Tuesday, February 1, 2011

சாமானியர்களுக்காக அண்ணா ஆரம்பித்த தி.மு.க வை நீரா ராடியாவிடம் அடகு வைத்த கருணாநிதி குடும்பத்தார்.


நீரா ராடியா… தி.மு.க-வின் ரிமோட் கன்ட்ரோல் இப்போது இவரிடம்தான் இருக்கிறது. புதுப் புதுத் திட்டங்கள் தீட்டி, வாக்குகளைச் சிறுகச் சிறுக கருணாநிதி சேமித்துவைக்க… அதை நாள்தோறும் வெளியாகும் ஏதாவது ஒரு டேப் ஆதாரம் சிதைத்துக்கொண்டே இருக்கிறது. ‘தி.மு.க-வுக்கு அழிக்க முடியாத கறுப்பு அடையாளத் தைத் தேடித் தந்துவிட்டு, ஒருவழியாக ஆ.ராசா பதவி விலகி இருக்கிறார்’ என்று நாம் எழுதிய போது, திராவிட இயக்கச் சிந்தனையாளர்களா கத் தங்களைச் சொல்லிக்கொள்ளும் சிலர் சினம்கொண்டு பொங்கினார்கள். இன்று என்ன நடக்கிறது?

‘இது, சாமான்யர்களின் கட்சி. வீதியோரத்தில் கிடத்தப்பட்டு இருக்கும் அபலைகளுக்காகவே நான் கட்சி ஆரம்பித்திருக்கிறேன்’ என்றுசொல்லி அண்ணா ஆரம்பித்த கட்சிக்கு கொள்கை பரப் புச் செயலாளராக ஆ.ராசா பதவி வகித்திருக்கும் நேரத்தில், இது நடந்திருக்கிறது. வெறும் அலைவரிசைகளை வைத்தே 1.76 லட்சம் கோடி மதிப்பிலான அவமானத்தைச் சேகரித்துத் தர முடியும் என்பது, இந்தக் கட்சிக்காக இதுவரை எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் வேலை பார்த்த பல லட்சம் தொண்டர்களையும் சேர்த்துத் தலை குனிய வைத்திருக்கிறது. இது வரை பெரியாருக்காக, அண்ணாவுக்காக, கலைஞருக் காகத் துணிந்து, பரிந்து பேசிய தொண்டன், ராசாவுக் காகத் தலைகுனிந்து நிற்கிறான்.

‘இது ஆரிய – திராவிடர் யுத்தம். அதில் ராசா பழிவாங்கப்பட்டு இருக்கிறார்’ என்று சிலர் சொல்லி வரும் வியாக்கியானங் கள் எடுபடவில்லை. ‘அப்பாவி’ ஆரியர், திராவிடர் ஓர் அணியாகவும், ‘அடப்பாவி’ ஆரியர், திராவிடர் மறு அணியாகவும் பிரிந்து சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிதான் இப்போது நடந்துகொண்டு இருக்கிறது!

முக்கியமான எந்தப் பிரச்னைபற்றிக் கேட்டாலும், ‘தி.மு.க. பொதுக் குழு, செயற் குழு கூடி முடிவு எடுப்போம்’ என்று கருணாநிதி சொல்வார். அவரும், பேராசிரியரும் சேர்ந்து பேசி, அறிக்கைவிடுவார்கள். ஆனால், இவர் களுக்கும் மேலே டெல்லியில் ஒரு சுப்ரீம் ஸ்டேட்டஸில், நீரா ராடியா இருந்துகொண்டு தி.மு.க-வை இயக்கியிருகிறார் என்பது டேப் ஆதாரங்களின் மூலம்தான் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

‘வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நெட்வொர்க்’ நடத்தும் நீரா ராடியா, தி.மு.க-வின் தலைவிதியைத் தீர்மானிக்கும் மனுஷியாக இருந்திருக்கிறார். ‘அழகிரி போன்ற சீனியர் தலைவர் இருக்கும்போது, மாறனுக்கு ஏன் அமைச்சர் பதவி என்று அவருடைய ஆதரவாளர்கள் கேட்கிறார்கள்’ என்று நீரா சொல்ல… ‘இந்த விஷயங்களை எல்லாம் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்’ என்று எடுத்துக் கொடுக்கிறார் ஆ.ராசா. ‘பாலுவுடன் எங்களுக்குப் பிரச்னை இருக்கிறது என்று ஒரு ரகசியக் கடிதமாவது கொண்டுசெல்ல வேண்டும். ராசாவுடன் எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை, எங்கள் பிரச்னை பாலுவுடன்தான் என்று சொல்லுங்கள்’ என்று திரும்பத் திரும்ப நீராவிடம் ராசா சொல்வதாக இருக்கிறது அந்த டேப். காங்கிரஸ் மேலிடம் டி.ஆர்.பாலு மற்றும் ஆ.ராசாவுக்கு மந்திரி பதவி தர மறுக்கிறது. இதைச் சரிக்கட்ட நீரா ராடியா பயன்படுத்தப்படுகிறார். ராடியாவுக்கு ராசா இதைச் சொல்ல… அவர் பத்திரிகையாளர் பர்கா தத்துக்குச் சொல்ல… அவர் சோனியாவின் அரசியல் ஆலோசகர் அகமது படேலுக்குச் சொல்ல… என மந்திரி சபை வரைக்கும் நுழைகிறது டேப்.

