Tuesday, November 23, 2010

ரொம்ப நல்ல கட்சி காங்கிரஸ்! [வெளிவரும் ஊழல்கள்; வெளிவராத தகவல்கள்...] A cash cow for many....!!!



upa-spectrum-2g

உப்புத் தின்றவன் தண்ணீர் குடித்துதான் ஆக வேண்டும்; ஊழல் செய்பவன் கண்டிப்பாக மாட்டித்தான் ஆகவேண்டும். ஆனாலும் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் உள்ளவர்கள், தாங்கள் செய்யும் ஊழல்களுக்கு உடனடியாக மாட்டிக்கொள்ளும் அவசியம் இல்லை. தலையிலேயே இடி விழுந்தாலும் எங்கே இடி விழுந்தது என்று எட்டிப் பார்க்கும் அற்புதமான பொருளாதார மேதை நமக்குப் பிரதமராக வாய்த்திருக்கிறார். ஊழல்கறையே படியாதவர் என்ற பெயரை வேறு அவர் கட்டியுள்ள தலைப்பாகையோடு சேர்த்துக் கட்டி இருக்கிறார். இதையும் மீறி பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.க. ஏதாவது குரல் எழுப்பினால் இருக்கவே இருக்கிறது மதவாதப் பூச்சாண்டி. காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சேவகம் செய்யவே பிறப்பெடுத்த ஆங்கிலத் தொலைக்காட்சி ஊடகங்கள் உள்ளவரை மன்மோகன் சிங்கத்திற்கு எந்தக் கவலையும் இல்லை.

congress1

ஆனால், இந்த நவம்பர் மாதம், மன்மோகன் நினைத்ததுபோல அவ்வளவு எளிதாகக் கடக்கவில்லை. அயோத்தி வழக்கில் வெளியான தீர்ப்பு சென்றமாதம் நாடு முழுவதும் ஏற்படுத்திய பரபரப்பை விழுங்கிவிட்டது இந்த நவம்பர் மாதம். எல்லாமே, மத்திய அமைச்சர் திருவாளர் ‘தலித்’ ராசாவின் உபயம். 2008-இல் அவர் நடத்திய ஊழல் உறுத்துவந்து 2010-இல் ஊட்டும் என்று அவர் மட்டும் கனவா கண்டார்? கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றைகளை விருப்பம்போல விற்று ஏப்பம் விட்டது யாருக்கும் தெரியாது என்று இறுமாந்திருந்த ராசாவுக்கும் அவருக்குத் துணைபோன ராணிக்கும் (இந்த ராணி, மத்திய அரசின் சூத்திரதாரியான சோனியாவையே குறிக்கிறது) இந்த நவம்பர் மாதம் கறுப்பு மாதமாக மாறியது அதிர்ச்சி அளித்திருக்கலாம். அதைவிட, நாட்டு மக்களுக்குத் தான் அதிர்ச்சி- அலைக்கற்றை ஏலத்தில் நடந்த ஊழலில் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பின் மதிப்பு ரூ. 17,60,00,00,00,000 (அதாவது ஒரு லட்சத்து 76 ஆயிரம் லட்சம் கோடி!) என்பது தெரியவந்து பேரதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் மக்கள்!

அது எப்படி கண்ணுக்குத் தெரியாத அலைக்கற்றைகளில் ஊழல் செய்ய முடியும்? கேள்வி கேட்கும் புத்திசாலிப் பகுத்தறிவாளர்களுக்காக ஒரு விளக்கம்:

இப்போது உலகமெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அலைபேசிகள் இயங்குவது வளிமண்டலத்திலுள்ள மின்காந்த அலைகளால்தான். அவற்றை கிரகித்துப் பகிரவே அலைபேசி கோபுரங்கள் எங்கு பார்க்கினும் தட்டுப்படுகின்றன. இந்த மின்காந்த அலைகள், விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நமது செயற்கைக்கோள்களால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இவற்றை நிர்வகிப்பது மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை.

