Thursday, February 3, 2011

காங்கிரஸ் கட்சிக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்! –

தமிழருவி மணியன்

புராதன கிரேக்க நகர அரசுகளுள் ஒன்றான ஸ்பார்ட்டாவின் ஆட்சியாளனாகத் திகழ்ந்த லைகர்கஸ்… எதேச்சதிகார, கொடுங்கோன்மை அரசுகளுக்கு மாற்றாக ஆட்சி முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தவன். மனிதரிடையே சமத்துவம் குறித்து அதிக ஆர்வத்துடன் பேசிய அவனிடம், ‘உன் ஆட்சியில் முழுமையான ஜனநாயகத் தன்மைகள் ஏன் இடம்பெறவில்லை?’ என்று கேட்டபோது, ‘முதலில் உன் வீட்டுக்குச் சென்று, அங்கே ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்திவிட்டு, என்னிடம் வந்து பேசு!’ என்றான். அன்று தொட்டு இன்று வரை முழுமையான ஜனநாயகம் உலகில் எங்கும் உருவாகவில்லை என்பதுதான் யாரும் மறுக்க முடியாத உண்மை!

நம் நாட்டு அரசியலில்… ஆட்சியிலும் கட்சிகளிலும் உள்ள தலைவர் கள் அணிந்திருக்கும் ஜனநாயக ஆடைகளுக்குள் சர்வாதிகாரச் சிந்தனை கள்தான் அவரவர் ஆன்மாவை அலங்கரிக்கின்றன. கலைஞரின் கண்ண சைவிலும், ஜெயலலிதாவின் பார்வை படும் இடத்திலும்தான் இரண்டு கழகங்களின் ‘ஜனநாயகம்’ கொலுவிருக்க முடியும். நேற்று கட்சி கண்ட விஜய்காந்த்தின் வாயில் இருந்து வரும் வார்த்தையே தே.மு.தி.க-வின் வேத வாசகம். மோசஸின் 10 கட்டளைகள் மீறப்படலாம். ஆனால், பொலிட்பீரோவின் முடிவை கம்யூனிஸ்ட்தோழர்கள் மீறலாகாது. ‘சொக்கத் தங்கம்’ சோனியா காந்தியின் சொந்த விருப்பு – வெறுப்புகளுக்கு ஏற்பத்தான் ஆட்சி பணிந்தாக வேண்டும்; காங்கிரஸ் கட்சி நடந்தாக வேண்டும். ‘தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே’ என்ற கம்பனின் கடவுள் வாழ்த்து வரிதான் எல்லாக் கட்சிகளுக்கும் இன்று தேசிய கீதம். இந்த அடிமை மனோபாவத்தின் அடித்தளம் தலைமை மீது பூண்டிருக்கும் ஆழ்ந்த பக்தி அன்று; அதிகாரத்தைச் சுவைக்கவும், செல்வத்தைப் பெருக்கவும், வாழ்க்கை சுகங்களை வகைவகையாக அனுபவிக்கவும் வாழ்த்துப் பா இது ஒன்றுதான் வழி என்ற புரிதல் நம் அரசியல்வாதிகளிடம் வாய்த்துவிட்டது.
காங்கிரஸ் கட்சிக்கும் ஜனநாயகப் பண்புகளுக்கும், இந்திரா காந்தி காலம் தொட்டு இன்றைய சோனியா காந்தி காலம் வரை எந்த சம்பந்தமும் இல்லை. ‘காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் இல்லை’ என்று ராகுல் காந்தியே வாக்குமூலம் வழங்கி இருக்கிறார். தொண்டர்களின் உணர்வைப் புரிந்துகொள்ளவும் பிரதி பலிக்கவும், காங்கிரஸ் தலைமை என்றும் முயல்வதே இல்லை. முலாயம் சிங்கும், லாலு பிரசாத்தும் அவமானப்படுத்தும் வகையில் சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிகளைப் பிச்சை போட நினைத்ததால், வேறு வழி இன்றி உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் காங்கிரஸ் தனியாகக் களத்தில் நிற்க நேர்ந்தது. காங்கிரஸை மக்கள் இயக்கமாக மாற்ற ராகுல் காந்தி அந்த இரண்டு மாநிலங்களிலும் முயன்றது உண்மையெனில், 43 ஆண்டுகளாக நடுவீதியில் நிற்கும் தமிழ்நாடு காங்கிரஸை கோட்டையில் அமர்த்தும் நோக்குடன் திராவிடக் கட்சிகளை முற்றாகப் புறந்தள்ளிப் புதிய அணியைத் தன் தலைமையில் உருவாக்க அவர் புறப்பட்டிருக்க வேண்டும். சோனியா காந்தி அதற்குரிய பாதையை அமைத்திருக்க வேண்டும். அதற்குத்தானே இளங்கோவன் குரல் கொடுத்தார். ஆனால், என்ன நேர்ந்தது? உழைக்காமலே உண்டு பிழைப்பவர்கள் ஒருபோதும் வியர்வை சிந்த விரும்ப மாட்டார்கள். இங்கு உள்ள காங்கிரஸ் தலைவர்களுக்கு காமராஜரையும் கக்கனையும் காட்டிப் பிழைக்கத் தெரியும்; ஆனால்… உழைக்கத் தெரியாது.

