தஞ்சை வெ.கோபாலன்
12 Nov 2010
இந்தியச் சுதந்திரத்தின் ஆயுள் இப்போது 63 ஆண்டுகள். பணி ஓய்வு பெற்றுவிட்ட வயது. வாழ்வின் மேடு பள்ளங்களை நன்கு உணர்ந்து பண்பட்ட வாழ்க்கையை நடத்துகின்ற வயது. குறித்த வயதுக்குள் நல்ல கல்வி, நடுத்தர வயதில் தேடிய செல்வம், ஓய்வு பெறும் வயதில் நல்ல சேமிப்பு, குறைகளைக் களைந்து, வாழ்வாதாராத்துக்கு நல்ல வாய்ப்புக்களைக் கொண்ட வாரிசுகள், நல்ல வளமான வாழ்வு- இதுதான் வாழ்க்கைத் தத்துவம். இது தனிப்பட்ட வாழ்க்கைக்கு மட்டுமல்ல ஒரு குடும்பத்துக்கு, நாட்டுக்குத் தேவையான வாழ்க்கைத் தத்துவம். இதனை இந்தியச் சுதந்திரம் பின்பற்றியிருக்கிறதா என்கிற கேள்வி நம்முள் ஏற்படுவது இயற்கைதானே.
கடந்த 63 ஆண்டுகளில் இந்திய நாடு முன்னேறவே இல்லை, நாட்டின் வளம் பெருகவே இல்லை, தனிநபர் வாழ்வு வளமானதாக ஆகவே இல்லை என்றெல்லாம் சொல்லக்கூடிய அளவுக்கு நாமெல்லாம் கருத்துக் குருடர்கள் அல்ல. முன்னேற்றம் அடைந்திருப்பது உண்மை, முன்னேற்றம் அடைந்திருக்கிறோம். அப்படி அடைந்த முன்னேற்றம் எல்லா மட்டங்களுக்கும் சரிசமமாகப் போய்ச்சேரவில்லை. செல்வம் ஓரிடத்தில் சேரவும், அடிமட்டத்தில் பலர் அவதிப்படவும் செய்திருக்கிறது. ஊழலும் தவறுகளும் நமது முன்னேற்றத்தின் தடைக்கற்களாக இருந்து சரிசமமான முன்னேற்றத்தை முட்டுக்கட்டைப் போடுகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. முன்னேற்றம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதுதான் குறையே தவிர, முன்னேற்றமே இல்லை என்பது நமது வாதம் அல்ல.
1944-இல் இரண்டாம் உலகப் போரின் முழு அழிவுக்கு ஆளான ஜப்பான் அழிவிலிருந்து மீண்டு இன்று உலகப் பொருளாதாரத்துக்கு ஆதாரமான நாடாக இருப்பதைப் பார்க்கிறோமே. ஹிரோஷிமா நாகசாகியின் அழிவு உலகில் வேறு எந்த நாட்டுக்கும் ஏற்பட்டிருக்குமா என்பது கேள்விக் குறிதான். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஜப்பானைப் போல நாம் ஏன் முன்னேறவில்லை? இந்தக் கேள்விக்குச் சரியான விடையை நாம் கண்டுபிடித்து விட்டோமானால், நாம் விழித்துக் கொண்டு விட்டோம் என்று பொருள்.
சீறிப்பாய்ந்து முன்னேற்றம் (Great Leap Forward) அடைந்தது சீனாவின் சாதனை. பழமையெனும் அடிமைத் தளையிலினின்றும் மாவோவின் தலைமையில் சீனா சீறிப் பாய்ந்தது. நமக்குப் பின்னால் தவழ்ந்து வந்த அந்த நாடு இன்று அமெரிக்கா எனும் வல்லரசுக்கே அச்சுறுத்தலாக விளங்குவதைப் பார்க்கிறோம். இது எதனால் சாத்தியம் ஆயிற்று? நமக்குப் பின்னால் சுதந்திரம் பெற்ற பல கிழக்காசிய நாடுகள் கூட செல்வத்திலும் தொழில் துறையிலும் தனி நபர் முன்னேற்றத்திலும் பல காத தூரம் முன்னேறிப் போய்விட்டதைப் பார்க்கிறோம். நூறு கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையும் அளவிடற்கரிய இயற்கைச் செல்வ வளங்களும் நிறைந்த நாம் மட்டும் ஏன் அப்படிப்பட்டதொரு முன்னேற்றத்தைக் காண முடியவில்லை. இதனை எப்போதாவது நாம் சிறிது சிந்திக்க வேண்டாமா?
