Saturday, February 5, 2011

பிராமணர்களும் நம்பிக்கைகளும்

நான்கு வருடங்களுக்கு முன்னால் (இதழ் 5 ஜூலை 2004) நம் இதழ் முகப்புத் தலைப்பாக வந்த பிராமண நம்பிக்கைகளைப் பற்றி மீண்டும் ஒரு ஆய்வு செய்து சில கருத்துகளை வெளிப்படுத்த விரும்புகிறோம். ஜோதிடம் மற்றும் ஜாதகத் தொடர்புடைய சில அடிப்படை கருத்துகளை அடிகோடிட்டு அவ்விதழில் தெரிவித்த கருத்துகள்போல் அல்லாது ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையைப் பற்றி விரிவான விளக்கமான இம்மாத முகப்புத் தலைப்பை முன்வைக்க விரும்புகிறோம்.

அக்னிஹோத்ரம் தினமும் செய்து அவுபாசன அன்னத்திற்குப் பிறகே தங்கள் தினசரி நடைமுறைகளைத் தொடங்கும் வைதீக (அபூர்வ) பிராமணர்கள் முதல், அணிந்திருக்கும் பூணூல் தவிர, அத்தனை செயல்களிலும் பிராமணக் கலப்பு இல்லாத பெரியதனக்காரர்கள் வரை, இன்னும் விட்டுவிடாத ஒரு நம்பிக்கையாகத் திகழும் “சிரார்த்தம்” பற்றியே நாம் சில கருத்துகளைச் சொல்ல விரும்புகிறோம். அமாவாசை தோறும் தர்ப்பணம் செய்வதும் ஆண்டுக்கு ஒருமுறை செய்யும் பெற்றோர்கள் சிரார்த்தமும் நம்மை விட்டு நீங்கிய முன்னோர்கள் நம்மிடம் வந்து பசியாறிச் செல்வதாகக் கொள்ளும் ஒரு நம்பிக்கையே ஆகும். இது பற்றியே நாம் சிந்திக்க விரும்புகிறோம்.

இறைக்கும் எள்ளும் தண்ணீரும் எமலோகம் சென்று, பின்பு அவ்வழியே வைகுந்தம் சென்று அங்கு வசிக்கும் நம் முன்னோர்கள் உண்ணும் உணவாக உருமாறுகிறது. செய்யும் சிரார்த்தம் சிரத்தையுடன் செய்யப்பட வேண்டியதினால்தான் அது சிரார்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு பிராமணனுக்கு மூன்று வித கடமைகள் உள்ளன. அவை பித்ரு கர்மா, நித்ய கர்மா, நைவேத்திய கர்மா. பித்ரு கர்மா எனப்படுவது நாம் செய்யும் அமாவாசை மற்றும் வருஷ சிரார்த்தங்கள். வருடம் முழுவதும் 96 பித்ரு தர்ப்பணங்கள் செய்ய வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. இவை எல்லாம் செய்ய இயலாவிட்டாலும் அமாவாசை (சுமார் 15) மஹாளய பட்சம், வருஷ சிரார்த்தம் மற்றும் நான்கு மாத பிறப்புகளில் செய்ய வேண்டிய தர்ப்பணம் ஆகியவையாவது குறைந்தபட்சம் ஒவ்வொரு பூணூல் போட்ட பிராமணனும் செய்ய வேண்டும்.

நித்ய கர்மா என்னும் இரண்டாவது பிராமணக் கடமை, தினம் செய்ய வேண்டிய இருவேளை சந்தியா வந்தனம் ஆகும் (முடிந்தால் மூன்று வேளை) நம் குலத்தின் குருவாகத் திகழும் ரிஷிகளையும் ரிஷி பத்தினிகளையும் வணங்கிப் போற்றும் இந்தக் கடமையின் மூலம்தான் நாம் நலமாய் வாழ்வது சாத்தியம் என்ற நம்பிக்கை.

மூன்றாவது கர்மாவாக முன்நிற்பது நைய்வேத்திய கர்மா. ஒரு குறிப்பிட்ட பலன் வேண்டியும் தாம் மேற்கொள்ளும் செயல் வெற்றிபெறவும் நியமங்களின் மற்றும் கிரமங்களின் அடிப்படையில் யாக, ஹோம பூஜை முறைகள் மூலமாக இறைவனை வணங்கி அருள் பெறுவது நைய்வேத்திய கர்மா ஆகும்.

