தஞ்சை வெ.கோபாலன்
26 Nov 2010 |
இன்றைக்கு புதிதாக ஓர் அரசியல் விமரிசனம் மன்மோகன் சிங் பற்றி வெளியாகியிருக்கிறது; பிரதமர் மன்மோகன் சிங் சிறிது சிறிதாக நரசிம்ம ராவாக மாறிவருகிறார் என்று. இடி விழுந்தாலும் சிறிதுகூட அசராதவர் நரசிம்ம ராவ். உருவாகும் எல்லா பிரச்சினைகளும் நாளடைவில் தானாகவே சரியாகிவிடும் என்பது அவரது நம்பிக்கை. எப்பொழுதும் ‘இதுவும் கடந்துபோகும்’ என்கிற மோன நிலை. சில நேரங்களில் நமக்கு ஏற்படும் சின்னஞ்சிறு உடல் உபாதைகளைக் கண்டு சிலர் அவசர அவசரமாக மருத்துவரிடம் சென்று வைத்தியம் செய்து கொள்வார்கள். பொதுவாக சில மருத்துவர்கள் தலைவலி, சளி, இருமல் இதுபோன்ற உபாதைகளுக்காக மருத்துவர்களிடம் ஓடாதீர்கள். அவை தற்காலிகமானவை, தானாகவே குணமாகிவிடும் என்பார்கள். அதுபோல அரசியலில் ஏற்படும் சில பிரச்சினைகள் தானாகவே கூட அடங்கிப் போகும். அதை விட்டுவிட்டு உடனடியாக அதற்கு எதிர் நடவடிக்கை, அடக்குமுறை, எதிர்ப்பேச்சு.. இப்படித் தொடங்கினால் அது பிரச்சினையை இன்னும் பெரிதாக ஆக்கிவிடும். அதனால் சும்மா இருப்பதே சுகம் என்று ‘சிரிக்கத் தெரியாத’ பெரியவர் நரசிம்ம ராவ் தனது அரசியல் வாழ்க்கையை ஓட்டிவிட்டார். இத்தனைக்கும் அவர் நல்ல அறிவாளி, பல மொழிகளை அறிந்தவர், நல்ல நிர்வாகத் திறமை படைத்தவர், காங்கிரஸ் கட்சியில் மாநாடுகளில் தீர்மானங்களை எழுதுபவர் இவர்தான். அப்படிப்பட்டவர் எந்த சூழ்நிலையிலும் அமைதியாக இருந்து மைனாரிட்டி அரசை நடத்திச் சென்றவர். மன்மோகன் சிங் அப்படிப்பட்ட திறமைகள் கொண்டவரா என்பது தெரியவில்லை, ஆனால் சுற்றிலும் நடக்கும் புயல், மழை, இடி, சூறாவளி எதனைப் பற்றியும் கவலைப் படாமல், அமைதியாக, ‘விசுக் விசுக்’ என்று நடந்து கொண்டு தன் கடமைகளை ஆற்றிக் கொண்டிருக்கிறார். சில சமயங்களில் இவரது நடை வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மந்திரி நாராயணசாமி போன்றவர்கள் மன்மோகனுக்கு அருகில் நடக்க வேண்டுமென்ற ஆர்வத்தில் ஓடிவந்து சேர்ந்து கொள்ளும் அபூர்வ காட்சிகளும் தொலைக்காட்சியில் காட்டப்படுகின்றன.
