Monday, January 24, 2011

மலைவிழுங்கி மகாதேவன் கபில் சிபல்

வைகோ எச்சரிக்கை!

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் வழங்குவதில் எந்த ஊழலும் நடைபெறவே இல்லை; இந்திய அரசின் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி தவறாகக் கணக்கிட்டு, ஊழல் நடந்ததாகக் கூறி, அதனால் மத்திய அரசாங்கத்துக்கு மிகுந்த சங்கடத்தை ஏற்படுத்தி விட்டார் என்று, மலைவிழுங்கி மகாதேவனாக மாறி கபில் சிபல் கருத்துத் தெரிவித்து உள்ளது காங்கிரஸ் கட்சியால் இந்திய ஜனநாயகத்துக்கு ஏற்பட்டு உள்ள மிகப்பெரிய களங்கம் ஆகும்.

ஆனால், எப்படிப்பட்ட பலே திருடனும் ஏதாவது ஒரு தடயத்தை மறைக்க முடியாமல் பிடிபட்டுச் சிக்கிக் கொள்ளுவான் என்பதைப்போல, திறமையாக நீதிமன்றங்களில் வாதாடுவதில் வல்லவரான இந்த வழக்கறிஞர், காங்கிரசின் பூதாகரமான ஊழலை மொத்தமாக விழுங்கி ஏப்பம் விட முயன்றதில், தன்னை அறியாமல், ‘96,000 கோடிக்குத்தான், ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றையில் நாட்டுக்கு நட்டம் ஏற்பட்டது’ என்று ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்து இருக்கிறார்.

2001 ஆம் ஆண்டைச் சுட்டிக் காட்டும் மத்திய அமைச்சர், ஒன்றை வசதியாக மறைக்கிறார். 2001 ஆம் ஆண்டில், வெறும் 40 லட்சம் பயனாளிகள்தாம் அலைத் தொலைபேசிப் பயனாளர்களாக இருந்தனர். தற்போது, 35 கோடிப் பேர் பயனாளர்களாக உள்ளனர். அப்போது, உரிமம் வாங்குவதில் போட்டி இல்லை. ஏன், தேவையான விண்ணப்பங்களே வரவில்லை.

உரிமம் வழங்குவதில் ஊழல் நடைபெறவில்லை என்றால், மத்திய அமைச்சர் ராசாவை, பிரதமர் பதவி விலகச் சொன்னது ஏன்?

‘இன்னமும் இந்த ஊழல் அமைச்சரைப் பதவியில் எப்படி நீடிக்க விடுகிறீர்கள்’ என்று, உச்சநீதிமன்றம் மத்திய அரசின் கன்னத்தில் அறைந்தது ஏன்?

2007 ஆம் ஆண்டு, தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் செயலாளர் மாத்துhர், இந்த ஊழலுக்கு ஒப்புக் கொள்ளாததால், அவர் விடுமுறையில் இருந்த நாளில், அந்த ஆணையத்தின் பிறிதொரு உறுப்பினரிடம் கையெழுத்துப் பெற்று, அமைச்சர் ஆணை பிறப்பித்தது ஏன்?

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை உரிமம் முடிவு எடுப்பது பற்றி, அதிகாரம் அளிக்கப்பட்ட அமைச்சர் குழுவிடம் அறிவுரை பெற வேண்டும் என்று, அப்போதைய மத்திய சட்ட அமைச்சர் அக்டோபர் 2 ஆம் நாள் எழுதிய கடிதத்தை, அமைச்சர் இராசா குப்பையில் போட்டுவிட்டு, ‘சட்டம் அமைச்சகம் இதிலே மூக்கை நுழைக்க வேண்டாம்’ என்றும், முதலில் விண்ணப்பித்தவர்களுக்கே உரிமம் கொடுக்க முடிவு எடுத்து விட்டதாகவும், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அமைச்சர் ராசா கடிதம் எழுத, எப்படித்துணிச்சல் வந்தது?

அதேநாளில், ‘வெளிப்படையான ஏல முறையை இதில் பரிசீலிக்க வேண்டும்’ என்று பிரதமர் எழுதிய கடிதத்துக்கு, அன்று இரவிலேயே பிரதமரின் கருத்தை மறுத்து, அமைச்சர் இராசா, ‘2007 டிசம்பர் 26 இல், தான் ஏற்கனவே எடுத்த முடிவின்படி ஸ்பெக்ட்ரம் உரிமம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என்று, இதுவரை சுதந்திர இந்திய வரலாற்றில், எந்த அமைச்சரும் எழுதத் துணியாத விதத்தில், பிரதமருக்குக் கடிதம் எழுதியதற்கு, 2008 ஜனவரி 3 இல் பிரதமர் எழுதிய கடிதத்தில், ‘அமைச்சரின் கடிதம் கிடைத்தது’ என ஒப்புகை அளித்து, எவரோ ஆட்டுவிக்கும் கைப்பொம்மை போலச் செயல்பட்டது, வெட்கத்துக்கும், அவமானத்துக்கும் ஆளானது ஏன்?

