Thursday, February 3, 2011

அண்டப் புளுகு. தினமணி தலையங்கம்.

2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு பிரச்னையிலும், தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸின் நியமனத்திலும் மத்திய அரசு நடந்துகொள்ளும் விதமும், மாற்றி மாற்றி வெளியிடும் முரண்பட்ட விளக்கங்களும் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறார்கள் என்பதைத்தான் வெளிச்சம் போடுகின்றன.

இப்போது உச்ச நீதிமன்றத்தில் அரசின் சார்பில் தலைமை வழக்குரைஞர் ஜி.இ. வாஹனவதி அளித்திருக்கும் விளக்கம் விசித்திரமாக இருப்பது மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விவரம் தெரியாதவர்கள் என்று மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர் கருதுகிறாரா, இல்லை ஒட்டுமொத்த இந்திய மக்களே ஏமாளிகள் என்று நினைத்து இப்படியொரு வாதத்தை முன்வைத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

பி.ஜே. தாமûஸத் தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்க முடிவெடுத்த குழுவிடம் அவரைப் பற்றிய முழு விவரங்களும் தரப்படவில்லை என்பதுதான் தலைமை வழக்குரைஞர் வாஹனவதியின் விளக்கம். இந்தியாவில் மிகவும் முக்கியமான பதவியில் நியமிக்கப்பட இருக்கும் ஒருவரைப் பற்றிய முழுத் தகவல்களையும் பெறாமல் பிரதமரும், உள்துறை அமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவரான சுஷ்மா சுவராஜின் எதிர்ப்பைப் பொருள்படுத்தாமல், ஒருவரை அந்தப் பதவிக்குப் பரிந்துரை செய்திருக்கிறார்கள் என்று சொன்னால், முதலில் பதவி விலக வேண்டியவர் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பி.ஜே. தாமஸல்ல, பிரதமரும், உள்துறை அமைச்சரும்தான்!

அரசு நிர்வாகத்தில் சில வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. ஒரு துறைக்குத் துணைச் செயலரை நியமிப்பதாக இருந்தால்கூட அந்தப் பதவிக்கு மூப்பு அடிப்படையில் தகுதி வாய்ந்த அதிகாரிகளின் பட்டியல் முதலில் தயாரிக்கப்படும். அந்தப் பட்டியலில் உள்ளவர்கள் பற்றிய நிர்வாகக் குறிப்புகள் அலசி ஆராயப்படும். திறமையும், நேர்மையும் உள்ளவர் என்பதுதான் ஓர் உயர் அரசு பதவியில் நியமிக்கப்பட இருப்பவரின் முக்கியமான தகுதியாக இருக்கும். அவர்மீது துறைசார்ந்த விசாரணையோ, கிரிமினல் விசாரணையோ இருக்குமேயானால், அது ஏன், அவரைப் பற்றிய தவறான கருத்து அவரது பணிக்காலத்தில் ஏதாவது மேலதிகாரியால் பதிவு செய்யப்பட்டிருக்குமானால், அந்த நபர் ஒரு இணைச்செயலர் பதவிக்கான பரிந்துரைப் பட்டியலில்கூட இடம்பெற முடியாது.

அப்படி இருக்கும்போது, ஓர் அரசியல் சட்ட நியமனமான தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் பதவிக்குப் பரிந்துரைக்கப்படும் பட்டியலில் பி.ஜே. தாமஸ் சேர்க்கப்பட்டபோது, அவரைப் பற்றிய முழு விவரங்களும் சேகரிக்கப்படவில்லை, தேர்வுக் குழுவின் பார்வைக்கு வைக்கப்படவில்லை என்று சொல்வது எப்பேர்ப்பட்ட அண்டப் புளுகு!