இந்த மின்காந்த அலைக்கற்றைகளை முறைப்படுத்துவதும் வர்த்தக ரீதியாக விநியோகிப்பதும் மத்திய அரசின் கடமை. இதில் மூன்று தலைமுறை அலைக்கற்றைகள் தற்போது புழக்கத்தில் உள்ளன.

ஆரம்பகால கம்பிமுறைத் தொலைபேசிக்கு மாற்றாக முதலில் உருவானது முதல் தலைமுறை அலைக்கற்றைகள். (அதற்கு அவ்வாறு எந்தப் பெயரும் சூட்டப்படவில்லை. வாசகர்கள் குழப்பமின்றி தெரிந்துகொள்ளவே இந்த விளக்கம்). இந்த அலைக்கற்றைகளின் ஆதிக்கம் 2008 வரை நீடித்தது. உலக அளவில் ஏற்பட்ட தொலைத்தொடர்புப் புரட்சி தாமதமாக வந்தாலும் இந்தியா அதை சிக்கெனப் பிடித்துக் கொண்டது. 1998 முதல் 2009 வரையிலான இந்தக் காலகட்டத்தில்தான் அலைபேசிகளின் எண்ணிக்கை நாட்டில் பல மடங்கு அதிகரித்தது.

1998 காலகட்டம் தொலைபேசியின் இடத்தை அலைபேசிகள் வெற்றி கொள்ளாத காலகட்டம். ‘பேஜர்’ எனப்படும் சிறு கருவியே அதிசயமாகப் பார்க்கப்பட்ட காலம் அது. ஆரம்பத்தில் நமது நாட்டின் பெரும் தொழில் நிறுவனங்களே புதிய அலைக்கற்றைகளைப் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டின. அதன் விளைவாக ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில் அந்த அலைக்கற்றைகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. எனினும் இந்த விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்தியத் தொலைத்தொடர்பு ஆணையம் (டிராய்) செயல்பட்டது. ஆனால், விரைவிலேயே நாடு முழுவதும் அலைபேசிகளின் ஆதிக்கம் பரவிவிட்டது. இந்தியாவில் தற்போதைய அலைபேசி பயனாளிகளின் எண்ணிக்கை 70 கோடி என்கிறது ஒரு புள்ளிவிபரம். பத்து ஆண்டுகளில் நம்ப முடியாத வளர்ச்சி பெற்றது இந்தியத் தொலைத்தொடர்புத் துறை. அதன் விளைவாக இரண்டாம் தலைமுறை அலைக்கற்றைகள் கொண்டுவரப்பட்டன. இதனை ‘2ஜி ஸ்பெக்ட்ரம்’ என்று சுருக்கமாக அழைக்கிறார்கள். இந்த அலைக்கற்றைகள் 2008-இல் தனியார் நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன. இதில்தான் முறைகேடு நிகழ்ந்ததாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தது தான் இந்த ஆண்டு வெளியான மூன்றான் தலைமுறை மின்காந்த அலைக்கற்றைகள் (3ஜி). இதன்மூலமாக அலைபேசி அல்லது தொலைபேசியில் பேசுபவரது முகத்தையும் பார்த்தபடி பேசலாம்.

இப்போது விஷயத்திற்கு வருவோம்… 2ஜி அலைக்கற்றை விநியோகத்தில் எப்படி மோசடி நடந்தது?

அப்போது மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தவர் தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா. புதிதாக அறிமுகமாகும் மின்காந்த அலைக்கற்றைகள் வற்றாத சுரங்கம் என்பதைக் கண்டுகொண்ட ராசா, அவற்றை விற்பதில் (2008) தனக்கென ஒரு வட்டத்தை வரைந்துகொண்டு செயல்பட்டார். ஏற்கனவே சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது அவருக்கு நெருக்கமான பல ரியல் எஸ்டேட் தரகர்கள் உதவியுடன், பினாமி பெயர்களில் உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு வாரி வழங்கினார்.

