Tuesday, November 2, 2010

பள்ளி குழந்தைகள் கொலையில் வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்

கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட கொடூரத்தின் பின்னணி, கிரைம் நாவலையும் மிஞ்சுகிறது. "இப்படியும் கொடூரர்கள் இருப்பார்களா?' என்ற கேள்வி, மக்கள் மனதை கொந்தளிக்க செய்திருக்கிறது. படுபாதக கொலைச்சம்பவம் எப்படி நடந்திருக்கும், கொலையாளிகளிடம் சிக்கி பிள்ளைகள் என்னபாடு பட்டிருப்பார்கள், போலீசாரால் உயிருடன் மீட்க முடியாமல் போனதெப்படி என்ற, ஆதங்க கேள்விகள் ஆயுதமாகி இதயத்தை துளைக்கின்றன.

இதற்கான பதில்கள், கொடூரத்தை அரங்கேற்றிய அரக்க கொலையாளிகளான அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த மோகன்ராஜ்(33), மனோகரன்(23) அளித்துள்ள வாக்குமூலத்தில் அங்குலம், அங்குலமாக விவரிக்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் ஒருகட்டத்தில் கண்கலங்கிவிட்டனர். அந்த அளவுக்கு நடந்திருக்கிறது, குழந்தைகளின் உயிர்பறிப்பு. கோவை நகரில் கடத்தப்பட்டதில் இருந்து, போலீசாரிடம் கொலையாளிகள் பிடிபட்டது வரை 250 கி.மீ., பயணித்திருக்கிறது, அரக்கர்களின் ஆம்னி வேன்.

குழந்தைகள், பள்ளிக்கு கிளம்பியது முதல் பலியானது வரை தொடர்ந்த திக்...திக்...திக்..., சம்பவம் இதோ: (கொலையாளிகள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் மற்றும் விசாரணையில் தெரியவந்த தகவல்கள்)கடந்த 29ம் தேதி, காலை 7.50 மணி. கோவை நகரிலுள்ள காத்தான்செட்டி சந்தில் வசிக்கும் துணிக்கடை அதிபர் ரஞ்சித்குமாரின் மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர் முதுகில் புத்தக மூட்டை, கையில் "லஞ்ச் பேக்' சகிதமாக தனியார் பள்ளிக்கு கிளம்பினர். தாயாரும், பாட்டியும் வழியனுப்பி வைக்க தெருவில் காத்திருந்தனர், வழக்கமாக அழைத்துச் செல்ல வரும் ஆம்னி வேனுக்காக; ஆனால், வந்ததோ கொலைகார வேன். இதையறியாத குழந்தைகள், பள்ளிக்குப் போகும் ஆவலுடன் தாவி ஏறி சீட்டில் அமர்ந்தனர். வேனை ஓட்டிவந்த மோகன்ராஜ், தனது கொடூர முகத்தை மறைத்து, புன்னகை பூத்து நடித்தான். கிளம்பிய வேன், பள்ளி நோக்கிச் செல்லாமல் கோவை - பொள்ளாச்சி ரோட்டில் பறந்தது. "அங்கிள், ஏன் இப்படி போறீங்க... ஸ்கூலுக்கு தானே போகணும்?' என, அப்பாவி மாணவி முஸ்கன் கேட்க, "அதுவா, இன்னைக்கு ஸ்கூல் லீவு... அதனால டூர் போயிட்டு வரலாம்...' என்றானாம் கொடூரன். வீட்டுக்கு போகணும் என, குழந்தைகள் அடம்பிடித்தும் அவன் கேட்கவில்லை. இருவரும் அழுதபடியே வேனில் பயணிக்க... அடுத்த 45வது நிமிடத்தில் வேன் பொள்ளாச்சியை அடைந்து, வால்பாறை ரோட்டில் அசுர வேகத்தில் பறந்தது.

அந்நேரத்தில், தங்களது குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல், ஆம்னி வேனில் காணாமல் போனதையறிந்த வீட்டார் பதபதைத்து போய், உறவினர்களின் உதவியுடன் அங்குமிங்குமாக தேடத்துவங்கினர். எங்கும் காணாததை அடுத்து காலை 10.45 மணிக்கு போலீசின் உதவியை நாடினர். மாநகர போலீஸ் நுண்ணறிவுப்பிரிவு மூலமாக தகவல் அறிந்த கமிஷனர் சைலேந்திரபாபு, கடத்தல் வேனை கண்டுபிடித்து குழந்தைகளை மீட்க வாகன சோதனையில் ஈடுபடுமாறு மாநகர போலீசுக்கு உத்தரவிட்டார்; இந்த உத்தரவு கோவை ரூரல் போலீசுக்கும் போகிறது. அதன் பின், துவங்கிய வாகன சோதனையால் பயனொன்றுமில்லை.