சரி! இவர் ஒரு பொருளாதார நிபுணர்; ரிசர்வ் வங்கியில் இருந்தவர்; உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையை முன்னெடுத்துச் சென்று நாட்டை மேல்நாட்டவருக்குத் திறந்து விட்டவர், என்றெல்லாம் சொல்கிறார்கள். அதெல்லாம் சரி! தன் அமைச்சரவையில் ஓர் ஊழல் நடக்கிறது, அது வெளிச்சத்துக்கு வந்துவிட்டது; அதற்கு காரணமானவர் இன்னார் என்பது எங்கோ ஒரு மூலையில் இருக்கிற குக்கிராமம் சோத்துக்காரன்பட்டி சுப்பனுக்குக்கூடத் தெரிந்து விடுகிறது. ஆனால் இந்த நாட்டின் முதல் நிர்வாகி, பிரதம மந்திரி, தன் மந்திரி சபையில் இப்படியொரு ஊழல் நடந்திருப்பதையோ, அதனைச் செய்தவர் இவர்தான் என்பதையோ உணர்ந்ததாகவே காட்டிக் கொள்ளவில்லையே. மறுபடியும் அதே ஊழல் மலிந்த, எண்ணிலாத கோடி வருமானம் தரும் அந்தத் துறையை மீண்டும் அவரிடமே கொடுத்தாரே, அந்த மர்மம் என்ன? தெரிய வேண்டுமல்லவா? அதுதான் போகட்டும் நாடாளுமன்ற வளாகத்தில் முரசொலி மாறன் படத்துக்கு மலர் போட வந்த அவர், ராசாவைத் தட்டிக் கொடுக்கிறாரே, அதன் பொருள் என்ன? பலே பாண்டியா? நல்ல சாதனை! சளைக்காதே நான் இருக்கிறேன் என்று பொருளா? நமக்குத் தெரிய வேண்டும்.
புதிய நாடாளுமன்றம் அமைக்கப்படுகிறது. அதில் மந்திரி சபை அமைக்க வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு மட்டும்தான் இருக்கிறது. அதையாவது இந்த மனிதர் செய்தாரா என்றால், அந்த வேலையையும் கூட யார் யாருக்கோ தானம் செய்து விட்டார் போலிருக்கிறது. யாரோ ஒரு தரகர் மாது நீரா ராடியா என்பவரும் வேறு சிலரும், ஊடகங்களிலிருந்து பத்மபூஷன் கொடுத்துத் தன்னக்கட்டப்பட்ட ஒரு வீராங்கனையும் இந்த பங்கு பேரத்தில் ஈடுபடுகிறார்கள். நம் ஊரில் மாலை நேர தெருவோர காய்கறி மார்க்கெட்டில் “ஏய் கிழவி! உன் கத்திரிக்காய் கூடையை அதோ அந்த லேம்ப் போஸ்ட் அருகில் போட்டுக்கோ!”, “இந்தாம்மா, உன் புடலங்காய் மூட்டையை அந்த சாக்கடை ஓரத்தில் போடு!” என்றெல்லாம் கட்டளை பிறப்பிக்கும் பிஸ்தா மேஸ்திரி மாதிரி இந்த உதிரிக் கூட்டம் யாருக்கு என்ன மந்திரி கொடுக்கலாம் என்று பேரம் பேசுகிறார்கள்.
அதுதான் போகட்டும், ஒரே குடும்பத்தில் ஒரு டஜன் பேருக்கு மந்திரி பதவியில் ஆசை. மியூசிகல் சேரில் சுற்றிச்சுற்றி வந்து மியூசிக் நின்றவுடன் ஓடிவந்து உட்காருபவருக்கு பதவி, ஏமாந்தவர் வெளியேற வேண்டும். அப்படி ஒரு குடும்பத்துக்குள் மியூசிகல் சேர். இதில் சிலருக்கு பலர் வக்காலத்து. சிலருக்கு வேரில் வேட்டு வைக்கப்படுகிறது. குடும்ப பேட்றியார்ச் இதில் ஒருவருக்கு ஆதரவு, அவரது மனைவி மற்றொருவருக்கு ஆதரவு. என்ன இது. நூறுகோடிக்கும் மேற்பட்ட மக்கள், இதில் 534 தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். இந்த 534-இல் ஐம்பது அல்லது அறுபது மந்திரிகள். இவற்றில் ஒரு டஜன் ஒரு குடும்பத்துக்கு என்றால் மற்றவர்களுக்கு? பிரதமர் செய்ய வேண்டிய வேலைகள் பரவலாக்கப்பட்டு பலரும் இதில் ரொம்ப மெனக்கெட்டிருப்பதைப் பார்த்தால், அரசியலும் ஒரு பங்கு மார்க்கெட்டோ என்று ஐயப்படத் தோன்றுகிறது.
