27 Nov 2010 |
நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்த்திருந்த பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. முதல்வர் நிதிஷ் குமார் வெற்றிவாகை சூடுவார் என்று பலரும் கூறியிருந்தாலும், கடைசிநேரம் வரை ‘மின்னணு வாக்குப் பதிவு இயந்திர’ உபயத்தால் சந்தேகம் இருந்தது. அப்படியே வென்றாலும்கூட முந்தைய நிலையைவிட பலம் குறையலாம் என்று ‘மதச் சார்பற்ற’ ஊடகங்களால் பரப்பப்பட்டு வந்தது. அனைத்து ஹேஷ்யங்களையும் மீறி, மாபெரும் வெற்றி பெற்றிருக்கிறது நிதிஷ் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 206 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம்-பா.ஜ.க. கூட்டணி வென்று, நாட்டையே வியக்க வைத்துள்ளது.
இந்த மகத்தான வெற்றிக்கு நிதிஷ் குமார்தான் அடிப்படைக் காரணம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆர்ப்பாட்டமில்லாத ஆட்சி, மக்கள் நலனில் அக்கறை கொண்ட செயல்பாடு, குற்றவாளிகளை கருணையின்றி ஒடுக்கியது, ஊழலுக்கு வாய்ப்பளிக்காதது, யாரும் அணுகக் கூடிய எளிமை ஆகிய அம்சங்கள் நிதிஷ் குமாரின் வெற்றிக்கு வித்திட்டிருக்கின்றன. அவருக்கு பக்கபலமாக பா.ஜ.க. உதவியுள்ளது. இந்த வெற்றிக்குப் பின்புலத்தில் பலரும் அறியாத பா.ஜ.க.வின் துணை முதல்வர் சுஷில்குமார் மோடி இருப்பதையும் பதிவு செய்தாக வேண்டும். நிதிஷுக்கு கூறப்பட்ட அனைத்துச் சிறப்பம்சங்களும் இவருக்கும் உண்டு.
1999-இல் சென்னையில் நடந்த பா.ஜ.க. தேசிய செயற்குழுவுக்கு சுஷில்குமார் மோடி வந்திருந்தபோது ‘விஜயபாரதம்’ வார இதழுக்காக அவரைப் பேட்டி எடுத்தது நினைவுக்கு வருகிறது. அப்போது பீகாரின் முடிசூடா மன்னராக லாலு வீற்றிருந்தார்; ஜாதி அரசியலும் மதச்சார்பின்மை கோஷமும் அவரது ஊழல்களை மறைக்க போதுமானவையாக இருந்தன. ஆயினும், ‘லாலுவை மிக விரைவில் வீழ்த்துவோம்’ என்று நம்பிக்கையோடு சொன்னார் சுஷில். அந்த நம்பிக்கை பலிக்க 2005 வரை அவர் காத்திருக்க வேண்டியிருந்தது. 2005-இல் ஆட்சியைக் கைப்பற்றிய நிதிஷ்-சுஷில் கூட்டணி, தங்கள் சுயநலமற்ற, வெளிப்படையான ஆட்சியால், அதைத் தக்கவைத்துக் கொண்டதுடன், முந்தைய வெற்றியை முறியடிக்கும் சாதனையையும் படைத்துள்ளது!
பாரத சரித்திரத்தில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும் மகத சாம்ராஜ்யம், தற்போது பீகார் என்று அழைக்கப்படும் பகுதியில்தான் தோன்றியது. பாடலிபுத்திரம்தான் (தற்போதைய பாட்னா) அர்த்தசாஸ்திரம் தந்த சாணக்கியரை உலகுக்கு அளித்தது. நாலந்தாவும், விக்கிரமசீலாவும் இங்கு உயர்ந்தோங்கி விளங்கிய பல்கலைக்கழகங்கள். மகான் புத்தரும் மகாவீரரும் தோன்றிய புண்ணிய பூமி பீகார். அத்தகைய பீகார்- விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் வலுவான தளமாக விளங்கிய பீகார்- ‘மாட்டுத் தீவன ஊழல்’ புகழ் லாலு பிரசாத் யாதவ் வசம் சிக்கிக்கொண்டு 15 ஆண்டுகள் வனவாசம் அனுபவித்தது. அப்போதுதான் வாராது வந்த மாமணியாக நிதிஷ் குமார் லாலுவுக்கு சரியான மாற்றாக உருவானார்.