அழகிரிக்குத்தான் அமைச்சர் பதவி தர வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடத்துக்கு தான் விளக்கிவிட்டதாக கனிமொழியிடம் நீரா சொல்கிறார். ‘மொத்த அழகிரி விஷயத்தையும் விளக்கிவிட்டேன். அவர் ஒரு மக்கள் தலைவர் என்று அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’ என்று சொல்லும் நீரா, ‘இவர் (மாறன்) மக்கள் தலைவர் இல்லை. அதனால், அவருக்கு முக்கியத்துவம் கிடையாது’ என்று சொல்கிறார். ‘லாலு பிரசாத்துக்குச் செய்ததுபோல, அவருக்கு (அழகிரி) கீழே நல்ல துணை அமைச்சரை நியமிக்கலாம்’ என்று சொல்லும் கனிமொழி, ‘இவருக்கு(மாறன்) தகவல் தொடர்பு வேண்டும் என்பதால் வதந்தி களைப் பரப்புகிறார். ஆனால், அவ ருக்கு தகவல் தொடர்பு தருவதில் தி.மு.க-வுக்குக்கூட விருப்பம் இல்லை’ என்று விளக்கம் அளிக்கிறார். ‘அழகிரியின் ஆதரவாளர்கள் சொல் வது என்னவென்றால், மாறனுக்கு கேபினெட் பதவி தந்துவிட்டு, அழகிரிக்குத் துணை அமைச்சர் தருவதுதான் அவர்களுடைய பெரிய பிரச்னை’ என்று பத்திரிகையாளர் பர்கா தத்திடம் சொல்லும் நீரா, தி.மு.க. கேட்கும் துறைகளைப் பட்டியல் இடுகிறார். பல மணி நேரம் ஓடும் இந்த டேப்பில் சில துளிகள்தான் இவை.

பொதுவாக, மத்திய புலனாய்வுத் துறையினர் அதிகாரபூர்வமற்ற முறையில் சில முக்கியஸ்தர்களது டெலிபோன்களை டேப் செய்வது வழக் கம். அதுவும் தீவிரவாதிகள் கண்காணிப்புக் காகவே இதுபோன்ற அனுமதிகளை அரசாங்கம் கொடுக்கும். அதன் பிறகு, வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இந்த சலுகையைப் பெற்றார்கள். வரி ஏய்ப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்க இந்த வசதி தேவை என்று சொல்லப்பட்டது. அதன் அடிப்படையில் சிக்கியவர்தான் நீரா ராடியா. டெல்லியில் பெரும் கம்பெனிகளுக்கும் அரசியல் பிரபலங்களுக்கும் மீடியேட்டராக இருந்திருக்கிறார். கான்ட்ராக்ட் வாங்கிக் கொடுப்பதும், அதற்கான கப்பம் பெறுவதும் நீராவுக்கு முன்பும் நடந்திருக்கிறது. ஆனால், ‘கருணாநிதிதான் எல்லாம்’ என்று சொல்லும் தி.மு.க-வை டெல்லிப் பெண்மணி நீரா ராடியா சூத்திரதாரியாக இருந்து இயக்கும் நிலைக்குப் போனதுதான் மணி விழா கண்ட தி.மு.க-வின் வளர்ச்சியா?

‘நீரா ராடியாவின் பேச்சுக்கள் அடங்கிய டேப், பல நூறு மணி நேரம் ஓடுகிறது. இருக்கும் பல அரசியல் விஷயங்கள் எங்களுக்கே புரியவில்லை. தமிழ்நாட்டு அரசியல் பிரமுகர்கள் கேட்டால் மட்டும்தான் உள் பாலிடிக்ஸை உணர முடியும். இந்தியாவின் தென்கோடி மாநிலத்தின் அரசியலை நகர்த்துவதில் நீராவுக்கு இவ்வளவு பங்கு இருக்கும் என்பதை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது’ என்று டெல்லி உளவுத் துறை அதிகாரி தன்னிடம் சொன்னதாக பத்திரிகையாளர் ஒருவர் சொல்கிறார்.

தி.மு.க. ஒரு மாநிலக் கட்சி அல்ல… தேசியக் கட்சி என்பதை நிரூபிக்க நீரா பயன்பட்டு இருக்கிறார்!

நன்றி: http://thedipaar.com

No comments:

Post a Comment