ஆக, இத்தனைப் பெருமைகளுக்கும் உரியவரான நமது மாண்புமிகு பிரதம மந்திரி நேர்மையானவர், நூறு சதவீதம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே! அப்படிப்பட்ட பெரியவரை, உலகமே யோக்கியர் என்று போற்றுகின்ற உத்தமரை ‘ஸ்பெக்ட்ரம் 2ஜி’ விவகாரத்தில் எதிர்கட்சிகள் பழிசுமத்துகின்றனரே! ஐயகோ! இது என்ன கொடுமை. இப்படிச் சொல்பவர் காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா.
இவர் சொல்கிறார் ‘ஸ்பெக்ட்ரம்’ பிரச்சினையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் நேர்மையின் மீது சந்தேகப்படுவது வெட்கக்கேடானது. கவனியுங்கள் பிரதமரைச் சந்தேகிப்பது ‘வெட்கக்கேடானதாம்’. யாருக்கு வெட்கக்கேடு? சுற்றி நடப்பவற்றைத் தனக்கு எந்த சம்பந்தமும் இல்லாதது போல இன்று வரை ஊமை போல இருப்பவருக்கு வெட்கக்கேடா? அல்லது இப்படி எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறாரே, இவருக்கும் தெரிந்தே இவை அனைத்தும் நடந்திருக்கிறது? இவருக்கு இதைப் பற்றி நன்கு தெரிந்திருக்குமோ? என்று சந்தேகப்படும் இந்த நாட்டு மக்களுக்கு வெட்கக்கேடா தெரியவில்லை. அல்லது இவை அத்தனைக்கும் காரணமான தனது கட்சிக்கும் தலைவரான தனக்கும் வெட்கக்கேடா? புரியும்படியாக அல்லவா சொல்ல வேண்டும்.
இதிலிருந்து ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகிறது. அதாவது இந்த சோனியா அம்மையாருக்கு இந்த நாட்டின் வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், கலாசாரம் இவை சிறிதளவாவது தெரிந்திருக்குமானால் இதுபோன்ற சம்பந்தமில்லாத கடுமையான வார்த்தைகளை உபயோகிப்பாரா என்று எண்ணிப்பாருங்கள். யாரோ எழுதிக் கொடுப்பதைப் படிக்கிறாரோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது. இல்லாவிட்டால், இந்த நாட்டு பெரும் தலைவர்கள் கூட சொல்லத் தயங்கும் கடுமையான வார்த்தைகளை இவர் பயன்படுத்துவதைப் பார்த்தால் இவர் இன்னும் இந்த நாட்டை முழுமையாகப் புரிந்து கொண்டவராகத் தெரியவில்லை. மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவை விட்டு வந்து இந்திய அரசியலில் ஈடுபட விருப்பம் தெரிவித்த போது அவரது அரசியல் குரு கோபாலகிருஷ்ண கோகலே அவரை இந்தியா முழுவதும் சுற்றி வாருங்கள். கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் அவர்களது வாழ்க்கை முறை, அங்கெல்லாம் நிலவும் கலாச்சாரம், பண்பாடு இவற்றை நன்கு தெரிந்து கொண்டு வாருங்கள், அதன் பிறகு இந்தியச் சுதந்திரப் போரில் தலைமை ஏற்கலாம் என்றார். காந்திஜியும் அப்படியே ரயிலில் மூன்றாம் வகுப்பில் தன் மனைவியோடு கூட்டத்தோடு கூட்டமாகப் பயணம் செய்து சாதாரண அடிமட்ட இந்தியனின் உணர்வுகளை, வாழ்க்கை முறையை, அவனது தேவைகளை அவனது இன்னல்களைப் புரிந்துகொண்டு வந்தார், பின்னர் அரசியலில் ஈடுபட்டார்.