கலைஞருக்கும் காங்கிரஸுக்கும் இருக்கும் கூட்டணி உறவை இளங்கோவன் அறுக்க முயன்றார். ஆனால், தமிழ்நாடு காங்கிரஸின் மேலிடப் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் வந்தார். தி.மு.க-வுடன் கூட்டணி தொடரும் என்று திருவாய் மலர்ந்தார். இந்தக் கூட்டணிக்கு எதிராக யாரும் பேசக் கூடாது என்று வாய்ப் பூட்டுப் போட்டு விட்டுச் சென்றார். அடுத்த நாளே, தங்க பாலு கோபாலபுரக் கோயிலுக்குப் போய் கலைஞரின் தரிசனம் கண்டு, பாதாதி கேச பரியந்தமும் சிலிர்த்த பரவசமுமாக, ‘அன்னை சோனியாவின் விருப்பமே எங்கள் அனைவரின் விருப்பமும்’ என்றார் பத்திரிகையாளர்களிடம். இனி இளங்கோவன் என்ன செய்யப் போகிறார்? அவர் பெரியாரின் பேரன் என்பது உண்மை. ஆனால், அவருக்குள் பெரியாரின் போர்க் குணம் பல்கிப் பெருகும் என்று நாம் நம்புவதற்கில்லை!

‘சோனியாவின் விருப்பமே எங்கள் விருப்பம். சோனியாவின் முடிவே எங்கள் முடிவு’ என்று கூச்சமற்று கோஷம் போடும் கூட்டத்துக்கு எதுதான் கொள்கை? தமிழ்நாடு காங்கிரஸின் தொண்டர்களின் கருத்துக்கு என்ன மரியாதை? மாநில அளவில் பொதுக் குழுவும், செயற் குழுவும் கூடி முடிவெடுக்க அதிகாரம் இல்லை எனில், ஆட்டுக்குத் தாடியைப்போல் அந்த அலங்கார அமைப்புகள் எதற்கு? ஒரு வார்டு பிரதிநிதியைக்கூட ‘அன்னை சோனியாவின் ஆணைப்படி’யே நியமிக்கும் கட்சிக்கு எதற்கு ஒரு மாநில அமைப்பு? காந்திக்கும் காமராஜருக்கும் இன்றுள்ள காங்கிரஸுக்கும் என்ன சம்பந்தம்? நாட்டுக்கு விடுதலை பெற்றுத் தந்த காந்தியே தன் முடிவுகள் அனைத்தையும் காங்கிரஸின் மூலம் செயற்படுத்த முடியவில்லை. காந்திக்கு இல்லாத சக்தி சோனியாவுக்கு மட்டும் சாத்தியமானது எப்படி? காங்கிரஸுக்குள் பிழைப்புவாதிகள் பெருகிய தனால்தானே!
தேசியக் கொடியின் நடுவில் உழைப்பின் சின்னமான ராட்டை இடம் பெற வேண்டும் என்ற அண்ணலின் ஆசை நிராகரிக்கப்பட்டது. ஆச்சார்ய கிருபளானி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகியதும் நரேந்திர தேவ் என்ற அப்பழுக்கற்ற சோஷலிஸ சிந்தனையாளரைப் புதிய தலைவராக்க வேண்டும் என்ற மகாத்மாவின் பரிந்துரை புறக்கணிக்கப்பட்டது. அமைச்சர்கள் அனைவரும் எளிமையாக மிகச் சாதாரண வீடுகளில் வசிக்க வேண்டும் என்ற காந்தியின் ஆலோசனையைக் காது கொடுத்துக் கேட்க ஒருவரும் இல்லை. மகாத்மா தன் வாழ்வின் இறுதிக் காலத்தில், நேரு, படேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களால் தனிமைப்படுத்தப்பட்டார் என்பது தான் வரலாறு. காந்தியின் விருப்பத் துக்கு மாறாக, இரண்டாவது முறை காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டி யிட்ட நேதாஜியை ஆதரித்துப் பெரும்பான்மை உறுப்பினர்கள் தமிழகத்தில் வாக்களித்தனர். 1946-ல் சென்னை மாகாணத்தின் முதலமைச் சராக ராஜாஜி பதவியேற்க வேண்டும் என்று மகாத்மாவும், அன்றைய அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தும், பார்லிமென்டரி போர்டின் தலை வராக விளங்கிய வல்லபபாய் பட்டேலும் வெளிப்படையாகத் தங்கள் விருப்பத்தைத் தெரிவித்த பின்பும், ஆந்திர கேசரி பிரகாசம்தான் முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். அகில இந்தியத் தலைவர்களின் ஆணையை மீறும் ஆண்மையும், உண்மையான ஜனநாயக உணர்வும் அன்று காங்கிரஸில் ஓங்கி நின்றன.

அண்ணல் காந்தி, இந்தி பிரசார சபா வெள்ளி விழாவில் பங்கேற்ற பின்பு தமிழகத்தில் சுற்றுப் பயணம் முடித்துத் திரும்பியதும் ராஜாஜிக்கு எதிராக ஒரு ‘கிளிக்’ (தன்னலக் குழு) இயங்குவதாக ‘ஹரிஜன்’ இதழில் (பிப்ரவரி, 1946) எழுதினார். மகாத்மாவின் விமர்சனத்தில் மனம் கசந்த காமராஜர், பார்லிமென்டரி போர்டில் இருந்து ராஜினாமா செய்தார். காங்கிரஸ் தலைவர் வரதராஜுலு நாயுடு, ‘காந்திய தர்மத்திலும், காங்கிரஸ் திட்டத்திலும் பரிசுத்தமான பக்தியுடன் உழைப்பவர்களில் முதல்வர் காமராஜர்’ என்று குறிப்பிட்டு, மகாத்மாவுக்குக் கடிதம் வரைந்தார். அவருக்கு எழுதிய பதில் கடிதத்தில் ‘ராஜாஜி – நாடார் தகராறில் இனி நான் தலையிட மாட்டேன்’ என்று உறுதி அளித்தார் அண்ணல். மகாத்மா காந்தியின் தவறான விமர்சனத்தைத் துணிவுடன் அன்று எதிர்த்த காமராஜர், பின்னாளில் இந்திரா காந்தியின் தவறான நடவடிக்கையையும் எதிர்த்தவரே. காமராஜர் தன் வாழ்நாள் முழுவதும் தமிழ்நாடு காங்கிரஸின் மேல் டெல்லித் தலைமை நாட்டாண்மை செய்ய விட்டதே இல்லை. அவர் மக்களின் மாபெரும் தலைவர். இன்று இருப்பவர்கள் மக்களோடு எந்த உறவும் இல்லாத நியமன நாற்காலி மனிதர்கள்.

