Monday, January 24, 2011

முதல்வரின் கவனத்துக்கு...!

தலையங்கம்:முதல்வரின் கவனத்துக்கு...!


பொறுப்பான பதவிகளை வகிப்பவர்களுக்கு சில பலவீனங்கள் இருக்கத்தான் செய்யும். எல்லோரும் மனிதர்கள்தானே? ஆனால், அந்த பலவீனங்களைப் பயன்படுத்தித் தங்களிடம் யாரும் தவறான காரியங்களைச் சாதித்துக் கொண்டுவிடக் கூடாது என்பதில் அவர்கள் கவனமாக இருப்பது வழக்கம். தமிழகத்தில் சமீபகாலமாக தவறான நபர்கள் முதல்வரின் பலவீனங்களைப் பயன்படுத்தித் தங்களைச் சட்டத்தின் பிடியிலிருந்தும், சமுதாயத்தின் அவமதிப்பிலிருந்தும் காப்பாற்றிக் கொள்ளத் துணிந்திருக்கிறார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.

முதல்வரைத் திருப்திப்படுத்த முடியும் என்பதற்காக மட்டுமே பல பாராட்டு விழாக்கள் நடத்தப்பட்டன என்பது அவருக்கே தெரியும். ஆனாலும் அவர் அதை ஏன் அனுமதித்தார் என்பதுதான் கேள்வி. ஒருவேளை, அறிக்கைகள் மூலமோ, பொதுக்கூட்டங்கள் மூலமோ தன்னால் வெளிப்படுத்த முடியாத கருத்துகளையும், செய்திகளையும் இதுபோன்ற விழாக்களின் மூலம் வெளிப்படுத்த முடியும் என்பதால்கூட இதுபோன்ற பாராட்டு விழாக்கள் நடத்துவதை அவர் அனுமதித்திருக்கலாம், ஊக்குவித்திருக்கலாம்.

அவருக்குப் பாராட்டு விழாக்கள் எடுத்ததில் பாதிக்கு மேற்பட்ட விழாக்கள் திரையுலகத்தினரால் நடத்தப்பட்டவை. முதல்வர் திரையுலகத்துடன் 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்புடையவர் என்பதும், அவர் மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினரில் ஒரு சிலர் தவிர, எல்லோருமே திரைப்படத்துறையுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்பதாலும், திரைப்படத் துறையினரின் விழாக்களுக்கு முன்னுரிமை கொடுத்து முதல்வர் கலந்து கொண்டிருக்கலாம், தவறில்லை.

ஆனால், அப்படி பாராட்டு விழா நடத்துபவர்கள் யார், எவர், அவர்களது பின்னணி என்ன, ஏன், எதற்காகத் தனக்கு இப்படி பாராட்டு விழா நடத்துகிறார்கள், என்பதை எல்லாம் நன்றாக விசாரித்துத் தேர்ந்து அதன் பிறகு அந்த நிகழ்ச்சிகளை அவர் ஒத்துக்கொண்டாரா என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது.

முதல்வர் கருணாநிதி எழுதாத திரைக்கதை வசனங்களா? மாறிவிட்ட காலகட்டத்தில், அதுவும் விலைவாசியில் தொடங்கி, சட்டம் ஒழுங்குவரை தலைக்கு மேல் பொறுப்புகள் இருக்கும் நேரத்தில் முதல்வர் கருணாநிதி திரைக்கதை வசனம் எழுதுகிறேன் என்று தன்னை வருத்திக்கொள்ள வேண்டியது தேவைதானா?

முதல்வரது பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அவர் திரைக்கதை வசனம் எழுதும் திரைப்படத்தைத் தயாரிக்க முன்வந்திருப்பது யார் தெரியுமா? சமீபத்தில் வெளியான "இளைஞன்' திரைப்படத் தயாரிப்பாளரும், தயாரிக்கப்பட இருக்கும் "பொன்னர் சங்கர்' படத் தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.மியூசிக் சேனலின் அதிபர் சாண்டியாகோ மார்டின். இவரது பின்னணியைக் கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது.

திருவனந்தபுரம் மாநகரக் காவல் துறையால் இவர் மீது மூன்று வழக்குகள் தொடரப்பட்டு அவை விசாரணையில் இருக்கின்றன. திருவனந்தபுரம் அருங்காட்சியக காவல் நிலையத்தின் காவல்துறை ஆணையர் (டிஜிபி) சிபி மேத்யூவும், விற்பனை வரித்துறை ஆணையரும் தொடர்ந்திருக்கும் இரண்டு வழக்குகள் அல்லாமல் ஒரு தனியார் மோசடி வழக்கும் இவர்மீது நிலுவையில் இருக்கிறது.