நேரு குடும்பப் பாரம்பரியம் என்ற போர்வையில் காங்கிரஸ் தலைமைக்கு வந்த சோனியா தேர்தலின்போது பிகாரில் சுற்றுப்பயணம் செய்தார். சரி! மக்களுக்கு என்ன தேவைகள், அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கிற குறைகள் இவைகளைத் தெரிந்து கொண்டு எங்கள் கட்சி அவற்றைச் சரி செய்து மக்கள் மகிழ்ச்சியோடும், நிம்மதியாகவும் வாழ நல்ல ஆட்சி கொடுப்போம் என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும். ஒரு
நல்ல சேல்ஸ்மேனுக்கு இருக்க வேண்டிய தகுதி பற்றிப் பாடங்கள் இருக்கின்றன. முதலில் வேறொரு நிறுவனம் விற்பனை செய்யும் பொருளை குறை சொல்லாமல், தனது பொருள் எந்த விதங்களில் மேன்மையுடையது என்பதை விளக்கிச் சொல்ல வேண்டுமாம். இந்த அம்மையார் என்ன சொன்னார்? நிதிஷ் குமார் ஓர் ஏமாற்றுக்காரர் என்றார். அவர் யாரை ஏமாற்றினார்? இந்த அம்மையாரையும் இவரது கட்சியையும் பிகாரில் காலூன்ற முடியாத அளவுக்கு ஊழல் இல்லாத நேர்மையான, வளர்ச்சிக்கு வழிவகுக்கும் ஆட்சியைத் தந்தாரே அதனால்தான் அவர் ஏமாற்றுக்காரரா? இந்தச் சொல்லைப் பயன்படுத்த இந்திய நாட்டில் வேறு எந்த தலைவராவது துணிவார்களா? மக்களின் பேராதரவைப் பெற்று 243 இடங்களில் 206 இடங்களை வென்றிருக்கிற நிதிஷ்குமாரைப் பார்த்து தேர்தல் கூட்டங்களில் அவர் ஓர் ஏமாற்றுக்காரர் என்று சொன்னது யோக்கியப் பொறுப்புள்ள செயலா? சிந்திக்க வேண்டும்.
இவரது கைப்பாவையாக விளங்கும் மனமோகன சிங்கர் இன்னும் ஒரு படி மேலே போய்விட்டார். நாங்கள் பிகாருக்குத் தருகின்ற நிதி உதவிகளை நிதிஷ்குமார் மக்களுக்குச் செலவிடவில்லை. திட்டங்களுக்குக் கொடுக்கவில்லை என்றார். இவர் சொல்லும் நிதி காங்கிரஸ் கட்சியின் நிதியா? மனமோகனரின் சொந்த நிதியா? மக்களின் வரிப்பணம் தானே! அப்படியென்றால் அந்த நிதி என்னவாயிற்று? அவர் ஊழல் செய்துவிட்டார் என்கிறாரா? இவரைச் சுற்றி இருக்கும் யோக்கியப் பொறுப்புள்ள நபர்களையே பார்த்துக் கொண்டிருந்ததனால் ஏற்பட்ட பார்வைக் கோளாறோ என்னவோ தெரியவில்லை. இவர்களுக்குப் பார்ப்பவர்கள் எல்லாம் அயோக்கியர்களாகவே தெரிகிறார்கள். இப்படியெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் தனிநபர் விமரிசனங்கள், குற்றச்சாட்டுகள், கடுமையான வசவுகள் இத்தனையையும் சொன்னார்களே 243 இடங்களில் வெறும் 4 இடங்களை வாங்கியிருப்பதிலிருந்து என்ன தெரிகிறது. மக்கள் இவர்களது பேச்சுகளை உதாசீனப்படுத்தி விட்டார்கள். இவர்கள் அவிழ்த்துவிட்ட பொய்களை நிராகரித்து விட்டார்கள். இவர்களது பேச்சுக்காக இவர்கள் முகங்களில் கரியைப் பூசிவிட்டார்கள். இன்று மக்கள் விழிப்போடும் தெளிவோடும் இருக்கிறார்கள். இல்லாவிட்டால் மூன்று கோடிப்பேர் ஒரே மாதிரியான தீர்ப்பை அந்த மாநிலம் முழுவதும் கொடுக்க முடியுமா? இவர்கள் ஒன்றுகூடி பேசிவைத்துக் கொண்டா இந்தத் தீர்ப்பை வழங்கினார்கள்.
