரோடு- காந்திஜி சாலையில் துவங்கிய மேம்பாலப் பணி

இந்த நேரத்தில், ஈரோடு நகரமைப்பு ஆணையத்தால் 1970-ல் வடிவமைக்கப்பட்ட 80- அடி திட்டச் சாலை மக்களுக்கு நினைவில் வந்தது. தற்போது சி.எஸ்.ஐ.ஆக்கிரமிப்பில் உள்ள நிலம் வழியாக செல்லும் இந்த திட்டச் சாலையை சுவரால் தடுத்துவைத்துள்ளனர். இந்த திட்டச் சாலையை திறந்துவிட்டால், மேம்பாலத்துக்கு அவசியமே இருக்காது என்று கோயில் நில மீட்பு இயக்கம் அரசுக்கு தெரிவித்தது.

80 அடி திட்டச் சாலையின் முக்கியத்துவம்

பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு போராட்டத்தால் ஈரோடு மக்களுக்கு கிடைத்த கூடுதல் நன்மையில் ஒன்று 80 அடி திட்டச் சாலை. இந்தச் சாலை அமையுமானால், பிரப் சாலையிலிருந்து ரயில்நிலையச் சாலைக்கு நேரடியாகச் செல்ல முடியும்.


80 அடி திட்டச் சாலை- வரைபடம்

இதனை, 1970-ல் நகரமைப்பு ஆணையம் திட்டமிட்டது. ஏற்கனவே இருந்த பிடாரியம்மன் கோயிலுக்கு செல்லும் வழியே 80 அடி திட்டச் சாலையாகத் திட்டமிடப்பட்டது. இதற்கு 1978-ல் அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஈரோடு நகரமன்றமும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது (எண்: 266/28.2.2007).

தற்போது இச்சாலையின் பாதிப் பகுதி உபயோகத்தில் உள்ளது. சி.எஸ்.ஐ. ஆக்கிரமிப்பில் உள்ள மீதி சாலையின் இறுதியில் சிலுவை நாட்டு தடுக்கப்பட்டுள்ளது. அரசு நினைத்தால், ஆக்கிரமிப்பை ஒரே நாளில் அகற்றி போக்குவரத்தை சீராக்க முடியும். ”நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக பல இந்து கோயில்களை எந்த விசாரணையும் இன்றி அகற்றும் அரசால், அரசு திட்டச் சாலையில் உள்ள இடையூறுகளை அகற்ற முடியாதா?” என்று கேட்கிறார், இந்து முன்னணியின் மாநில துணைத் தலைவரும், கோயில் நில மீட்பு இயக்கத்தின் துணைத் தலைவருமான, திரு. பூசப்பன்

பக்தர்களின் எதிர்ப்பை கண்டுகொள்ளாமல் மேம்பாலப் பணி துவக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்களின் உணர்வை மதிக்காத அரசைக் கண்டித்தும், 80 அடி திட்டச் சாலையைத் திறக்க கோரியும் மாபெரும் ஒருநாள் உண்ணாவிரதம் (13.4.2010) ஈரோடு மின்வாரிய அலுவலகம் முன்பு நடத்தப்பட்டது. இதில், 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். இதில், பல இயக்கங்களும், நகரின் முன்னணி பிரமுகர்களும் கலந்துகொண்டு, பக்தர்களின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்தனர்.


மேம்பாலத்தை எதிர்த்து தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் (22.1.2010).

அடுத்த கட்டமாக, மேம்பாலப் பணியால் கோயில் பாதிக்கப்படக் கூடாது என்று கோரியும், கோயில் நில மீட்பை வலியுறுத்தியும், 80 அடிச் சாலையைத் திறக்க வேண்டியும், கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.


பக்தர்களின் கோரிக்கையை வலியுறுத்தி ஈரோட்டில் கடையடைப்பு (28.5.2010).

இதற்கு ஈரோடு நகரம் செவிசாய்த்தது. 28.5.2010 அன்று ஈரோட்டில் கடையடைப்பு முழுமையாக (நூறு சதவீதம்) நடைபெற்றது. ஆட்டோ ஓட்டுனர்களும் இதில் பங்கேற்றனர். வெற்றிகரமாக நடந்த கடையடைப்பு, பக்தர்களுக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது.

