Thursday, February 3, 2011

கொஞ்சம் பழையது ஆனா தகவல் படிக்க வேண்டியது

“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால்” என்று பாடினான் அன்று எட்டயபுரம் தந்த எழுச்சிக் கவிஞன் பாரதி! வெள்ளையரின் ஆதிக்கத்தை எதிர்த்து வீறு கொண்டு எழாமல், ஆமைகளாய் ஊமைகளாய், அடிவருடிகளாய் கூனிக்குறுகிக் கிடந்த இந்தியரைப் பார்த்து இப்படித்தான் ஏக்கப் பெருமூச்சு விட்டான் அந்தப் பைந்தமிழ்த் தேர்ப்பாகன் பாரதி.

இன்று விடுதலை பெற்று 64 ஆண்டுகள் ஆன பிறகும் தமிழனைப் பார்க்கும் போது, நமக்கும் அப்படித்தான் பாடத் தோன்றுகிறது. ஏன் தெரியுமா? ‘சன்’ குடும்பத் தொலைக்காட்சியில் 19.09.2010 காலை ஒரு செய்தி வெளியானது.

நடிகர் ரஜினிகாந்த நடித்த எந்திரன் திரைப்படம், தமிழக முதல்வர் கருணாநிதி குடும்பத்தாரால் தயாரிக்கப்பட்டு அடுத்தமாதம் உலகமெங்கும் வெளியிடப்பட இருக்கிறதல்லவா, அந்த எந்திரன் படம் ஆயிரம் நாள் ஓடி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் (ரஜினி ரசிகர்கள்) கோயில் படிக்கட்டுகளில் முட்டிபோட்டு ஏறிச்சென்று வழிபாடு செய்தார்களாம். ரஜினியின் உருவப் பதாகைகளுக்குப் பாலாபிசேகம்கூட செய்தார்களாம்.

இத்தகைய நிலைகெட்ட மனிதர்கள் காலம் தோறும் இருக்கத்தான் செய்வார்கள் என்பதற்காக நெஞ்சு பொறுக்காமல் அன்றே பாடினார் போலும் பாரதி. தமிழக முதல்வர் குடும்பத் தொலைக்காட்சிகள் அனைத்தும் அன்று முள்ளிவாய்க்கால் 4ஆம் கட்ட ஈழப்போரில், ஈழத்தமிழர்கள் சிங்கள இராணுவத்தின் கொத்துக் குண்டுகளாலும், இரசாயனக் குண்டுகளாலும் பல்லாயிரக் கணக்கில் கொல்லப்பட்ட போது அலறித்துடித்து அந்த அப்பாவித் தமிழர்கள் பெண்டு, பிள்ளைகளோடு, பதுங்கு குழிகளுக்குள் ஓடி தஞ்சம் புகுந்த போதிலும் வன்னெஞ்சர்கள் சர்வதேசப் போர் விதிமுறைகளையும் மீறி இராணுவ டாங்குகளால், உயிருடன் துடிதுடிக்க ஏற்றிச் சிதைத்துக் கொல்லப்பட்ட சம்பவத்தையும், தமிழ் இளைஞர்கள் கூட்டங்கூட்டமாக கைகள் பின்புறம் கட்டப்பட்டு, சிங்கள இராணுவத்தினால் நிர்வாணமான நிலையில் சுட்டுக்கொன்ற சொல்லொணாத் துயரச் சம்பவங்களையும் சேனல்4, சி.என்.என், பி.பி.சி, ஏ.பி.சி போன்ற தொலைக்காட்சிகள் உலகம் முழுவதும் ஒலிபரப்பின. அப்பட்டமான அந்த தமிழினப் பேரழிவு அவலங்களைப் பார்த்து உலகெங்கும் வாழும் தமிழர்கள் அதிர்ச்சி அடைந்து உறைந்துப் போயினர். தாங்கள் வாழும் நாடுகளிலெல்லாம் தமிழினத்திற்கெதிராக நடந்தேறிய போர்க்குற்றங்களையும் இனப்படுகொலையையும் வீதியில் நின்று போராடி உலக மக்களுக்கு உணர்த்தினர்.

ஆனால் மனித நேயம் சிறிதும் இன்றி தமிழைக்காட்டி, தமிழனைக்காட்டி பிழைப்பு நடத்தும் கருணாநிதிக் குடும்பத் தொலைக்காட்சிகள் அந்த சூழ்நிலையில்கூட, மானாட மயிலாட என்று குத்தாட்டம் போட்டுக் குதூகலித்துக் கிடந்தனர். அம்மணமாக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் கைகள் கட்டப்பட்டு பிடரியில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட இலண்டன் சேனல்4 காணொலிக் காட்சிகளைச் சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே பாணியில் அவை கிராபிக்சுக் காட்சிகள் என ஏகடியம் பேசினர். ஆனால் ஐ.நா.அமைப்பு அவற்றை ஆய்வு செய்து அந்த சேனல்4 காட்சிகளி;ல் அடிப்படை ஆதாரங்கள் இருப்பதாக உறுதி செய்தது.

