பண்டிகை மற்றும் விடுமுறைக் காலங்களில் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களில் பெரும்பாலானோருக்கு ரயில்களில் இடம் கிடைப்பதில்லை. இதனால் இவர்கள் அனைவரும் பஸ்களை நம்ப வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆம்னி பஸ்கள், கட்டணத்தை இருமடங்காக உயர்த்தி கொள்ளையில் ஈடுபடுகின்றனர். இந்த நிலையில், புதன்கிழமை (நவ. 3) இரவு சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் சில அரசு பஸ்களிலும் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகர காவல் துறையும், அரசும் எச்சரித்து வரும் நிலையில் அரசு பஸ்களிலும் கொள்ளை நடைபெறுவது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பஸ் நடத்துநர்கள் வெளிப்படையாகவே இந்த கூடுதல் வசூலில் ஈடுபடுகின்றனர். கூடுதல் கட்டணம் குறித்து கேள்வி கேட்பவர்களிடம் "இஷ்டமிருந்தால் பஸ்ஸில் ஏறு; அல்லது யாரிடம் வேண்டுமானாலும் புகார் தெரிவித்துக்கொள்' என நடத்துநர்கள் கூறுவதாகவும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதே நிலை வியாழக்கிழமையும் தொடர்ந்தது. அரசு சாதாரண பஸ்ஸில் சென்னையிலிருந்து ஈரோடு செல்வதற்கான டிக்கெட் கட்டணம் ரூ. 135. ஆனால், கோயம்பேடு பஸ்நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்ட "டி.என்.-33 என்-2358' (191 சி.பி.இ.) என்ற எண் கொண்ட தமிழ்நாடு அரசு (கோவை) பஸ்ஸில் அனைத்துப் பயணிகளிடமும் கட்டணமாக ரூ. 200 வசூலிக்கப்பட்டது. இதுதொடர்பாக பஸ்நிலைய அலுவலகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் பயணிகள் புகார் தெரிவித்தும் எந்தப் பலனும் இல்லை.
இது குறித்து அந்த பஸ்ஸில் பயணம் செய்ய முற்பட்ட பயணி ரமேஷ் கூறியது: "இந்த பஸ் மட்டும்தான் முன்பதிவு இல்லாதது. இதற்கு பிறகு வரும் பஸ்கள் அனைத்தும் இருக்கை முன்பதிவு செய்யப்பட்டவை' என அந்த பஸ்ஸின் நடத்துநர் கூறியதால், பெரும்பாலான பயணிகள் வேறு வழியின்றி கூடுதல் கட்டணம் கொடுத்து டிக்கெட் வாங்கினர்.
நானும், ஒரு சில பயணிகள் மட்டும் பஸ்நிலையத்தில் அமைந்துள்ள சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகத்தின் ஆய்வாளர் சண்முகத்திடம் சென்று புகார் தெரிவித்தோம்.
உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த அவர் "கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. சாதாரண கட்டணமே வசூலிக்க வேண்டும்' என சம்பந்தப்பட்ட நடத்துனரை பெயரளவுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வாளர் சென்றதும், நடத்துநர் மீண்டும் கூடுதல் கட்டணத்துக்கே டிக்கெட்டை விற்பனை செய்தார். இதனால், அந்த பஸ்ஸில் ஏறுவதை தவிர்த்து விட்டோம் என்றார்.
இது குறித்து பஸ்நிலைய பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸ் அதிகாரியிடம் கேள்வி எழுப்பியபோது, பஸ் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட மட்டும்தான் நாங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளோம். கூடுதல் கட்டண புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு எங்களுக்கு அறிவுரை எதுவும் வழங்கப்படவில்லை என்றார்.
Courtesy:dinamani.com
No comments:
Post a Comment