Tuesday, November 2, 2010

கோவையில் குழந்தைகள் கடத்தல் பின்னணி என்ன ?

கோவை :

கோவையில் பள்ளி குழந்தைகளை கடத்தி, கால்வாயில் வீசி கொலை செய்த வேன் டிரைவரை போலீசார் கைது செய்தனர். ஒரு குழந்தையின் உடல் நேற்று மீட்கப்பட்டது. கோவை, ரங்கே கவுடர் வீதியிலிருந்து செல்லும் காத்தான் செட்டி சந்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் ஜெயின். சுக்ரார் பேட்டை பகுதியில் ஜவுளிக்கடை வைத்துள்ளார்; இவரது மனைவி சங்கீதா. இவர்களது பெண் குழந்தை முஸ்கின் ஜெயின்(10) சுகுணா ரிப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பும், மகன் ரித்திக்ஜெயின்(7) அதே பள்ளியில் மூன்றாம் வகுப்பும் படித்து வந்தனர். இவரும் "சூர்யா கேப்ஸ்' கால் டாக்ஸியில் பள்ளிக்குச்செல்வது வழக்கம். வீடு சந்துப்பகுதியில் இருப்பதால், வீட்டிலிருந்து மெயின் ரோட்டிற்கு வந்த பின் தான் கால் டாக்சியில் செல்வது வழக்கம். இரு குழந்தைகளுக்கும் பள்ளிச்சீருடை அணிவித்து, மதிய உணவுடன், இருவரையும் நேற்று முன் தினம் காலை வீட்டிலிருந்து அனுப்பி வைத்தனர்.

குழந்தைகள் சென்ற சிறிது நேரத்தில் கால் டாக்ஸி டிரைவர் கார்த்திக், ரஞ்சித்குமார் ஜெயினை போனில் அழைத்து, "வேன் வந்து வெகுநேரம் காத்திருக்கிறேன்;குழந்தைகளை சீக்கிரமாக அனுப்பி வையுங்கள்' எனக் கூறியுள்ளார். இதைக்கேட்ட பெற்றோர், "குழந்தைகள் அப்போதே புறப்பட்டுச் சென்றனரே, வரவில்லையா?' எனக் கேட்டனர். டிரைவர், "வரவில்லை' எனக் கூறியதும், பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். வழக்கமாக செல்லும் கால்டாக்ஸி அல்லாமல் வேறொரு கால்டாக்ஸியில் குழந்தைகள் ஏறி சென்றது தெரியவந்தது. உடனே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உஷார் படுத்தப்பட்டு அனைத்து செக்போஸ்ட்களிலும் வாகனங்களை சோதனை செய்தனர். போலீஸ் உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் கனகசபாபதி விசாரணையில் இறங்கினர்.

குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும் டிரைவர் சுந்தராபுரத்தை சேர்ந்த கார்த்திக்கிடம் விசாரித்தனர். அப்போது, அவர் வராத நாட்களில் வரும் டிரைவர்களின் மொபைல் எண்களை கொடுத்தார். மூன்று மாற்று டிரைவர்களில், ஒரு டிரைவர் நம்பர் மட்டும் "சுவிட்ச் ஆப்' வந்ததை கண்டுபிடித்தனர். தொடர்ந்து முயற்சி செய்ததில், மாலை 4.00 மணிக்கு மொபைல் எண் ரிங் போனது. இதையடுத்து, பொள்ளாச்சி பகுதியில் இருப்பதை அறிந்த போலீசார் பொள்ளாச்சியில் வாகன தணிக்கை செய்தனர். இதில், அதிவேகமாக சென்ற ஒரு வேனை போலீசார் சோதனையிட்டனர். இதில், மோகன் ராஜ்(எ) மோகனகிருஷ்ணன் வேனை ஓட்டி வந்தது தெரியவந்தது. இவரை தீவிரமாக விசாரித்தபோது, குழந்தைகளை கடத்தி சென்றதை ஒப்புக் கொண்டான்.

