Saturday, November 27, 2010

நிதீஷின் வெற்றியும் லாலுவின் வீழ்ச்சியும்!


நீரஜா சௌத்ரி
First Published : 26 Nov 2010 03:23:34 AM IST

Last Updated :

பிகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி 115 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. அதனுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. 91 இடங்களில் வென்றுள்ளது. லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி இந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது. அக்கட்சி 22 இடங்களில் மட்டுமே

வென்றுள்ளது. அதன் கூட்டணிக் கட்சியான லோக ஜனசக்தி 3 இடங்களையும், தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 4 இடங்களையுமே பெற முடிந்துள்ளது.

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் நிதீஷ் குமார் அதிக இடங்களில் வென்று மீண்டும் ஆட்சியமைப்பது உறுதி என்று தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. அரசியல் நோக்கர்களும் நிதீஷ் குமார்தான் மீண்டும் முதல்வராவார் என்று கருத்துக் கூறியிருந்தனர். தேர்தல் முடிவுகளும் அப்படியே அமைந்துள்ளன. ஒருவகையில் பார்த்தால் இந்தத் தேர்தல் முக்கியத்துவம்
வாய்ந்ததாகக் கருதப்பட்டது. ஏனெனில், தேர்தலில் முக்கியப் போட்டி நிதீஷ் குமார், லாலு பிரசாத் இடையேதான் என்றுகூடச் சொல்லலாம்.

தேர்தலில் வெற்றி யாருக்கு? பெரும்பான்மை கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் இருந்ததால் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாக எல்லோராலும் கருதப்பட்டது. நல்லாட்சி நடத்திய முதல்வர் நிதீஷ் குமார், தனது ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முன்வைத்துத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பிகாரில் சட்டம், ஒழுங்கு சரியில்லை. மாநிலத்தின் வளர்ச்சியில் முதல்வர் நிதீஷ் குமார் போதிய கவனம் செலுத்தவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களைக் கூறி லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தில் இறங்கினர்.

மொத்தத்தில் இந்தத் தேர்தல் பிரசாரம் மாநிலத்தின் வளர்ச்சி பற்றியே இருந்தது. நிதீஷ் குமார் வெற்றிபெற்றால் மக்கள் ஆதரவு அவருக்கு உள்ளது என்று கருதலாம். லாலு கட்சி வெற்றிபெற்றால் வளர்ச்சிப் பணிகளில் நிதீஷ் போதிய கவனம் செலுத்தவில்லை என்று கொள்ளலாம் என்ற கருத்து பரவலாக இருந்தது. ஆனால், தேர்தல் வெற்றி மூலம் மக்கள் என் பக்கம்தான் என்பதை நிதீஷ் குமார்
நிரூபித்துள்ளார். இதை அவரது சாதனை என்றுகூடச் சொல்லலாம்.

தேர்தலில் லாலுவை வீழ்த்தி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது என்பது நிதீஷ் குமாருக்கு மிகப் பெரிய சவாலாக இருந்தது. பிகார் மாநிலத்தில் வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல; நிதீஷ் குமார் எந்த அளவுக்கு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார் என்று பார்ப்பதைவிட, மாநிலத்தின் வளர்ச்சியில் அவர் உண்மையாகவே
அக்கறை செலுத்தி வருகிறார் என்கிற எண்ணம் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ளது. அதுதான் அவரது வெற்றிக்கு முக்கியக் காரணம்.

நான் ஆட்சிக்கு வந்தால் பல்வேறு புதுமைகளைச் செய்வேன் என்று கூறி லாலு பிரசாத் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். ஒருவேளை அவர் ஆட்சிக்கு வந்திருந்தால்கூட நிதீஷ் குமாரைப் பின்பற்றி வளர்ச்சிப் பணிகளைத் தொடருவதைத் தவிர, அவருக்கு வேறு வழி இருந்திருக்காது. இது லாலுவுக்கே நன்றாகத் தெரியும். ஆனாலும், மக்களைத் திருப்திப்படுத்த வேண்டும் என்ற விதத்திலேயே அவரது பிரசாரம் இருந்தது.

நிதீஷ் குமார் தேர்தல் வெற்றி மூலம் ஜாதி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது என்று பலரும் கூறி வருகின்றனர். இதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில், பிகார் மாநிலத்தில் ஜாதி அரசியல் இன்னும் நீடிக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நிதீஷ் குமார், லாலு பிரசாத் இருவருமே ஜாதி அரசியல் கணக்குப் போட்டுத்தான் தேர்தல் களத்தில் இறங்கினர். நிதீஷ் குமார் ஜாதி அரசியலில் நேரடியாக இறங்காமல், கடந்த 5 ஆண்டுகளில் என்னென்ன வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன? இதன் மூலம் யார், யார் பயனடைந்தனர் என்ற ரீதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அது அவருக்குக் கைகொடுத்தது. ஒரு காலத்தில் ஏழைகளின் காவலனாகவும், சமூகநீதியை நிலைநாட்டுபவராகவும் லாலு பிரசாத் மக்களால் கருதப்பட்டார். ஆனால், தனது ஆட்சியில் குடும்பத்தினர் பயனடைய வழிவகுத்ததும், யாதவ சமூகத்தினரின் நலனில் மட்டுமே அக்கறை செலுத்தி வந்ததும் அவருக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தியது.

நிதீஷ் குமார், தனது ஆட்சியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தினார். அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தார். எல்லாவற்றுக்கும் மேலாக நல்லாட்சியின் பலன் அனைவரையும் சென்றடைகிறதா என்பதை உறுதி செய்தார்.

