Friday, November 5, 2010

தேர்தல் நேர சமரசம்...

தலையங்கம்:
First Published : 04 Nov 2010 12:00:00 AM IST

Last Updated : 04 Nov 2010 02:24:45 AM IST

பொதுவிநியோக மையங்களில் தற்போது தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கும் தொடர்ந்து பொருள்கள் வழங்கலாம் என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதனால் சுமார் 20 லட்சம் குடும்ப அட்டைகள் மீண்டும் உயிர் பெறுகின்றன. இது தாற்காலிகமானதுதான். ஆனாலும், வரவிருக்கும் பொதுத்தேர்தல் வரை இந்தக் குடும்ப அட்டைகளுக்கு உயிர் இருக்கும் என்பதை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்.

தமிழ்நாட்டில் மொத்தம் 1.94 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நாள் தொடங்கி, கடந்த மாதம் வரை சுமார் 15 லட்சம் புதிய அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் நடைபெற்ற குடும்ப அட்டை சரிபார்ப்புப் பணியின் இறுதி நடவடிக்கையில் சுமார் 10 லட்சம் போலி குடும்ப அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் 20 லட்சம் குடும்ப அட்டைகள் தகுதிநீக்கம் செய்யப்பட்டன.

இந்த 20 லட்சம் குடும்ப அட்டைகளில் 75 விழுக்காடு உண்மையான குடும்ப அட்டைகள் என்பதும், மற்றவை தகுதிநீக்கம் செய்யப்பட்டதற்குக் காரணமானவர்கள் சரிபார்ப்புப் பணியைச் செய்த அரசு ஊழியர்கள் என்பதும்தான், இப்போது மீண்டும் இத்தகைய தகுதிநீக்கம் செய்யப்பட்ட அட்டைகளுக்குப் பொருள் வழங்குவதை அனுமதிக்கும் கட்டாயம் ஏற்படக் காரணம்.

போலி குடும்ப அட்டைகளைக் களையெடுக்கும் பணியில் ஈடுபட்டவர்கள் வீடுதோறும் சென்று களஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டும், இந்தப் பணிக்காக ஒவ்வோர் அட்டைக்கும் ரூ. 5 வரை ஊதியம் அளிக்கப்பட்டும்கூட, இந்தக் களஆய்வு சரியாகச் செய்யப்படவில்லை என்பதே உண்மை.

களஆய்வில் ஈடுபட்டவர்கள் வீடுதோறும் சென்று கள ஆய்வு செய்யாமல், ஏதாவது ஓரிடத்தில் அமர்ந்துகொண்டு, அனைவரும் தங்களிடம் அட்டைகளைக் கொண்டுவந்து காட்டி சான்று பெறுமாறு செய்தனர். இன்னும் சிலர் மிக செüகரியமாக, நியாயவிலைக் கடைக்கே மாலை நேரத்தில் வருமாறு தகவல் அனுப்பி அங்கேயே உட்கார்ந்து சரிபார்த்துவிட்டனர். இத்தகைய கணக்கெடுப்பை போலிகள் பயன்படுத்திக்கொண்டனர், பாவம் உண்மையான அப்பாவிக் குடும்ப அட்டைதாரர்கள் பலியாகினர். பெரும்பாலான குடும்ப அட்டைகள் நீக்கப்பட்டதுதான் மிச்சம். மீண்டும் தங்கள் குடும்ப அட்டைக்கு உயிர்ப் பிச்சை கேட்டு நடையாய் நடந்து அலைந்ததுதான் லாபம்.

தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களில் குறைந்தபட்சமாக 10 லட்சம் பேர் உண்மையான குடும்ப அட்டைதாரர்களாக இருப்பார்கள். ஒரு குடும்பத்துக்குச் சராசரியாக 5 வாக்குகள் என்றாலும்கூட, இந்தக் குடும்பங்களின் கோபத்தின் எதிரொலியாக 50 லட்சம் வாக்குகளை இழக்க நேரிடும் என்கிற அச்சம்தான் இப்போது, தகுதிநீக்கம் செய்யப்பட்ட அட்டைகளுக்கும் பொருள் வழங்கும் உத்தரவுக்குக் காரணம்.

தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்கள் தாங்கள் உண்மையான குடும்ப அட்டைதாரர்கள் என்று மனு கொடுத்த வேளையில் அவர்களை மட்டுமாகிலும் வீடுதோறும் சென்று மறுபடியும் ஆய்வு செய்திருந்தால், இத்தகைய நிலைமை ஏற்பட்டிருக்காது என்பதுடன், மேலும் சில லட்சம் போலி அட்டைகள் களையப்படும் நிலைமை உருவாகியிருக்கும். ஆனால் அதைவிடுத்து, இப்போது அனைவருக்கும் பொருள் விநியோகம் என்கிற சமரச நிலைமைக்கு அரசு ஆளாகியிருக்கிறது.

முதலில் இந்தக் களஆய்வு நடத்தப்பட்ட நேரத்தில் மக்களவைத் தேர்தல் வந்ததால், மூன்று மாதங்களுக்கு (தேர்தல் முடியும்வரை) பொருள்கள் வழங்க நீட்டிப்பு வழங்கப்பட்டது. இப்போது இரண்டாம் முறையாக பொருள் வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குளறுபடிக்குக் காரணம் களப்பணி செய்தவர்கள்தான். ஒவ்வோர் அட்டைக்கும் ஊதியம் பெற்றும், இந்தத் தவறைச் செய்தவர்கள் மீது தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்காது. தகுதியான அட்டைகளை நீக்கிய குற்றத்துக்கு அவர்களைத் தண்டிக்காமல், அவர்கள் வந்த நேரத்தில் தாங்கள் வீட்டில் இல்லை என்று பொய்யாக மனு எழுதித் தரச் சொன்ன வட்டாட்சியர்களும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை விரும்ப மாட்டார்கள். இதன் விளைவு அரசுக்கு மாதத்துக்கு ரூ. 100 கோடி இழப்பு என்றால் நம்பமுடிகிறதா? ஒவ்வோர் அட்டைக்கும் குறைந்தவிலையில் பொருள்கள் வழங்குவதால் மாநில அரசுக்கு ஏற்படும் மானியச் செலவு ரூ. 250. உண்மையான அட்டைகளும் போலியும் சேர்ந்து பயன்பெறும் என்றால், இந்தப் போலிகளின் எண்ணிக்கை குறைந்தது 10 லட்சம் அட்டைகள் என்றால், அரசுக்கு மாதத்துக்கு ரூ. 100 கோடி இழப்பு. அரசு அலுவலர்களின் சிலருடைய தவறுக்கு மக்கள் செலுத்தும் அபராதத்தொகை இது!

தவறுகள் அரசால் தண்டிக்கப்படுவதே இல்லை. மன்னிக்கப்படுகின்றன. தவறால் ஏற்படும் கால விரயமும் பண விரயமும் பொதுமக்கள் தலையில் சுமத்தப்படுகிறது. தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட்டால்தானே, மீண்டும் தவறு நேராமல் தடுக்க முடியும் என்கிற பொறுப்புணர்வு ஆட்சியாளர்களுக்கு இருந்தால்தானே? அவர்களைப் பொறுத்தவரை, எல்லோரையும் எல்லா விதத்திலும் திருப்திப்படுத்தி, வாக்குகளை வாங்கிப் பதவி நாற்காலியில் அமர்வது மட்டுமே லட்சியம். பதவியில் அமர்ந்துவிட்டால், தங்களையும் தத்தம் குடும்பத்தையும் வளப்படுத்திக் கொள்வது மட்டுமே குறிக்கோள்.

மக்கள் பணம் விரயமாக்கப்படும்போது அதைத் தட்டிக்கேட்க வேண்டியவர்களே, கொள்ளையில் பங்குபெறும்போது இது மட்டுமா நடக்கும், எது வேண்டுமானாலும் நடக்கும். தவறானவர்களைத் தேர்ந்தெடுத்ததற்கு நமக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான தண்டனைதான் இது என்று தலைகுனிந்து ஏற்றுக்கொள்வது அல்லாமல் வேறு வழியென்ன இருக்கிறது?

Courtesy: http://dinamani.com

No comments:

Post a Comment