இந்தியாவில் அறிவுக்குப் பஞ்சம் இல்லை. உழைக்க ஆள்களுக்குப் பஞ்சமில்லை. தோண்டி எடுக்க எடுக்கக் கொடுக்கும் இயற்கை வளங்களுக்கும் குறைவு இல்லை. மூலதனம் ஒரு சிலர் கரங்களில் குவிந்து கிடக்கின்றன. அவர்கள் மட்டும் பல மடங்கு தொழில்களை அதிகரித்துக் கொண்டு மிகப் பெரிய தொழிலதிபர்களாக முடிகிறது. என்றாலும் சாதாரண- உழைக்கும், அடிமட்ட, நடுத்தர மக்களின் வாழ்க்கைத் தரம் ஓரளவுதான் உயர்ந்ததே தவிர, மற்றவர்களுக்கு இணையாக வளர முடியவில்லையே ஏன்?
அன்று கிராமங்களில் கிராம அதிகாரிகள் பரம்பரையாக வேலை பார்த்து வந்தனர். அவர்களுக்குக் கிடைத்த ஊதியம் எனப்படுவது ஒரு நாள் செலவுக்குக் கூட போதுமானதாக இருந்ததில்லை. இருந்தாலும் அவர்களுக்குத் தாங்கள் இருக்கும் இடத்தில் நல்ல மரியாதையும் தொழிலில் காட்டிய அக்கறை, நேர்மை இவற்றால் மக்களிடம் அன்பும் கிடைத்தன. ஊதியத்தை நம்பி வாழாமால் அவர்களது சொந்த வருமானத்தில் கெளரவமான வாழ்க்கையை நடத்தி வந்தனர். அவர்களுக்கு சமூக அந்தஸ்து கிடைத்திருந்தது. அப்படிப்பட்ட நிலையில் அவர்கள் ஒரே ஒரு கையெழுத்தால் வெளியே தூக்கி எறியப்பட்டு விட்டனர். புதிது புதிதாக தாலுகா அலுவலகத்துக்கு ஆள்களை நியமிப்பது போல புதிய ஆள்களை கிராம அதிகாரிகளாக நியமிக்க உத்தரவிட்டார் எம்.ஜி.ஆர். இது ஆர்.எம்.வீரப்பன் என்பவரின் மூளையில் உதித்த புதிய சிந்தனை என்பாரும் உண்டு. எது எப்படியோ, வழிவழி வந்த பாரம்பரியத் தொண்டு, செல்வத்தை அள்ளிக் குவிக்க ஒரு புதிய பாதையை வகுத்துக் கொடுத்து விட்டது.
அன்றைய கணக்குப் பிள்ளைக்கு ஊரில் எங்கெல்லாம் புறம்போக்கு நிலங்கள் உண்டு; அவை எத்தனை ஏக்கர்; கோயில் புறம்போக்கு, நத்தம் புறம்போக்கு என்று அவைகளைப் பிரித்தும் அவை இருக்கும் இடங்களையும் தெரிந்து வைத்திருந்தனர். அவர்களுக்குத் தெரியாமல் யாரும் ஒரு அங்குல நிலத்தையும் ஆக்கிரமித்துவிட முடியாது. தன் வீட்டில் வறுமை இருந்தாலும் பொதுச்சொத்தை எவரும் அபகரித்துவிடக் கூடாது என்ற ராஜவிசுவாசம் அவர்களிடம் இருந்தது. இன்று லஞ்ச ஊழல் தடுப்புத் துறையால் அதிக அளவில் கைது செய்யப்பட்டவர்கள் கிராம அதிகாரிகள் என்ற செய்தி நம் நெஞ்சங்களை வாட்டுகிறது. காரணம் இந்த லஞ்ச ஊழல்களால் பாதிக்கப்படுவோர் சாதாரண
ஏழை விவசாயி, உழைப்பாளிகள்தான். வசதியற்ற மக்களுக்குப் பல சலுகைகளை அரசு அறிவிக்கிறது. அவற்றையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள அவர்களுக்குப் பல சான்றிதழ்கள், குறிப்பாகச் சாதிச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் போன்றவை தேவைப் படுகின்றன. இவற்றைச் சர்வ சாதாரணமாக மக்களால் வாங்க முடிகின்றதா? ஒவ்வொன்றுக்கும் ஒரு ‘ரேட்’ உண்டு. நியாயமாகக் கிடைப்பதானால் பல நாள்கள், வாரங்கள், மாதங்கள் கூட தாமதம் ஆகும். ஆனால் கொடுப்பதைக் கொடுத்தால் வாங்குவது சுலபம். இந்த நிலை யாருக்கு? மேல் தட்டு மக்களுக்கா? அவர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அன்றாடம் காய்ச்சிகளுக்குத்தான் இந்த அவல நிலை. அவர்கள் கொடுக்க எங்கே போவார்கள். ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி சாப்பிட வசதி படைத்த, நல்ல வருமானம் உள்ளவர்கள் நினைப்பது சரியா? அல்லது அப்படி வாங்காமல் கொடுத்தால் இவர்களுக்கு ஏதாவது இழப்பு ஏற்பட்டு விடுமா? இல்லை, வெறி; மேலும் மேலும் பணம் காசு தேவை என்ற வெறி. ஆடம்பரம் தேவை என்பதால்தான் இதெல்லாம் நடக்கின்றன. லஞ்சம் வாங்குபவன் ஏழை இல்லை என்பதை நாம் உணர வேண்டும்.
