First Published : 27 Nov 2010 05:28:50 AM IST
கோவையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் என்னுடைய கணக்குப்படி 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது.
ஆ.ராசா ராஜிநாமா செய்துவிட்ட நிலையில், அவர் மீது வழக்குத் தொடர யாருடைய அனுமதியும் தேவையில்லை. அவர் மீது டிசம்பர் முதல் வாரத்தில் தில்லி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர திட்டமிட்டிருக்கிறேன்.
குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி இதில் சம்பந்தப்பட்டவர்களை படிப்படியாக வழக்கில் சேர்க்க நடவடிக்கை எடுப்பேன்.
இம்முறைகேட்டில் பிரதமர் மன்மோகன் சிங் ஒரு ரூபாய் கூட கேட்கவும் இல்லை; வாங்கவும் இல்லை. ஸ்பெக்ட்ரம் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில் பிரதமரும் ராஜிநாமா செய்ய வேண்டும் எனக் கோருவேன்.
கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் அளவிற்கான ஊழலாகவும்,தேசப் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பிரச்னையாகவும் இது உள்ளது. ஊழல் பணத்தைத் தேர்தலுக்குப் பயன்படுத்துவார்கள், ரியல் எஸ்டேட் நிலங்களின் விலை உயரும், விலைவாசி உயரும், பங்கு வர்த்தகமும் ஏற்றத்தாழ்வுகளை சந்திக்கும். நாட்டின் பொருளாதாரத்தை குட்டிச்சுவராக்கிவிட்டனர்.
அதைவிடவும் பெரிய ஆபத்தானதாக உள்ளது உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள அறிவிப்பு. 1989-க்குப் பிறகு காஷ்மீரை விட்டு வெளியேறியவர்கள் மீண்டும் திரும்பலாம் எனக் கூறியிருக்கிறார். இது தீவிரவாதிகளுக்கும், தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கும் பேருதவியாக உள்ளது.
ஐஏஎஸ் அதிகாரி ரவி இந்தர் சிங், ரகசியங்களை வெளியிடுகிறார் என பிரதமர் அலுவலகம் கூறியும் 8 மாதங்களாக உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்கவில்லை. நாட்டில் பாதுகாப்பற்ற தன்மை நிலவக் காரணமாக இருக்கும் ப.சிதம்பரம், பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும்.
வாக்களிக்கப் பணம்: ஸ்பெக்ட்ரம் ஊழலில் தண்டனை கொடுப்பது அவசியம். அப்போதுதான் நாட்டைக் காப்பாற்ற முடியும். மக்கள் பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்கக் கூடாது. விளம்பரம் அல்லது பணம் வாங்கிக்கொண்டு செய்தி வெளியிடும் பத்திரிகைகளின் போக்கு மாற வேண்டும். இது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது.
பிகாரில் மக்கள் சாதி, பணத்திற்கு விலைபோகாமல் வாக்களித்துள்ளனர். அங்கு ராகுல் காந்தியின் மேஜிக் பலிக்கவில்லை.தேவர் பெயர்: மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்டவேண்டும் என மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினேன். மத்திய அரசு அதற்காக மாநில அரசிடம் பரிந்துரை கோரியபோது, தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பரிந்துரைக்கவில்லை. இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
அதன்பின்னர், கடந்த ஓர் ஆண்டுக்கு முன் மீண்டும் இக்கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினேன். இது தொடர்பான கடிதத்திற்கு முதல்வர் கருணாநிதி பரிந்துரை செய்தார். முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டவிடாமல் ப.சிதம்பரம் தடுத்துவிட்டார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது கூட்டணியில் சேர்வதா என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவு செய்வேன்.
எங்களை பிற கட்சிகள் கூட்டணியில் சேர்க்கவும் விரும்ப வேண்டுமே. 5 எம்எல்ஏக்கள் எங்கள் கட்சிக்குக் கிடைத்தாலும் மக்களுக்கு நேர்மையான காவலர்களாக இருப்போம் என்றார் சுப்பிரமணியன் சுவாமி.
courtesy:www.dinamani.com
Courtesy: http://dinamani.com
No comments:
Post a Comment