மேற்சொன்ன மூன்று பிராமணக் கடமைகளும் அரசாணை அல்லது ஆட்சிமுறை சட்டங்களினால் ஏற்பட்டது அல்ல. செய்துதான் ஆக வேண்டும் இல்லையென்றால் நைய்யப் புடைத்துவிடுவோம் என்று வற்புறுத்தி வரையறுக்கப்பட்ட செயல்முறைகள் அல்ல. மதக் கட்டுப்பாடு என்ற பெயரில் உதை கொடுத்து உருட்டி, மிரட்டி, உருவான ‘தொப்பி, தாடி’ வகை சார்ந்தது அல்ல. “இது மாதிரி செய்தால் இன்னும் ஏராளம் பணம் தருவோம். எது சொன்னாலும் ஏனென்று கேட்காமல் எங்களில் ஒருவராக இணைந்துகொள்ளுங்கள். என்றென்றும் நீங்கள் வளமாய் வாழும் வழியாகும் அது,” என்றெல்லாம் சொல்லி மனத்தில் ஏற்பட்ட நம்பிக்கைகள் அல்ல பிராமண நம்பிக்கைகள். அன்பின் உணர்வுகளை அறிவுகொண்டு ஆராய்ந்து கண்டெடுத்த சில கருத்துகளின் அடிப்படையில் தொன்று தொட்டுப் பின்பற்றி வரும் இந்த நம்பிக்கைகளில் சிரார்த்தம் பற்றிய சில சிந்தனைகள் நம் சமூக மக்களால் தற்போது எழுப்பப்படத் தொடங்கியுள்ளது.

படித்துப் பட்டம் பெற்றுக் கிடைத்த நல்ல பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிராமணர்களில் பலர் தற்போது ஆத்ம விசாரம் ஆன்மிக விசாரம் மற்றும் பிராமணப் பழக்க வழக்கங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கியுள்ளனர். நேரில் காணாமல் நீண்ட விவாதங்களின் சாதனமாக விளங்கும் இன்டர்நெட்டில் இடைவிடாது எழுப்பப்படும் இவ்விதக் கருத்துப் பரிமாற்றங்கள் நம் கவனத்தில் உள்ளன.

சிரார்த்தம் பற்றிய அவ்வித சில விவாதங்களில், ‘சிரார்த்தம் செய்வதற்கான சரியான நேரம் எது’, ‘அன்று சமைக்க வேண்டிய சமைக்கக் கூடாத காய்கறிகள் எவை?’ ‘ஹோமத்துடன் தான் கண்டிப்பாகச் சிரார்த்தம் செய்யப்பட வேண்டுமா?’ அவ்விதம் செய்ய ‘இயலாதவர்களும் நேரமில்லாதவர்களும் என்ன செய்வது?’, ‘காசிக்குச் சென்று ஒருமுறை கயா சிரார்த்தம் செய்துவிட்டால் பின்பு வருடா வருடம் வீட்டில் சிரார்த்தம் செய்யத் தேவையில்லை என்பது சரியா’ போன்ற செயல்முறை சந்தேகங்களும் நடைமுறை விளக்கங்களும் சார்ந்த பல கேள்விகளும் பதில்களும் காணப்படுகின்றன.

இது இப்படி இருக்க, சிரார்த்தம் செய்வதால் என்ன பெரிய லாபம் வந்துவிடப் போகிறது, உயிருடன் இருக்கும்பொழுது ஒத்தாசையாக இல்லாமல் இருந்துவிட்டு, தயிர், பால், காய்கறிகளுடன் தவறாமல் செய்யும் சிரார்த்தம், போனவர்களுக்கு எந்தப் புண்ணியத்தையும் தேடித் தராது என்பது போன்ற சிந்தனைகளில் பொறிந்து தள்ளும் இளைஞர்கள் ஒருபுறம்.