ஒரு விஷயம் நன்றாகத் தெரிகிறது. நமது இந்தியப் பிரதமரும், உள்துறை அமைச்சரும் தினசரிப் பத்திரிகைகளைப் படிப்பதில்லை என்பதும், எந்தத் தொலைக்காட்சிச் சேனல்களையும் பார்ப்பதே இல்லை என்பதும்தான் அது. பாவம், என்னதான் செய்வார்கள் அவர்கள், அப்படி ஒரு வேலைப்பளு. நாட்டு நடப்பு என்ன என்பதை ஊடகங்களைப் பார்த்துத் தெரிந்து கொள்ளக்கூட நேரமில்லாத இவர்கள் முழுமையான விவரம் கிடைக்கப் பெறாததனால் பி.ஜே. தாமûஸத் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணைய நியமனத்துக்குப் பரிந்துரைத்து விட்டார்கள். நம்மையும் உச்ச நீதிமன்றத்தையும் நம்பச் சொல்கிறார் தலைமை வழக்குரைஞர் வாஹனவதி.

பி.ஜே. தாமஸ் மத்திய தகவல் தொலைத்தொடர்புத் துறை செயலராக நியமிக்கப்பட்டபோதே, இவர்மீதான பாமாயில் இறக்குமதி வழக்கு பற்றிய விசாரணை அத்தனை தொலைக்காட்சிச் சேனல்களிலும் பரபரப்பாக வெளியாகியது. தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் நியமனத்துக்கான பட்டியலில் பி.ஜே. தாமஸின் பெயர் இடம்பெற்றிருக்கிறது என்று செய்தி கசிந்தபோதே, "தினமணி' உள்ளிட்ட இந்தியாவின் நடுநிலை நாளிதழ்கள் அனைத்தும், தேசிய அளவிலான தொலைக்காட்சிச் சேனல்கள் எல்லாமும் வரிந்துகட்டிக் கொண்டு, தவறு நடந்துவிடக்கூடாது என்று மத்திய அரசை எச்சரித்தன.

எதிர்க்கட்சித் தலைவி சுஷ்மா சுவராஜின் எதிர்ப்புக்காவது மதிப்பளித்தார்களா என்றால் இல்லை. பிரதமரும், உள்துறை அமைச்சரும் திருடனின் கையில் சாவியைக் கொடுத்துக் காவல் காக்கச் சொன்ன கதையாக, ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்த தகவல் தொலைத்தொடர்புத் துறைச் செயலராக இருந்த பி.ஜே. தாமஸ், அவரது பின்னணி பற்றி நன்றாகவே தெரிந்தும், எதுவும் தெரியாததுபோல, தலைமை ஊழல் தடுப்பு ஆணையராக நியமிக்கப் பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

அரசியல் சட்ட நியமனம் என்பதால் பி.ஜே. தாமúஸ முன்வந்து பதவி விலகாவிட்டால், நாடாளுமன்றம் கூடி மூன்றில் இரண்டு பகுதி உறுப்பினர்களின் ஆதரவுடன் பதவி நீக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மட்டுமே, அவரைப் பதவி நீக்கம் செய்ய முடியும் என்கிற நிலைமை. அதற்குப் பிரதமரும், உள்துறை அமைச்சரும், அவர்கள் சார்ந்த கட்சியும், கூட்டணியும் ஆதரவு தெரிவித்தால் மட்டுமே சாத்தியம்.

தான் எந்தக் காரணம் கொண்டும் ராஜிநாமா செய்வதாக இல்லை என்று பி.ஜே. தாமஸ் தெரிவித்துவிட்டார். இதை எதிர்பார்த்துத்தானே அவரை அந்தப் பதவியில் நியமித்தார்கள். தவறுக்குப் பொறுப்பேற்றுப் பதவி விலகப்போவது பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அல்ல. முழுமையான தகவல்களைத் தரவில்லை என்று காரணம்கூறி ஏதாவது ஒரு நேர்மையான அதிகாரி பலிகடா ஆக்கப்படுவார். பாவம் ஒருபுறம், பழி மற்றொருபுறம். இதுதான் "ஸ்பெக்ட்ரம்' உணர்த்தும் பாடம்! வாழ்க இந்திய ஜனநாயகம்!

நன்றி தினமணி

No comments:

Post a Comment