Saturday, November 27, 2010

நிதிஷ் குமார் - ஓர் எளிய அறிமுகம்


nithish-2

பீகாரின் பக்தியார்புரில், கவிராஜ் ராம்லக்கன் சிங் - பரமேஸ்வரி தேவிக்கு, 1951, மார்ச் 1-இல் பிறந்தவர் நிதிஷ் குமார். இவரது தந்தை விடுதலைப் போராட்ட வீரர்; நவீன பீகார் உருவாக்கத்தில் பெரும் பங்கு வகித்த அனுக்ரக நாராயண் சின்ஹா என்ற காந்தீயவாதியின் அணுக்கத் தொண்டராகத் திகழ்ந்தவர் ராம்லக்கன் சிங். ஆரம்பத்திலிருந்தே காந்தீயக் கொள்கையால் ஈர்க்கப்பட்ட நிதிஷ், மதுவையும் புகைபிடித்தலையும் தொடாதவர். எலக்ட்ரிகல் எஞ்சினியரிங் படிப்பில் பட்டம் பெற்ற நிதிஷ், மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபாடு கொண்டார். சோஷலிசக் கொள்கையுடன் அரசியல் நடத்திவந்த ராம் மனோகர் லோகியா, கர்ப்பூரி தாகூர் ஆகியோரை தனது அரசியல் குருவாகக் கொண்டார்.

இந்திரா காந்தி கொண்டுவந்த நெருக்கடிநிலையை எதிர்த்து ஜெயபிரகாஷ் நாராயண் நடத்திய போராட்டத்தில் (1974 - 1977) நிதிஷ் பங்கேற்றார். அவரது இளமைத் துடிப்பு, அரசியலில் அவரைப் பிரபலப்படுத்தியது. 1980-இல் நடந்த தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற அவர், அதனால் நிலைகுலையவில்லை. அவரது அரசியல் பயணம் எதிர்பார்ப்பின்றித் தொடர்ந்தது. அந்தக் காலகட்டத்தில் லாலு பிரசாத் யாதவ், ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத் யாதவ் ஆகியோருடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது. 1985-இல் முதன்முறையாக, சுயேச்சையாகப் போட்டியிட்டு பீகார் சட்டசபை உறுப்பினர் ஆனார். 1987-இல் லோக்தளத்தின் இளைஞர் பிரிவு தலைவரானார்.

1989-இல் ராஜீவின் போஃபர்ஸ் ஊழலை எதிர்த்துப் போர்க்கொடி தூக்கிய வி.பி.சிங்கின் தலைமையில் ஜனதாதளம் உதயமானது. அதில் லோக்தளம் இணைந்தது. அப்போது பீகார் ஜனதாதளத்தின் பொதுச்செயலாளர் ஆனார் நிதிஷ். அந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற அவர், வி.பி.சிங் அமைச்சரவையில் விவசாயத் துறை இணை அமைச்சர் ஆனார். அடுத்து வந்த அனைத்து நாடாளுமன்றத் தேர்தல்களிலும் 2004 வரை அவர் உறுப்பினராகத் தேர்வானார்.

ஆட்சிகள் மாறிய சூழலில், ஜனதா தளத்தின் முன்னணித் தலைவராக உயர்ந்த அவர், பீகாரில் லாலுவின் மோசமான ஆட்சிக்கு எதிராகக் குரல் எழுப்பி, ஜார்ஜ் பெர்னாண்டஸ், சரத் யாதவ் ஆகியோருடன் சமதா என்ற கட்சியாகப் பிரிந்தார். சமதா கட்சி வாஜ்பாய் தலைமையிலான தே.ஜ.கூட்டணியில் இடம் பெற்றது. வாஜ்பாய் அமைச்சரவையில் நிதிஷ் ரயில்வே, தரைவழிப் போக்குவரத்து, விவசாயத் துறைகளில் அமைச்சராகப் பணியாற்றினார். 1999-இல் நடந்த ரயில் விபத்திற்குப் பொறுப்பேற்று தனது ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தவர் நிதிஷ். பிறகு சமதா உள்ளிட்ட ஜனதாக் கிளைகள் இணைத்து ஐக்கிய ஜனதாதளம் உருவானபோது அதன் நாடாளுமன்றத் தலைவரானர் நிதிஷ்.

2001-இல் நடந்த பீகார் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டபோது பிரதமர் வாஜ்பாய் அறிவுரைப்படி முதல்வராகப் பொறுப்பேற்றார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், ஒருவார காலத்தில் பதவி விலகினார். பிறகு பீகாரில் லாலுவின் ஆட்சியை அகற்ற, தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

2005-இல் நடந்த தேர்தலில் 143 தொகுதிகளில் வென்று தே.ஜ.கூட்டணி சார்பில் ஆட்சியைக் கைப்பற்றிய நிதிஷ், பீகாரில் சீர்குலைந்திருந்த ஆட்சி நிர்வாகத்தைச் செம்மைப்படுத்தி, வளர்ச்சியை நோக்கி மாநிலத்தை அழைத்துச் சென்றார். அதன் விளைவாக 2010 சட்டசபைத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று, மீண்டும் மூன்றாவது முறையாக பீகார் முதல்வர் ஆகியிருக்கிறார்.

இவரது மனைவி மஞ்சு குமாரி சின்ஹா, பள்ளி ஆசிரியை. இவர் அண்மையில் (2007) இறந்தார். இவரது மகன் நிஷாந்த், பொறியியல் பட்டதாரி. அரசியலில் குடும்ப உறுப்பினர்கள் நுழைவதை நிதிஷ் ஊக்குவிக்கவில்லை. ஆறு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும், மூன்று முறை சட்ட மன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிதிஷ் மிக எளிமையானவர்; யாரும் இவரைச் சிரமமின்றி அணுக முடியும்.

அரசியல் என்பது பிழைக்கும் வழியல்ல; மக்களுக்கு சேவை செய்வதற்கான மார்க்கம் என்று நம்பும் இயல்பான அரசியல்வாதி நிதிஷ் குமார்.

http://www.tamilhindu.com/2010/11/good-roads-take-nitish-kumar-home/

No comments:

Post a Comment