இதில் நிலவும் முறைகேடுகள் குறித்து அப்போதே சலசலப்பு எழுந்தது. பகிரங்க ஏல முறையில் 2ஜி அலைக்கற்றைகளை விற்பனை செய்ய வேண்டும் என்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கோரிக்கை அரசால் கண்டுகொள்ளப்படவில்லை. இதிலும் ஏலத்திற்கு மிகக் குறைந்த நாள்களே அவகாசம் வழங்கப்பட்டு, கெடுதேதிக்கு முன்னதாகவே அலைக்கற்றைகள் அவரச அவசரமாக விற்பனை செய்யப்பட்டன. இதனால், நாட்டின் முன்னணித் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அவை கிடைக்காமல் போயின. தவிர, தொலைத்தொடர்புத் துறையில் எந்த அனுபவமும் இல்லாத ‘லெட்டர்பேடு’ நிறுவனங்களுக்கு எல்லா விதிமுறைகளையும் மீறி அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இது குறித்து கேள்வி எழுந்த போதெல்லாம், தனக்குமுன் அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் (அவரும் தி.மு.க. தான்; தாத்தாவுடனான சண்டையால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட அதே இடத்தில்தான் ராசா அமைச்சராக நியமிக்கப்பட்டார்.) கடைபிடித்த ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற விதியின் அடிப்படையிலேயே அலைக்கற்றைகள் விற்கப்பட்டதாக ராசா கூறி வந்தார்.

ஆயினும், சில வடக்கத்திய ஊடகங்களில் வெளியான செய்திகள், 2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளதை வெளிப்படுத்தின. அதன் பின்னணியில் முந்தைய அமைச்சர் தயாநிதி மாறன் இருப்பதாக அப்போது ராசா குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்நிலையில் ராசாவால் விற்கப்பட்ட அலைக்கற்றைகளை ஒரே மாதத்தில் வேறு நிறுவனங்களுக்கு பல மடங்கு அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்தன ‘லேட்டேர்பேடு’ பினாமி நிறுவனங்கள் (காண்க: பெட்டிச் செய்தி: 1). அதன்மூலமாக, ஸ்பெக்ட்ரம் ஊழல் நடந்திருப்பது உறுதியானது. இதனை முதன்முதலில் அம்பலப்படுத்தியது, பயனீர் நாளிதழ். அதன் நிருபர் கோபி கிருஷ்ணன் எழுதிய தொடர் புலனாய்வுக் கட்டுரைகள், ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்தின. தமிழகத்தில் தினமணி நாளிதழும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்சும், ராசாவின் முகத்திரையைக் கிழிப்பதில் முன்னணி வகித்தன.

karuunity

மதுரை தினகரன் எரிப்பு, அரசு கேபிள் கழகம் ஆகிய அத்தியாயங்களைத் தொடர்ந்து, ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியானவுடன், மாறன் சகோதரர்களுடன் தி.மு.க. சமரசமானது. அப்போது ”குடும்பங்கள் இணைந்தன; இனி ஊழல் குற்றச்சாட்டுகள் மறையும்” என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியது அனைவருக்கும் நினைவிருக்கும். அப்போதே ‘குடும்பங்கள் ஒன்றானால் எப்படி ஊழல் மறையும்?’ என்று புத்திசாலிப் பத்திரிகைகள் சில (கண்டிப்பாக தமிழக புலனாய்வுப் பத்திரிகைகள் அல்ல) கேள்வி எழுப்பின. அதாவது, ஸ்பெக்ட்ரம் ஊழலில் ராசா மட்டுமே பெற்ற பயன், சம்பந்தப்பட்ட அனைவருக்கும் பங்கிடப்பட்டுவிட்டதால், இனிமேல் மாறனின் தொந்தரவு இருக்காது என்பதுதான் கருணாநிதியின் அறிவிப்புக்கு விளக்கமாக இருக்க முடியும். அப்போதுதான், ”முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி (1998- 2004) ஆட்சியில் கடைபிடிக்கப்பட்ட நெறிமுறைகளே ஸ்பெக்ட்ரம் விற்பனையிலும் கடைபிடிக்கப்பட்டன” என்று தனது முந்தைய கருத்தில் சிறு மாற்றம் செய்து கொண்டார் ராசா.