அன்று (28.5.2010) காலை, கோட்டை ஈஸ்வரன் கோயிலில் துவங்கிய 1008 பால்குட ஊர்வலத்தில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று, கோயில் நிலத்தை மீட்க சபதம் ஏற்றனர். ‘பிரப் சாலையில் கட்டப்படும் மேம்பாலத்தால் கோயிலுக்கு எந்த இடையூறும் வராது; கோயிலின் எப்பகுதியும் இடிக்கப்படாது’ என்று மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார். ஆயினும், கோயில் நில விவகாரத்தில் அரசு மௌனம் சாதித்தது.


கடையடைப்பு நடந்த நாளில் 1008 பால்குட ஊர்வலம் (28.5.2010)

எனவே, பெரிய மாரியம்மன் கோயில் நிலத்தை மீட்க, காலவரையற்ற (சாகும் வரை) உண்ணாவிரதம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது. 8.7.2010 அன்று கோயில் அருகே உண்ணாவிரதம் இருக்க 200-க்கு மேற்பட்டோர் திரண்டனர். காவல்துறை அனுமதி மறுத்தது.


காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கிய வீரர்கள் (8.7.2010).

தடையை மீறி உண்ணாவிரதம் இருந்த 30 பக்தர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் நீதிமன்றக் காவலில் கோவை மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். அங்கும் அவர்கள் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்ததால், கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப் பட்டனர். அங்கும் உண்ணாவிரதம் தொடர்ந்தது.


உண்ணாவிரதம் துவக்கிய வீரர்கள் கைது (8.7.2010).

உண்ணாவிரதம் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, மறுநாள் (9.7.2010) ஈரோடு மாவட்டம் முழுவதும், பெருந்துறை, கோபி, புளியம்பட்டி, சத்தியமங்கலம், அந்தியூர், பவானி ஆகிய இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு பகுதியிலும் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.

கோயில் நிலத்தை மீட்க வலியுறுத்தி, 10.7.2010 அன்று ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பு மாபெரும் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இதில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர். மொத்தம் 2000 பேர் பங்கேற்று அரசுக்கு எதிராக முழங்கினர். சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 700 பேர் மட்டும் கைது செய்யப்பட்டனர்.


போராட்டத்தின் உச்சகட்டமாக ஈரோடு அரசு மருத்துவமனை அருகே நடந்த சாலை மறியல் (10.7.2010)

உண்ணாவிரதம், சாலை மறியலால் ஈரோட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை உன்னிப்பாகக் கவனித்த அரசு, வழிக்கு வந்தது. மாவட்ட நிர்வாகத்திலிருந்து கோயில் நில மீட்பு இயக்கத்தினர் தொடர்பு கொள்ளப்பட்டனர். கோயில் நில மீட்பு இயக்கத்தினர், அதன் தலைவர் திரு ஈ.ஆர்.எம்.சந்திரசேகர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் திரு. சுடலைக்கண்ணனை நேரில் சந்தித்தனர் (ஜூலை 10 இரவு). ஆட்சியரால் சில உறுதிமொழிகள் அளிக்கப்பட்டன. 80 அடி சாலை, ஆக்கிரமிப்பில் உள்ள நிலம் மீட்பு தொடர்பாக 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் அன்றிரவே விடுவிக்கப்பட்டனர்.


விடுதலையான உண்ணாவிரத வீரர்களுக்கு வரவேற்பு (13.7.2010).

மாவட்ட ஆட்சியரின் உறுதிமொழியை அடுத்து, சிறையில் இருந்தவர்கள் உண்ணாவிரதத்தைக் கைவிட்டனர். அவர்கள் காவல் நிலையப் பிணையிலேயே, ஜூலை 13 -ல் விடுதலையாகி, ஈரோடு திரும்பினர். அவர்களுக்கு அன்றிரவு கோயில் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஒன்றுபட்ட மக்கள் சக்தி:

இதுவரை அரசு பக்தர்களை கிள்ளுக்கீரையாக நினைத்திருந்தது. பக்தர்களின் தொடர் போராட்டத்தால், ஈரோட்டில் சூழல் மாறியுள்ளது. தற்போது, 80 அடி திட்டச் சாலை குறித்த ஈரோடு உள்ளூர்த் திட்டக் குழும ஆய்வு தொடர்பாக தமிழக அரசு அரசாணை (VI(1)267/2010) வெளியிட்டுள்ளது. இந்தத் திட்டச் சாலை உள்ள இடங்கள் தொடர்பாக மாற்றுக் கருத்துக்களை எதிர்ப்பாளர்கள் பதிவு செய்ய 60 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கண்டும் காணாமல் இருந்த இக் கோரிக்கை அரசால் பரிசீலிக்கப்பட்டிருப்பதே, பக்தர்களின் வெற்றி தான். பக்தர்களின் இதர கோரிக்கைகளும் அரசால் ஏற்கப்படும் நாள் விரைவில் உருவாகும். மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதிமொழி நிறைவேற்றப் படுகிறதா என்பதை எதிர்பார்த்து அம்மன் பக்தர்கள் காத்துக் கொண்டுள்ளனர். இனிமேலும் பக்தர்களைக் காக்க வைக்க முடியாது என்பது அரசுக்கு ஏற்கனவே உணர்த்தப்பட்டுள்ளது.