கடத்தல் வேனை சாலையில் சல்லடை போட்டு போலீசார் தேடிக்கொண்டிருந்த வேளையில், அவ்வேன் பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டிலுள்ள அங்கலக்குறிச்சிக்குள் நுழைந்தது. இரு குழந்தைகளுடன் அங்குள்ள ஒரு வீட்டு முன் வேனை நிறுத்திய மோகன்ராஜ், வீட்டு முன் நின்றிருந்த மூதாட்டியிடம், "மனோகரன் இருக் கிறானா' என விசாரிக்க, "இல்லை' என பதில் வந்ததது; வேனை மீண்டும் கிளப்பிச் சென்று சற்று தொலைவில் நிறுத்திய மோகன்ராஜ், போனில் பேசி மனோகரனையும் வரவழைத்தான். அவன் வந்து வேனில் ஏறியதும் மீண்டும் கிளம்பி, ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் நின்றது. மாணவி முஸ்கனிடம், அவரது தந்தை ரஞ்சித்குமாரின் மொபைல்போன் நம்பரை கேட்டு பெற்ற கடத்தல் ஆசாமிகள், போனில் பேசி பணம் பறிக்க திட்டமிடுகின்றனர்...

இவர்களது திட்டத்தை எதிர்பார்த்த மாநகர போலீசாரும், போனில் பேசினால் "பேச்சு நடத்த' தயாராக, குழந்தைகளின் வீட்டு "லேண்ட் லைன்' இணைப்பில் "காலர் ஐ.டி.,' (அழைப்பவரின் போன் எண்களை காட்டும் சாதனம்) பொருத்தி தயாராக இருந்தனர். அதிரடி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட உதவிக்கமிஷனர் குமாரசாமி தலைமையில் 8 தனிப்படை போலீசாரும் துப்பாக்கி சகிதமாக தயார் நிலையில் இருந்தனர்; ஆனால், போன் ஏதும் வரவில்லை. அங்கே... திடீரென, பணம் பறிப்பு திட்டத்தை மாற்றிய மோகன்ராஜ், மனோகரன் இருவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யும் திட்டத்தை துவக்கினர். முஸ்கன், ரித்திக்கின் கை, கால்களை கயிற்றால் கட்டினர். ரித்திக்கை, வேனின் பின் இருக்கையில் தள்ளிவிட்டனர். கண்ணாடிகள் மூடப்பட்ட வேனுக்குள் இருந்த இவர்களின் கூச்சல் வெளியில் கேட்கவில்லை. அடி, உதைக்கு பின் வாயடைத்து மவுனமாயினர். முஸ்கனை பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சி பலிக்காமல் போனதால், இருவரையும் கொலை செய்யும் முயற்சியாக "பாலிதீன் கவரால்' முகத்தை மூடி மூச்சடைக்கச் செய்தனர்; குழந்தைகளின் உயிர்போராட்டம், இவர்களது கொடூர முயற்சியை தோற்கடித்தது. இச்சம்பவம், ஆனைமலை - பழனி ரோட்டில் அரங்கேறியது.

கடத்தி வெகுநேரமாகிவிட்டதால் போலீசார் நம்மை பிடித்துவிடுவார்கள் என பயந்து போன கொடூரரர்கள், குழந்தைகள் இருவரையும் மலையில் இருந்து பள்ளத்தில் தள்ளி கொலை செய்ய திட்டமிட்டனர்; வாகனங்கள் சென்று வந்ததால் அந்த திட்டமும் எடுபடவில்லை. இதையடுத்து, உடுமலை அருகே சர்க்கார்புதூரிலுள்ள தீவாலப்பட்டியை நோக்கி கொலைகாரர்களின் வேன் பறந்தது.

வழியில் வேனை நிறுத்திய கொலைகாரர்கள், சாணிப்பவுடரை பாலில் கலந்து கொடுத்து குழந்தைகளை கொல்ல முயன்றனர். குடிக்க மறுத்து குழந்தைகள் காட்டிய எதிர்ப்பால், மூன்றாவது முயற்சியும் பலிக்கவில்லை; அப்போது, காலை 10.00 மணி. கொலைகாரர்களுக்கு போலீஸ் பயம் அதிகரித்தது. அடுத்த சில நிமிடங்களில் வேன் பறந்து தீவாலப்பட்டியை அடைந்தது. ஊருக்குள் இருந்து 20 கி.மீ., தொலைவிலுள்ள பி.ஏ.பி., வாய்க்கால் கரையில் நின்றது.

இரு குழந்தைகளின் கை கட்டுகளையும் அவித்துவிட்டு, அவர்கள் கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸ்களை திறந்தனர். "சாப்பிடுங்கள், சாப்பிட்டு முடிந்ததும் உங்கள் வீட்டுக்கே திரும்பி அழைத்துச் செல்கிறோம்...' எனக்கூற, குழந்தைகள் சாப்பிட மறுத்தனர். மிரட்டி ஒரிரு சப்பாத்திகளை சாப்பிட வைத்த பின், முஸ்கனை அடித்து, உதைத்து தங்களது "எண்ணத்தை' நிறைவேற்றிக் -கொண்டனர்.