அப்போதைய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரான அருண்ஷோரி, ராசாவின் தற்காப்பு உத்தியான ”முந்தைய அரசு கடைபிடித்த வழிமுறைகளையே நானும் கடைபிடித்தேன்” என்ற கருத்தைக் கண்டித்திருக்கிறார். தே.ஜ.கூ. ஆட்சியில் டிராய் பரிந்துரையின்றி எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை என்று அவர் தெரிவித்திருக்கிறார். தவிர, 1998-2004-இல் விற்ற விலைக்கே 2008-லும் விற்க முடியாது என்ற சாமானிய அறிவும் கூட இல்லாது பேசும் ராசாவை எப்படித் தெளியவைப்பது? பிரச்சினை அவரிடம் உள்ள குழப்பமல்ல; செய்த தவறை மறைக்க அவர் போடும் நாடகம் தான்.

1998 - 2004 காலகட்டத்தில் அலைபேசி எண்ணிக்கை பெருகாத காலகட்டத்தில் இருந்த ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற கோட்பாடு, போட்டி மிகுந்த தற்போதைய (2008) காலத்திற்கு எவ்வாறு ஏற்புடையதாகும் என்ற கேள்வியை சமத்காரமாக ராசா தவிர்த்து வந்தார். டிராய் பரிந்துரைகள், பிரதமர் அலுவலக அறிவுரைகள், தொலைத்தொடர்புத் துறை அமைச்சக அதிகாரிகளின் ஆலோசனைகளை மீறி, தன்னிச்சையான முறையில், 2ஜி அலைக்கற்றைகளை மூடுமந்திரமான முறையில் பகிரங்க ஏலம் அல்லாது விற்பனை செய்துள்ளார் ராசா. இது குறித்த செய்திகள் வெளிவந்தவுடன் பா.ஜ.க, மற்றும் இடதுசாரிக் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தன. ஆனால், ”பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தெரிந்துதான் அனைத்தும் நடந்துள்ளன” என்று ராசா விளக்கம் அளித்தார். பிரதமரோ, ”ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை விற்பனையில் எந்தத் தவறும் நடக்கவில்லை என்று அந்தத் துறையின் அமைச்சர் ராசாவே கூறிவிட்டார்” என்று மழுப்பினார். நல்ல பிரதமர்! நல்ல அமைச்சர்! இவரைத்தான் நமது பத்திரிகைகள் தூய்மையானவர் என்று புகழ்ந்து எழுதி மத்திய அரசு விளம்பரங்களைப் பெற்றுக் கொள்கின்றன!

உண்மையில், இந்த முறைகேட்டில் கிடைத்த லஞ்சப் பணம் (பல ஆயிரம் கோடிகள்) முறைப்படி, காங்கிரஸ் தலைமை, தி.மு.க. தலைமை, ராசா குழு மற்றும் சம்பந்தப்பட்ட இதர கூட்டணிக் கட்சிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுவிட்டதாகத் தகவல். கைநீட்டி காசு வாங்கிவிட்டவர்கள், ராசாவின் அமர்த்தலான பதிலை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்துதானே ஆகவேண்டும்?