மக்கள் பிரதிநிதிகளும் பக்தர்கள் பக்கம்

மாநகராட்சியில் கூச்சல், குழப்பம் .

ஈரோடு காந்திஜி சாலையில் அமைக்கும் மேம்பாலத்துக்காக பாதாளச் சாக்கடைக் குழாய்கள், குடிநீர்க் குழாய்களை இடம் மாற்ற ரூ. 29 லட்சம் நிதி ஒதுக்க, ஈரோடு மாநகராட்சி முயற்சி மேற்கொண்டது. மேம்பாலத்தால் கோயிலுக்கு ஆபத்து ஏற்படும் என்ற அடிப்படையில், இத் தீர்மானத்தை மாமன்ற உறுப்பினர்கள் ஏற்கக் கூடாது என்று, பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்புக் குழுவினர், ஈரோடு மாமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் தனித்தனியே சந்தித்து, தங்கள் கோரிக்கைகளை விளக்கினர். இதன் விளைவாக, 29.6.2010-ல் நடத்தப்பட்ட மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற 45 உறுப்பினர்களில் 32 பேர் மேம்பாலத்திற்கு எதிராக குரல் கொடுத்தனர். குறிப்பாக, மாநகர மேயர் திரு குமார் முருகேசன் (தி.மு.க), துணை மேயர் திரு.பாபு வெங்கடாசலம் (காங்கிரஸ்) இருவரும், பக்தர்கள் கோரிக்கைக்கு ஆதரவாகப் பேசினர். இதுகுறித்து துணை முதல்வர் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக மேயர் உறுதியளித்தார்.

ஆனால், இத்தோல்வியை ஜீரணிக்க முடியாத தி.மு.க, ஈரோடு சட்டப் பேரவை உறுப்பினர் என்.கே.கே.பி.ராஜா மூலமாக அடாவடி அரசியல் நடத்தியது. கடந்த 30.07.2010 அன்று, ஈரோடு மாமன்றம் கூட்டப்பட்டு, ராஜாவின் வற்புறுத்தல் காரணமாக மேம்பாலப் பணிக்கு உதவியாக ரூ. 29 லட்சம் நிதி ஒதுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேக்கு நடத்திய ராஜா, கோயிலுக்கு இடையூறு நேராது என்றார். ஆயினும் கோயில் நில மீட்பு இயக்கத்தினர் அவரது சமாதானத்தை ஏற்கவில்லை. இறுதியில், ராஜா மீது செருப்பு வீசப்பட்டு, கூட்டம் அமளியில் முடிந்தது.

மேம்பாலத்துக்கு ஆதரவான தீர்மானத்தை நிறைவேற்ற தீவிர முயற்சி எடுத்த என்.கே.கே.பி.ராஜா , ஆள்கடத்தல் வழக்கில் சிக்கி அமைச்சர் பதவியை இழந்து கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டவர். கோவை செம்மொழி மாநாட்டின் போதுதான் இவர் கட்சியில் மீண்டும் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத் தக்கது.

அரசியல் கட்சிகளின் ஆதரவு:

ஸ்ரீ மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கத்தில் ஆரம்பம் முதற்கொண்டே பாரதீய ஜனதா கட்சி பக்தர்களுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. அக்கட்சியின் அனைத்து நிலை தலைவர்களும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பிற கட்சியினரும் கூட வெளிப்படையாக இப்போராட்டத்தை எதிர்க்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சாமி, பக்தர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்தார். தமிழக அரசின் தலைமை செயலாளர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோருக்கு அவர் தந்தி கொடுத்தார். தவிர, மேம்பாலத்துக்காக மாரியம்மன் கோயிலை அப்புறப்படுத்தக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அப்போது, ஈரோடு மாவட்ட ஆட்சியர் அளித்த உறுதிமொழியை அடுத்து, மனு கைவிடப்பட்டது.