லாட்டரி வியாபாரியான மார்ட்டின், எந்தவிதமான ரகசியக் குறியீடோ, குலுக்கல் தேதியோ இல்லாமல் போலி லாட்டரி விநியோகம் செய்தார் என்பது வழக்கு. நீதிமன்றம் அதை விசாரணைக்கும் எடுத்துக் கொண்டிருக்கிறது. ஏற்கெனவே, சென்னையில்கூட இவர்மீது போலி லாட்டரி டிக்கெட் விற்பனைக்காக ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வெளிவந்திருக்கிறது.

இப்படி ஒருவர் குற்றப்பின்னணி உள்ளவரா, இல்லையா என்பதை முழுமையாக விசாரிக்காமல் அவர் தயாரிக்கும் திரைப்படத்துக்கு ஒரு மாநில முதல்வர் வசனம் எழுத முன்வந்ததே தவறு. முதல்வருக்கு சன்மானம் கொடுத்து வசனம் எழுத வைக்கும் ஒருவர் மீதான குற்றங்களைக் காவல்துறை தைரியமாக விசாரிக்குமா? அந்த தைரியத்தில்தானே, லாட்டரி அதிபர் மார்ட்டின் தமிழகத் தலைமை அரசு வழக்குரைஞரைத் தனது வழக்குரைஞராகக் கேரள நீதிமன்றத்தில் வழக்காட நியமிக்க முயன்றார்.

ஒருபுறம், அரசியலிலிருந்து குற்றப்பின்னணி உள்ளவர் களையெடுக்கப்பட வேண்டும் என்று முயன்று வரும் வேளையில், ஒரு மாநில முதல்வர் குற்றப்பின்னணி உள்ளவர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு வசனம் எழுதுகிறார். இப்படியொரு தவறைச் செய்வது முந்தா நாள் அரசியலுக்கு வந்த புதியவர் அல்ல. அறுபது ஆண்டு அரசியல் வாழ்வுக்குச் சொந்தக்காரரான முதல்வர் கருணாநிதி என்கிறபோது, ஏதோ விவரம் தெரியாமல் செய்துவிட்டார் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது!

கடந்தகாலச் சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. 1971-ம் ஆண்டும் மு. கருணாநிதிதான் தமிழக முதல்வராக இருந்தார். அன்றைய திமுக பொருளாளர் எம்.ஜி.ராமச்சந்திரன், செய்தி - மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக விருப்பம் தெரிவித்தபோது, அன்றும் முதல்வராக இருந்த கருணாநிதி சொன்ன பதில், "நீங்கள் நடிப்பதை விட்டுவிடுவதாக இருந்தால் அமைச்சராக்குகிறேன்' என்பதாக இருந்தது.

முதல்வர் கருணாநிதிக்கும் அதே பதில் இன்று பொருந்தும்தானே? கிடைக்கும் சன்மானத்தை நான் நன்கொடையாக வழங்கி விடுகிறேன் என்று சமாதானம் சொல்கிறார் முதல்வர். சன்மானம் பெறுவதே தவறு எனும்போது, அதை அவர் நன்கொடையாகக் கொடுத்தால் என்ன கொடுக்காமல் விட்டால்தான் என்ன?

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இன்றைய சமுதாயம் பிரச்னைகளை எதிர்நோக்கி இருக்கும் காலகட்டத்தில், மீன் பிடிக்கப் போகும் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள், விலைவாசி உயர்வால் நடுத்தர, ஏழை மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், முதல்வர் குளுகுளு அரங்கத்தில், தான் கதைவசனம் எழுதிய திரைப்படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் முதல்வர் அடிக்கடி மேடைதோறும் முழங்கும், "கும்பி எரியுது, குடல் கருகுது...' வசனம்தான் நம்மை அறியாமலே நினைவுக்கு வருகிறது.

சினிமாவுக்கு வசனம் எழுதுவது முதல்வருக்குத் தேவையில்லாத வேலை என்று யாரும் எடுத்துக்கூறுவதாக இல்லை. மக்கள்தான் உணர்த்த வேண்டும், வேறு வழி?

No comments:

Post a Comment