1965-இல், எனது 27-ஆவது வயதில் எனக்குப் பிறப்புச் சான்றிதழ் தேவைப் பட்டது. அப்போது திருச்சி மாவட்டத்தில் ஒரு ஊரில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நான் பிறந்த, இப்போதைய நாகை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்துக் கர்ணம் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினேன். மூன்றாவது நாள் எனக்குத் தபாலில் அந்தச் சான்றிதழ் வந்தது. தபால் செலவு கூட அவருடையது என்பதை கவனிக்க வேண்டும். இது சாத்தியப்பட்டது எங்கே? இங்கேதான், நமது தமிழ்த்திரு நாட்டில்தான். அன்று முடிந்தது, இன்று முடியுமா?
லஞ்சம் எனும் பேயை விரட்ட, அடியோடு ஒழிக்க நாமும் என்னென்னவெல்லாமோ செய்து பார்க்கிறோம். லஞ்ச ஊழலுக்கு எதிராக ஒரு வாரம் கொண்டாடி லஞ்சத்தை எதிர்ப்பதாக வானை எட்டுமளவுக்கு உரத்த குரல் எழுப்புகிறோம். அதன் பயன் எங்காவது ஒரு நல்ல விளைவை ஏற்படுத்தியிருக்கிறதா?
வறுமையின் காரணமாக ஒரு வேளை உணவுக்காகத் திருடியவனைப் பிடித்து அடித்து உதைத்து சிறையில் தள்ளி, வாழ்நாள் முழுவதும் அவனை திருடன் என்ற பெயர் சூட்டி சமுதாயத்தில் ஒரு புதிய சாதியை உருவாக்கும் நமக்கு, நமக்கு முன்னால், எல்லா வசதிகளோடும், நல்ல பதவியிலும், நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டு லஞ்சம் வாங்கி நாய்ப்பிழைப்புப் பிழைக்கும் சிலரை நாம் அப்படி இழிவாகப் பார்ப்பதில்லை. வாங்கும் லஞ்சத்தில், செய்யும் ஊழலில் எல்லை என்பதே இல்லை. கோடி ரூபாய் என்பதை ஒரு ரூபாயாக மாற்றிக் கொடுத்தால் எண்ணக்கூடத் தெரியாத சில தற்குறிகள் பெரிய பதவிகளில் உட்கார்ந்துகொண்டு பல லட்சம் கோடிகளைச் சுருட்டிக் கொள்வதை, பொறுமையாக, எந்தவித எதிர்ப்புமின்றி இந்தச் சமுதாயம் பார்த்துக் கொண்டு இருப்பதோடு மட்டுமல்ல, அந்த ஊழல் பெருச்சாளிகளுக்கு மதிப்பு, மரியாதை கொடுத்து மாலை போட்டு பாராட்டிக் கொண்டிருக்கும் அசிங்கம் இந்த நாட்டில் மட்டும்தான் நடந்து கொண்டிருக்கிறது. இப்படி மக்களைச் சுரண்டும் சுதந்திரத்துக்காகவா மகாத்மா முதல் அடிமட்ட தொண்டன் வரை அனைத்தையும் இழந்து தியாகம் செய்தார்கள்? சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
முன்னேற்றத்துக்கு இடையூறாக இருக்கும் மற்றொரு காரணம் மக்களிடையே பிரிவுகள், விரோதம், எதிர்ப்பு ஆகியவைகளாகும். இவற்றுக்கு யார் காரணம்? மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து விட்டால் கண்ணெதிரே நடக்கும் அக்கிரமங்களை ஒன்றுபட்டு எதிர்ப்பார்கள். ஆனால் அவர்களைப் பல்வேறு காரணங்களைச் சொல்லி பிரித்து விட்டால் ஒற்றுமை ஏற்படாதே! அவர்களால் எந்த ஆபத்தும் எவருக்கும் ஏற்படாதே! இது பிரிட்டிஷார் கடைப்பிடித்து வந்த தந்திரம். வேறு எதைக் காப்பி அடித்தார்களோ இல்லையோ, இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியை நம்மவர்கள் நன்றாகக் கடைப்பிடித்து கொண்டு வருகிறார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரையில் சாதிகளுக்குள் விரோதம் இல்லை, வெறுப்பு இல்லை, சண்டை இல்லை. அப்படி இருந்தால் சரிவராது என்றோ என்னவோ, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து சாதிப் பிரிவினைகளைச் சொல்லி பிளவுகள், விரோதங்கள், சண்டைகள். நல்ல பிள்ளை போல் சமத்துவம் பேசிக் கொண்டே பிரிவினைகளுக்குத் தூபம் போட்டுக் கொண்டு வருவது ஒரு சாமர்த்தியம். இரண்டு பூனைகளுக்குள் ரொட்டியைப் பிரித்துக் கொடுப்பதாக வந்த குரங்கு எப்படி அவற்றை ஏமாற்றி அனைத்தையும் தானே சாப்பிட்டதோ அது போல இன்றைக்கு மக்களைப் பிரித்து வைத்து ஆதாயங்களைத் தானே அனுபவிக்கும் மொள்ளைமாறித்தனம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கும் விடிவு இல்லையா?
ஒன்றுமில்லாத விஷயத்துக்கெல்லாம் தோண்டித் துருவி ஆராய்ச்சிகள் நடத்தும் இந்திய நாட்டின் பெரும் அறிவாளிகளுக்கு இமயமலை போல வளர்ந்து நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஊழல்கள் பற்றித் தெரியவில்லையா, அல்லது இதெல்லாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே இல்லையா? சரி, அறிவாளிகளுக்குத் தான் சிந்தனை இல்லை என்றால், இதற்கெல்லாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டிய இடத்திலிருக்கும் ஆட்சியாளர்களுக்கு இவைகளெல்லாம் கவனத்துக்கு வரவில்லையா? வராமல் இருக்குமா! சரிதான் ‘இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா’ என்று கவுண்டமணி பாணியில் கண்டும் காணாமல் போய்விடுகிறார்களா? தெரியவில்லை.
தங்களது ஆடம்பரத் தேவைகளுக்காக, குறுக்கு வழியில் சம்பாதிக்க லஞ்சம் வாங்குகிறார்களா அல்லது வசதி பெருகப் பெருக மேலும் ஆடம்பரங்களை அதிகரித்துக் கொள்ளவும் தனக்கு மேலுள்ளவர்களுக்குக் கொடுப்பதற்காகவும் லஞ்சம் வாங்குகிறார்களா? இரண்டாவதாகச் சொன்ன வழிமுறைதான் லஞ்சத்துக்கு வழிவகுக்கிறது என்பது நிதர்சனமான உண்மை.
சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன்பெல்லாம் அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் நேரம் கடந்தும் தங்களது பணிகளைச் செய்து முடித்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பும் நேரத்தில்தான் வீட்டில் மனைவி வாங்கி வரச்சொன்ன அரிசி அல்லது முக்கிய சாமான்களின் நினைவு வரும். அப்போது அருகிலுள்ள மற்ற நண்பர்களிடம் ஒரு பத்து ரூபாய் கடன் கேட்பார்கள். அவர்களிடமும் இருக்காது. யாரிடம் இருக்கிறதோ அவரிடம் போய் கேட்டு வாங்கி மறுநாள் சாப்பாட்டுக்கு ஏற்பாடு செய்து கொண்ட அரசு ஊழியர்களை எனக்குத் தெரியும். இப்படிப்பட்ட நிலைமை இருந்ததற்குக் காரணம் அன்று லஞ்சம் வாங்குவோர் காளான் போலப் பெருகி இருக்கவில்லை. இன்று என்ன ஆயிற்று?
