Monday, January 31, 2011

தி.மு.க ஆட்சிக்கு வராமல் தடுக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

படித்தவர்கள் எல்லோரும் தவறாமல் தேர்தல் தினத்தன்று காலையே போய் தங்கள் வோட்டுகளைப் பதிவு செய்தால் நிச்சயமாக தி.மு.க- காங்கிரஸ் அணி தேர்தலில் தோல்வி அடையும் வாய்ப்பு பலமாக இருக்கிறது என்பதை சென்னைப் புத்தகக் கண்காட்சியில் என் அரங்கில் நடைபெற்ற தேர்தல்கள் காட்டுகின்றன.


விலைவாசி கடும் உயர்வுக்கு யார் பொறுப்பு என்பது ஒரு நாளைய தேர்தல் கேள்வி. காங்கிரஸ்-தி.மு.க ஆட்சிகள் என்று சோன்னவர்கள் 62 சதவிகிதம். பதுக்கல் வியாபாரிகள் என்று கருதியோர் 30 சதவிகிதம். (பேராசிரியர் அன்பழகன் சொன்னது போல) யாரும் பொறுப்பு இல்லை. இயற்கைப் பேரழிவு போன்றது என்றவர்கள் எட்டு சதவிகிதம்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பொறுப்பான எதிர்க்கட்சியாக யாராவது செயல்பட்டிருக்கிறார்களா என்று கேட்டபோது, யாரும் இல்லை என்று 61 சதவிகிதம் பேர் வாக்களித்திருக்கிறார்கள். இடதுசாரிகளைக் குறிப்பிட்டவர்கள் 18 சதவிகிதம். அ.இ.அ.தி.மு.கவை சொன்னவர்கள் 14 சதவிகிதம். பா.ம.கவைக் கருதியவர்கள் 7 சதவிகிதம்.

தி.மு.கவுக்குள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் செல்வாக்குடன் இருப்பவர் மு.க.ஸ்டாலின்தான். கலைஞர் கருணாநிதியின் உண்மையான அரசியல் வாரிசு அவரே என்று 70 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். அடுத்த இடத்தில் இருப்பவர் தயாநிதி மாறன். 14 சதவிகித ஆதரவு. மு.க. அழகிரிக்கும் கனிமொழிக்கும் தலா எட்டு சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர்.

நேரடியாகவே ஒரு கேள்வியைக் கேட்டிருந்தோம். வரும் தேர்தலில் எந்த அணியை ஆதரிப்பீர்கள்? தி.மு.க-காங்கிரஸ் அணியை ஆதரிப்போம் என்று வாக்களித்தவர்கள் வெறும் 13 சதவிகிதம்தான். அ.இ.அ.தி.மு.க, விஜய காந்த், இடதுசாரிகள், ம.தி.மு.க அணியை ஆதரிப்போம் என்று வாக்களித்தோர் 57 சதவிகிதம் பேர். எல்லோரையும் நிராகரிக்கும் 49 ஓ வைப் பயன்படுத்தி வோட்டுப் போடுவோம் என்றவர்கள்... ஆச்சர்யமாக,30 சதவிகிதம் பேர்!

எனவே படித்தவர்கள் ஒழுங்காக வோட்டுப் போடச் சென்றால், தி.மு.க ஆட்சியை இழக்கும். (ஒரு பிரபல கல்லூரியின் வருடாந்தர சர்வேயிலும் இதே போல முடிவே வந்திருப்பதாக அறிகிறேன். அந்த சர்வே ஏனோ இன்னும் வெளியிடப்படவில்லை.)

படிக்காதவர்கள் மத்தியில் தி.மு.க ஆட்சியின் இலவசங்கள் எந்த அளவுக்கு செல்வாக்கைச் செலுத்தும் என்பதே, தி.மு.க இழக்கும் படித்தவர் வோட்டை சரி செய்ய உதவ முடியும். அதே சமயம் அரசின் மது வியாபாரத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழைக் குடும்பங்கள் அந்தப் பாதிப்பை விட இலவசங்களுக்குக் கூடுதல் அழுத்தம் கொடுப்பார்களா என்பதும், ஸ்பெக்ட்ரம் ஊழல், ஒரு குடும்ப ஆட்சி போன்றவை அவர்களுக்கு முக்கிய பிரச்னைகளாக இருக்குமா என்பதும் தேர்தல் களத்தில் பரிசோதிக்கப்பட வேண்டியவை.

ஆளும் கட்சியும் சரியில்லை, எதிர்க்கட்சியும் சரியில்லை என்ற படித்தவர் மனநிலை, எங்கள் கருத்துக்கணிப்புத் தேர்தலில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறது. முப்பது சதவிகிதம் பேர் எல்லோரையும் நிராகரிக்கும் 49 ஓவை விரும்புகிறார்கள்.

49 ஓ மட்டும் மின் வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஒரு பட்டனாக இருந்து, ரகசியமாக அதைப் பதிவு செய்யும் வாய்ப்பு இருக்குமானால், 50 சதவிகிதத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அதை ஆதரித்து ஓர் அரசியல் நெருக்கடியையே ஏற்படுத்திவிடுவார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. மின் இயந்திரத்தில் 49 ஓ பட்டன் வைக்கக் கோரி போடப்பட்ட பொது நலவழக்கு பி.ஜே.பி, காங்கிரஸ் அரசாங்கங்களால் இழுத்தடிக்கப்பட்டு சுமார் ஏழு வருடமாக உச்ச நீதி மன்றத்தில் முடிவு வராமல் காத்திருக்கிறது.

பகிரங்கமாக வாக்குச் சாவடியில் அதை அதிகாரியிடம் தெரிவித்துப் பதிவு செய்யும் முறை பலரையும் தயங்க (பயப்பட) வைக்கிறது. அது தவிர, எப்படி 49 ஓவைப் பதிவு செய்யவேண்டும் என்ற நடைமுறையை, சாவடி அதிகாரிகள் பலரும் தெரிந்தோ தெரியாமலோ குழப்பி, வாக்காளரை அதைப் போடவிடாமல் தடுத்துவிடுகிறார்கள். புத்தகக் கண்காட்சியில் என்னைச் சந்தித்து உரையாடிய பல வாசகர்கள் இந்தப் பிரச்னையைத் தெரிவித்தார்கள்.

49ஓ போடுவது எளிமையானது. நாம் வாக்குச்சாவடிக்குச் சென்றதும் நம் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். இருக்கிறது என்று உறுதியானதும், உடனே நம்மை ஒரு நோட்டில் கையெழுத்திடச் சோல்லுகிறார்கள். கையெழுத்திட்டதும் விரலில் மை வைக்கப்படும். அடுத்து மின் இயந்திரத்தில் பதிவு செயச் சோல்வார்கள். அதற்குப் பதில் 49 ஓ போடுகிறேன் என்று சோல்லிவிட்டு, முதலில் கையெழுத்திட்ட அதே நோட்டில், அந்தக் கையெழுத்துக்குப் பக்கத்திலேயே 49 ஓ என்று எழுதி, இன்னொரு கையெழுத்திடவேண்டும். அவ்வளவுதான். தனி படிவம் எல்லாம் எதுவும் கிடையாது.

கண்காட்சியில் சந்தித்த வாசகர்களில் பலரும் ஓர் அரசியல் மாற்றம் வந்தே தீரவேண்டும் என்ற ஆர்வமும், ஆனால் அது எப்படி எங்கிருந்து வரும் என்று தெரியாத குழப்பமும், யாராவது வழி நடத்த மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும் உடையவர்களாக இருந்தார்கள். நீ விரும்புகிற மாற்றமாக நீ முதலில் இரு," என்ற காந்தியின் வாசகத்தைத்தான் எல்லோருக்கும் பதிலாகச் சோல்ல வேண்டியிருந்தது.

ஒவ்வொரு தேர்தலிலும் வோட்டு போடாதவர்கள் சுமார் 30 முதல் 35 சதவிகிதம் பேர். இதில் சுமார் பத்து சதவிகிதம் பேர் முதியோர், உடல்நலம் குன்றியோர் என்றே வைத்துக் கொண்டாலும் வோட்டு போட வராத மீதி 20, 25 சதவிகிதம் பேர் வோட்டுப் போட்டால், அரசியலில் பல மாற்றங்கள் நிகழமுடியும்.