பிகாரில் நிதீஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியும், பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்திருந்ததால் உயர்ஜாதி வகுப்பினரின் ஆதரவு அவர்களுக்கு இருந்தது. எனினும், உழுபவனுக்கே நிலம் சொந்தம் என்பது தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற நிதீஷ் முற்பட்டதால் உயர்ஜாதி வகுப்பினரில் சிலர் அவரிடம் கோபம் கொண்டிருந்தனர்.

இதன் எதிரொலியாக அங்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நிதீஷ் கட்சி தோல்வியடைய நேர்ந்தது. இருந்தபோதிலும் தேர்தல் நெருங்கியதாலும், லாலு தன்னை முதல்வர் வேட்பாளராகச் சித்திரித்து களத்தில் இறங்கியதை அடுத்தும் அவர்கள் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கரத்தை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தத் தொடங்கினர். இந்தத் தேர்தலில் கூட்டணி அமைக்க வாய்ப்பிருந்தும் அதைச் சரிவர காங்கிரஸ் பயன்படுத்திக் கொள்ளாமல் தனித்துப் போட்டியிட்டதால் படுதோல்வியைத் தழுவ நேர்ந்தது.

தேர்தல் சமயத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது யாதவ வகுப்பினர் (மொத்த மக்கள்தொகையில் 16 சதவிகிதம்) லாலு பிரசாத்தின் பக்கம் இருந்ததைக் காணமுடிந்தது.

கடந்த 5 ஆண்டுகளாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் ஆட்சியில் இல்லாமல் இருந்ததால் மீண்டும் லாலுவை ஆட்சியில் அமர்த்திவிட வேண்டும் என்ற துடிப்பில் இருந்தனர்.

மேலும், நிதீஷ் ஆட்சியில் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த முடியாத நிலை இருந்ததால், தாங்கள் ஆளுங்கட்சியினரால் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி பிரசாரம் செய்து வந்தனர். ஆனால், அவை எடுபடவில்லை என்பது வேறு விஷயம். முஸ்லிம்களில் ஒரு பகுதியினரும் லாலு கட்சியையும், பாஸ்வானின் லோக ஜனசக்தியையும் ஆதரித்து வந்தனர்.

எனினும் இந்தத் தேர்தலில் ஜாதி அரசியலை ஒதுக்கி வைத்துவிட்டு பலரும், குறிப்பாக இளைஞர்கள் நிதீஷ் குமாருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும். லாலு ஆட்சியில் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தப்படவில்லை. சாலைகள் மிக மோசமாக இருந்தன. இரவு நேரத்தில் பயணம் என்பது பாதுகாப்பானதல்ல என்ற எண்ணம் எங்களிடம் இருந்தது. ஆனால், நிதீஷ் குமார் ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டுள்ளன. எங்களால் பயமின்றி எங்கும் சென்றுவர முடிகிறது. எனது வாக்கு நிதீஷ் கட்சிக்குத்தான் என்று நான் பயணம் செய்த டாக்ஸியின் டிரைவர் குறிப்பிட்டிருந்தார். அவரது கருத்து
உண்மை என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்துகிறது.

வழக்கமாகத் தேர்தல் அச்சுறுத்தல் காரணமாகப் பெண்கள் அதிக அளவில் வாக்களிக்க வரமாட்டார்கள். ஆனால், இந்தத் தேர்தலில் பெண்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். அதாவது, கடந்த 2005 தேர்தலைவிட கூடுதலாக 10 சதவிகித பெண்கள் வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு 50 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்தியதன் மூலம் மகளிரின் நம்பிக்கையை நிதீஷ் பெற்றுவிட்டார். அதனாலேயே பெரும்பாலான பெண்கள், வீட்டு வேலையைப் புறக்கணித்துவிட்டு தேர்தல் தினத்தில் வாக்களிக்க வந்திருந்தனர். இவர்களில் பெரும்பாலானவர்களின் வாக்குகள் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சிக்குக் கிடைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

முஸ்லிம்களில் பெரும்பாலானோரும் நிதீஷ் குமாருக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இவர்களின் எண்ணிக்கையை சதவிகிதத்தில் கூறுவது கடினம் என்றாலும் அதுதான் உண்மை. மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு சீராக இருந்தது, சாலைகள் சீரமைப்பு, புதிய சாலைகளை
நிர்மாணித்தல், பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் நியமனம், முஸ்லிம் பெண்களுக்கு கல்வி உதவித்தொகை என பல்வேறு திட்டங்களை நிதீஷ் குமார் செயல்படுத்தியதால் முஸ்லிம்களில் பலர், குறிப்பாக இளைஞர்கள் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க. கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

எங்களைப் புண்படுத்தும் விதத்தில் பா.ஜ.க.வினர் நடந்துகொள்ளவில்லை. எங்கள் சமூகத்தினருக்கு நிதீஷ் செய்த உதவித் திட்டங்களையும் அவர்கள் தடுக்கவில்லை. எனவே, அவர்களையும் நாங்கள் ஆதரித்தோம் என்று முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

நிதீஷ் குமாரின் வெற்றிக்குப் பின்னணியில் அவரது வளர்ச்சித் திட்டங்கள், பெண்கள், முஸ்லிம்களின் ஆதரவு என பல காரணங்கள் உள்ளன. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் எதிர்கால இந்திய அரசியலுக்கு ஒரு பாடமாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

Source: www.dinamani.com

No comments:

Post a Comment