‘கலைஞரோடு கைகோத்து நில்லுங்கள்’ என்று சோனியா காந்தி சொன்னாலும் சம்மதம்; ‘போயஸ் தோட்டத்தில் போய் பூச்செண்டு கொடுங்கள்!’ என்று கட்டளை இட்டாலும் பூரிப்பு; ராமதாஸுக்கும், விஜய் காந்த்துக்கும் வலை வீசுங்கள் என்று வாய் மொழிந்தாலும் வரவேற்பு. தமிழ்நாடு காங்கிரஸை வழி நடத்தும் தலைவர்களுக்கு சொந்த லட்சியங்கள் இல்லையா? ஏன் இல்லை? எப்படியாவது எம்.எல்.ஏ. ஆக வேண்டும். இந்த முறை கைக்கெட்டியும் வாய்க்கு எட்டாமற் போய்விட்ட மந்திரி பதவி 2011-ல் கட்டாயம் கிட்ட வேண்டும். இதைவிட வேறு என்ன லட்சியம் வேண்டும்?
‘நாட்டு நலனுக்கான கூட்டணி இது’ என்கிறார் தங்கபாலு. ’2ஜி’ ஸ்பெக்ட்ரம் முறைகேடும், காமன் வெல்த் விளையாட்டுக் குழப்படியும் இன்று உலகப் புகழ் பெற்றுவிட்டன. இந்த இரண்டு சாதனைகளின் மூலம் இந்தியாவின் ‘பெருமை’யை உலக அரங்கில் உயர்த்திய இரு கட்சிகளும் ஒரே அணியில் நிற்பது வரவேற்கத்தக்கதுதான். ஈழத்தில் தமிழ் இனத்தை முற்றாக அழித்தொழித்து, இலங்கை நிலப்பரப்பை சிங்களர் ஆதிக்கத்தில் கொண்டுவருவதற்கு ராஜபக்ஷேவின் அரக்க அரசுக்கு அனைத்து உதவிகளையும் உவகையுடன் தந்து உதவிய காங்கிரஸும், இன உணர்வுடன் முத்துக்குமார் மூடிய கனல் பெரு நெருப்பாய் வளர்ந்துவிடாமல் பார்த்துக்கொள்ள தீயணைப்புத் துறையாகச் செயற்பட்ட தி.மு.கழகமும் சேர்ந்து, ‘என்ன பொருத்தம்… நமக்குள் இந்தப் பொருத்தம்’ என்று ஆடிப் பாடுவதுதான் அழகு.

‘பழைய விறகு, எரிப்பதற்கு உகந்தது. பழைய குதிரை, சவாரிக்குச் சிறந்தது. பழைய புத்தகம், படிக்கத் தகுந்தது. பழைய நண்பர்கள், பழகுவதற்கு நம்பகமானவர்கள்’ என்றார் எமர்சன். பழைய குதிரையே சவாரிக்குச் சிறந்தது என்று சோனியா முடிவெடுத்துவிட்டார். பழைய நண்பர்களே, பழகுவதற்கு நம்பகமானவர்கள் என்று கலைஞர் கணித்துவிட்டார். இளங்கோவனுக்கும், காங்கிரஸில் மிச்சம் மீதி மான உணர்வு உள்ளவர்களாக இருக்கும் தொண்டர்களுக்கும் நம் ஆழ்ந்த அனுதாபங்கள்!

நன்றி: விகடன்


No comments:

Post a Comment