வெளிநாட்டு ஊடகங்களும், இணைய தளங்களும் ஈழத்தமிழர்களுக்கெதிரான இலங்கை இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் குறித்த எத்தனையோ ஆதாரங்களை அடிக்கடி வெளியிட்டு வருகின்றன. கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகளில் இது பற்றிய செய்திகள் எதுவும் வெளிவராமல் எச்சரிக்கையாய்ப் பார்த்துக் கொண்டனர். 2010 சனவரியில் வடஅயர்லாந்து டப்ளின் மக்கள் நீதிமன்றம், , இரண்டு நாட்கள் ஆய்வு செய்து ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை இராணுவம் மேற்கொண்ட போர்க்குற்றங்கள் குறித்து 20க்கும் மேற்பட்ட ஆதாரங்களை முன்வைத்து ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்திற்கு இலங்கை மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தது. இதுபற்றிக்கூட கருணாநிதி குடும்பத்தாரது தொலைக்காட்சிகள் கண்டும் காணாமல் நடந்து கொண்டன.

ஐ.நா.பொதுச்செயலாளர் பான்.கீ.மூன் இலங்கை போர்க்குற்றம் புரிந்துள்ளதா என்பதை ஆராய்ந்து பரிந்துரை செய்திட மர்சுகி தரூஸ்மன் தலைiயில் மூவர் கொண்ட குழுவை நியமனம் செய்ததையோ, அதை எதிர்த்து இலங்கையில் உள்ள ஐ.நா அலுவலகத்தை, சிங்களர்கள், இலங்கையின் வீட்டுவசதித் துறை அமைச்சர் தலைமையில் முற்றுகையிட்டு அதிகாரிகளைச் சிறைபிடித்து வைத்தனர். ஐ.நா.மன்றத்தை அவமதித்த சம்பவத்தை இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூட கண்டித்தார்.

ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் பல ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவை வரவேற்றன. ஆனால் இந்தியா இன்றுவரையில் இதுபற்றி எந்தவிதக் கருத்தும் வெளியிடவில்லை. தமிழ்நாட்டில் உள்ள நெடுமாறன், தா.பாண்டியன், வை.கோ, செந்தமிழன் சீமான் உள்ளிட்ட பல தலைவர்கள் ஐ.நா.வின் ஆலோசனைக் குழுவிற்கு இந்தியா ஆதரவு அளிக்க, தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் எனப் பலமுறை கேட்டும் இதுபற்றிய செய்திகளைக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் ஒருபோதும் வெளியிட்டது கிடையாது.

“வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்” எனக் கலைஞர் தொலைக்காட்சியில் விளம்பரம் செய்கிறார்களே, தமிழரை வீழ்த்திவிட்டு தமிழை மட்டும் எப்படி இவர்கள் வாழ வைப்பார்கள்? “தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னைக் கடலில் தூக்கிப் எறிந்தாலும் அமிழ்ந்து போகமாட்டேன்;; கட்டுமரமாய் மிதப்பேன்; அதில் ஏறி நீங்கள் பயணம் செய்யலாம்” என்று கருணாநிதி, கலைஞர் தொலைக்காட்சியில் வசனம் பேசினால் மட்டும் போதுமா? கருணாநிதி என்கிற இந்த “வெள்ளை வேனை” நம்பி தமிழர்கள் பத்திரமாக பயணம் செய்ய முடியுமா?

போர் முடிந்து ஓராண்டு கடந்த பிறகும் இன்னும் சிங்கள இராணுவக் கெடுபிடிகள் தமிழர் பகுதியில் ஓய்ந்தபாடில்லை. அங்கு வாழ இயலாத நிலையில் ஈழத்தமிழர்கள் சிலர் பகீரதப் பிரயத்தனம் செய்து படகிலேறி தப்பி வந்தால், மலேசியா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற தூரத்து நாடுகள் விசாரணை நடத்திய பிறகாவது மனிதாபிமானத்தோடு அகதியாக ஏற்றுக்கொள்கின்றனர். ஆனால் ஈழத்தமிழர்கள் தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தளங்களில் வழிப்படச் செல்லும்போதே தடுத்துக் கைது செய்யப்படுகிறார்கள். சுற்றுலாத் தளங்களில் மடக்கிப்பிடித்து முகாம்களுக்கு திருப்பியனுப்பப்படுகிறார்கள்.