சமீபத்தில் செய்திகளில் அடிபட்ட ஒரு லஞ்சப் புகார். DRO என்ற கெசடெட் பதவியில் இருந்தவர். விரைவில் IAS அளிக்கப்படவிருந்தவர், லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டார். இவ்வளவு உயர்ந்த பதவியில் இருக்கும் இவருக்கு ஏன் இந்தக் கீழ்மையான புத்தி? இவருக்கு வசதி குறைவா? சாப்பாட்டுக்கு இல்லையா? அரசாங்கம் இவருக்கு ஊதியம் வழங்கவில்லையா?
மற்றொரு நிகழ்ச்சி. மருந்துகளுக்கு லைசென்ஸ் கொடுக்கும் ஒரு அரசாங்க அதிகாரி. இவர் லஞ்சம் வாங்குகையில் பிடிபட்டார். இவருக்குச் சென்னையில் பல மாளிகைகள், கோடிக்கணக்கில் சொத்து, இவையெல்லாம் எப்படிக் கிடைத்தது? இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் என்ன என்பதைச் சற்று ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்க வேண்டும். இப்படி லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டவர்களுக்கு இருக்கும் சொத்து அன்றைய டாட்டா, பிர்லாக்களுக்கோ, நமது மாநிலத்தில் உயர்ந்த அந்தஸ்த்திலிருந்த பல நிலப்பிரபுக்களுக்கோ கூட கிடையாது.
இப்படி ஊழலில் சிக்கி மாட்டிக் கொண்டு அன்று முகங்களை மூடிக்கொண்டு போலீஸ் வண்டியில் ஏறிப் போனார்களே, அவர்கள் எல்லாம் என்ன ஆனார்கள், சிறையில் அடைக்கப்பட்டு விட்டார்களா? அவர்கள் லஞ்சத்தில் சேர்த்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டனவா? ஒன்றும் தெரியவில்லையே. மக்களும் அன்றைய பரபரப்பை அன்றோடு மறந்து விடுகிறார்கள். இதையெல்லாம் நினைவுப்படுத்திப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர நமக்கு வேறு வேலை இல்லயா என்ன? இவ்வளவு ஆன பின்பும் அந்த ஊழல் பெருச்சாளிகள் சமூகத்தில் வெள்ளையும் சள்ளையுமாக நடமாடுவதைக் கண்டு நாம் தலை குனிவதா? அவமானப்படுவதா? தெரியவில்லை.
அரசியல்வாதிகள் மேடை ஏறிப் பேசும்போது நமக்கு மனமெல்லாம் பால் பொங்குவது போல மகிழ்ச்சி பொங்கி வழிகிறது. இனி நமக்கு எந்தக் குறையுமில்லை. பாலும் தேனும் நாட்டில் பெருக்கெடுத்தோடப் போகிறது. தொழில் வளம் பெருகப் போகிறது. வேலையில்லா நிலை என்பதற்கு இனி வேலையே இல்லை. அவரவர்க்குச் சொந்தமாக வீடு, நிலம், வருமானம், கலர் டி.வி., காஸ் அடுப்பு, வீட்டு வாயிலில் மாப்பிள்ளைத் திண்டில் சாய்ந்து கொண்டு நிம்மதியான வாழ்க்கை என்று வண்ண வண்ணக் கனவுகளில் ஆழ்ந்து போகிறோம். அத்தனையும் கிடைத்து விடுகிறது. மக்களுக்கு அல்ல. வாய் கிழியப் பேசுபவர்களுக்கு. இத்தனைக்கும் இவர்கள் பதவிக்குப் போகும்முன்புவரை அன்றாடம் காய்ச்சிகள். இன்று பணம் காய்ச்சிகள். ஜனநாயகம் என்பது இதுதானா?
இவ்வளவு நடந்தும் எங்காவது ஒரு சிறு முணுமுணுப்பு.. அந்த ஊழல் பெருச்சாளிகள் வரும்போது ஒரு அலட்சியம். ஊகூம். கிடையாது. அவர்களுக்குத்தான் ராஜ மரியாதை. ஊர்வலம், மாலை மரியாதைகள். அட என்ன இது கேவலம்! அநீதி கோலோச்சினால், நேர்மையும் நியாயமும் சவக் குழிக்குள் படுக்க வேண்டியதுதானா? மக்களுக்கு மனச்சாட்சி இல்லாமல் போனது ஏன்? ஊழலைக் கண்டு கொதிக்க முடியாமல் போனது ஏன்? எதிர்ப்புத் தெரிவிக்க அச்சப்படுவது ஏன்? சிந்தித்துப் பாருங்கள். எதிர்ப்பைத் தெரிவிக்கவும் ஒரு தார்மிக உணர்வு வேண்டும். நாமே தப்பு செய்பவராக இருந்தால் யாருடைய தப்பை எதிர்த்துத் தட்டிக் கேட்க முடியும்?