கொங்குநாடு முன்னேற்றக் கழகமும் ஆரம்பம் முதற்கொண்டே கோயில் நில மீட்பு இயக்கத்தில் அங்கம் வகித்து வருகிறது. அண்மையில், கிறிஸ்தவர்களுக்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 27.07.2010 அன்று ஈரோட்டில் அராஜகம் நிகழ்த்தியபோது, பா.ஜ.க.வினரும் கொ.மு.க.வினரும் காவல்துறையினரின் பாரபட்சத்தைத் தட்டிக்கேட்டனர்.

தற்போது கையெழுத்து இயக்கம் மீண்டும் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த ஆடிப்பெருக்கு தினத்தன்று (03.08.2010), காவிரி, பவானி நதிக்கரைகளில் நடத்திய இயக்கத்தில் ஒரே நாளில் 25 ஆயிரம் கையெழுத்துக்கள் பெறப்பட்டன. குடும்ப அட்டை நகலுடன் பக்தர்கள் கையெழுத்திட வசதியாக, நகல் இயந்திரத்துடன் ஈரோட்டில் மூன்று சிறப்பு வாகனங்கள் தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறன.

எல்லோர் மனதிலும் நின்று ஆட்டுவிக்கும் அருள்மிகு பெரிய மாரியம்மனே அரசுக்கு நல்வழி காட்டுவாள் என்ற நம்பிக்கையுடன், அடுத்தகட்டப் போராட்டத்துக்கு ‘ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம்’ தயாராகி வருகிறது.

ஒன்றுபடுத்தியது அம்மன் பக்தி; வென்று காட்டும் அம்மன் சக்தி!

ஈரோடு சு.சண்முகவேல் உதவியுடன். படங்கள்: விசு வீடியோஸ், ஈரோடு

நேர்காணல்

அம்மன் அருளால் அம்மன் கோயிலைக் காப்போம்!

ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கத்தின் தலைவர் திரு.ஈ.ஆர்.எம்.சந்திரசேகர்.

ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளில் ஈரோடு மக்களின் ஒட்டுமொத்த ஒத்துழைப்பை சாத்தியமாக்கி, அரசை யோசிக்க வைத்துள்ளது ஈரோடு ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம். இதன் தலைவர் திரு. ஈ.ஆர்.எம்.சந்திரசேகரிடம் சில கேள்விகள்…


நில மீட்பு இயக்கத்தின் தலைவர் திரு. ஈ.ஆர்.எம்.சந்திரசேகர்

கே: கோயில் நில மீட்பு இயக்கம் ஆரம்பித்ததன் நோக்கம்…

ப: ஈரோடு நகரின் காவல் தெய்வம் அருள்மிகு பெரிய மாரியம்மன். அம்மனது கோயில் நிலத்துக்காக 1993 முதலாகவே பற்பல போராட்டங்கள் நடந்து வந்துள்ளன. இந்து முன்னணி இதற்காக பல்வேறு முயற்சிகளைச் செய்துள்ளது. எனினும், இப் போராட்டம் ஏதோ சிலரது தனிப்பட்ட விருப்பம் போல இதுவரை சித்தரிக்கப்பட்டது. மதவெறுப்பை பிரசாரம் செய்வதாகக் கூறி, நமது கோரிக்கைகளை உதாசீனம் செய்ய அரசு முயன்று வந்தது. இந்நிலையை மாற்ற வேண்டும் என்று முடிவெடுத்தோம்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் ஈரோட்டில் துவக்கப்பட்டது. அப்போதே, அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பை பெறுவது என்று தீர்மானித்தோம்.

கே: உங்கள் முயற்சிக்கு மக்களின் ஒத்துழைப்பு எப்படி சாத்தியமானது?

ப: அடிப்படையில் ஈரோடு மக்கள் பக்திபூர்வமானவர்கள்; பாரம்பரியம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள். மக்களுக்கு இந்து இயக்கங்கள் மீது ஏற்கனவே நல்ல மரியாதையும் இருந்தது. எனவே, நாம் புதிய இயக்கம் துவக்கியபோது எந்த சிரமமும் இருக்கவில்லை. ஏற்கனவே அம்மன் கோயில் நிலம் தொடர்பான பிரசாரம் மக்களிடம் சென்றிருந்தது. எனவே அனைவரும் நமது அழைப்பை ஏற்று உடனடியாக ஒருங்கிணைந்தனர்.