இந்நிலையில்தான், 2009 நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழல் தேர்தலில் முக்கியப் பிரசார அம்சமானது. ஆயினும் அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியே மீண்டும் வென்றது. அதையடுத்து மத்திய ஆட்சியில் தி.மு.க.வின். பிடி இறுகியது. தொலைத்தொடர்புத் துறையில் நடந்துவிட்ட ஊழல்களை அடுத்து, ராசாவுக்கு மீண்டும் அதே துறையை ஒதுக்க பிரதமர் மன்மோகன் தயங்கினார். ஆயினும், தில்லிவரை போர்தொடுத்து கூட்டணி உரிமையை நிலைநாட்டிய கழகத் தலைவர் கருணாநிதி, மீண்டும் ராசாவுக்கே தொலைத்தொடர்புத் துறையைப் பெற்றுத் தந்தார். கைநீட்டி வாங்கிய காசுக்கு நன்றிக்கடன் காட்டித்தானே ஆகவேண்டும்? பிரதமர் மன்மோகன் சிங் நாணயஸ்தர். அவரது கட்சித் தலைவியோ கூட்டணிதர்மம் காக்கவே இத்தாலியிலிருந்து இறக்குமதி ஆனவர். ராசாவின் காட்டில் மீண்டும் மழை பொழியத் துவங்கியது.

இந்நிலையில் தான், மூன்றாம் தலைமுறை (3ஜி) அலைக்கற்றைகள் மே மாதம் பகிரங்க ஏல முறையில் ஏலம் விடப்பட்டன. இதனையும் மூடுமந்திரமான முறையில் விற்க ராசா முற்பட்டதாகவும், பிரதமர் நேரடியாகத் தலையிட்டதால் பகிரங்க ஏலம் நடப்பதாகவும், ஆங்கில ஊடகங்கள் மன்மோகன் புகழ் பாடின. இதன் விளைவாக அரசுக்கு 67.7 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. இத்தனைக்கும் 3ஜி அலைக்கற்றைகளின் ஒருபகுதிக்கே இவ்வளவு லாபம்! உடனே மத்தியத் தணிக்கை ஆணையம் (சி.ஏ.ஜி) விழித்துக் கொண்டது. 2ஜி அலைக்கற்றை விற்பனையில் நிகழ்ந்த நஷ்டத்தை சி.ஏ.ஜி கணக்கிட்டது. ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றைகளை வாங்கி, குறுகிய காலத்தில் வேறு நபர்களுக்கு விற்றவர்களை அடிப்படையாகக் கொண்டு, அரசுக்குத் தோராயமாக ஏற்பட்டுள்ள இழப்பை சி.ஏ.ஜி கணக்கிட்டது.

இம்மாதம் 10-ஆம் தேதி, சி.ஏ.ஜி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் கொடுக்கப்பட்ட தகவல்தான், ராசா மூலம் ஏற்பட்ட இழப்பை (ரூ.17,60,00,00,00,000) நாட்டுக்கு விண்டுவைத்தது. ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் பலவகையாகக் கூறிவந்தபோதும், சி.ஏ.ஜி அறிக்கை, ஸ்பெக்ட்ரம் ஊழலின் மதிப்பைத் தெளிவாக வரையறுத்துள்ளது. தவிர அதன்மூலமாக பயன் பெற்றவர்கள் யார் என்பதையும் பட்டியலிட்டு, திருவாளர் புனிதரின் லட்சணத்தையும் தியாக நாயகி லட்சணத்தையும் பிட்டுப் பிட்டு வைத்துவிட்டது.

mathi-cartoon-151110

ஏற்கனவே காமன்வெல்த் விளையாட்டு ஊழல், ஆதர்ஷ் கட்டட ஒதுக்கீடு ஊழலால் கறைப்பட்ட மத்திய அரசுக்கு, ராசாவை நீக்குவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை. கனத்த நெஞ்சத்தோடு, ராசாவைப் பதவி விலகுமாறு கோரினார் (கெஞ்சினார்) பிரதமர். ராசாவோ, பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை என்றார். தலித் என்பதால் ராசாவைக் குறி வைக்கிறார்கள் என்று ஏற்கனவே சொன்ன கருணாநிதி, வழக்கம்போல, ஸ்பெக்ட்ரம் ஊழலே நடக்கவில்லை என்று சாதித்தார். சீடருக்கு ஏற்ற குரு! இந்நிலையில், ”தி.மு.க.வு.க்கு பயந்து ராசாவை அமைச்சராகத் தொடரச் செய்ய வேண்டாம்; ராசாவுக்காக தி.மு.க. ஆதரவை விலக்கினால், அ.தி.மு.க. ஆதரவளிக்கும்” என்று சந்தில் சிந்து பாடினார் அதன் தலைவி ஜெயலலிதா.