நம்மைச் சுற்றி நடக்கும் ஊழலுக்கும், தவறுகளுக்கும் நாமும் ஒரு வகையில் காரணமாக ஆகிப் போகிறோம். இலவசமாக ஏதாவது ஒரு மிட்டாய் பொட்டலத்தைக் கொடுத்தால் வாய் நிறைய பல்லாக அதனை வாங்கித் தின்று மகிழ்கிறோம். இலவசம் என்பது இழிவு என்ற உணர்வு இல்லை. பிச்சைப் பாத்திரம் ஏந்தி வரும் உரிமை எல்லோருக்கும் கிடையாது. யார் ஒருவர் தனக்கென்று எதையும் வைத்துக் கொள்வதில்லையோ, யார் ஒருவர் பிறருக்காகவே அனவரதமும் இறைவனை வேண்டிப் பிரார்த்தனை நடத்திக் கொண்டு தன் வயிற்றுப் பாட்டைப் பற்றிக் கவலைப் படாமல் பிறருக்காக மட்டும் வாழ்கிறார்களோ, அத்தகைய உத்தமர்களுக்குத்தான் யாசகம்/இனாம்/இலவசம் வாங்கிக் கொள்ளும் உரிமை உண்டு.
மாற்றான் உழைப்பில் வயிறு வளர்க்கும் எத்தர்கள், தன் தவற்றை மறைக்க இனாம் கொடுக்க முன்வரும்போது, அதனை வேண்டாம் என்று மறுக்கும் மனத் திண்மை நமக்கு வேண்டும். அது இல்லாமல் கொடுக்கும் இனாமுக்காக அலையோ அலையென்று அலைந்து, அவர் இவர் என்று எவர் காலிலும் விழுந்து, வாங்கும் போதே நாம் நம் சுயமரியாதையை இழந்து விடுகிறோம். எல்லாவற்றிலும் மேலான இழிவு ஜனநாயகம் நமக்களித்திருக்கும் மிகப் பெரும் உரிமையான “வாக்களித்தல்” எனும் உரிமைக்குப் பணம் வாங்கிக் கொண்டு வாக்கு அளித்தல். இது போல ஒரு கேவலமான போக்கு வேறு எதுவும் கிடையாது. இதற்கு என்னதான் வழி? முரசொலி மாறன் ஒரு திரைப்படத்தில் எழுதிய வசனம் நினைவுக்கு வருகிறது. அதில் புத்த பிட்சு ஒருவர் அசோகச் சக்கரவர்த்தியிடம் உரையாடிக் கொண்டிருக்கிறார்…
அசோகர் சொல்கிறார். “தெளிந்த நீரோடை போன்ற என் மனத்தை அறிவு எனும் கல்லெறிந்து கெடுத்துவிடாதீர் பிட்சுவே,” என்று.
அதற்கு பிட்சு சொல்கிறார், “உலகில் கெடுக்க முடியாத நபர்களே இல்லையப்பா. கேவலம், வெள்ளிப் பணத்துக்காக உடலின்பத்தை அள்ளி அள்ளி வீசும் ஒரு விலைமாதைக் கூடக் கெடுத்து விடலாம், ஒருவன் நல்ல உள்ளத்தோடு அவளைத் திருமணம் செய்து கொள்வதால்” என்று.
இது ஒரு புதிய பார்வை. கெடுத்தல் என்பது நல்லவனைத் தீயவனாகக் கெடுப்பது மட்டுமல்ல. தீயவனை நன்மை செய்து நல்லவனாக மாற்றுவதும், அவன் போக்கிலிருந்து கெடுப்பதும்தான். இன்று நமக்குத் தேவை இந்த உணர்வுதான். தீமையே வாழ்க்கை, தவறுகளே தங்கள் வழி என்று இருக்கும் மக்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டு நல்லவர்களாக நேர்மையாளர்களாக மாறி நல்ல வழி நடப்பதுதான் நாட்டின் கேடுகளுக்கெல்லாம் அருமருந்து.
No comments:
Post a Comment