இப்படிப்பட்ட எதிர்மறை புரட்சிக் கருத்துகள் இல்லாவிடினும் இடைப்பட்ட சில பிராமணர்களின் சில சிரார்த்த அனுபவங்கள் வேறுமாதிரி அமைகின்றன. சிரார்த்தம் செய்விக்க வரும் புரோகிதர்களின் அவசரமும் அநியாயம் என்று கருதப்படும் அதிகமான தட்க்ஷணைகளும் விருப்பத்துடன் செய்ய வேண்டிய இந்த பித்ரு காரியத்தை வேண்டா வெறுப்பாகச் செய்யும் தண்டனையாக இவர்கள் உணருகிறார்கள். துக்கம் மேலிட்டுத் துயரமாக இருக்கும் இத் தருணங்களில் சிக்கனமாக இச்செயல்களைச் செய்து முடிக்கும் மனப்பாங்கு உருவாவதில்லை. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நடத்தி முடிக்க வேண்டிய ஒரு கடமையாக நினைக்கப்படும் இந்த பித்ரு கர்மாவைப் பற்றி அச்சமயங்களில் எவ்வித ஆராய்ச்சியையும் மேற்கொண்டு முடிவுகள் எட்ட முடியாது.

பித்ரு கர்மா எனப்படும் சிரார்த்தத்தின் மூலப்பொருள் என்ன? இறந்தவர்கள் தங்கள் உடலை நீத்த பின்பு இறந்தவரின் ஆன்மா ஆகாச மண்டலத்தில் அமைதியின்றிச் சுற்றித் திரிகிறது. பதிமூன்று நாட்கள் நாம் செய்யும் பல சடங்குகளின் மூலம்தான் அது வைகுந்தம் சென்று அமைதியாக வசிக்கத் தொடங்குகிறது. விண்ணுலகின் ஒருநாள் என்பது நம்முடைய ஒரு வருடம் ஆகும். எனவே ஒவ்வொரு வருடமும் நாம் செய்யும் சிரார்த்தங்களின் மூலம் நம் பித்ருக்களின் ஒவ்வொரு நாள் தேவையும் பூர்த்தியாகின்றன. இறந்தவுடன் செய்யும் கிரியைகளும் ஒவ்வொரு வருடம் பின்பு செய்யும் சிரார்த்தமும் இந்த அடிப்படையின் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தருணத்தில் நாம் டிசம்பர் 2005 இதழில் Volume - 2, lssue 10, Sparks பகுதியில் குறிப்பிட்ட சில விஷயங்கள் மீண்டும் நினைவுக்கூரத் தக்கவை.

பூலோகத்தில் ஒரு வைகுந்தம் என்ற தலைப்பில் அவ்விதழில்

“ஜாதோ ஹி த்ருவோ ம்ருத் யு”, “உலகில் பிறந்தவர் இறப்பது நிச்சயம்” என்பது பொதுவான இயற்கை நியதி. மனிதன் பிறந்து, பின் ஒருநாள் மரணம் அடைந்தவுடன் என்ன நிகழ்கிறது என்பது தொன்றுதொட்டு வரும் தொடர் எண்ணங்களாகும். ஒரு பிராமண நம்பிக்கையின் அடிப்படையில் உடலை விட்டுப் பிரிந்த தன் முன்னோர்களின் ஆன்மா உருவமற்று ஆனால் உணர்ச்சி பெற்று நம்மைச் சுற்றி உலவுகிறது.

நாம் செய்யும் பிதுர் காரியங்கள் உண்டென்றால் உண்டு என்றும் இல்லையென்றால் இல்லையென்றும் உருவகப்படுத்தப்படும் சாஸ்திர நம்பிக்கைகள். சகட்டுமேனிக்கு விளக்கம் பெறும் சாதாரண விஷயங்கள் அல்ல. பரிசோதனைச் சாலையில் சோதனைக் குடுவையில் சோதிக்கப்படும் சோடியம் குளோரைடு வகையைச் சார்ந்தது அல்ல. இறந்த தலைவரின் இரும்புச்சிலையை மாலையிட்டு மணிக்கணக்கில் சொற்பொழிவு ஆற்றும் மனிதச் செயல்களை மையம் கொண்டது அல்ல. மகத்தான சமஸ்காரங்கள் மூன்று தலைமுறை முன்னோர்கள்வரை அவர்களது முழுப்பெயர், கோத்திரம்வரை முற்றிலும் கூறப்பட்டு நடத்தப்படும் சாஸ்திரப் பின்னணியை உணர்ந்துகொள்வது கடினம் என்றாலும் முடியாதது அல்ல.

