Saturday, December 11, 2010

ஸ்பெக்ட்ரம் ஊழல்: சி.பி.ஐ., சோதனை கண்துடைப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்

ராமநாதபுரம் : ""முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா வீட்டில், சி.பி.ஐ., சோதனை செய்தது கண்துடைப்பு, இதில் நீதி கிடைக்காது,'' என, பா.ஜ., மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

இந்துக்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்க வலியுறுத்தி நடந்து வரும் தாமரை ரதயாத்திரை, ராமநாதபுரம் வந்தது.

இதில் வந்த அவர், நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஊழல் பற்றி மக்கள் நன்கு தெரிந்து வைத்துள்ளனர். ஸ்பெக்ட்ரம் ஊழலை விசாரிக்க பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு, காங்., தி.மு.க., அனுமதி அளிக்காததன் மூலம், அவர்கள் தவறு செய்து இருப்பதால் நீதியை எதிர்கொள்ள அச்சம் ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகியுள்ளது. இதன் மூலம் காங்.,- தி.மு.க., கட்சிகள் மக்களுக்கு பெரிய துரோகம் செய்து விட்டன.ராஜா வீட்டில் சி.பி.ஐ.,நடத்திய சோதனை கண்துடைப்பு. இதில் நீதி கிடைக்காது. இந்த விஷயத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணையை அமைக்கும் வரை நாங்களும் ஓயமாட்டோம். இது ஒரு நபர் ஊழல் அல்ல; பல முக்கிய நபர்கள் விஞ்ஞான ரீதியாக செய்துள்ள மிகப் பெரிய ஊழல்.

இது தொடர்பாக ராஜாவை எப்போதோ கைது செய்து, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியிருக்க வேண்டும். அரசு தன் கடமையை செய்யத் தவறி விட்டது. வரும் தேர்தலில், தி.மு.க.,வை தோற்கடிக்க வேண்டியது அவசியம். எனவே, அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழலில் வாஜ்பாயை குற்றம் சொல்ல யாருக்கும் தகுதி இல்லை. பா.ஜ., ஆட்சியிலிருந்தே விசாரணை நடத்த வேண்டும் என கருணாநிதி கூறியுள்ளார். நாங்கள் எந்த விசாரணைக்கும் தயார். இவ்வாறு அவர் கூறினார்.

ஓட்டு கேட்டு வரவில்லை : பா.ஜ.,தலைவர் ஆவேசம்பா. ஜ., தாமரை ரத யாத்திரை பரமக்குடி வந்தது.

இதில் பா.ஜ., தலைவர் பேசுகையில்,"" காங்., , தி.மு.க., அரசு மக்களுக்கு துரோகத்தை இளைக்கிறது. சிறுபான்மை ஓட்டு வங்கியை மையமாக கொண்டு செயல்படுகிறது. நான் ஒன்றும் என் கட்சிக்கு ஓட்டு கேட்டு வரவில்லை. இது போன்ற துரோகம் இளைக்கும் அரசின் நிலைமை மக்களிடம் எடுத்துக் கூற வந்துள்ளேன்.கட்சிகள் அனைத்தும் , குவாட்டர் பாட்டில், பிரியாணி, பணத்தை கொடுத்தால் ஓட்டை பெற்று விடலாம் என கருதுகின்றன,''என்றார். மாநில பொதுச்செயலாளர் நாகராஜன், தேசிய குழு உறுப்பினர் முரளிதரன், இளைஞரணி பொதுச்செயலாளர் பாலகணபதி, மாவட்ட தலைவர் சண்முகராஜ், நகர் செயலாளர்கள் பாண்டிக்குமார், முரளிதரன், இளைஞரணி தலைவர் திருப்பதி, செயலாளர்கள் ரமேஷ், ஜெயகுரு, நகர் தலைவர் ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர் . கீழக்கரை: திருப்புல்லாணி,கீழக்கரை,ஏர்வாடி வந்த யாத்திரைக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பா.ஜ.,மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் யாத்திரையின் நோக்கத்தினை விளக்கி பேசினார்.

மர்ம சூட்கேஸ் : பா.ஜ.,தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் தாமரை ரத யாத்திரை திருப்புல்லாணி வருவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். ரதம் திருப்புல்லாணி வந்தநிலையில்,ரதம் நின்றஇடத்தின் அருகே மர்ம சூட்கேஸ் ஒன்று இருந்ததை, மணிமாறன் எஸ்.ஐ., கண்டார். இது போலீசார் மற்றும் அங்கு நின்றவர்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியது. ஏர்வாடி இன்ஸ்பெக்டர் தெய்வீகபாண்டியன் சூட்கேசை கைப்பற்றி , ஸ்டேஷனுக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்தார். போலீஸ்ஸ்டேஷன் அருகே உள்ள நீர் தேக்கத்தில், பாதுகாப்பாக வைத்தனர். வெடிகுண்டு நிபுணர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே , கீழக்கரை அருகே அலவாய்க்கரை முத்து மாரியம்மன் கோயில் பூஜாரி தசரசு சுவாமி, சூட்கேசை தேடி வந்தார். உள்ளே இருந்த பொருட்களின் அடையாளங்களை தெரிவித்த பின் , திறந்து பார்த்த போது, ""சுவாமி படங்கள் ,பூஜை பொருட்கள் இருந்ததை,'' கண்டனர். இதனால் போலீசாரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.அவரிடமே சூட்கேசும் வழங்கப்பட்டது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=143896

No comments:

Post a Comment