வோட்டுப் போட விரும்பும் பல வாசகர்களில் ஒரு வாசகி மிகுந்த ஆதங்கத்துடன் தெரிவித்த தகவல் கவலை தருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லையென்றால், விண்ணப்பிக்க செல்லும்போது ரேஷன் அட்டையை முகவரிக்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஆனால் சென்னை போன்ற பெருநகரில் வீட்டு வாடகை ஒவ்வொரு வருடமும் பிரச்னையாகிக் கொண்டே போவதால், பக்கத்துத் தெருவுக்கு வீடு மாற்றியாக வேண்டியிருக்கிறது. அந்த வேகத்தில் ரேஷன் கார்டில் முகவரியை ரேஷன் அலுவலகம் மாற்றித் தருவதில்லை. இந்த முகவரிச் சிக்கலினால் தொடர்ந்து மூன்று முறை விண்ணப்பித்தும் வாக்காளர் பட்டியலில் இணைக்கப் படவில்லை என்று வருத்தப்பட்டார் அந்த வாசகி. தேர்தல் ஆணையம் வாக்காளரை அடையாளம் காண்பதற்கான வழிமுறையை இன்னும் எளிமையானதாக்கவேண்டும்.

கருணாநிதியை எதிர்த்து ஒரே தொகுதியில் போட்டியிட நான் தயார் என்கிறார் விஜயகாந்த். அதை விட கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஒரே தொகுதியில் போட்டியிடுவதையே நான் வரவேற்பேன். ஒருவேளை ஜெயலலிதாவும் அப்படி அறிவித்தால், கருணாநிதி வரும் தேர்தலில் போட்டியிடாமல் கூட இருந்து, விஜயகாந்த், ஜெயலலிதா இருவரையும் ஏமாற்றிவிடலாம்.

அவருக்கு வசதியாக மேலவை உருவாக்கப்படுகிறது. அதன் தேர்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. கருணாநிதி மேலவை உறுப்பினராகிவிடலாம். ஜெயலலிதா, விஜயகாந்த் போன்றவர்கள் கூட இதே வழியைப் பின்பற்றலாம். தொகுதிக் கவலை இல்லாமல் எல்லோரும் தேர்தல் பிரசாரம் செய்யப் போகலாம்.

சென்னை சங்கமம் தொடக்க விழாவில் கருணாநிதி வானம் வசப்பட்டுவிட்டது. மானமும் அடுத்து வையமும் நம் வசப்படவேண்டும் என்று பேசியிருக்கிறார். வானம் வசப்படுவதென்றால் என்ன என்று ரொம்ப யோசித்ததில் 2ஜி அலைக்கற்றையைத்தான் சொல்லியிருக்கிறார் என்று புரிந்தது. நீராராடியா டேப்புகளால் இழந்த மானமும் மீட்கப்படவேண்டும் என்று அவர் ஆசைப்படுவது நியாயம்தானே.

கருணாநிதி சொல்லும் வையமும் வசப்படுவது என்றால் என்ன என்றுதான் புரியவில்லை. விக்கிலீக்ஸைத்தான் கேட்கவேண்டும். ஸ்விஸ் வங்கி முன்னாள் அதிகாரி ருடால்ஃப் எல்மர் வங்கியில் கறுப்புப்பணத்தை வைத்திருக்கும் ‘வையத் தலைவர்கள்’ பட்டியலை விக்கிலீக்ஸ் அசாஞ்சேயிடம் கொடுத்திருக்கிறார். அதிலிருக்கும் ஆசியத் தலைவர்கள் பட்டியலில் தமிழ்ப் பெயர்களும் இடம் பெற்று தமிழர்களின் மானம் காப்பாற்றப்படுமா என்பது சில வாரங்களில் தெரிந்துவிடும்.

- கல்கி -


http://tamilsguide.com/katturaidetails.php?gallid=19&tid=8580

No comments:

Post a Comment