இதே அம்மையார் முன்னர் குஜராத் தேர்தலின் போது அங்கு சென்றார். அங்கு போய் முதல்வர் மோடியைக் கடுமையாக விமரிசனம் செய்தார். என்ன சொன்னார்? இந்த நபர் நரேந்திர மோடி இருக்கிறாரே, இவர் ஒரு “மரண வியாபாரி” என்றார். இப்படி பா.ஜ.க. தலைவரைச் சொல்வதன் மூலம் ஏற்கனவே எதிர் எதிராக இருக்கும் மதமோதல்கள் காரணமாகப் புண்பட்டுப் போயிருக்கிற அந்த மாநில மக்கள் இவர் பேச்சுக்கு மதிப்புக் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தார். மோடியை கடுமையான வார்த்தைகளால் விமரிசனம் செய்வதனால் முஸ்லிம்கள் இந்த அம்மையாரின் கட்சிக்கு வாக்களிப்பார்கள் என்று கருதினார். ஒரு தெருவில் பல இனத்தவர் வசிக்கிறார்கள். அவர்களுக்குள் ஏதாவது மனத்தாங்கல்கள் இருக்கத்தான் இருக்கும். அப்படி இருக்கையில் எங்கிருந்தோ வந்த ஒரு சம்பந்தமில்லாதவன் இவர்களுக்குள் மோதவிடுவது போல் சிண்டு முடிந்தால் விடுவார்களா? பாரதி சொன்னது போல, “ஆயிரம் உண்டிங்கு ஜாதி, எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி” என்று பொங்கி எழுந்து விரட்டியடிப்பார்கள் அல்லவா. அதுதானே அங்கேயும் நடந்தது. அப்படியானால் போகுமிடங்களில் எல்லாம் இந்தியத் தலைவர்களை இப்படி கடுமையான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தால், தான் இந்தியா முழுவதையும் ஆண்டுவிடலாம் என்ற குருட்டுக் கணக்குப் போடுகிறாரா இந்த அம்மையார்?
அப்படிப் பார்த்தால் இந்தியாவில் இந்த அம்மையார் தலைமை ஏற்றிருக்கும் கட்சி எத்தனை மாநிலங்களில் கோலோச்சுகின்றன. டில்லி, மகாராட்டிரம், ஹரியானா, ராஜஸ்தான் இதுபோன்ற ஒரு சில இடங்கள்தானே. மற்ற இடங்களில் எல்லாம் மற்ற கட்சிகள்தான். இவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்கள் எல்லாம் மத்திய அரசு பெட்டி பெட்டியாகக் கொண்டு வந்து கொட்டும் பணத்தைக் கொண்டு ஆங்காங்கே பாலையும் தேனையும் ஓடச் செய்திருக்கிறார்களா? வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்து விட்டார்களா? அங்கெல்லாம் உற்பத்தியைப் பெருக்கிவிட்டார்களா? வன்முறை ஒழிந்து அமைதி அங்கெல்லாம் கோலோச்சுகிறதா? உன் வீட்டை ஒழுங்கு செய்து முன்மாதிரியாக இருப்பதை விட்டுவிட்டு அடுத்த வீட்டில் எலி ஓடுகிறது, பெருச்சாளி வசிக்கிறது என்றெல்லாம் பூச்சாண்டி காட்டும் வேலையை இவர்கள் விட்டொழிக்க வேண்டும். சொல்லும் வார்த்தைகளில் கவனம் வேண்டும். முகத்தை கடுமையாக்கிக் கொண்டு எதிராளிகளை துச்சமாகப் பேசும் வழக்கத்தை உடனடியாக நிறுத்திக் கொள்வதுதான் நியாயமாக இருக்க முடியும். பாரதி வாக்கை இவர்களுக்கு நினைவு படுத்துவோம்: “மனதில் உறுதி வேண்டும்; வாக்கினில் இனிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்” அப்போதுதான் நெருங்கிய பொருள் கைவசமாகும். இதை ஒரு வேதமாகவே இவர்கள் ஏற்றுக் கொள்வதே நலம்!
http://www.tamilhindu.com/2010/11/sonia-slams-for-targeting-pm/
No comments:
Post a Comment