அரக்கர்களிடம் சிக்கிய குழந்தைகள் இருவரும் குற்றுயிரும், குலையுயிருமாக கிடக்க, இருவரையும் மிரட்டி எழுப்பி வாய்க்காலில் கைகழுவுமாறு மிரட்டியுள்ளனர். பயந்துபோன குழந்தைகள், பல அடி ஆழத்துடன் தண்ணீர் கரைபுரண்டோடும் வாய்க்கால் கரையோரத்தில் அமர்ந்து, ஓடிய தண்ணீரில் கைகழுவினர்; அடுத்த விநாடிகளில் நடக்கப்போகும் ஆபத்தை அறியாதவர்களாய்...இருவரையும், முதுகு பக்கமிருந்து தண்ணீரில் தள்ளிவிட்ட கொலை பாதகர்கள், நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தைகளை வெகுநேரம் பார்த்திருந்து, உயிர்போனதை உறுதி செய்தபின் அங்கிருந்து கிளம்பினர். கிளம்பும் போது, குழந்தைகளின் ஸ்கூல் பேக்குகளை அதே இடத்தில் வீசிச் சென்றனர்; அப்போது, காலை 11.30 மணி.

"எல்லாம் முடிந்தும்', எதுவும் தெரியாத நிலையில், குழந்தைகளை மாலைவரை தேடிக்கொண்டிருந்தனர், மாநகர போலீசார். மாலை 5.00 மணியளவில்தான், கடத்தல்காரன் மோகன்ராஜின் மொபைல் போன் நம்பரை ஒருவழியாக கண்டுபிடித்த போலீசார், "டவர் லொகேஷன்' பார்த்து, உடுமலை அருகிலுள்ள தளி பகுதியை முற்றுகையிட்டனர். "எப்படியும் குழந்தைகளை உயிருடன் மீட்டுவிடலாம்...' என்ற நம்பிக்கையுடன் இருந்த போலீசாருக்கு, தீவாலப்பட்டியிலுள்ள பி.ஏ.பி., வாய்க்கால் அருகே குழந்தைகளின் ஸ்கூல் பேக் கிடப்பதாக தகவல் கிடைத்து "அப்செட்' ஆகினர். இரு குழந்தைகளையும் வாய்க்காலில் தள்ளி கொன்றிருப்பார்களோ? என்ற சந்தேகம் ஏற்பட்டு, உடல்களை தேடத் துவங்கினர்.

அதே நேரத்தில், கொலையாளிகளை பிடிப்பதற்கான நடவடிக்கையும் தீவிரப்பட்டிருந்தது. வெகு நேரம் நடந்த தேடலுக்கு பின் முஸ்கன் உடல் மீட்கப்பட்டது; ரித்திக் குறித்து தகவல் ஏதுமில்லை. "முஸ்கனை கொலை செய்த கொலையாளிகள், ரித்திக்கை உயிருடன் கையில் வைத்திருக்கலாம்' என்ற நம்பிக்கையுடன் கடத்தல்காரர்களுக்கு எதிரான வேட்டையை இன்னும் தீவிரப்படுத்தினர்.

நீண்ட நேர தேடலுக்கு பின், கொடூரன் மோகன்ராஜ் மட்டும் பிடிபட்டான். குழந்தைகள் இருவரையும் வாய்க்காலில் தள்ளி கொலை செய்ததை போட்டுடைத்தான்; போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகே, ரித்திக் உடலும் ஒரு வழியாக மீட்கப்பட்டது. கொலைபாதக செயலின் கூட்டாளி மனோகரனும் பின்னர் பிடிபட்டான். பிள்ளைகள் இருவரையும் பலிகொடுத்த பெற்றோர், மீளாத்துயரில் தள்ளப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறுகையில்,"" காலை 7.55 மணிக்கே குழந்தைகள் கடத்தப்பட்ட போதிலும், 10.45 மணிக்குத்தான் எங்களுக்கே தகவல் கிடைத்தது. அதற்குள் கடத்தல் வேன் பொள்ளாச்சியை கடந்து கண்காணிப்பில்லா எல்லைக்குள் நுழைந்துவிட்டது. எங்களுக்கு தகவல் முன்னரே கிடைத்திருந்தால் உயிருடன் மீட்பதற்கான அவகாசம் கிடைத்திரு -க்கும்; இச்சம்பவத்தால், நாங்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்,'' என்றார்.

நாடகமாடிய கொலையாளி :போலீசாரிடம் பிடிபட்டதும் கொலையாளி மோகன்ராஜ், ஏதுமறியாதவனை போல நடித்துள்ளான். "என்ன சொல் றீங்க சார், ரஞ்சித்குமாரின் குழந்தைகளை கடத்தி கொலை செய்துவிட்டார்களா?' என எதிர்கேள்வி கேட்டு, போலீசாருக்கு ஆத்திரமூட்டியுள்ளான். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த போலீசார், "முறைப்படி விசாரணையை' துவக்க, கொலை செய்தததை ஒப்புக் கொண்டு, நடந்த அனைத்தையும் அச்சுக்கோர்த்தால் போல விவரித்தான். அதன்பிறகே, போலீசார் அடுத்த கட்ட விசாரணையை துவக்கினர்.

- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/district_detail.asp?id=118502

No comments:

Post a Comment