குறிப்பாக, கொங்கு வேளாளர் பேரவையின் ஆதரவு எங்களுக்கு வலுவைக் கூட்டியது. இந்த அமைப்பின் ஈரோடு மாநகரத் தலைவர் திரு. ஜெகநாதன், வடக்கு மாவட்டத் தலைவர் திரு. பி.டி.ராஜமாணிக்கம், தெற்கு மாவட்டத் தலைவர் திரு. கே.கே.சி.பாலு ஆகியோர் சுறுசுறுப்புடனும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனும் நம்முடன் இணைந்து பணியாற்றினார். செங்குந்தர் மகாஜன சங்கத்தின் தலைவராக இருந்த அமரர் திரு. ஜெ.சுத்தானந்தன் அவ்வப்போது நமக்கு ஆலோசனைகளும் ஆதரவும் தந்து வழி நடத்தியதை மறக்க முடியாது.

அதையடுத்து, திரு. கமுதி பாண்டியன் மூலமாக பசும்பொன் தேவர் பேரவை நம்முடன் இணைந்தது. நாடார் பேரவையும் திரு. சின்னத்தம்பி வாயிலாக தொடர்பில் வந்தது. இவ்வாறு பல்வேறு சமூக இயக்கங்கள் ஒரே அணியில் வந்தன.

ஆன்மிக விஷயத்தில், ஈரோடு அருள்நெறி திருக்கூட்டத்தின் நிர்வாகிகள் திரு. கயிலைமணி முனுசாமி முதலியார், திரு. சென்னியப்ப முதலியார், திரு. கதிர்வேல் கவுண்டர் ஆகியோர் வழிகாட்டி உதவினர். சட்ட ரீதியாக வழக்கறிஞர் திரு. என்.பி.பழனிசாமி உள்ளிட்டோர் உதவினர். தங்களை முன்னிறுத்திக் கொள்ளாமல் மேலும் பலர் தங்களது பங்களிப்பால் நில மீட்பு இயக்கத்திற்கு உதவியுள்ளனர்.


மேம்பாலத்தைக் கண்டித்து மாபெரும் ஒருநாள் உண்ணாவிரதம் (13.4.2010): ஆதரவு தெரிவிக்கும் அமைப்புகள்

இந்நிலையில், நமது போராட்ட வழிமுறைகளை காலத்துக்கு ஏற்றவாறு மாற்றவேண்டிய தேவையை உணர்ந்தோம். நம்முடன் இணைந்த புதிய நண்பர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பணியாற்றினார்கள். அடுத்து, பெண்களின் பங்களிப்பை உறுதிப்படுத்த திட்டமிட்டோம்.

இதற்கென நடத்திய கையெழுத்து இயக்கத்தில் பெண்களின் ஆர்வம் உற்சாகம் அளிப்பதாக இருந்தது. ஆண்களைவிட பெண்கள் அதிக வேகமாகவும், உத்வேகத்துடனும் பணியாற்றினர். நாம் நடத்திய பேரணிகள், 1008 பால்குட ஊர்வலம், உண்ணாவிரதம் அனைத்திலும் பெண்களின் பங்கேற்பு, பிரமிக்கச் செய்தது. அம்மன் மீதான பக்தி அவர்களை ஒருங்கிணைத்தது.

கே: கோயில் நில மீட்பு இயக்கத்தில் திடீரென்று 80 அடி திட்டச் சாலை நுழைந்தது எப்படி?

ப: இந்தக் கோரிக்கையும் பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டது தான். பிரப் சாலையில் மேம்பாலத்தை அரசு கட்டத் துவங்கிய போது, அதனால் கோயிலுக்கு ஏற்படவுள்ள ஆபத்து உணரப்பட்டது. அதன் விளைவாக, ஏற்கனவே இருந்த கோரிக்கை முன்னிலைப் படுத்தப்பட்டது. உண்மையில் இந்த திட்டச் சாலை நடைமுறைக்கு வந்தால், ஈரோடு நகரின் போக்குவரத்து நெருக்கடி வெகுவாகக் குறையும்; தற்போது கட்டப்படும் மேம்பாலமே தேவைப்படாது.

கே: உங்கள் இயக்கத்தின் போராட்டங்களை திட்டமிடுவது யார்?

ப: நாங்கள் ஒரு குழுவாக இயங்குகிறோம். நகரின் முன்னணி பிரமுகர்கள், சமுதாயத் தலைவர்கள், ஆன்மிகப் பெரியவர்களின் ஆலோசனை பெற்று, அனைவரும் ஒன்றாக ஆலோசித்தே முடிவுகளை எடுக்கிறோம். அம்மன் அருள் தான் எங்களை ஒன்றிணைத்துள்ளது என்று எண்ணுகிறேன்.

