Wednesday, February 2, 2011

எந்திரன் வசூல் + வரி ஏய்ப்பு

முதலிலேயே சொல்லி விடுகிறேன் - இது எந்திரன் திரைப்படம் பற்றிய விமரிசனம் அல்ல.

ரஜினியின் மீது அபரிமிதமான அன்பையும், இயக்குநர் சங்கரின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் கொண்ட தமிழ் மக்களை ஏமாற்றி எப்படி கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது என்பதைச் சொல்ல வருவதே இந்த இடுகை.

அக்டோபர் முதல் தேதி வெளியிடப்பட்டது எந்திரன் திரைப்படம். இதைத் தயாரித்து வெளியிட்டது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.தமிழ் நாட்டில்,
மாவட்ட ரீதியாக யாரும் விநியோகஸ்தர்களாக அறிவிக்கப்படவில்லை. எனவே தமிழ்நாடு முழுவதும் சன் நிறுவனமே நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளியிட்டு இருக்கிறது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதல் 3 நாட்களில் நிகழ்ந்தவை பற்றிய இடுகை இது.

சினிமாடோகிராப் ஆக்ட் சட்டத்தின் பல விதிகள் அனைவருக்கும் தெரிந்தே மீறப்பட்டுள்ளன.

ஒரு திரைப்பட அரங்கின் மொத்த கொள்ளளவில் பத்தில் ஒரு பகுதி (10 % ) டிக்கெட்டுகளின் விலை பத்து ரூபாய்க்கு மேற்படாமல் இருக்க வேண்டும் என்பதும்,

உச்சபட்சமாக ஒரு திரையரங்கின் நுழைவுக் கட்டணம் 120 ரூபாய்க்கு மிகையாக இருக்கக் கூடாது என்பதும் சட்ட விதிகள்.

திருச்சி, மதுரை, கோவை, சேலம், ஈரோடு, நெல்லை போன்ற தமிழ் நாட்டின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் முதல் 3 நாட்கள் டிக்கெட் விலை:

முதல் வகுப்பு 250 ரூபாய்.
இரண்டாம் வகுப்பு 200 ரூபாய்.
மூன்றாம் வகுப்பு கிடையாது.

எத்தனை விலை வேண்டுமானாலும் வைக்கட்டும். வசதியும், ஆர்வமும் இருப்பவர்கள் வாங்கட்டும்.

நம்முடைய கேள்வி - கணக்கில்/டிக்கெட்டில் காட்டப்படுவது அதிகபட்சமாக 50 ரூபாய் மட்டுமே. மீதிப்பணம் அத்தனையும் கறுப்புப் பணமாக, கணக்கில் வைக்க முடியாத பணமாகத் தானே வசூலாகிறது. இந்த பணத்திற்கு, திரையரங்க உரிமையாளர்களோ, விநியோகஸ்தர்களோ எப்படி கணக்கு வைக்கப் போகிறார்கள் ? அத்தனையும் கறுப்புப் பணமாகத்தானே போகிறது ?

பல இடங்களில் டிக்கெட் வெளிப்படையாகவே அதிக விலைக்கு விற்கப்படுகிறது. இதற்காகவே புதிய வெப்சைட்கள் திறக்கப்பட்டு இருக்கின்றன. (உதாரணம் தேவைப்படுவோர் www.limata.com பார்க்கவும் )

சாதாரணமாக அனைத்து திரையரங்குகளிலும் 4 காட்சிகள் நடத்திக்கொள்ள அனுமதி உண்டு. விசேட நாட்களில் பிரத்யேக அனுமதி பெற்று இதற்கு மேலாக ஐந்தாவது காட்சி நடத்திக்கொள்ளவும் விதி உண்டு.

1ந்தேதி தமிழ்நாடு முழுவதும் அநேகமாக அனைத்து திரையரங்குகளிலும் 7 காட்சிகள் நடைபெற்றன. 2,3 தேதிகளில் 6 காட்சிகள். சில அரங்குகளில் முதல்நாள் 24 மணிநேரமும் தொடர்ந்து காட்சிகள் நடைபெற்றதாக தொலைக்காட்சி செய்திகளிலேயே சொன்னார்கள்.

தமிழ் நாட்டின் முதல் குடும்பத்திற்காக சென்னை சத்தியம் திரையரங்கில் 1ந்தேதி அதிகாலை 5 மணிக்கு ஒரு காட்சி நடைபெற்றது. 87 வயதான முதல்வர் அதிகாலை 5 மணிக்கு இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு செய்தித்தாள்களில் புகைப்படமும் வெளிவந்துள்ளது.

முதல்வர் குடும்பம் அல்லாமல் வேறு யாராவது தமிழ் நாட்டில் இந்த வகையில் தொழில் நடத்த முடியுமா ?

இவற்றை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் எல்லாரும் எங்கே
போனார்கள் ? இவற்றை எந்த அமைப்பும் கேட்க முன் வராதா ?

No comments:

Post a Comment