Tuesday, November 2, 2010

"பெற்றோர்களுக்கு வேண்டும் பொறுப்புணர்வு'

எதிர்பாராத ஆபத்தில் சிக்கிக்கொள்ளும் போது, வளர்ந்த மனிதர்களே எதிர்கொள்ள முடியாமல் திணறும் போது, குழந்தைகளால் சமாளிக்க முடிவது சிரமமே. அவர்கள் மனதளவில் பயந்து விடுவர். உளவியல் ரீதியாக குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமை.

கோவை, அரசு மருத்துவமனை உளவியல் நிபுணர் டாக்டர் வெள்ளைச்சாமி கூறியதாவது: கடத்தப்பட்ட குழந்தைகளை அழைத்துச் செல்ல மூன்று டிரைவர்கள் மாறி, மாறி வந்துள்ளனர் என தெரியவருகிறது. இதனால், அக்குழந்தைகள் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை. ஒரே டிரைவர் "ரெகுலராக' வந்திருந்தால், அவர்கள் சற்று யோசித்திருக்கக்கூடும். வாடகைக்கு வாகனத்தை இயக்கிய நிறுவனம் ஒரே டிரைவரை மட்டும் நியமித்திருக்க வேண் டும். வீட்டு வாசலுக்கு வாகனம் வந்த உடன், சரியான நேரத்துக்கு வாகனம் வந்து விட்டது என்றுதான் அந்தக்குழந்தைகள் நினைத்திருக்கும். நீண்டநாட்களாக வராத போதும், ஏற்கனவே அறிமுகமான நபர் என்ற நம்பிக்கையில் அவர்கள் ஏறியிருக்க வேண்டும்.

கோவை நகரை விட்டு, வேறு தடத்தில் வாகனம் சென்ற பின்னரே அக்குழந்தைகளுக்கு அச்சம் ஏற்பட்டிருக்கும். குழப்பமான மனநிலையில் அவர்களால் எந்த முடிவுக்கும் வந்திருக்க முடியாது. வாகனத்துக்குள் என்ன நடந்தது என்பதை நம்மால் கணிக்க முடியாது. இவ்விஷயத்தில் பெற்றோர்களுக்கு பொறுப்புணர்வு வேண்டும். "அமெச்சூர்' டிரைவர்களை நம்பக்கூடாது. டிராவல்ஸ் நிறுவனங்களை ஒப்பந்தம் செய்யுங்கள். அந்த நிறுவனங்கள் டிரைவரின் நம்பகத்தன்மைக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும். குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். அறிமுகம் இல்லாத நபர் தொட்டுப்பேச அனுமதிக்கக்கூடாது; மிக அருகில் நெருங்கிப் பேசக்கூடாது; தின்பண்டங்கள் பெறக்கூடாது போன்ற விஷயங்களை கற்றுக் கொடுங்கள். பெண்குழந்தைகளுக்கு எல்லா விஷயங்களையும் சொல்லிக்கொடுக்கிறேன் பேர்வழி என்று திணித்தும் விடக்கூடாது. ஏனெனில், தெரியாத ஒன்றை தோண்டித்துருவி கற்றுக்கொள்வதில் குழந்தைகள் ஆர்வம் காட்டும். சில விஷயங்களை மறைபொருளாக உணர்த்த வேண்டும். இதில், இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என நாமே கோடிட்டுக்காட்டிவிடும் வகையிலும் அமைந்து விடக்கூடாது. என்னைக்கேட்டால், இதுபோன்ற குற்றவாளிகளுக்கு மரணதண்டனை வழங்கலாம். இவ்வாறு, டாக்டர் வெள்ளைச்சாமி தெரிவித்தார்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=117996

No comments:

Post a Comment