சமதா கட்சித் தலைவாரக இருந்த அவரை பீகார் மக்களுக்கு முதல்வராக அடையாளம் காட்டியவர் அன்றைய பிரதமர் வாஜ்பாய்தான். தனது அமைச்சரவையில் இடம் பெற்ற நிதிஷை 2000-ஆம் ஆண்டு தேர்தலின்போது முதல்வராகப் பொறுப்பேற்குமாறு அவர்தான் அறிவுறுத்தினார். ஆனால், போதிய பெரும்பான்மை இல்லாததால், ஒரு வார காலத்தில் அவர் பதவி விலக வேண்டி வந்தது. பீகார் மக்களுக்கு நன்மை விளைய மேலும் 5 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்ற தலையெழுத்தை யாரால் மாற்ற முடியும்?
லாலுவின் காட்டாட்சி, யாதவ ஜாதி அபிமானம், கட்டுக்கடங்காத ஊழல்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு போன்ற காரணங்களால் வெறுப்புற்ற பீகார் மக்கள், 2005 தேர்தலில் லாலுவை (அவரது பினாமியாக ஆண்ட மனைவி ராப்ரி தேவியை) வீட்டுக்கு அனுப்பி, நிதிஷை முதல்வராக்கினர். சுஷில்குமார் மோடி துணை முதல்வரானார்.
நிதிஷ் அரசு, சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்படுவதை முதல் கடமையாகக் கொண்டது. அதன் விளைவாக, தாதாக்கள் ராஜ்யமாக இருந்த பீகாரின் தோற்றம் மாறியது. அதிகாரபலம் கொண்டவர்களையும்கூட குற்றவாளிகள் எனில் தயங்காமல் சிறைக்குள் தள்ளியது, நிதிஷுக்கு மக்களிடையே நற்பெயரை ஏற்படுத்தியது. ஆட்சியில் களங்கமின்மை, மக்களின் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை, தான் சார்ந்த (குர்மி) ஜாதிக்கு அப்பாற்பட்டு செயல்பட்டது, மத்திய அரசின் பாராமுகத்தையும் தாண்டி வளர்ச்சிப்பணிகளில் காட்டிய கவனம் ஆகியவை, நிதிஷை மக்கள் நாயகனாக உயர்த்தின. ஆயினும் அவர் என்றும் அடக்கத்தின் எளிய வடிவமாகவே காட்சியளித்தார்.
அதன் விளைவே தற்போதைய இமாலய வெற்றி. சென்ற தேர்தலில் 143 இடங்களில் வென்ற தே.ஜ.கூட்டணி, நல்லாட்சிக்கான பரிசாக மீண்டும் ஆட்சியை, நான்கில் மூன்று பங்குக்கு மேல் (206 /243) பெரும்பான்மையுடன் தற்போது வென்றுள்ளது. குறிப்பாக நிதிஷின் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிட்ட 141 இடங்களில் 115 இடங்களை வென்றுள்ளது. கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வோ, போட்டியிட்ட 102 தொகுதிகளில் 91 இடங்களைக் கைப்பற்றியுள்ளது! இவர்களின் வெற்றிவிகிதம் 84 சதவிகிதம்!
மாறாக லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் 22 (54), பஸ்வானின் லோக் ஜனசக்தி 3(10), இளவரசர் ராகுலின் காங்கிரஸ் 4 (9) இடங்களில் மட்டுமே வென்றன. (அடைப்புக் குறிக்குள் முந்தைய தேர்தலில் வென்ற இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன). ஒருகாலத்தில் பீகார் அரசியலில் முத்திரை வகித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மிகப் பெரும் தோல்வியை இத்தேர்தலில் சந்தித்துள்ளன.