அலைக்கற்றை உரிமம் பெற, அக்டோபர் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று கெடு விதித்தார்கள். ஆனால், அக்டோபர் 10 ஆம் தேதி அன்று வெளியிட்ட ஒரு அறிவிப்பில், ‘செப்டெம்பர் 25 ஆம் தேதிதான் கடைசி நாள் என்றும்; அதுவரை வந்த விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலிப்போம்’ என்று, முன்னர் விதித்த கெடுவை மாற்றிய, இதுவரை எவரும் செய்யத் துணியாத இந்த அப்பட்டமான மோசடிக்கு, புதிய அமைச்சர் கபில் சிபல், நியாயம் கற்பிக்க முனைந்தால், அவரும் எத்தர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்.

இந்த அறிவிப்பின் மூலம், தகுதி வாய்ந்த 376 விண்ணப்பங்களை ஒரேயடியாகக் குப்பைக் கூடையில் துhக்கிப் போட்டு விட்டார்கள்.

2008 ஜனவரி 10 ஆம் தேதி அன்று, ‘பிற்பகல் 2.30 மணி முதல், 3.15 மணிக்குள், அதாவது 45 நிமிடங்களுக்குள், ஆவணங்களோடும், 1600 கோடி ரூபாய் பணத்தோடும், நேரில் வருகின்ற விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே உரிமம் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்து, ஸ்வான், டெலிகாம் ஆகிய நிறுவனங்களுக்கு மட்டும் முன்கூட்டியே தகவல் தந்து, அவர்கள் அக்டோபர் 9 ஆம் தேதி அன்றே 1600 கோடி ரூபாய்க்கு, வங்கியில் எடுக்கப்பட்ட வரைவோலைக் கொண்டு வந்து தாக்கல் செய்து உள்ளனர்.

அந்த விண்ணப்பங்களுக்கு, 1,2 என அமைச்சர் இராசாவே வரிசை எண் கொடுத்தது, சர்க்காரியா கமிசன் வருணித்தது போல விஞ்ஞானபூர்வ ஊழல் அல்லவா?

உரிமம் வழங்கப்பட்ட 122 நிறுவனங்களுள், 85 நிறுவனங்கள் போலியானவை. அது மட்டும் அல்ல, டெலிகாம் நிறுவனத்தில், கோடீசுவரர் ரத்தன் டாட்டா ஒளிந்து இருப்பதும், ஸ்வான் நிறுவனத்தில், தி.மு.க. அமைச்சருக்கு நெருக்கமானவர்கள், பினாமிகளாக ஒளிந்து இருப்பதும், மறைக்க முடியாத ஆவணங்கள் அல்லவா?

வெறும் அனுமதிக் கடிதத்தின் அடிப்படையிலேயே, இந்த நிறுவனங்களுக்குப் பத்தாயிரம் கோடி, பனிரெண்டாயிரம் கோடி என வங்கிகள் கடன் கொடுத்து இருப்பது, இந்திய மக்களின் பொதுச் சொத்தை, வரிப்பணத்தை, காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி பகல் கொள்ளை அடித்ததன் அடையாளம்தானே?

இமாலய ஊழலைச் செய்த அதே தி.மு.க. அமைச்சர் ஆண்டிமுத்து ராசாவுக்கே, 2009 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், அதே தொலைத்தொடர்புத் துறையைப் பெறுவதற்கு, தி.மு.க. தலைமை படாதபாடுபட்டதும், அந்த ஊழல் பேர்வழிக்கே அதே துறையைப் பிரதமர் ஒதுக்கியதும், இதன் பின்னணியில் உள்ள மர்மம் என்ன? என்ற கேள்வியை விஸ்வரூபம் எடுக்கச் செய்து உள்ளது.

இந்த ஊழலில் காங்கிரசும் கை கோர்த்து இருப்பதால்தான், நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு மத்திய அரசு மறுக்கிறது.

இந்த விவகாரத்தில், சி.பி.ஐ. இரண்டு ஆண்டுகளாகக் கைகட்டிக் கிடந்தது ஏன்?