இலங்கைத் தமிழரானாலும் சரி, கடலோரத் தமிழக மீனவராயினும் சரி, தமிழன் என்ற ஒரே காரணத்திற்காகச் சுட்டுக் கொல்கின்ற போர்க்குற்றவாளி ராஜபக்சேவுக்கு இந்தியாவில் திருப்பதி கோயிலில் சிவப்புக் கம்பள வரவேற்பு – அரச மரியாதை. ஆனால் விடுதலைப் புலிகள் எனப் பூச்சாண்டிக்காட்டி தமிழரை அகதியாகக்கூட இந்தியா கெடுபிடி செய்து ஏற்க மறுக்கிறது என்றால், உலகத் தமிழர்களின் நெஞ்சம் பதைக்காதா? இத்தகைய தமிழர்களுக்கெதிரான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு எல்லாம் கருணாநிதி ஒத்து ஊதிக்கொண்டே இருந்தால், வரலாறு அவரைத் தமிழனத் துரோகி எனத் தூற்றும் என்பதைப்பற்றிக்கூட கருணாநிதி கவலைப்டவில்லையே.

தமிழர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன, தம்குடும்பம் செழித்துச் செல்வந்தரானால் போதும் என்று அரசியலில் இந்தியாவை வளைத்துப்போட்டது போல், திரைப்படத் துறையையும் கருணாநிதி தனது குடும்பக்கூடாரமாக்கி வளைத்துப்போட்டு விட்டார். கொள்கையில் திராவிட நாட்டை அடையாவிட்டாலும், தனது குடும்பத் தொலைக்காட்சிகளைத் திராவிட மாநிலங்கள் தோறும் திறந்து (திராவிட நாட்டை) குடும்பத்தின் குத்தகை வருமானமாக்கி அடைந்துவி;ட்டார். இனித் தமிழருக்கு காவிரி டெல்டா பகுதியில் முப்போகம் முழுதாய் விளைந்து தமிழ்நாடு செழித்துவிடப்போகிறது என்று அப்பாவித் தமிழர்கள் நம்பினாலும் நம்புவர்.

முல்லைப் பெரியாறு அணையை 142 அடியாக உயர்த்த உச்சநீதி மன்றம் ஆய்வு ஆணை பிறப்பித்தும், அடாவடியாகக் கேரளா மறுப்பதை எதிர்த்துப் போராட தமிழரைத் தட்டி எழுப்பக் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகள் முன்வரவில்லை. ஆனால் கருணாநிதி குடும்பம் தயாரித்த எந்திரம் படம் ஆயிரம் நாட்கள் ஓடத் தமிழர்களைக் கோயில் படிக்கட்டுகளில் முட்டி போடமட்டும் முனைப்புடன் பிரச்சாரம் செய்கிறது. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் போட்டியாக புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களாகிய நாமும் தமிழினத்தை வேரறுக்கத் துணை போகிற கருணாநிதிக் குடும்பத் தயாரிப்பான எந்திரன் படத்தைப் பார்த்து ஐரோப்பா யூரோக்களாகவும், இங்கிலாந்து பவுண்டுகளாகவும், அமெரிக்க டாலர்களாகவும், மலேசிய ரிங்கிட்டுகளாகவும், சிங்கப்பூர் வெள்ளிகளாகவும் வாரிக்கொடுத்து கருணாநிதி குடும்பக் கருவூலத்தை நிரபபப் போகிறோமா?

இலங்கைத் தமிழர்களுக்கு எதிராகப் போர்க்குற்றம் புரிந்த நாடு என்பதற்காக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கைக்கான ஜி.எஸ.பி வரிச்சலுகையை இரத்து செய்து இலங்கைக்குப் பொருளாதார நெருக்கடிகள் தருகின்றன. ஆனால் தமிழராகப் பிறந்த காரணத்திற்காக – தமிழ்ப் பேசுகின்றோம் என்கிற பாவத்திற்காக தொடர்ந்து இனஅழிப்புக்கு ஆளாகி அழிந்து வருகிறோம். நம்மினத்தை அழிப்பவர்கள் செழிப்படைய – நாம் நமது வருவாயை எள்ளுந் தண்ணீராய் இறைத்து வீணாக்க வேண்டுமா?