இதற்கெல்லாம் மயங்குபவரா மன்மோகன்? அவருக்கு, உச்சநீதிமன்றம் (காண்க: பெட்டிச் செய்தி: 2) என்ன சொல்லப் போகிறதோ என்பதுதான் கவலை. அதைவிட, தானைத்தலைவி சோனியா அம்மையார் கண்ணசைவில் சதிராடும் பிரதமாரால் என்னதான் சிந்திக்க முடியும்? மத்தியப் புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ) விசாரணைக்கு உத்தரவிட்டு ராசாவைக் காப்பாற்றலாம் என்றால், அதற்குள், சுப்பிரமணியம் சாமி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துவிட்டார். உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிரதமர் மன்மோகனுக்கு காட்டமான அறிவுரையைக் கூறியுள்ள நிலையில், ராசா வேறுவழியின்றி, விருப்பமின்றி (கூட்டணி தர்மத்தைக் காப்பாற்றவும், நாடாளுமன்றத்தை முடக்கும் எதிர்க்கட்சிகளிடமிருந்து ஜனநாயகத்தைக் காக்கவும்!) பதவி விலகினார். காங்கிரஸ் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

பிரதமருக்கு மேலும் பேரிடியாக, ஊழலில் தொடர்புடைய 6 நிறுவனங்களின் 69 உரிமங்களை ரத்து செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது டிராய். இந்நிலையில் ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு (ஜே.பி.சி) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி நாடாளுமன்றத்தை பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடக்கின. காங்கிரஸ் கட்சியோ, முரளி மனோகர் ஜோஷி (பா.ஜ.க) தலைமையிலான பொதுக் கணக்குக் குழு விசாரித்த பிறகே ஜே.பி.சி. விசாரணைக்குச் செல்ல முடியும் என்று சண்டித்தனம் செய்தது. ‘’தங்கள் தலைவர் மீது பா.ஜ.க.வுக்கு நம்பிக்கை இல்லையா?’’ என்று வேறு கேட்டார் நமது கலாகார். உண்மையில், பொது கணக்குக் குழு வரம்பிற்குள் வராத பல விஷயங்கள் குறித்தும் விசாரிக்க வேண்டி இருக்கிறது என்று முரளி மனோகர் ஜோஷியே கூறி இருக்கிறார். அதை காங்கிரஸ் வசதியாக மறந்துவிட்டது.

niira_radia

தவிர, ஆ.ராசா அமைச்சர் ஆனதன் பின்னணியில் அதிகாரத் தரகர் நீரா ராடியா உடன் ஊடகத் தரகர்கள் பர்கா தத் (என்.டி.டி.வி), வீர் சாங்க்வி (ஹிந்துஸ்தான் டைம்ஸ்) ஆகியோரும் சம்பந்தப்பட்டிருப்பது வெளிவந்துள்ளது. இவர்கள் இருவரும் பா.ஜ.க எதிரிகளாக தங்களை முன்னிறுத்திக் கொள்பவர்கள் என்பது குறிப்பிடவேண்டிய விஷயம். இவர்கள் தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடல் உச்சநீதிமன்றத்தில் சாமி தொடர்ந்த வழக்கில் முக்கிய சாட்சியாகி இருப்பது, பத்திரிகையாளர்கள் மீதான நம்பகத் தன்மையையும் கேள்விக் குறி ஆக்கியுள்ளது.