நம்முடன் வாழ்ந்து நமக்காக உழைத்த நல்லவர் இறந்துவிட்டால் நாம் செய்யும் செயல்களைச் சற்று நோக்க வேண்டும். உதிர பாசமும் உடனடித் தொடர்பு ஒன்றும் இல்லாவிட்டாலும் உயிரைவிட்ட உத்தமர் உடலை இரண்டு நாட்கள் அலங்கரித்து அனைவரின் அஞ்சலிக்கு வைத்து அடக்கம் செய்யும் முறைகள் எதற்காக? நம்மை விட்டுப் பிரிந்தவரின் நினைவைப் போற்றவும் அது ஏற்படுத்தும் நீண்ட சோகத்தைக் குறைக்கவும் எடுக்கப்படும் சில முயற்சிகளே இவை எல்லாம். அல்லும் பகலும் நம் அருகில் இருந்து நம்மை அரவணைத்த பெற்றோர், பெரியோர், உயிரற்று உடலாய்க் கிடக்கும் நிகழ்ச்சி நம்மிடம் உருவாக்கும் அதிர்ச்சிகள் அளவிட முடியாதவை. அம்மாதிரிச் சோகச் சூழலில் மனம் நொந்து மதி கலங்கி நாம் அடையும் மயக்கங்கள் வார்த்தையில் அடங்கா வருத்தங்கள். விரும்பியதைச் செய்வதற்கு விதியில்லாத வாழ்வைத் திரும்பிப் பார்த்துத் திகைக்கும் தருணங்களில் தீர்வாக வருவது பணமும் காசும் அல்ல.

"வாழ்ந்த வாழ்க்கை வீழந்ததே என்று வீணாகக் குமையாமல் அவர் வானுலகம் சென்று வைகுந்தம் சேர வழி ஒன்று உள்ளது. இறந்த உடலை எரிப்பது தொடங்கி இனி வரும் நாளில் இவை இவை செய்தால் இறைவனை அடையும் இறந்தவர் ஆன்மா. உபநிஷதங்களில் குறிக்கப்பட்ட உட்கருத்தாகும் இது. உண்மை என்று நம்பி உயர்வடைவாய்" போன்ற சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் நம் சிந்தையில் புகுத்துவதே பிதுர் காரியத்தின் பெருமைமிகு நோக்கமாகும்.

பிராமண நம்பிக்கைகளின் மிகப் பெரியதான ஸ்ரார்த்தம் பற்றிய நம் முந்தைய இதழின் இந்தச் சிந்தனைகள் நாம் சொல்ல வந்த கருத்துகளின் விளக்கமாக அமைந்திருக்கின்றன. நீத்தார் நினைவு எல்லா மதங்களிலும் மற்றும் சாதிகளிலும் ஓரளவுக்குப் பின்பற்றப்பட்டாலும் பிராமண சிராத்தங்கள் எந்தவித ஒப்பிடும் இல்லாத மிக விசேஷமாகச் சில சமயங்களில் விசித்தரமான ஒரு நீண்ட தொடர் நிகழ்ச்சியாகும். வேண்டும்பொழுது கலந்துகொள்ளவும் விரும்பும்போது விட்டுவிடவும் வசதியுள்ள சடங்குகள் நிறைந்த சம்பிரதாய நம்பிக்கை அல்ல இது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நடத்தி முடிக்க வேண்டிய இந்தக் கட்டாயத்தின் கட்டுப்பாடுகள் ஓரளவுக்குத் தளர்ந்து நிற்கின்றன. அம்மி மிதித்து அருந்ததி பார்த்து இம்மி அளவும் எந்தத் திருமண வழக்கத்தையும் விட்டுவிடாத பிராமணர்கள் முதல் தேடிப்பிடித்து தேர்ந் தெடுத்த ஒருத்தியுடன் ஓடிப்போய் திருமணங்கள் செய்துகொள்ளும் பிராமணர் வரை ஏதோ ஒரு விதத்தில் இந்தச் சடங்கினைப் பின்பற்றிதான் வருகிறார்கள். பிராமண நம்பிக்கைகளைப் பழித்தும் இழித்தும் பலவாறு கதைபேசி, பிராமண அடையாளங்களிலிருந்து தன்னை அழித்துக்கொண்டேன் என்று தம்பட்டம் அடித்துத் தடபுடல் செய்தவர்கூட நெருங்கிய சொந்தம் ஒன்று இறப்பின் மூலம் நீங்கிவிட்டால் மனம் நொறுங்கி நொந்து ச்ராத்தச் சடங்குகளின் மூலம்தான் மன அமைதி பெறுவது கண்கூடு.

