சுப்ரீம் கோர்ட் கண்டிப்பு... மத்திய அமைச்சர் ராஜினாமா... 20 நாட்கள் பார்லிமென்ட் முடக்கம்... என அடுத்தடுத்து, "ஸ்பெக்ட்ரம்' விவகார காட்சிகள் வேகமாக நகர்ந்து வருகின்றன. இந்த காட்சிகளில் முத்தாய்ப்பாக, கடந்த வாரம் ராஜா மற்றும் அவரது நண்பர்கள் வீடுகளில் சி.பி.ஐ., அதிரடியாக நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியது.
பார்லிமென்ட் கூட்டுக்குழுவை அமைத்து, ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து விசாரிக்க வேண்டும் என்பது எதிர்க்கட்சிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது. இவர்களின் கோரிக்கை, பார்லிமென்டை முடக்கிப் போட்டுள்ளதோடு, பொதுமக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ஈடான பரபரப்பை சுப்ரீம் கோர்ட் தனது கேள்விகள் மூலம் ஏற்படுத்தி வருகிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜா மீது வழக்கு தொடர, சுப்பிரமணிய சாமி அனுமதி கோரிய கடிதத்திற்கு இரண்டு ஆண்டுகளாக பிரதமர் பதில் அளிக்காதது ஏன் என்பதில் துவங்கி, ராஜா பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் இடம் பெற்றுள்ள வார்த்தைகளின், "தொனி' குறித்தெல்லாம் கேட்டு சுப்ரீம் கோர்ட் வறுத்தெடுத்து வரும் நிலையில் தடுமாறி நிற்கிறது மத்திய அரசு. ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., தனது விசாரணையை முன்பே துவங்கிவிட்டது என்றாலும், குற்றச்சாட்டுக்குள்ளான ராஜாவிடம் நேரடியாக விசாரிக்கவோ, அவரது இடங்களை சோதனையிடவோ இல்லை. இது தொடர்பாகவும் சுப்ரீம் கோர்ட் தனது கண்டனத்தை பதிவு செய்தது.
இவையெல்லாம் நடந்து முடிந்த நிலையில், திடீரென கடந்த புதன்கிழமையன்று சி.பி.ஐ., அதிரடியாக களமிறங்கியது. முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் சென்னை, பெரம்பலூர் வீடு, அவரது நண்பர் வீடு உள்ளிட்ட ஆறு பேரின் வீடு சி.பி.ஐ., தனிப்படையால் சோதனைக்குள்ளாக்கப்பட்டது. வழக்கம்போல், சோதனையில் பல் வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. "சி.பி.ஐ., அமைப்பு சுயமாக செயல்படக்கூடிய அமைப்பு' என்றாலும், மத்திய அரசின் கோபத்தை காட்ட பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதமாகவே, சி.பி.ஐ., செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. தங்களை எதிர்க்கும் கட்சிகள் மீது, சிபி.ஐ., பாய்வதும், அவர்கள் இணக்கமாக வந்ததும், வேகம் குறைவதும் இதற்கு எடுத்துக்காட்டு என்று அவர்கள் கூறுகின்றனர். எது எப்படி இருந்தாலும், ராஜாவின் வீட்டில் சி.பி.ஐ., நடத்திய ரெய்டு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மிக முக்கியமான கட்டமாக அரசியல்வட்டாரத்தில் கருதப்படுகிறது. இந்த ரெய்டு காரணமாக, தி.மு.க.,- காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் அதிகமாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது குறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது: இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்து வரும் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், கடந்த ஒரு மாதமாகவே, "கிளைமேக்ஸ்' காட்சிகள் வேகமாகி வருகின்றன. குறிப்பாக, சுப்ரீம் கோர்ட் எழுப்பிய அடுத்தடுத்த கேள்விகள், பார்லிமென்ட் முடக்கியபோதே, இந்த விவகாரம் உச்ச அளவை தொட்டுவிட்டது. இத்தனைக்கும் பிறகும், ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பான ஆவணங்களை, ஆதாரங்களை ராஜாவும், அவரது சகோதரர், நண்பர் உள்ளிட்டவர்களும் வைத்திருப்பார்கள் என்று யாராவது நம்புவார்களா என்பதுதான் பொதுவாக எழுந்துள்ள கேள்வி. "ஹவாலா, பதலா' என திரைமறைவில் கோடிக்கணக்கில் பண பரிவர்த்தனைகள் கொடிகட்டிப் பறக்கும் நம் நாட்டில், எவ்வளவு பெரிய தொகையையும் இரண்டு மணி நேர அவகாசத்தில் வெளிநாட்டுக்கு கடத்த முடியும் என்கின்றனர் நிபுணர்கள். பின் எதற்காக இந்த ரெய்டு என்று கேட்டால், அரசியல் காரணங்கள் தான் முன் வரிசையில் நிற்கின்றன.
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ராஜா ராஜினாமாவிற்கு பிறகு காங்கிரஸ் மீது தி.மு.க., தனது பாய்ச்சலை தொடர்ந்து வேகப்படுத்தி வருகிறது. "சேர்ந்திருப்பது தீது என்றால், யோசிக்கிறோம்' என்றதோடு, "விலகினால், அது காங்கிரசுக்குத்தான் இழப்பு' என்றும் முதல்வர் கருணாநிதி வெளிப்படையாக தெரிவித்தார். தி.மு.க.,வின் இந்த கேள்விகளுக்கு காங்கிரஸ் தரப்பில் இருந்து எந்த, "ரியாக்சனும்' காட்டப்படவில்லை. காங்கிரஸ் எதற்காக இப்படி மவுனம் காக்கிறது என்ற கேள்விக்கு பதிலாகத்தான், ராஜாவின் வீட்டில், சி.பி.ஐ., ரெய்டு நடந்துள்ளது. இந்த ரெய்டு மூலமாக காங்கிரசுக்கு இரு லாபங்கள் கிடைத்துள்ளன. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மத்திய அரசு முறையாக செயல்படுகிறது என்பதை சுப்ரீம் கோர்ட்டில் தெளிவுபடுத்த ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. தனது, "பாட்னரான' தி.மு.க.,விற்கு, தங்களது பலம் என்ன என்பதை வெளிப்படுத்தும், எச்சரிக்கையாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சி.பி.ஐ., வசம் ஆதாரங்கள் குவிந்துள்ள நிலையில், இந்த ரெய்டு காரணமாக, இந்த அரசியல் லாபங்களைத் தவிர, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் பெரிய அளவில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment