Sunday, December 5, 2010

2 ஜி அலைக்கற்றை ஏலம் ரூ. 1.10 லட்சம் கோடியை மீட்கலாம்: குருமூர்த்தி



மதுரை, டிச.5: 2ஜி அலைக்கற்றை ஏலம் விவகாரத்தில் தகுதியில்லாத நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுத்தால் சுமார் ரூ.1.10 லட்சம் கோடியை மீட்கலாம் என பத்திரிகையாளர் எம்.எஸ். குருமூர்த்தி தெரிவித்தார்.

மதுரையில் கலாசார ஒற்றுமைக்கான வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் "தேசிய அளவிலான பிரச்னைகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் பேசியது:

சுதந்திரப் போராட்ட காலத்திலிருந்தே சமுதாயத்தில் வழக்கறிஞர்களின் பங்கு மிக முக்கியமானதாகக் கருதப்பட்டு வருகிறது. இப்போது அனைத்துத் தரப்பு மக்களிடமும்

2ஜி அலைக்கற்றை ஊழல் விவாதப் பொருளாகியுள்ளது. ஸ்பெக்ட்ரம் என்பது நமது நாட்டின் சொத்து. இதன் ஏலத்தில் ரூ. 1.76 லட்சம் கோடி வரை ஊழல் நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த ஊழலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா மட்டும் பொறுப்பு அல்ல. அவருக்குப் பின்னால் பலருக்கும் தொடர்பு உள்ளது.

இது வெளிப்படையாக நடந்த ஊழல். மிகப் பெரிய மோசடி. இதில் தொடர்புடையவர்கள் யார் யார் என்பதை வெளிக்கொண்டு வர பொதுமக்கள் அனைவரும் அரசை வலியுறுத்த வேண்டும்.

இவ்வளவு பெரிய ஊழல் நடைபெறுவதற்கு தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்ட அபரிமிதமான வளர்ச்சியே காரணம். 2001-ம் ஆண்டில் இந்தியாவில் 30 லட்சம் பேர் தொலைபேசி இணைப்புப் பெற்றிருந்தனர். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வளர்ச்சியால் இப்போது 68.8 கோடி தொலைபேசி இணைப்புகள் உள்ளன. இதில், செல்போன் இணைப்புகள் மட்டும் 59 கோடி.

2003-ம் ஆண்டில் 100-க்கு 5 பேர் மட்டுமே தொலைபேசி இணைப்புப் பெற்றிருந்தனர். இப்போது 100-க்கு 58 பேர் செல்போன் இணைப்புப் பெற்றுள்ளனர்.

முன்கூட்டியே அதிக லாபம் கிடைக்கக் கூடிய துறையாக இது இருந்ததால், தகுதியே இல்லாத அதாவது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் கூட இந்தத் துறையில் காலடி எடுத்து வைக்கத் தொடங்கின.

2001-ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் அனுமதிக்காக ரூ. 1,658 கோடி நுழைவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 2008-ம் ஆண்டிலும் இந்த நுழைவுக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. அலைக்கற்றை ஒதுக்கீட்டை முதலில் வந்தவர்களுக்கே முதலில் ஒதுக்கீடு என்று இல்லாமல், லாபம் தரக்கூடிய வகையில் ஒதுக்கீடு செய்யலாம் என்ற பிரதமர் அலுவலகத்திலிருந்து வந்த யோசனையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் என்பது நமது நாட்டின் சொத்து. இதை ஏலம் அடிப்படையிலேயே ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும். ஆனால், அனைவருக்கும் தெரிந்தே இவ்வளவு பெரிய மோசடித்தனமான ஊழல் நடைபெற்றுள்ளது. இதை மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இதில் தொடர்புடைய ஆ. ராசா தவிர, அவருக்குப் பின்னணியில் உள்ளவர்களையும் வெளியில் கொண்டுவர வேண்டும். ஏலம் விவகாரத்தில் ராசா அடிக்கடி தேதிகளை மாற்றியுள்ளது தவறானது. இதனால், தகுதியே இல்லாத நிறுவனங்கள் பயனடைந்துள்ளன.

இந்த ஏலம் விஷயத்தில் 122 நிறுவனங்கள் விண்ணப்பித்ததில், 85 நிறுவனங்கள் தகுதியே இல்லாதவை. சில நிறுவனங்கள் தொலைத்தொடர்புத் துறைக்குச் சம்பந்தமே இல்லாதவை. இந்த நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்து, மறு ஏலம் விட வேண்டும். இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு மறு ஏல நடவடிக்கையில் ஈடுபட்டால், ரூ. 1.76 லட்சம் கோடியில், சுமார் ரூ. 1.10 லட்சம் கோடி வரை மீட்க முடியும். மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு ஒரு சவாலாக எடுத்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், நீரா ராடியா டேப் விவகாரத்தில் அரசியல்வாதிகள், ஊடகம், அதிகாரிகள், பிரபல தொழிலதிபர்கள் உள்ளிட்டோருக்குத் தொடர்பு உள்ளதன் மூலம் ஜனநாயகம் எந்தளவுக்கு உள்ளது என்பதை நாம் பார்க்க முடிகிறது. நீரா ராடியா தொடர்பாக 2008 ஏப்ரல் 1 முதல் 2009 மே 11 வரை 5,400 தொலைபேசி உரையாடல்கள் வருமான வரித் துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், 103 உரையாடல்கள் மட்டுமே இப்போது வெளியாகியுள்ளன. பதிவு செய்யப்பட்டுள்ள மற்ற தொலைபேசி உரையாடல்களும் வெளி வந்தால் பல உண்மைகள் வெளியாகக் கூடும்.

அதேபோல், 45 நிமிடங்களில் மனுக்களை பூர்த்தி செய்து, அரசு கேட்டபடி உறுதிப் பத்திர ஆவணங்களை, உரிய உத்தரவாததாரர்களின் கையொப்பங்களுடன் அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த அனைத்து நடைமுறையும் 45 நிமிடங்களுக்குள் நடைபெற்றிருக்குமா? முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தகவல் தரப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. இந்த ஊழல் குறித்து ஜே.பி.சி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கக் கூடாது என்றார் குருமூர்த்தி.

கலாசார ஒற்றுமைக்கான வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜி.ஆர்.சுவாமிநாதன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

Source: www.dinamani.com

No comments:

Post a Comment