சுருக்கமாக நம் கருத்துகளைச் சொல்வதானால், ச்ரார்த்த நம்பிக்கைகள் பிராமணர்களின் ஒரு முக்கிய அங்கமாக எப்போதும் அவர்கள் முன் நிற்கும். நிரூபிக்க முடியாத அறிவியல் கோட்பாடாக இந்த நம்பிக்கைகள் நிலைநிறுத்தப்பட்டாலும் மன நிம்மதி வேண்டியாவது அவை தொடரப்படத்தான் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துகள் இருக்க முடியாது. உளவியல் அடிப்படையில் இது உள்வாங்கிக் கொள்ளப்பட்டால் பெரும் உண்மையாகவே சிரார்த்த நம்பிக்கைகள் விளங்கும்.

மாற்றுக் கருத்துகள் உள்ள மகத்தான ஒரு பிரிவு இந்த நம்பிக்கைகளில் உண்டு. ஆதி நாள் முதல் பின்பற்றப்பட்டு வந்த சில அடிப்படைகளை மட்டும் வைத்துக்கொண்டு பாதியிலே வந்த பல விரும்பத்தகாத காலத்திற்கு ஒவ்வாத கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். இறந்துவிட்ட கொடுமை மட்டும் இல்லாது, இருக்கின்ற புரோகிதர்கள் மூலம் எழும் பொருட்செலவு, மனச்சிதைவு போன்ற இன்னல்களும் தொடரும்பொழுது இவ்விதச் சடங்குகளின் மேல் ஏற்படும் வெறுப்பும் எதுவும் செய்ய முடியாத இயலாமையும் தவிப்பும் நம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இயற்றப்படும் சட்டங்கள் மக்களால் பின்பற்றப்படத் தக்கவையாக இருந்தால் மட்டும்தான் சிறப்பாகவும் முழுமையாகவும் அமல்படுத்தப்படமுடியும் என்பது சட்ட இயலின் (Law of Jurisdiction) முதன்மை விதிகளாகும். சமஸ்காரம் என்ற வாழ்க்கை நெறிகளின் கீழ் இயற்றப்படும் பழக்கவழக்கம் என்ற சட்டங்களும், புரோகித வைதீக ஆச்சார நெறிகளும், கால தேச வர்த்தமானங்களுக்கு உட்பட்டும் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு மதிப்பளித்தும் அமல்படுத்தப்படும் வரைதான் அவை வெற்றிகரமாகத் தொடரப்படும்.

‘நான் சொல்வதுதான் சட்டம் என்ற புரோகிதர்களின் எதேச்சப் போக்கும்’, ‘எல்லாம் என் சவுகரியப்படிதான் நடக்க வேண்டும் என்ற கிரஹஸ்தர்களின் ஆணவமும்’, ‘எது நடந்தாலும் நாம் தலையிட்டு ஆகப்போவதில்லை என்ற பிராமணச் சமூக பெரியவர்கள் மற்றும் வைதீகர்களின் அலட்சியமும்’ ஒரு சிறந்த நோக்கத்திற்காகச் செப்பனிடப்பட்டுச் சிறப்பாகச் செதுக்கிய சிரார்த்தம் என்ற சிற்பத்தைக் ‘காலைக் கட்டிக்கொண்ட கருநாகமாக’, ‘கழற்றி வீசமுடியாத கருஞ் சட்டையாக, விட்டுவிட முடியாத வாழ்க்கை பந்தமாக மாற்றி நம்மீது சுமத்துவது நம் மனதிற்கு உகந்தது அல்ல.

http://www.brahmintoday.org/issues/issues-001/bt0807t_beliefs.php

No comments:

Post a Comment