புதுதில்லி, நவ. 14: 2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் விவகாரம் தீவிரமடைந்து வருகிறது. தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்த நிலையில், இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அலைக்கற்றை ஊழல் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. இதில் நீதிமன்றம் ஏதாவது உத்தரவு பிறப்பித்தால் அதன் அடிப்படையில் முடிவு எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தொலைத் தொடர்புத் துறை மூலம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டதில் நடந்த முறைகேடுகளால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்கு தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசாவே பொறுப்பு. எனவே அவர் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் "நான் தவறேதும் செய்யவில்லை. அரசின் கொள்கை முடிவுப்படியே ஒதுக்கீடு செய்யப்பட்டது. 1999-ம் ஆண்டு முந்தைய அரசு மேற்கொண்ட கொள்கையின்படி லைசென்ஸ் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது' என்று அவர் கூறி வருகிறார்.
அதற்கும் மேலாக, "அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறைகள் யாவும் பிரதமர் அலுவலகத்தின் வழிகாட்டுதலின் பேரிலேயே மேற்கொள்ளப்பட்டன' என்றும் அமைச்சர் ராசா கூறி வருகிறார்.
ராசா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தீவிரமாக வலியுறுத்தி வரும் வேளையில், "அவர் குற்றமற்றவர், பதவி விலகத் தேவையில்லை' என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதி கூறியுள்ளார். இதனால் இந்தப் பிரச்னையில் அரசுக்கு நெருக்கடி முற்றியுள்ளது.
பிரதமரிடம் விளக்கம் கேட்க...
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திங்கள்கிழமை இந்தப் பிரச்னையை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அலைக்கற்றை ஒதுக்கீடு நடைமுறைகள் யாவும் பிரதமரின் ஆலோசனையின் பேரிலே செய்யப்பட்டது என்று அமைச்சர் ராசா கூறி வருவதால் இது குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற மிகப் பெரிய ஊழல், அலைக்கற்றை ஊழல்தான். எனவே அந்த துறை அமைச்சர் ராசா தொடர்ந்து பதவியில் நீடிப்பதை எப்படி அனுமதிக்கிறீர்கள். அவரைக் காப்பாற்ற முயல்வது ஏன் என்று பிரதமரிடம் கேள்வி எழுப்பவும் திட்டமிட்டுள்ளன.
இந்த விஷயத்தில் பிரதமரின் மெüனம் கலைய வேண்டும். அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக குற்றச்சாட்டு கூறும்போதெல்லாம், பிரதமருக்கு தெரிந்தே எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறையும் பிரதமரின் ஆலோசனையின் பேரிலே செயல்பட்டுள்ளேன் என்று ராசா கூறி வருகிறார். எனவே இதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு பிரதமருக்கு உள்ளது. ராசா சொல்வதைப்போல் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு பிரதமர் நேரடியாக ஒப்புதல் தந்தாரா என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கோர உள்ளனர்.
ஜி-20 நாடுகள் உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு வெள்ளிக்கிழமை நாடு திரும்பிய பிரதமர் மன்மோகன் சிங், இந்த விஷயம் தொடர்பாக இதுவரை எந்தக் கருத்தும் சொல்லவில்லை. அலைக்கற்றை ஊழல் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்வதை அவர் தவிர்த்து வந்தார்.
ஆனால் நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை அரசு தரப்பில் குறிப்பாக பிரதமரே இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்த உள்ளன.
ராசா பதவி விலகுவது என்பது இரண்டாம்பட்சம்தான். முதலில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் சிவானந்த் திவாரி கூறினார்.
அரசுக்கு தலைமையேற்பவர் என்ற அடிப்படையில் இந்தப் பிரச்னையில் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலர் டி. ராஜா கூறினார்.
ஏற்கெனவே கடந்த வாரம் ஊழல் பிரச்னைகளை எழுப்பி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி செய்தததால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
இந்த நிலையில் அலைக்கற்றை ஊழல் விவகாரத்தில் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கையை எதிர்க்கட்சிகள் துருப்புச் சீட்டாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளன. தணிக்கை துறை தலைவரின் அறிக்கை ஓரிரு நாள்களில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2-ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அரசுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீடு குறித்து தணிக்கை தலைவர் வினோத் ராய் புதன்கிழமை தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தார். அதில் தொலைத் தொடர்பு அமைச்சகம் சிலருக்கு சாதகமாக நடந்து கொண்டதால் அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி வருவாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிக்கையை பூதாகரமாக்குவது எதிர்க்கட்சிகளின் திட்டம்.இதற்கிடையே அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் விவகாரத்தில் அரசுக்கு நெருக்கடி கொடுப்பது குறித்து ஆலோசிக்க பாஜக கூட்டணி அல்லாத எதிர்க்கட்சிகளின் கூட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதற்கு மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் தேவ கெüடா தலைமையேற்கிறார்.
www.dinamani.com
No comments:
Post a Comment