போலீசார் மோகன்ராஜிடம் நடத்திய விசாரணையில் கூறியதாவது: சில மாதங்களாக வேலையில்லாமல் சிரமப்பட்டு வந்தேன். சொந்தமாக கால் டாக்ஸி வாங்கி ஓட்டினேன். கடனில் வாங்கி ஓட்டியதால், இரண்டு மாதங்களாக தவணை செலுத்த இயலவில்லை. எனவே, வேனை இழந்தேன். பணம் சம்பாதிக்க வழி தெரியாமல் தவித்தேன். தீபாவளி சமயத்தில் கையில் காசு இல்லாததால், பணம் பறிக்க முடிவு செய்தேன். வழக்கமாக குழந்தைகளை வேனில் ஏற்றிச் செல்லும் நான், குழந்தைகளிடம் நைசாக பேசி, யார் அதிக வசதியுடன் உள்ளனர் என்பதை அறிந்து கொண்டேன்.

இதில், ரித்திக் குடும்பத்தினர், ஜவுளிக் கடை வைத்திருப்பதும் பணப்புழக்கம் அவர்களிடமிருப்பதையும் அறிந்தேன். எனவே, இரு குழந்தைகளையும் கடத்திச் சென்று, ரஞ்சித்குமாரை மிரட்டி பணம் பறிக்க திட்டமிட்டேன். இந்த பணத்தில், வேறு கால்டாக்சி வாங்க முடிவு செய்தேன். இதன்படி நேற்று முன் தினம் காலை வாடகைக்கு கால்டாக்சி பெற்றுத்தருமாறு எனது நண்பரிடம் கூறினேன். அவன், சந்தோஷ் என்பவருக்கு சொந்தமான கால்டாக்ஸியை வாடகைக்கு எடுத்து கொடுத்தார். வழக்கம் போல் பள்ளிக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேனில் செல்வதைப்போலவே, ஐந்து நிமிடங்களுக்கு முன்பே சென்று இரு குழந்தைகளையும் வேனில் ஏற்றிக் கொண்டேன்.

வழக்கமாக செல்லும் ரோட்டில் செல்லாமல் பொள்ளாச்சி ரோட்டுக்கு வந்தேன். குழந்தைகளிடம், "இன்று பள்ளிக்கு விடுமுறை; உங்களை பிக்னிக் அழைத்துச் செல்கிறேன்' எனக் கூறி, பொள்ளாச்சிக்கு அழைத்துச் சென்றேன். பொள்ளாச்சி தாண்டியவுடன் எனக்கு பயம் ஏற்பட்டது. "போலீசிடம் சிக்கி மாட்டிக்கொள்வோம்' என, நினைத்து, திருமூர்த்தி மலை செல்லும் வழியிலுள்ள பி.ஏ.பி., வாய்க்கால் பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்குள்ள புல்வெளியில் சிறிது நேரம் விளையாடினோம். பின்னர், குழந்தைகள் இருவரையும் சாப்பிட வைத்தேன். சாப்பிட்டபின் கைகழுவ வாய்க்காலுக்கு அழைத்துச் சென்றேன். அங்கு இருவரையும் வாய்க்காலில் தள்ளிவிட்டேன். இவ்வாறு, மோகன்ராஜ் போலீசாரிடம் கூறினான்.

போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறியதாவது: பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பும்போது, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். முடிந்தவரை பள்ளிக்கு குழந்தைகளை பெற்றோரே கொண்டு சென்று விடுவது நல்லது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில், நன்கு அறிந்த கால்டாக்சி, நம்பிக்கையான டிரைவர்களுடன் அனுப்ப வேண்டும். வாகனத்தில் பள்ளிக்குழந்தைகள் இருக்கின்றனரா என்பதையும் அறிந்து அனுப்ப வேண்டும். இவ்வாறு, சைலேந்திரபாபு கூறினார்.

மாணவனின் கதி என்ன? : கால்வாயில் தள்ளிவிடப்பட்ட ரித்திக் என்ன ஆனார் என்பது பற்றிய தகவல் இன்னும் முழுமையாக தெரியவில்லை. கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற நிலையில், அவரது உடலையும் தேடும் பணியில் போலீசாரும், தீயணைப்பு படையினரும் ஈடுபட்டுள்ளனர். நேற்று மாலை வரை அவரது நிலையை யாரும் அறிய இயலவில்லை.