இத்தனைக்கும் பிறகும், காங்கிரஸ் எதுவுமே நடக்காதது போல நடிப்பது தான் வியப்பளிக்கிறது. நடிகர் வடிவேலுவின் ‘இவன் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க” நகைச்சுவைதான் நினைவில் வருகிறது. கட்சியின் இளவரசர் ராகுல், ”எனக்குத் தெரிந்தவரை, ஸ்பெக்ட்ரம் விவகாரம் பிரதமருக்கு எந்த தர்மசங்கடமும் ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை” என்று சான்றிதழ் அளித்திருக்கிறார். பிரதமரின் அமைச்சரவை சகா கபில் சிபலோ, ”பிரதமர் குற்றமற்றவர்” என்கிறார். பிறகு ஏன் ராசா விவகாரத்தில் முடிவெடுக்காமல் 16 மாதம் காலம் தாழ்த்தினார் என்ற கேள்விக்கு மட்டும் சோனியா முதல் கார்த்தி சிதம்பரம் வரை யாரிடமும் பதிலில்லை.

இந்த நாடகம் என்ன ஆகும்? இந்த ஊழலால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பில் ராசா வகையறாவுக்குக் கிடைத்து எத்தனை? கைமாறிய லஞ்சப் பணம் சென்றது எங்கே? இந்த நஷ்டத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை வருமா? குற்றவாளிகளைப் பாதுகாத்தவர்கள் (பிரதமர் உள்பட) மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுமா? ஊழலில் பயன் பெற்ற நிறுவனங்கள் உரிமங்களை இழக்குமா? அவற்றிடம் டிராய் பரிந்துரைப்படி கூடுதல் தொகை வசூலிக்கப்படுமா?

ராசா உயிருக்கு உண்மையிலேயே சுப்பிரமணியம் சாமி சொல்வது போல ஆபத்து ஏற்பட்டுள்ளதா? ஸ்பெக்ட்ரம் ஊழலால் அரசு இழந்த 1.76 லட்சம் கோடியும் மீட்கப்பட்டு விடுமா? அப்படியே தொகை மீட்கப்பட்டாலும் இந்திய அரசுக்கு ஏற்பட்ட அவப்பெயர் மறைந்துபோகுமா?

இனிமேலும் ‘தலித்’ என்ற போர்வையில் ஊழல் செய்வதை நியாயப்படுத்தலாமா? கூட்டணியின் நிர்பந்தத்திற்காக ஊழல்களைக் கண்டும் காணாமல் இருக்கலாமா? அதிகாரத் தரகர்களாக மாறியுள்ள பத்திரிகையாளர்கள் மீதும் சட்டம் பாயுமா? எல்லாவற்றுக்கும் மேலாக, ஊழல் மலிந்த தற்போதைய ‘மதச்சார்பற்ற’ காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நாட்டில் தொடரத் தான் வேண்டுமா?… கேள்விகள் தொடர்கின்றன.

இவற்றுக்கான பதில்கள் எங்கோ இல்லை; இந்த நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கும் வாக்காளராகிய மக்களிடம்தான் இவற்றுக்கான பதில்கள் கிடைக்கும். அவர்களிடம் ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து விலாவாரியாக விளக்க வேண்டியது நாட்டுநலனில் அக்கறை கொண்டோரின் கடமை. வெறும் ரூ.64 கோடி போபர்ஸ் ஊழலுக்காக ராஜீவ் காந்தியை வீட்டுக்கு அனுப்பிய நாட்டுமக்களுக்கு, ரூ. 1.76 லட்சம் கோடி ஊழல் குறித்து (உலக அளவில் மாபெரும் ஊழல் என்று பெருமைப்பட்டுக் கொள்ளலாம்!) உண்மை நிலையைச் சொல்ல வேண்டியது தேசபக்தர்களின் கடமை.

http://www.tamilhindu.com/2010/11/congress-upa-spectrum-2g-scandal/

No comments:

Post a Comment