கே: உங்கள் போராட்டத்தால் அரசின் நிலையில் எந்தவகையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது?

ப: இதுவரை இந்து பக்தர்களின் கோரிக்கைகளை அரசோ, மாவட்ட நிர்வாகமோ கண்டுகொண்டதில்லை. அந்நிலை இப்போது மாறியிருக்கிறது. நாம் பல மட்டங்களிலும் அரசுடன் தொடர்பு கொண்டுள்ளோம். தனிப்பட்ட முறையில் நமது கோரிக்கைகளை ஆதரிக்கும் அரசியல்வாதிகள் பலரும், அரசியல் காரணங்களுக்காக நம்மை எதிர்க்கின்றனர் என்பதை தனிப்பட்ட சந்திப்புகளில் உணர்ந்தோம். தற்போது அவர்களது பார்வையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அம்மன் பக்தர்களும் வாக்குவங்கியாக மாற முடியும் என்பதை அனைவரும் தற்போது அறிந்துள்ளனர். ஈரோட்டில் நாம் நடத்திய கடையடைப்புக்கு கிடைத்த மாபெரும் வெற்றி பலரை யோசிக்கச் செய்துள்ளது.

உண்ணாவிரதம், பேரணிகளில் பல சமூக இயக்கங்கள் அம்மனுக்காக நம்முடன் கைகோர்த்தன. இது முன்பு கண்டிராத காட்சி. அரசு தற்போது சிந்திக்கத் துவங்கியுள்ளது என்பதற்கு அடையாளம் தான், 80 அடி திட்டச் சாலை தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணை.

இந்த நேரத்தில் கிறிஸ்தவ சகோதரர்களுக்கு ஒரு வேண்டுகோள்: மாரியம்மன் பக்தர்களின் உணர்வுகளை மதித்து, அவர்கள் தங்கள் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் செய்த ஆக்கிரமிப்பு நியாயமானதல்ல என்பதை ஏற்று, கோயில் நிலத்தை அவர்களாகவே முன்வந்து தர வேண்டும். ஈரோடு மக்களில் அவர்களும் அங்கம் என்ற அடிப்படையில், 80 அடி திட்டச் சாலை நிறைவேறவும் அவர்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

கே: உங்கள் அடுத்தகட்டப் போராட்டம் எப்போது?

ப: கடைசியாக நமது செயல்வீரர்கள் 30 பேர் இருந்த காலவரையற்ற உண்ணாவிரதத்திற்குப் பிறகு அரசின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கும் பல்வேறு நிர்பந்தங்கள் உள்ளன என்பதை நாம் அறிவோம். எனவே அவர்கள் நல்ல முடிவை அறிவிக்க சில நாட்கள் காத்திருப்போம். அதன் பிறகு, இயக்கத்தின் செயற்குழு கூடி அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்யும். இப்போதைக்கு, ஏற்கனவே நடத்திய கையெழுத்து இயக்கத்தை மேலும் வேகமாக நடத்தி, விரைவில், மாவட்ட ஆட்சியரிடம் அவற்றை ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

சுமை தூக்குவோர், ஆட்டோ ஓட்டுநர்கள், வியாபாரப் பெருமக்கள், பெண்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், பல சமூக இயக்கங்களின் பங்களிப்பால் தான், அம்மன் கோயில் நில மீட்பு இயக்கம் சாதிக்க முடிந்துள்ளது. அவர்கள் அனைவரது ஒத்துழைப்புடனும், ஆலோசனைகளுடனும் நமது அடுத்தகட்டப் போராட்டம் நடக்கும். அதற்குள் அரசு நல்ல முடிவு அறிவிக்கும் என்றே நான் நம்புகிறேன்.

ஏனெனில், இந்தப் போராட்டம், மதப் போராட்டமல்ல; மண்ணுக்கான போராட்டம். அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில் நிலத்தை மீட்பதற்கான போராட்டம். இந்தப் போராட்டத்தை அம்மனே இதுவரை வழிநடத்தி உள்ளாள். இனியும் அவளே நமது பாதையைக் காட்டுவாள். அம்மன் அருளால், அம்மன் கோயில் நிலத்தை மீட்க நமது போராட்டம் தொடரும்.

Source: http://www.tamilhindu.com/2010/08/erode-united-hindu-struggle-for-amman-temple-land-detailed-report/



No comments:

Post a Comment