அரசு ஆஸ்பத்திரியில் உறவினர் கூட்டம் : பல்லடம் அருகே மீட்கப்பட்ட மாணவி முஸ்கின் உடல், நேற்று பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த உடலை பெற வந்த பெற்றோர், உறவினர்கள் சோகமே சூழ காணப்பட்டனர். கோவை நகர மக்களின் நெஞ்சத்தை உலுக்கிய இந்த சம்பவத்தை அறிந்த பலரும் குழந்தையின் உடலை காண அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தனர்.

கோவையில் கடையடைப்பு: பள்ளி குழந்தைகள் முஸ்கின் மற்றும் ரித்திக் ஆகியோர் கொலை செய்யப்பட்ட தகவலால் நகரமே பரபரப்பில் மூழ்கியது. குழந்தைகள் குடும்பத்தினர் வசித்து வரும் ரங்கேகவுடர் வீதியையொட்டியுள்ள காத்தான்செட்டி சந்தை பகுதி மக்கள், சுக்கிரவார்பேட்டை பகுதி போன்ற இடங்களில் கடையடைப்பு நடந்தது. இந்த சம்பவத்தை நடந்து, நகரின் பல்வேறு பகுதிகளில் குறிப்பிட்ட கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

சுகுணா ரிப் பள்ளி நாளை விடுமுறை : முஸ்கின் ஜெயின், அவரது சகோதரன் ரித்திக் ஜெயின் ஆகியோரை "கால்டாக்ஸி' டிரைவர் கடத்தி சென்று உடுமலை பி.ஏ.பி., வாய்க்காலில் தள்ளி இருவரையும் கொலை செய்தான்.

பள்ளி குழந்தைகளுக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில், சுகுணா ரிப் பள்ளி, ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ளது. நாளை இந்த பள்ளி செயல்படாது என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளை கடத்தி கொலை செய்த கொடூர கொலைகாரன் சிறையில் அடைப்பு : பணத்துக்காகக் குழந்தைகளைக் கடத்தி கொலை செய்த கொடூர கொலைகாரன், நேற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டான். கோவை ரங்கேகவுடர் வீதியைச் சேர்ந்த ரஞ்சித் ஜெயின் என்பவரின் குழந்தைகள் முஸ்கின்(11), ரித்திக் (8) ஆகிய இருவரையும் கால் டாக்சி டிரைவர் மோகன்ராஜ் (23), ஆம்னி வேனில் கடத்திச் சென்று திருமூர்த்தி அணைக்கு அருகில் கால்வாய் வெள்ளத்தில் தள்ளி விட்டுக் கொடூரமாக கொன்ற சம்பவம், கோவையை மட்டுமின்றி தமிழகத்தையே உலுக்கியுள்ளது. பணம் பறிப்பதற்காக குழந்தைகளைக் கடத்திய மோகன்ராஜ் போலீசில் பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில், குழந்தைகளைக் கால்வாயில் தள்ளி விட்டுக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.

தப்பியோட நினைத்த மோகன்ராஜை , போலீசார் நேற்று முன் தினம் இரவில் சுற்றி வளைத்துப் பிடித்தனர். நேற்று முழுவதும் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது. கோவை மாநகர காவல்துறை கமிஷனர் சைலேந்திரபாபுவின் உத்தரவின்பேரில், நேற்று அவனை கைது செய்த வெரைட்டிஹால் போலீசார், அவன் மீது கொலை வழக்கு மற்றும் கடத்தல் வழக்குகள் பதிவுசெய்தனர். நேற்று இரவு 10.45 மணிக்கு, ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தியின் முன்பாக மோகன்ராஜை போலீசார் ஆஜர் படுத்தினர். வரும் 12ம் தேதி வரையிலும் அவனை "ரிமாண்ட்' செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அவனது முகத்தில் கருப்புத் துணியைச் சுற்றி, பலத்த பாதுகாப்புடன் அவனை அழைத்துச் சென்ற போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஈவு இரக்கமின்றி, அப்பாவிக் குழந்தைகளை கொலை செய்த மோகன்ராஜூவுக்கு ஆதரவாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எந்த வக்கீலும் ஆஜராவதில்லை என முடிவெடுத்திருப்பதாக வழக்கறிஞர் வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.dinamalar.com/district_detail.asp?id=117348

No comments:

Post a Comment