தேர்தலில் மகத்தான வெற்றி பெற்றவிட்ட இப்போதும் அடக்கமாகவே நிதிஷ் காட்சி தருகிறார். ”இந்த வெற்றிக்கு எந்த மாயமும் மந்திரமும் காரணமில்லை. மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கை தேர்தலில் வெளிப்பட்டிருக்கிறது” என்கிறார் நிதிஷ். கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வின் தலைவர்களுள் ஒருவரான அருண் ஜேட்லியோ, ”இந்த வெற்றி சிறந்த நிர்வாகத்திற்குக் கிடைத்த வெற்றி” என்று பெருமிதத்துடன் கூறி இருக்கிறார்.
தேர்தலுக்கு முன் பீகாரில் வலம் வந்து கொக்கரித்த ராகுல் இப்போது எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. தேர்தல் பிரசாரத்தில் வரைமுறை மீறி, “மத்திய நிதியை நிதிஷ் அரசு பயன்படுத்தாமல் வீணடித்துவிட்டது” என்று அபாண்டமாகக் குற்றம் சாட்டிய பிரதமர் மன்மோகன் சிங், ”பீகார் வளர்ச்சிக்கு மாநில அரசுடன் மத்திய அரசு இணைந்து பணி புரியும்” என்று இப்போது வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
உண்மையில் நிதிஷ் பெருமளவில் எந்த மாற்றத்தையும் பீகாரில் நிகழ்த்திவிடவில்லை. 15 ஆண்டுகால லாலு தர்பாரால் சீரழிந்த பீகாரை அவ்வளவு சீக்கிரம் சீர்திருத்திவிடவும் முடியாது; ஆனால் அதற்காக உண்மையாக உழைத்தார். நிலைகுலைந்திருந்த காவல்துறையை மேம்படுத்தியது, அரசு அலுவலகங்கள் முறைப்படி இயங்கச் செய்தது, நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தியது ஆகியவற்றால் பீகாரின் சூழலில் படிப்படியான மாற்றத்தை அவரால் கொண்டுவர முடிந்தது. நிதிஷின் ஆட்சி, பீகாரில் மாற்றம் நிகழ்வதை உறுதிப்படுத்தியது.
இயன்ற வளர்ச்சிப்பணிகளை செய்த நிதிஷ், பீகாருக்கு தன்னால் அரிய பணிகளைச் செய்ய முடியும் என்று அவற்றின் மூலமாக நிரூபித்தார். தங்கள் முதல்வர் நாணயமானவர் என்ற நற்பெயரை நிதிஷ் பெற்றார். அதுவே அவரது வெற்றிக்கு அடிப்படையானது.
தவிர ஆட்சியில் தன்னிச்சையான முடிவுகளை எடுப்பதை அவர் தவிர்த்தார். கூட்டணிக் கட்சியான பா.ஜ.க.வை அரவணைத்துக்கொண்டு, ஊடகங்கள் நிகழ்த்திய ‘மதவாதப் பூச்சாண்டி’ விஷமப் பிரசாரத்தைக் கண்டுகொள்ளாமல், நல்ல கூட்டணி சகாவாகத் தன்னை அவர் நிலைநாட்டினார். சிற்சில உரசல்கள் ஏற்பட்டபோதும், அதனால் ஏற்படும் அதிர்வுகளைத் தாங்குபவர்களாக அத்வானி, ராஜ்நாத்சிங், சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருடன் சுஷில்குமார் மோடியும் விளங்கினர். ஐக்கிய ஜனதாதளத்தின் தலைவர் சரத் யாதவுக்கு கூட்டணியின் உறுதிப்பாட்டில் பெரும் பங்குண்டு என்பதை கண்டிப்பாக நினைவுகூர வேண்டும். நல்லாட்சியுடன் நல்ல கூட்டணியும் அமைந்ததால், மகத்தான வெற்றி இப்போது சாத்தியமாகி இருக்கிறது.
நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலே நல்லது நடக்கும் என்பதற்கு பீகார் முதல்வர் நல்ல உதாரணம். நாட்டுமக்கள் நலன் கருதி உழைப்போருக்கு பீகார் தேர்தல் முடிவுகள் நற்செய்தி எனில் மிகையில்லை.
http://www.tamilhindu.com/2010/11/good-roads-take-nitish-kumar-home/
No comments:
Post a Comment