Tuesday, November 2, 2010

பெற்றோர் விழிப்புணர்வோடு இருப்பது அவசியம்

கோவை : கோவையில் அக்காள் - தம்பி இருவரையும் டிரைவர் கடத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைக்கும் விஷயத்தில் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்குமாறு பெற்றோர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளன. கோவை அவிநாசி ரோட்டிலுள்ள அரசு உதவி பெரும் பள்ளி நிர்வாகம், குழந்தைகளை வாகனங்களில் அழைத்துச்செல்ல நிர்ணயிக்கப்பட்டுள்ள விதிமுறைகள் குறித்து பெற்றோருக்கு சில அறிவுரைகளை வழங்கியுள்ளது.

பள்ளி நிர்வாகிகள் கூறியதாவது: மாணவர்களை கூடுமானவரை பள்ளி வாகனங்களில் அனுப்பி வைக்க வேண்டும். பள்ளிக்கு அருகில் வசிப்பவர்கள், பெற்றோரில் யாராவது ஒருவர் குழந்தைகளை அழைத்து வரலாம்; அல்லது நெருங்கிய உறவினரோடு அனுப்பி வைக்கலாம். இதை விரும்பாதவர்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலிருப்பவர்கள் அனைவரும் இணைந்து நம்பிக்கைக்குரிய டாக்சி டிரைவரை அமர்த்தி பள்ளிக்கு அனுப்பி வைக்கலாம். அவர் விடுமுறையில் செல்லும் போது மாற்று டிரைவரை நியமித்தால் அவரை பற்றிய முழுவிபரங்களை பெற்றோருக்கு டிரைவர் தெரிவிக்க வேண்டும்.

அதோடு டிரைவரின் லைசன்ஸ், அவரது போட்டோ நகல் மற்றும் மொபைல் எண்ணை பெற்றோரிடம் கொடுக்க வேண்டும். வீட்டிலிருந்து பள்ளிக்கு வரும் வரை பெற்றோர் தான் குழந்தைகளை பாதுகாப்பாக அழைத்து வரவேண்டும். பள்ளி கேட்டுக்குள் நுழைந்துவிட்டால் அதன் பின் பொறுப்பு எங்களுடையது. பள்ளிக்கு வந்தபின் மாலை வீடு திரும்பும் போது (எல்.கே.ஜி., முதல், 2 ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகள்) வகுப்பறைக்கு வந்து பெற்றோர் அழைத்து செல்கின்றனர். பெற்றோரை பார்த்து அடையாளம் தெரிந்த பின்னரே குழந்தைகளை அனுப்புகிறோம். பெற்றோர் வராத சூழலில் உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா, சித்தி, மாமா, அத்தை போன்றோரை, ஆசிரியருக்கு தெரியும் பட்சத்தில் குழந்தையை அனுப்பி வைக்கிறோம். அறிமுகமில்லாத நபர் வரும் போது குழந்தைகளிடம் இவர் யார் என்று கேட்டு, அவரது உறவினரா என்பதை தெரிந்து கொண்டு போனில் உறுதி செய்த பின்பு தான் குழந்தைகளை அனுப்பி வைக்கிறோம். ஆரம்ப காலத்தில் அறிமுகமாகி எங்கள் பள்ளியில் பதிவு செய்யப்பட்ட டிரைவராக இருந்தால் மட்டுமே குழந்தைகளை அனுப்பி வைக்கிறோம்.

அவருக்கு பதில் யார் வந்தாலும் குழந்தைகளை நாங்கள் எக்காரணத்தை கொண்டும் அனுப்புவதில்லை. வழக்கமாக வரும் டிரைவர் விடுமுறையில் சென்றுவிட்டால் முன்னதாகவே பள்ளி ஆசிரியரிடம் மாற்று டிரைவரின் போட்டோ, லைசன்ஸ் ஆகியவற்றை கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே குழந்தைகள் அனுப்பி வைக்கப்படுவர். சந்தேகம் வரும் பட்சத்தில் குழந்தையின் டைரி அல்லது அடையாள அட்டையிலுள்ள மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு அதன் பின்னரே குழந்தைகளை ஒப்படைக்கிறோம்.

இரண்டு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மாலையில் வீடு திரும்புவதற்கு பள்ளி வாகனத்தை பயன்படுத்துபவராக இருந்தால் அதற்குரிய இடத்தில் வரிசையாக நிற்க வேண்டும். "பஸ் அட்டன்டன்ஸ்' எடுப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர் "அட்டன்டன்ஸ்' எடுத்து, செக்யூரிட்டியிடம் இவ்வளவு மாணவர்கள் என்று ஒப்படைப்பார். அதன் பின் மாணவர்கள் பஸ்சில் ஏற்றப்பட்டு வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். பள்ளி குழந்தைகளின் டைரிகளில் பை பர்சன், பை வெய்க்கிள், கார், பைக், சைக்கிள், ஸ்கூல்பஸ் என்று கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். அதில் எப்படி வருகிறாரோ அந்த பெயரை "டிக்' செய்ய வேண்டும். அதன் வாயிலாக அக்குழந்தை எப்படி வந்து செல்கிறது என்று தெரிந்து கொள்ளும் வகுப்பு ஆசிரியர், அதற்கேற்ப நடந்து கொள்வார். அக்குழந்தையின் நடவடிக்கையை தெரிந்து கொள்வார்.

பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பும், பள்ளியிலிருந்து வெளியேறிய பின்பும் பாதுகாக்கவேண்டியது பெற்றோர்களின் கடமை. அதை ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு பள்ளி நிர்வாகிகள் கூறினர்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=118516


No comments:

Post a Comment