அது, தற்போது காங்கிரசுக்கு உதவி செய்யும் விசாரணைக் குழு ஆகி விட்டது; ‘Congress Bureau of Investigation’ என்று, ஊழல் கண்காணிப்புக்குழுவின் முன்னாள் தலைவர் விட்டல் சொன்னது சரியாகப் போய்விட்டது.

நாட்டையே உலுக்கிய ஊழலில், பகாசுரக் கம்பெனிகளுக்கும், தொலைத்தொடர்பு அமைச்சருக்கும் இடைத்தரகராகச் செயல்பட்ட நீரா ராடியா என்ற பெண்மணியை, சி.பி.ஐ. அலுவலகத்தில் விசாரிக்காமல், அவரது வீட்டுக்குச் சென்று காபி குடித்து விட்டு வந்து இருக்கிறார்கள்.

ஊழல் மன்னன் ஆண்டிமுத்து இராசா, ‘நான் பிரதமரிடம் 2008 லேயே இதுபற்றி விரிவாகப் பேசி உள்ளேன்; அவர் சம்மதத்தோடுதான் உரிமம் வழங்கப்பட்டது; தற்போதைய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன், இதுபற்றி அப்போதே நான் பேசி விட்டேன்’ என்று சொல்லி இருப்பது, இந்தக் கூட்டுக் கொள்ளையில், காங்கிரஸ் முக்கியப் பங்கு வகிக்கிறது என்ற உண்மையை நோக்கியே பிரச்சினையைக் கொண்டு செல்கிறது.

கொள்ளைக்காரனையே ஊருக்குக் காவல்காரன் ஆக்குவதைப் போல, பாமாயில் இறக்குமதி ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட தாமசையே, இந்தியாவின் ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் தலைவராக ஆக்கியது, காங்கிரசின் முகமூடியைக் கிழித்து எறிந்து விட்டது. அந்த வரிசையில், இப்போது, ஸ்பெக்ட்ரம் ஊழலை விழுங்க கபில் சிபல் வந்து சேர்ந்து இருக்கிறார்.

ராஜீவ் காந்தி ஆட்சியில், 400 போபர்ஸ் பீரங்கிகளை வாங்கியதில், 64 கோடி ரூபாய் லஞ்சமாக, கமிஷனாக, சோனியா காந்திக்கு நெருக்கமான இத்தாலியர் ஒட்டாவியோ கொட்டராச்சிக்கும், துபை நிறுவனங்களின் அதிபரான வின்சட்டாவுக்கும் கொடுக்கப்பட்ட உண்மை நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

‘போபர்ஸ் பீரங்கி பேரத்தில் கமிஷன் கொடுக்கப்பட்டு உள்ளது; அதற்கு 41 கோடி ரூபாய் வருமானவரி கட்ட வேண்டும் என்று, இந்திய வருமானவரி மேல் முறையீட்டுத் தீர்ப்பு ஆயம், அறிவித்து விட்டது. இதற்குப்பிறகும், கொட்டராச்சி மீதான வழக்கை வாபஸ் பெற வேண்டும் என, சி.பி.ஐ. உச்சநீதிமன்றத்தில் மன்றாடுகிறது.

இன்றைய காங்கிரசின் தலைமையும், தி.மு.க. தலைமையும்தான், இந்திய-தமிழக ஊழலின் ஊற்றுக்கண்கள். அதனால்தான், இந்த ஊழல் திமிங்கலங்களின் கூட்டணி என்றும் பிரிக்க முடியாதது என்று, தமிழக முதல்வரும் சொல்லுகிறார், பிரதமரும் சொல்லுகிறார்.

இந்திய ஜனநாயகத்தைக் காக்கவும், தமிழ்நாட்டில் உள்ள மக்களின் உயிரையும், உடைமையையும், சொத்துக்களையும் பாதுகாக்கவும், ஜனநாயக உரிமைகளைக் காக்கவும், தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வாக்காளர்களுக்கு ஊழல் பணத்தை வாரி இறைக்கத் திட்டமிட்டு உள்ள நிலையில், அதனையும் முறியடித்துத் தோற்கடிக்க வேண்டியது, தமிழக மக்களின் தலையாய கடமை.

காங்கிரஸ், தி.மு.க. செய்த உலக மகா ஊழல்களை, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு பிரச்சாரத்தை அனைவரும் முடுக்கி விட வேண்டும்

‘தாயகம்’ வைகோ
சென்னை-8 பொதுச்செயலாளர்
09.01.2011 மறுமலர்ச்சி தி.மு.க.

No comments:

Post a Comment