எந்திரன் படத்தைப் புறக்கணித்தால் எம்மினம் விடுதலைபெற்று விடுமா என்று சிலர் கேட்கலாம். மண்ணைத் துறந்து, மக்களை இழந்து நாடுநாடாய் திரிந்து வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம் இன்று வாழ்வது ஒரு வாழ்க்கையா? நம் காலை மிதிப்பவரின் தலையை மிதிக்கும் தன்மானச் சூழல் தற்போது நமக்கு இல்லாமல் இருக்கலாம். அதற்காக நமது உள்ளக்குமுறலை வெளிபடுத்தும் ஒரு வழிமுறையாக இதைக்கூடவா நம்மால் தியாகம் செய்யமுடியாது? நமக்கொரு நாடு வேண்டுமென்பதற்காக போராளிகளும், பொதுமக்களும் இலட்சக்கணக்கில் உயிர்த்தியாகம் செய்துள்ள அவல நேரத்தில், தமிழினத் துரோகிக் குடும்பப் படங்களைப் பார்த்துக் குதூகலித்துக் கிடப்பது எந்தவகையில் இனப்பற்றாகும்? நமது தாய்மார்களும், சகோதரிகளும், பச்சிளங்குழந்தைகளும் ஒவ்வொரு முறையும் குண்டுவீச்சுக்கு ஆளானபோது உடல் சிதறி உயிர்துடித்து ஓலமிட்டு அலறியபோதும், வெடித்துச் சிதறி அங்கமெல்லாம் சிதைந்து சின்னாபின்னமாகியதைக் கண்டபிறகும் கல்மனம் கொண்ட இரக்கமற்ற இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் அனைத்தும் போரை நிறுத்தாமல் தமிழர்கள் கொத்துக்கொத்தாய் கொல்லப்படும் அகோரத்தை வேடிக்கையல்லவா பார்த்துக் கொண்டிருந்தன.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, இன்று வரை இந்தியா, இலங்கைமீது போர்க்குற்ற விசாரணை நடைபெறாமல் தடுக்க அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளிடம் என்னென்னவோ முயற்சிகள் எடுக்கிறதே தவிர, தமிழர்களை மீள்குடியமர்த்த எவ்வித அக்கரையும் காட்டவில்லையே. வடக்கு-கிழக்கு பகுதிகள் புத்த விகாரைகளாகவும், சிங்கள குடியிருப்புகளாகவும், சிங்கள இராணுவக் கட்டமைப்புகளாகவும் மாற்றப்பட்டு வருவதை தடுக்க முடியவில்லை. குறைந்தது வதைமுகாம்களில் உள்ள போராளிகளையாவது விடுவிக்க உதவினார்களா? முள்வேளி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சுமார் ஒரு இலட்சம் தமிழர்களை மீள்குடியமர்த்த முயற்ச்சிக்காமல், இலங்கை அரசுக்கு ஆயிரமாயிரம் கோடி ரூபாய்களை உதவிகளாய் அள்ளித்தருகிறது இந்தியா.

இதற்கெல்லாம் உறுதுணையாய் இருக்கும் தமிழினத்துரோகி கருணாநிதியின் குடும்பத் திரைப்படங்களை நாம் பார்த்து திரை செலுத்திக் கொண்டிருக்க வேண்டுமா? கன்றுக்கு அநீதி இழைத்ததால், தான் பெற்ற ஒரே மகனை தேர்க்காலில் இட்டுக் கொன்ற மனுநீதிச் சோழன் வாழ்ந்த தமிழகத்தில் இன்று தம் மகன்கள், பேரன்களுக்காகவும், தமிழினத்தையே அழித்துக்கொன்ற ராஜபக்சே, சோனியா,மன்மோகன்சிங் நலன்களுக்காகவும் முறைவாசல் செய்துக் கொண்டிருக்கும் துராகிகளுக்கு நமது உள்ளக்குமுறல்களை வெளிப்படுத்தி எச்சரிப்பதற்காகவாவது எந்திரன் படத்தை புறக்கணிக்க நாம் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும். தமிழகத்தின் நம்மினச் சொந்தங்கள் முத்துக்குமாருடன் 16 தமிழர்களும் நம் உறவு முரகதாசும் நமக்காக தங்களது இன்னுயிரை தீக்கிரையாக்கி வீரச்சாவு அடைந்தனரே. அவர்களது தியாகத்தை எண்ணியாவது நாம் துரோகிகளின் தயாரிப்பில் வெளிவரும் எந்திரன் படத்தை புறக்கணிக்க வேண்டும். புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பதை மெய்ப்பிக்க நமக்கு இதுவொரு அரசதந்திர வாய்ப்பு; நழுவ விடாதீர்கள்!

எந்திரன் படத்தைப் புறக்கணிப்போம்! தமிழினத் துரோகி கலைஞர் குடும்பத்தாரின் கனவை முறியடிப்போம்!!


No comments:

Post a Comment