கண்டுக்காதே கந்தசாமி
குடமுருட்டி குண்டு
அ.மனோகரி, ஆரணி, திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து எழுதுகிறார். 'என்னைக் கொல்ல சதி நடக்கிறது, இருப்பது ஒரு உயிர், அது போவது ஒரு முறை, நான் சாவுக்கு அஞ்சமாட்டேன்...' என்று தன் பழைய பாணி ராஜ்பாட் வீர வசனத்தை பறை சாற்றி தன் நீண்ட சுய லாப அரசியல் சுக வாழ்வில் 11 ஆயிரம் முறையாக, வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும்' என்று தமிழக மக்களுக்கு வள்ளலாக, சிறந்த நகைச்சுவையை வழங்கியுள்ளார் கருணாநிதி.
ஏதாவது எக்குத்தப்பாக எகத்தாளமாக இறுமாப்பாக பேசி இக்கட்டில் மாட்டி இன்னல் பட்டாலோ, மற்ற அரசியல் தலைவர்களின் புகழ் திக்கெட்டும் கொடி கட்டிப் பறந்தாலோ மக்களின் முழுக் கவனத்தையும் திசை திருப்பவும், தி.மு.க., தொண்டர்களின் காதில் பூ சுற்றி அனுதாபம் பெறவும் இந்த நாடக வசனத்தை ஏமாற்று ராஜ தந்திரமாக பல ஆயிரம் முறை பரிதாபமாகக் கூறி, தமிழக மக்களுக்கு தொடர் நகைச்சுவையாக வாரி வழங்கி வருகிறார் கருணாநிதி.
நவரசம் ததும்ப நம்பும்படி நடிப்பதில் நாயகன் தான் கருணாநிதி. 'சிவாஜியையே நடிப்பில் மிஞ்சி விட்டார் கருணாநிதி' என்று வைகோவால் மனமாரப் பாரட்டுப் பெற்றவர் தான் கருணாநிதி. ஆனால் கருணாநிதியின் நவரச நடிப்பில் மிஞ்சி எஞ்சி இருப்பது நகைச்சுவை தான் என்றால் அது மிகையாகாது!
கடந்த 1971ல் எம்.ஜி.ஆரின் புகழ் எட்டுத் திக்கும் எழுச்சியுடன் தமிழக மக்களிடம் எட்டாப் புகழ் பெற்றார். தன் சாம பேத தண்ட எதிர்ப்பை காண்பித்து தோல்வி கண்டார் அன்று முதல் வராயிருந்த கருணாநிதி.
அந்த கடுங் கோபத்தால், 'குடமுருட்டி பாலத்தில் குண்டு வைத்து என்னைக் கொல்ல சதி, இருப்பது ஒரு உயிர், போவது ஒருமுறை...' என்று மக்கள் கவனத்தை திசை திருப்ப அன்று ஒரே போடாக போட்டு நாடகமாடினார் கருணாநிதி.
ஆனால், போலீஸ் விசாரணையில், 'பாலத்தில் கிடந்தது குண்டு இல்லை, வெறும் சாணி உருண்டை தான் என்றதும், அன்று தமிழகமே கொல்லென்று வானமே வெடிக்கும் அளவு குலுங்கிச் சிரித்தது.
இன்றும் 'சாணி உருண்டை'யைப் பார்த்தாலே கருணாநிதியை மறக்காமல் நினைத்து தமிழக மக்கள் நமட்டுச் சிரிப்பு சிரிக்கும் அளவுக்கு தொடர் நகைச்சுவை வள்ளலாகி வழங்கி வருகிறார் கருணாநிதி.
சரி...இன்று இந்த திடீர் நகைச் சுவைக்கு காரணம் தான் என்ன?
* வாக்களித்தபடி வேட்பாளராக விரும்புவோர், உடனே பணத்தை கட்ட வேண்டும் என்று கந்து வட்டிக்காரர் போல் கறாராக கூறினார் கருணாநிதி. பின், 'ஐயையோ...அதில் கடுகளவும் உண்மையில்லை' என்று 'சிகை' அலங்காரம் பண்ணி பல்டி அடித்தார் கருணாநிதி.
* தேசிய செயல் திட்டத்தில் நான் கையெழுத்தே போடவில்லை, நிருபிக்க முடியுமா? என்று 'நகை' அலங்காரம் பண்ணி, நாசூக்காக நக்கலாக சவால் விட்டார் கருணாநிதி. பா.ஜ., இல.கணேசன் கையும், களவுமாக கருணாநிதியின் அழகான ஆங்கில கையெழுத்தைக் காண்பித்து உண்மையைப் போட்டு உடைத்தார்.
* தயாநிதி மாறனுக்கு மந்திரி பதவி கேட்டார் கருணாநிதி என்று முதல்வர் ஜெ., குற்றம் சாட்டினார். 'ஆம்...ஜெ., கூறியது உண்மை தான்...' என்று தமிழக பா.ஜ., தலைவர்கள் குமாரவேலுவும், செ. ராஜாவும் கூறினர். இதற்கு 'பகை' அலங்காரத்துடன் பகைமை பாராட்டி வக்கீல் நோட்டீஸ் வழங்கியுள்ளார் கருணாநிதி.
இப்படி, முக்கோண வடிவில் வலையில் வம்படியாக சிக்கி 'ஆப்பு அகற்றிய குரங்கு கதையாக அனுதினமும் அல்லல்படுகிறார் கருணாநிதி.
ஆகவே, மக்கள் கவனத்தை திசை திருப்பவும், தி.மு.க.வின் ஏழைத் தொண்டனிடம் இரக்கம் பெறவும் மீண்டும் முருங்கை மரம் ஏறியுள்ளார் கருணாநிதி. இவர் ஒருவருக்குத் தான் ஒரே ஒரு உயிர் இருப்பதாக கூறுகிறார் கருணாநிதி. மற்றவர்களுக்கெல்லாம் பல நூறு உயிர் இருப்பதாக கூறுகிறார் கருணாநிதி. மற்றவர்களுக்கெல்லாம் பல நூறு உயிரா உள்ளது என்று தண்ணீர் தட்டுப்பாடு, தகதகக்கும் அக்னி நட்சத்திர வெயிலில் தவியாய்த் தவிக்கும் தமிழக மக்கள் சினிமா பார்க்காமலேயே கருணாநிதியின் இந்த தொடர் நகைச்சுவையை அநுபவித்து சிரிக்கின்றனர்.
கடந்த 35 வருடங்களுக்கு முன் பேசிய அர்த்தமில்லா ராஜ்பாட் நாடக வசனமெல்லாம், இனி இந்த தமிழக டிஜிட்டல் மக்களிடம் வேகாது எடுபடாது.
No comments:
Post a Comment